கற்றுக் கொண்டே இருங்கள்!

கற்றுக் கொண்டே இருங்கள்!

ரோனா பெருந்தொற்று உலகையே ஆட்டிப்-படைத்துக் கொண்டிருக்கும்  இந்நிலை-யில் பெருமளவில் மக்கள் பொருளாதார ரீதியில் பாதிப்படைந்துள்ளனர். குறிப்பாக நடுத்தர, கீழ்தட்டு வகுப்பைச் சேர்ந்தவர்கள் பெருமளவு பாதிப்புக்-குள்ளாகி இருப்பதை நான் உணர்கிறேன்.

ஐ.டி.நிறுவனங்களில் வேலை செய்கிறவர்களுக்கு பாதிப்பு இல்லை. ஆனால், உற்பத்தித்துறை போன்ற பிற துறைகளில் வேலை செய்தவர்களுக்கு தாற்காலிகமாகவோ நிரந்தரமாகவோ பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இதில் இந்தத் தாற்காலிக பாதிப்பைக் கூட எதிர்கொள்ள முடியாமல் நிறையபேர் தடுமாறுவதை நான் பார்க்கிறேன். இதற்கான கணக்கீட்டுத் தரவுகள் இல்லையென்றால், இதை உணரமுடியும்.

சின்ன ஊரில் இருந்து பெற்றோர் பையன்களைப் படிக்க வைத்து நல்ல வேலைக்குத் தயார் செய்துவிடுகின்றனர். இவர்களில் பெரும்பாலானோருக்கு வேலை எப்படி இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்புகள் உள்ளன. ஆனால் அந்த எதிர்பார்ப்புக்கு ஏற்றார்ப்போல் திறன்கள் குறைவாக இருக்கின்றன என்கிற ஒரு விஷயம் இருக்கிறது. ஆனால் தங்கள் நண்பர், உறவுக்காரர் நல்ல சம்பளத்தில் இருக்கிறார்; அந்த சம்பளம் தங்களுக்கும் வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் வந்துவிடுகிறார்கள். ஆனால், அதை எட்டமுடியாமல் தவிக்கும் ஒரு பெரிய குழுவினர், இருந்துகொண்டிருக்கிறார்கள்.

இவர்கள் ஒருபக்கம் இருக்க, இன்னொரு பக்கம் நல்ல வேலைக்குச் சென்றவர்கள், இந்த வேலை தங்களுக்கு நிரந்தரமானது என்று நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். இந்த எண்ணத்தில் இன்று ஐயாயிரம் இருந்தால் ஐயாயிரம், நாளை பத்தாயிரம் இருந்தால் பத்தாயிரம் என்று செலவழித்துவிடுகிறார்கள். கடன் வாங்குகிறார்கள். அடுத்தமாதம் அடைத்துவிடலாம் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்கள். இவர்கள் நினைத்துப் பார்க்க மறப்பது,  இரண்டு விஷயங்கள்.

நானெல்லாம் முதன்முதலில் வேலைக்குச் சேர்ந்தபோது அந்த கம்பெனியின் பாஸ் சொன்னார். ‘நீ நேர்மையாக இருக்கும் வரை இந்த கம்பெனியில்தான் ஓய்வுபெறுவாய்.  வேலைக்கு ஒண்ணும் பிரச்னை இல்லை' என்றார். என்ன நான் திறமை இல்லாமல் இருந்தால், சம்பள உயர்வு, போனஸ் கிடைக்காமல் இருக்கலாம். ஆனால் வேலைக்கு ஆபத்து இல்லை. ஆனால் இன்றைக்கு யாராவது எங்கேயாவது இப்படிச் சொல்ல முடியுமா?

ஆனால், சம்பளம் மட்டும் பலமடங்கு வாங்குகிறார்கள். அதேசமயம், வேலை நிச்சயம் இல்லை!

இதைப் புரிந்துகொள்ள வேண்டும். பலர் இதை உணராமல்,  இந்த வருமானம் என்றென்றைக்கும் வந்துகொண்டே இருக்கும் என்ற நினைப்பில் செலவு செய்துகொண்டே இருக்கிறார்கள். மூன்று மாதங்கள் பண வரத்து நின்றுவிட்டால், தடுமாறுகிறார்கள். எனக்கு ஆச்சர்யமாக இருக்கிறது!

இதற்குக் காரணம், நன்றாக சம்பளம் வரும்போது சேமிக்காமல் இருந்ததுதான். முந்தைய காலத்தில் ஆறுமாதம் ஒரு ஆண்டு எல்லாம் வேலை இல்லாமல் இருப்பார்கள். ஏனெனில் அப்போது கூட்டுக் குடும்பங்களாக இருந்தார்கள். தாக்குப் பிடித்தார்கள்.  இப்போது எல்லாம் தனித்தனி. சிலபேர் இதிலும் தனியாகச் சென்று நான் கல்யாணமே பண்ணிக்கமாட்டேன் என்று இருக்கிறார்கள்.

