கருத்துவேறுபாட்டால் நிகழ்ந்த பிளவு!

கருத்துவேறுபாட்டால் நிகழ்ந்த பிளவு!

சிபிஐ (எம்)

சென்னையில் 1990இல் நடந்த ஒரு மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் பயிற்சி முகாம். அதில் கம்யூனிஸ்ட் சித்தாந்தம் மற்றும் கட்சி குறித்து வகுப்பெடுத்த கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் ஒருவர், ‘மார்க்சியம் என்பது ஓர் அறிவியல் என்பதால் ஒரு நாட்டில் ஒரு கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமே இருக்க முடியும், பல கட்சிகள் தங்களை கம்யூனிஸ்டு கட்சி என்று சொல்லிக்கொண்டாலும் அவற்றுள் ஒன்று மட்டுமே உண்மையான கம்யூனிஸ்ட் கட்சியாக இருக்க முடியும்' என்றார். மேற்கொண்டு பேசுகையில் சிபிஎம் - க்கும் சிபிஐ, சிபிஐ(எம்.எல்) போன்ற பிற இடதுசாரி கட்சிகளுக்கும் (அவற்றை அவர் இடதுசாரி கட்சிகள் என்றே குறிப்பிட்டார்) என்ன வித்தியாசம் என்பதை அவர் விளக்கினார். மார்க்சியம் ஓர் அறிவியல் என்று முழுமையாக நம்பிய எனக்கு அன்று  அவரது கருத்தை ஏற்றுக்கொள்வதில் தயக்கமில்லை. ஆனால், கணிதம், இயற்பியல் போன்று மார்க்சியம் ஓர் அறிவியல் அல்ல, மாறாக சமூகம், அரசியல், பொருளாதாரம், வரலாறு ஆகியவற்றை அறிவியல்பூர்வமாக, அதாவது புறவயமான தரவுகளின் அடிப்படையில் தர்க்கபூர்வமாக அணுகி ஆராயும் சித்தாந்தந்தம் அது என்ற புரிதல் எனக்கு பல அண்டுகள் கழித்தே உருவானது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உருவானதிலிருந்தே (அது உருவானது 1920 - இலா அல்லது 1925 - இலா என்பதிலேயே இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடையே கருத்து வேறுபாடு உண்டு) கட்சித் திட்டம் எப்படி இருக்க வேண்டும் என்பதில் கட்சிக்குள் கருத்து வேறுபாடுகள் இருந்தன. ஒரு கம்யூனிஸ்டு கட்சிக்கு கட்சித் திட்டம் என்பது மிக அடிப்படையான ஓர் ஆவணம். நாட்டின் உற்பத்தி முறை மற்றும் உற்பத்தி உறவுகள் என்ன கட்டத்தில் இருக்கின்றன, புரட்சியின் அடுத்த கட்டம் என்ன, பகைமையான மற்றும் நட்பார்ந்த வர்க்கங்கள் எவை, அரசின் இயல்பு என்ன என்பன பற்றியும், புரட்சிக்கான உத்திகள் பற்றியும் விளக்கும் ஆவணம்தான் கட்சித் திட்டம் என்பது. தொடக்கத்திலிருந்தே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியானது மாஸ்கோவிலிருந்து செயல்பட்ட மூன்றாவது அகிலத்தின் வழிகாட்டுதலில்தான் இயங்கி வந்தது.

