கமலஹாசனும் சில டூப் ரகசியங்களும்

கமலஹாசனும் சில டூப் ரகசியங்களும்

சொல்லலாமா - சொல்லக்கூடாதா என்று தெரியவில்லை. அபூர்வ சகோதரர்கள் கமல் நடித்த இரட்டை வேடங்களில் பெரும்பாலும் கமலே தான் ரிஸ்க் எடுத்து நடித்தார். அவருக்கு பொதுவாக டூப் போடுவது பிடிக்காது. ரிஸ்க் என்பது அவருக்கு ரஸ்க் சாப்பிடுகிற மாதிரி. பல இடங்களில் பல தடவை விழுந்து எழுந்து சண்டை காட்சிகள் செய்து எலும்பு முறிந்ததை அவர் உடலே சொல்லும்.

சில லாங் ஷாட்டுகளில் குள்ளமாக நடிப்பதற்கு சர்க்கஸில் பணியாற்றிய சிக்கந்தர் நடித்ததாக நினைவு.

மைக்கேல் மதன காமராஜனில் நான்கு கமல்கள் நடித்த இடங்களில் எங்கும் டூப்பை கமல் பயன்படுத்தவில்லை. அதை மிச்சல் கேமராவில் ஒளிப்பதிவாளர் கபீர்லால் திறமையால் கமலே நடித்தார். ஒவ்வொரு கதாபாத்திரத்தில் வசனங்களை நான் உச்சரிக்க, எதிர்வினையாற்றி நடித்தது ஆச்சரியமான உண்மை.

டூப் இந்த படத்தில் பயன்படவில்லையா? என்றால் உண்டு.

டூப் போட்டவர் அனேகமாய் வெங்கட் என்று நினைக்கிறேன்.

ஆள் கமல் போலவே சிவப்பாய் இருப்பார். ஜிம்மெல்லாம் போய் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பார். எந்த மாமிசமும் சாப்பிடாதவர் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.

மைக்கேல் மதன காமராஜன் படப்பிடிப்பில் ஒரு காட்சி. அப்போதைய கமல் இல்லம். இப்போதைய மக்கள் நீதி மய்யம் அலுவலகம். இந்த காட்சி எடுக்கும் போது சிவஸ்ரீ சீனிவாஸ் அவர்களுடைய சினிமா அலுவலகம் அங்கே செயல்பட்டுக் கொண்டிருந்தது. அந்த இடத்தில் கொஞ்சம் செட் மாற்றி, பெரிய பெரிய மீசை உள்ளவர்கள் போட்டோ மாட்டிய அறையில் மதன் என்னும் கதாபாத்திரத்தில் நடிக்கும் கமல், ராஜி என்கிற தீயணைப்பு வீரனை மீசை மழித்து அனுப்புவது போல் காட்சி.

மிச்சல் கேமராவில் அது படமாக்கப்பட்டது. நிறைய பேரை வைத்துக் கொள்ள அறையில் இடம் இல்லை. நாற்காலியில் ராஜிக்கு ஷேவ் செய்வது போன்ற காட்சி. சேரில் டூப்பை உட்கார வைத்து ஷேவ் செய்வது போல் எடுக்கப்பட்டது. அதற்குப் பயன்படுத்திய யுத்தி ஹெட் மாஸ்க் என்பது.

தலை மட்டும் கமலாக பின் எடுக்கப்பட்டது. உடல் மட்டும் டூப். இது கமலின் உடல் மொழி பிசகாமல் கவனமாக எடுக்கப்பட்டது.

இதே போல அபூர்வ சகோதரர்கள் படத்தில் அப்பு கதாபாத்திரம் மௌலி, ஸ்ரீ வித்யாவிடம் பேசிவிட்டு உலக உருண்டையிலிருந்து கீழே குதிப்பது காட்சி. இதில் குள்ளமான சிக்கந்தர் குதிப்பார். பின், லேண்டிங்கில் அப்புவாக காண்பிக்கப்பட்டது.

இப்படி ஹீரோக்கள் ரிஸ்க் எடுக்க முடியாத பட்சத்தில், அதே போல உடல் அமைப்பு கொண்ட டூப் செய்வது தொழில்நுட்ப உலகில் யாவருக்கும் தெரிந்த விஷயம்.