ஆனால் இவர்கள் முந்தைய தலைமுறையை விட அதிகம் திறமை படைத்தவர்கள் என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். ஆனால் இன்று, அதைவிட அதிகமான திறமை தேவைப்படுகிறது. ஏனெனில் தொடர்ச்சியாகக் கற்றுக்கொண்டே இருக்கவேண்டி உள்ளது. உதாரணத்துக்கு ஒருவர் ரேடியோ ரிப்பேர் கற்றவராக இருந்தால், இன்று அதை மட்டும் வைத்துப் பிழைக்க முடியாது. இன்றைய டிஜிட்டல் சாதனங்கள் வரை பழுதுபார்க்கத் தெரிந்திருக்கவேண்டும். நல்ல சம்பளம், நல்ல உழைப்பு, மேலும் புதிய படிப்பு, கற்றுக்கொள்ளுதல்… என்று நிலைமை போய்க்கொண்டிருக்கிறது. ஐ.டி துறையில் இது மேலும் சகஜமாக இருக்கிறது.

இச்சூழலில் கஷடம் என்று ஒன்று ஏற்பட்டால், அதற்குத் தயாராக இல்லை என்பதால்தான் சிரமத்தை எதிர்கொள்கிறார்கள்.  இதைச் சரிசெய்ய என்ன செய்யவேண்டும்?

என்னுடைய வருமானத்தில் செலவு போக மீதியை சேமிக்கிறேன் என்று இருப்பதை, மாற்றி அமைக்கவேண்டும். இதைத்தான் பதினைந்து இருபது ஆண்டுகளாகச் சொல்லிக்கொண்டு வருகிறேன். சீட்டுப்போடுவது என்பது சரியான முதலீட்டு சேமிப்பு முறைகிடையாது. ஆனால் இதை வைத்தே சிறப்பாக மேலே வந்த குடும்பங்களும் உள்ளன. ஏனென்றால் வரும் வருமானத்தில் முதல் செலவாக இந்தச் சேமிப்புக்கு எடுத்து சீட்டுக் கட்டிவிடுவார்கள். மிச்சமானால் கட்டுவது என்ற கதை இல்லை.  சேமிப்பு போக மீதி இருப்பதில் செலவு செய்யவேண்டும். ஆனால் இப்போது செலவு போக மீதியை சேமிக்கிறேன் என்கிறார்கள். இதுதான் பிரச்னை.

பணம் சம்பாதிக்கிற வழிகள் என்ன என்று யாரும் சொல்லித்தரமுடியாது. என்னைக் கேட்டால், எனக்குத் தெரியாது. ஆனால், பணத்தை எப்படிப் பெருக்குவது என சொல்லத் தெரியும். உங்களிடம் ஒரு லட்சரூபாய் இருந்தால் அதைப் பெருக்க எனக்குத் தெரியும். பணம் சம்பாதிப்பது என்பது நம்முடைய வேலை, நம் படிப்பு, நம் உழைப்பு ஆகியவற்றை வைத்துத்தான் இருக்கிறது. புரிந்துகொள்ள வேண்டிய விஷயம், உலகம் முழுக்க வெற்றி பெற்ற சமூகங்களை ஆய்வு செய்து பார்த்தால், ஒரு விஷயம் புலப்படும். உதாரணத்துக்கு அமெரிக்கப் பங்கு சந்தையை ஆட்டிப் படைக்கும் யூத சமூகம், மும்பை பங்கு சந்தையை ஆட்டிப்படைக்கும் குஜராத்திகள், அவர்கள் எவ்வளவு படித்திருக்கிறார்கள் என்று பார்த்தால், தென்னிந்தியாவில் உள்ளவர்கள் படித்ததில் பாதிக்கூட படித்திருக்கமாட்டார்கள். இரண்டாவது ஆண்டு கல்லூரியில் படிக்கும்போதே கல்யாணம் ஆகிவிடும். ஒரு டிகிரியுடன் போய்விடுவார்கள். நமக்கு திரும்பத் திரும்ப நம் பெற்றோரால் சொல்லப்பட்டது என்ன? நல்லா படி; முதல் மதிப்பெண் வாங்கு; நல்ல வேலைக்குப் போ, கடுமையாக உழைத்தால் பணக்காரன் ஆகிவிடலாம் என்பதுதான். ஆனால் உண்மை என்பது என்னவென்றால், அப்படியெல்லாம் பணக்காரன் ஆக முடியாது என்பதுதான்! அது கண்முன்னே நிரூபணம் ஆகி இருக்கும். நம் அப்பா அப்படி இருந்தார்! நாம் அப்படி இருக்கிறோம்! நம் பிள்ளைகளுக்கு அப்படிச் சொல்கிறோம்! ஆனால் பணக்காரன் ஆனோமா?