1950களின் நடுப்பகுதி வரை இந்த நிலை தொடர்ந்தது. சுதந்திரத்திற்குப் பிறகு காங்கிரஸ் கட்சியை எப்படி எதிர்கொள்வது, இந்திய அரசின் இயல்பு என்ன, ஏகாதிபத்திய எதிர்ப்பாளர் என்பதால் நேருவை தங்களது ஆதரவாளராக பார்ப்பதா அல்லது முதலாளித்துவ அரசின் தலைவர் என்பதால் எதிரியாக பார்ப்பதா போன்ற பல அடிப்படையான விஷயங்கள் குறித்து கட்சிக்குள் கருத்து வேறுபாடுகள் கூர்மை கொண்டன. இப்போது பெறப்பட்டிருக்கும் சுதந்திரம் முழுமையானதல்ல, இப்போதிருக்கும் நேருவின் தலைமையிலான அரசாங்கத்தை புரட்சியின் மூலம் தூக்கியெறிந்து பாட்டாளி வர்க்கத்தின் தலைமையிலான அரசாங்கத்தை நிறுவினால் மட்டுமே உண்மையான சுதந்திரம் கிடைத்ததாக கருத முடியும் என பி.டி ரணதிவே போன்றோர் வாதிட்டனர். காங்கிரஸ் கட்சியும் தேசிய முதலாளிகளும் ஏகாதிபத்திய எதிர்ப்பு கொண்டவர்கள், ஆகவே முற்போக்காளர்கள். இந்த அடிப்படையில் அவர்களுடன் இணைந்து செயல்படுவதன் மூலம் பொதுவுடைமைக்கான திட்டங்களை முன்னெடுக்க முடியும் என்று பி.சி. ஜோஷி போன்றோர் வாதிட்டனர். ஆக, கட்சியில் பிளவு ஏற்படுவதை தடுப்பது என்பது அவ்வளது எளிதாக இருக்காது என்பது 1940களின் இறுதியிலேயே தெரிந்துவிட்டது.

1964இல் ஏற்பட்ட கட்சிப் பிளவை சர்வதேச கம்யூனிஸ்ட் இயக்கத்தில் ஏற்பட்ட பிளவின் விளைவு என்று தவறாக புரிந்து கொண்டவர்களே அதிகம். அதிலும் குறிப்பாக அன்றைய பத்திரிகையாளர்கள் அப்படித்தான் இந்தப் பிளவை விளக்கினர். 1950களின் இறுதியில் சர்வதேச கம்யூனிச இயக்கம் ரஷ்ய ஆதரவு, சீன ஆதரவு என இரண்டாக பிளவுண்டது உண்மை. ஆனால் அதற்கும் சிபிஎம் உருவானதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இந்தியாவில் பொதுவுடைமைப் புரட்சி நடக்க உகந்தது ரஷ்யப் பாதையா (நகர்ப்புற தொழிலாளர்களின் தலைமையைக் கொண்ட புரட்சி), சீனப் பாதையா (விவசாயிகளை பெருமளவில் அணிதிரட்டி நடத்தப்படும் புரட்சி) என்ற விவாதம் கட்சிக்குள் நடந்தது உண்மை. ஆனால் பிளவிற்கான காரணம் அதுவுமவல்ல. எல்லைப் பிரச்னையில் சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையில் ஏற்பட்ட போரில் எஸ்.ஏ. டாங்கே தலைமையிலான அணியினர் சீனாவிற்கு எதிரான நிலை எடுத்து நேருவிற்கு தங்களது முழு ஆதரவை அளித்தனர்.

இவர்கள் இந்திய அரசாங்கத்திற்கு முழு விசுவாசமாக இருந்ததால் வலது கம்யூனிஸ்டுகள் என்றழைக்கப்பட்டனர். ரணதிவே, சுந்தரய்யா ஆகியோரின் தலையிலானவர்கள் சீனாவிற்கு ஆதரவான நிலையை எடுக்காவிட்டாலும், எல்லைப் பிரச்னைக்கு போர் தீர்வாகாது, பேச்சுவார்த்தையின் மூலமாகவே அதை தீர்த்துக் கொள்ள  வேண்டுமென்றனர். இவர்கள் இடது கம்யூனிஸ்டுகள் என்றழைக்கப்பட்டனர். 1962 போரின் போது இடது கம்யூனிஸ்டுகள் பெரும்பாலானவர்கள் மத்திய அரசாங்கத்தால் கைது செய்யப்பட்டனர். ஆனால் கட்சிப் பிளவிற்கு இந்தப் போர் ஒரு காரணமல்ல.