மைக்கேல் மதன காமராஜனில் ஊர்வசிக்குப் பாட்டியாக நடித்த எஸ்.என்.லட்சுமிக்கு ஓர் ஆண் சண்டைக் கலைஞர்தான் நடித்துக் கொடுத்தார். இரவிக்கை, பாட்டி கட்டியிருந்த அதே சேலை கட்டி அடித்த டைவ்வுக்குப் பின்னால் எஸ்.என்.லட்சுமிக்கு ஏக பாராட்டு. கிராக்கி, இது பெங்களூருவில் உள்ள வின்ஸ்டர் மேனர் நட்சத்திர ஓட்டலில் எடுக்கப்பட்ட காட்சி. என்னது ஆளாளுக்கு ஹேண்ட்ஸ் அப்புனு சொல்றீங்க என்ற காட்சியில் இது வரும்.

நன்றாக நினைவிருக்கிறது. கமல் சார் 'வாடா போடா' என்றழைக்கும் நண்பர் ஐவன் என்பவர் சோழா ஹோட்டலில் பணியாற்றிக் கொண்டிருந்தார். நேபாளி நிறம். உடற்கட்டும் அழகு. அவர்தான் நாயகன், புன்னகை மன்னன் போன்ற படக் காட்சிகளில் டூப் போட்டார்.

கமல் அலுவலகத்தில் அன்போடு நடத்த கூடியவரில் அவர் முதன்மையானவர். கமலுக்கு டூப் என்பதால் மட்டுமல்ல, கமல் அவரை நன்றாகவே பாவித்து நடத்தியதும் ஒரு காரணம்.

ஒரு முறை விட்டலாச்சாரியாரிடம் சென்று பேசிக் கொண்டிருந்தேன். அப்போது எனக்கு ஏற்பட்ட சந்தேகம்.

ஜகன் மோகினி படத்தில் காமெடியனை இரண்டு குட்டி பிசாசுகள் விரட்டிக்கொண்டு போகும் அது எப்படி என்று கேட்டேன்.

அவர் சிரித்தபடி சொன்னார்: ‘ இரண்டு குள்ளர்களை டூப் போட்டு மேக்கப் போட்டு ஓடவிட்டது தான்' ‘இவ்வளவுதானா?'

‘ஸ்பீடாக ஓடினார்களே'

‘ஸ்லோ ஸ்பீடு கேமரா டேக்கில்'

‘பின்னால் ஓடினார்களே எப்படி?'

‘ரிவர்ஸ் டேக்கிங். படச்சுருளை ரிவர்ஸ் செய்து மாட்டி கேமராவை ஓடவிட்டு எடுத்தது‘ என்றார்.

இப்போது இந்த டெக்னிக்கெல்லாம் தேவையில்லை. சி.ஜி.யும் கிரீன் மேட்டும் பல மாயங்களை நிகழ்த்தி விடும்.

டூப் நடிகர்களை வெளி உலகத்தில் தெரியாது.

ஆனால் கதாநாயகன் பின்பற்றுகிற உடல் ஆரோக்கியத்தை அப்படியே கடைப்பிடித்தாலன்றி டூப் வேடமும் கிடைக்காது. அதே சமயம் டூப் தானே என்று ஹீரோக்களும் மதிக்காமல் இல்லை.சொல்லப் போனால் முகம் தவிர யாவும் டூப் தான் பல நேரங்களில் சாகச ஹீரோ.

டூப் வேடம் போடுபவர்கள் பாதுகாப்பிற்காக ஸ்டண்ட் காட்சிகளுக்காக வெளிநாடுகளில் பிரத்தியேகமாக பயிற்சி வகுப்புகள் சேர்ந்து அதை தமிழில் பயன்படுத்த முயன்றவர் தான் கமல்.

ஆனாலும் இந்தியன் 2 படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து துரதிர்ஷ்டவசமாகிவிட்டது. அதனால் மேலும் கவனமாக இருக்க திரைத்துறைக்கு வழிகாட்டிக் கொண்டிருக்கிறார் கமல்.

தொழில்நுட்பங்கள் எவ்வளவு மாறினாலும் அசல் இல்லாத இடத்தில் அதற்கு மூலமாக (நகல்) டூப் தான் செயல்பட வேண்டியுள்ளது.

எப்படி இரவு பகல் மாறாதோ அதே போல் தான் நிஜமும் – டூப்பும்

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com