இந்த வழியின் மூலம் வாழ்க்கையை ஓட்ட முடியும். அவ்வளவுதான்.

வரவுக்குள் செலவு செய்தால் சந்தோஷமாக இருக்கலாம். பத்தாயிரம் ரூபாய் வந்து அதற்குள் செலவு செய்தால் அவர் சந்தோஷமாக இருக்கலாம்! ஒரு கோடி வருமானம் வருகிறது! ஒன்றரை கோடி செலவு செய்தால் சந்தோஷமே இருக்காது! ஆக இரண்டுவிதமாக உள்ளது. வரவுக்குள் செலவு செய்து போதுமென்ற மனதுடன் இருப்பது. ஆனால் இது, இன்று முடியாத காரியம். முன்பு ரேடியோவுடன் திண்ணையில் அமர்ந்து நிம்மதியாக வாழ்க்கையை ஓட்டிவிட்டனர்.

இன்று ஒவ்வொரு அறையிலும் மூன்று ப்ளக் பாயிண்டுகள் தேவைப்படுகின்றன. நடுத்தர வர்க்கம் என்றுதான் நம்மை அழைத்துக்கொள்கிறோம். ஆனால் எவ்வளவு பொருட்கள் இருக்கின்றன பார்த்தீர்களா? அம்பாசடர் கார் போன்ற ஒரு பொருளை, இன்று காட்டவே முடியாது. அந்த காரை ஒருவர் வாங்கினால், அந்த காரிலேயே சாகும் அளவுக்கு பல ஆண்டுகள் வைத்திருப்பார். ஆனால் இன்று 25 வயதில் ஒருவன் கார் வாங்கினால் குறைந்தது ஒவ்வொரு பத்து ஆண்டுக்கும் வேறு ஒரு கார் வாங்குகிறான். கார் வாங்கும் இளைஞர்கள், ‘பத்தாயிரம் ரூபாய் தவணை தானே, காரை வாங்குவோம்!' என நினைக்கிறார்கள். அப்படி அல்ல. அவன் கார் கம்பெனிக்கு ஓர் அடிமை சாசனம் எழுதிக் கொடுக்கிறான். ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை புதுப்புதுப்புது கார் வாங்குவதன் மூலம் என் வாழ்க்கையில் ஒரு கோடி ரூபாயை கார் வாங்கச் செலவழிப்பேன் என்று. ஒரு கோடி ரூபாய்க்கான பொறுப்புக்கு அவன் தன் 25 வயதில் கையெழுத்துப் போடுகிறான். அது புரியவில்லை. இதே போல் ஒவ்வொரு பொருளையும் எடுத்துக்கொள்ளுங்கள்! தேவையில்லாத பொருட்களை வாங்கிக் குவிப்பதன் மூலம்! இப்படித்தான் அடிமையாகிப் போகிறார்கள்.

அமெரிக்க சமூகம் எழுபதுகள் வரைக்கும் நன்றாகத்தான் இருந்தது. பின்னர்தான் அது கிரெடிட் கார்டு சொசைட் டியாக மாறியது. பலவீனமான சமூகத்தைத்தான் அரசியல்வாதிகளால் தங்களிஷ்டப்படி ஆட்டிவைக்க முடியும். நிதியில் தன்னிறைவு பெற்ற சமூகத்தை வளைக்க முடியாது. நம் கையில் கணிசமான தொகை இருந்தால், நாம் தன்னம்பிக்கையுடன் இருப்போம் அல்லவா? பணம் இல்லாவிட்டால், அச்சப்படுவோம்.சமுகத்தை அச்சப்படவைக்க வருவதே இப்போது பொருளை வாங்கு; பின்னர் பணம் கட்டு என்ற திட்டங்கள்.

நீங்கள் ஒரு கம்பெனியில் வேலை பார்க்கும்போது அந்த நிறுவனத்திடம் வேலை பார்ப்பதாக நினைக்கலாம். ஆனால் உண்மை அதுவல்ல. ஒன்றாம் தேதி நீங்கள் சம்பளம் வாங்கியவுடன் அவ்வளவு நுகர்பொருள் நிறுவனங்களும் உங்கள் காசை பல்வேறு வழிகளில் பிடுங்கிக் கொள்கின்றன. பற்பசையில் இருந்து கார் நிறுவனம் வரை பங்குபோட்டுப் பிடுங்கிக் கொள்கின்றன.