ஆக, ஏற்கெனவே குறிப்பிட்டது போல இந்திய அரசின் இயல்பு குறித்து மதிப்பிடுவதில் எழுந்த அடிப்படையான கருத்து வேறுபாடே கட்சிப் பிளவிற்கான காரணமாகும். இந்திய அரசு தேசிய முதலாளிகளின் அரசு, இந்தியப் புரட்சியின் அடுத்த கட்டமான தேசிய ஜனநாயகப் புரட்சியில் தேசிய முதலாளிகள் நேர்மறையான பங்காற்ற முடியும், அதற்கான அழுத்தத்தை அவர்களுக்கு கட்சி ஏற்படுத்த வேண்டும் என்று வலது கம்யூனிஸ்டுகள் வாதிட்டனர். ஆனால், இந்திய அரசு பெரு முதலாளிகளின் தலைமையிலான முதலாளிகள் மற்றும் நிலபிரபுக்களின் அரசு, அடுத்த கட்ட புரட்சியான மக்கள் ஜனநாயகப் புரட்சியில் பெரு முதலாளிகளும், முதலாளிகளும், நிலபிரபுக்களும் நேர்மறையான பங்காற்ற முடியாது, அவர்கள் நமது வர்க்க எதிரிகள் என்று இடது கம்யூனிஸ்டுகள் வாதிட்டனர். 1964 ஏப்ரல் மாதத்தில் கூட, அதாவது கட்சி முறையாக உதயமாவதற்கு சில மாதங்களுக்கு முன்னர், இ. எம். எஸ். நம்பூதிரிபாட், ஜோதிபாசு போன்ற சிலர் சமரசத்திற்கு முயன்றனர். ஆனால் பலனில்லை. அந்த மாதம் நடந்த தேசிய கவுன்சில் கூட்டத்திலிருந்து கருத்து வேறுபாடுகளால் வெளியேறிய 32 இடது உறுப்பினர்கள் கருத்து வேறுபாடுகள் முடிவுக்கு வராவிட்டால் புதிய கம்யூனிஸ்ட் கட்சி உருவாகும் என்று குறிப்பிட்டனர். பின்னர் ஜூலை மாதம் ஆந்திராவின் தெனாலியில் நடந்த, 146 இடது பிரதிநிதிகள் கலந்துகொண்ட கூட்டத்தில் புதிய கட்சி உருவாவது உறுதி செய்யப்பட்டது. அதே ஆண்டு அக்டோபர் மாதம் கல்கத்தாவில் நடந்த 7ஆவது அகில இந்திய மாநாட்டில் சிபிஎம் உதயமானது. டிசம்பரில் பம்பாயில் சிபிஐ - யின் 7ஆவது மாநாடு நடந்தது. இம் மாநாடுகளில்தான் முதன் முறையாக இரண்டு கம்யூனிஸ்டு கட்சிகளும் தங்களது கட்சித் திட்டத்தை விவாதித்து ஏற்றுக்கொண்டன. அது வரை இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு அதிகாரப்பூர்வமான, முறையான கட்சித் திட்டம் இருந்ததில்லை.

ஒரு நாட்டில் பல கம்யூனிஸ்ட் கட்சிகள் இருப்பது நல்லதே. முதலாளித்துவ அரசமைப்பின் கீழ் பல முதலாளித்துவ கட்சிகள் செயல்படுகின்றன, தேர்தல்களில் போட்டியிடுகின்றன. இதனால் முதலாளித்துவத்திற்கு எந்த ஆபத்தும் ஏற்பட்டுவிடுவதில்லை. அதுபோல  ஒரு பொதுவுடைமை அரசமைப்பின் கீழ் பல பொதுவுடைமைக் கட்சிகள் செயல்பட முடியும், தேர்தல்களில் போட்டியிட முடியும். பொதுவுடைமைக்கும் எந்த ஆபத்தும் வந்துவிடாது.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com