நான் சொல்ல வந்த விஷயத்துக்கு வருகிறேன். உலகம் முழுக்க வெற்றிகரமான சமூகங்கள் என்ன செய்திருக்கின்றன என்றால், அவை உழைத்து சம்பாதித்தால் வாழ்க்கையை ஓட்டலாம்; ஆனால்

செல்வத்தைக் குவிக்க முடியாது என்று உணர்ந்திருக்கின்றன. செல்வத்தை உருவாக்கவேண்டும் என்றால், பணம் பணத்தை உருவாக்க வேண்டும். நம்மால் எட்டுமணி நேரமோ பன்னிரண்டு மணி நேரமோதான் உழைக்க முடியும். சேமிக்கும் பணம் மட்டும்தான் 24 மணி நேரமும் வேலை செய்யும்.  ஏழு நாட்களும் வேலை செய்யும். ஞாயிற்றுக் கிழமை என்றாலும் வங்கியில் வட்டி கிடைக்கும்!

பணம் பணத்தைப்பெருக்கும் என்று தெரிந்தவன் எல்லாம் பணக்காரன் ஆகிவிட்டான். அவனுக்கு வேண்டியதெல்லாம் இரண்டுதான். ஒன்று எந்த ஊரில் பிழைக்கிறானோ அந்த ஊர் மொழி. கூட்டல் கழித்தல் கணக்கும் வட்டி எப்படி கணக்கு செய்வது என்பதும் தெரிந்திருக்கவேண்டும். நாங்கள் கிண்டலாகச் சொல்வதுண்டு. வட்டி கணக்குப் பண்ண தெரிந்தவன் வட்டி வாங்குகிறான். தெரியாதவன் வட்டி கட்டுகிறான் என்று!

கொரோனாவுக்குப் பின்னால்  தகவல்தொழில்நுட்பத்துறை மற்றும் அது சார்ந்த துறைகள். மருத்துவ சேவைத் துறை, அது சார்ந்த ஃபிட்னஸ் துறைகள் வளர்ச்சி அடையும். ஊரடங்கு விலக்கப்படும் சமயத்தில் சுற்றுலாத்துறை வேகமாக வளரும். இப்போது நன்றாக இல்லை என்றாலும் விரைவில் அது வளர்ச்சி அடையும் என நினைக்கிறேன். உயிரி தொழில்நுட்பவியல் மேலும் வளர்ச்சி அடையும்.

தற்போதைய சூழலில் பாதிக்கப்பட்டிருக்கும் குடும்பங்களுக்கு நான் ஒன்றை மட்டும் சொல்ல விரும்புகிறேன். என் தந்தை 96 வயது வரை வாழ்ந்தார். அவர் இரண்டு உலகப்போரை பார்த்தவர். ப்ளேக் நோயைப் பார்த்தவர். பர்மாவில் இருந்து நடைபயணமாகவே பெண்டு பிள்ளைகளுடன் வந்த தலைமுறையைக் கண்டவர். அவர் எதற்கும் கலங்காமல் தைரியமாக இருப்பார். கேட்டால், 'நான் பார்க்காததா? இதெல்லாம் ஒன்றுமே இல்லை' என்பார். மனித குலம் கடந்துவந்திருக்கும் கஷ்டங்களுடன் ஒப்பிடுகையில் இந்த கொரோனா பெருந்தொற்று ஒன்றுமே இல்லை. அவற்றையெல்லாம் நாம் பார்க்காததால் இது பெரிய கஷ்டமாகத்தெரிகிறது.  எதையும் சரியான புரிதலுடன், இதுவும் கடந்துபோகும் என்ற பார்வையுடன் இருக்கவேண்டும். உலகம் நாளையே அழிந்துபோகப் போவதில்லை! வாய்ப்புகள் இல்லாமல் போகப் போவதில்லை! உங்களுக்கு வேலையே கிடைக்காது என்று யாரும் சொன்னால், நம்பாதீர்கள்! தேவைக்கு ஏற்ப நம்மை மாற்றிக்கொள்ளத் தயாராக இருக்கவேண்டும்!

எனக்கு வயது 56. ஒன்றரை ஆண்டு முன்புகூட நான் சான்றிதழ் தேர்வு ஒன்றினை எழுதினேன். மூன்று ஆண்டுக்குத்தான் அந்தச் சான்றிதழ் செல்லும். அது இருந்தால்தான் பங்குத் தரகராகப் பணிபுரியமுடியும். 25 வயதுள்ள இளைஞர்களுடன் தான் நானும் எழுதித் தேர்வானேன். இன்னும் ஒன்றரை ஆண்டு கழித்து மீண்டும் அதை எழுத வேண்டும்! இனி, கற்றல் என்பது தொடர்ச்சியான செயல்பாடாக இருக்கும். டிகிரி முடிந்தது என்று கற்றலை நிறுத்தமுடியாது! இதைப் புரிந்துகொண்டால், எல்லாம் சிறப்பாக இருக்கும்!

(வ.நாகப்பன், பிரபல முதலீட்டு ஆலோசகர். நமது செய்தியாளரிடம் கூறியதில் இருந்து)

ஜூலை, 2021

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com