காலைநடைப் பொழுதில்
காலைநடைப் பொழுதில்

கலைஞர் எழுதினால் கரகரவென சத்தம் வரும்!

எனக்கு பதினேழு வயது! பச்சையப்பன் கல்லூரியில் இளங்கலை படித்துக் கொண்டே, சிந்தாதிரிப்பேட்டையில் அண்ணா நற்பணி மன்றத்தை தொடங்கினேன். ஏழை எளிய மாணவர்களுக்கு இலவசக் கல்வி அளிப்பதுதான் மன்றத்தின் பிரதான பணி.

அவ்வப்போது, மன்றத்தின் சார்பில் நடைபெறும் நிகழ்வுகளுக்கு அண்ணா, நாவலர், எஸ்.எஸ்.ஆர் போன்ற தலைவர்கள் எல்லாம் வருவார்கள். ஒரு முறை, கூட்டத்துக்கு வருவதாக ஒப்புக் கொண்ட எம்.ஜி.ஆர் வரவில்லை. 'கூட்டம் கூடிவிட்டது. எம்.ஜி.ஆர். வரவில்லை. நீங்கள் வரவேண்டும்' என கலைஞரை சந்தித்து கூறினேன்.

கூட்டத்திற்கு வந்த கலைஞர், பத்து நிமிடம் பேசினார். கிளம்பும்போது, என்னைப் பற்றி விசாரித்தார். எங்க அப்பாவின் பெயரை சொன்னேன். 'அவரை தெரியுமே. எங்க அண்ணன் ஆச்சே அவர்!' என்றார். இது நடந்தது 1964இல். அந்த விசாரிப்புக்குப் பின் தொடர்ந்து கலைஞரை சந்திக்கவில்லை.

எனக்கு நாவலருடன்தான் நெருக்கம் அதிகம். 1967 நாடாளுமன்ற தேர்தலில் அண்ணாவுக்கும் சட்டமன்ற தேர்தலில் நாவலருக்கும் தேர்தல் பணி செய்தேன். பிறகு முரசொலிமாறனுக்கு செய்தேன்.

ஒரு கட்டத்தில் ‘நீ என்ன நாவலருடனே இருக்கே. திருவாருர்காரன் தானே நீ. உங்க அப்பாவையெல்லாம் எனக்கு தெரியும். நீ ஏன் கலைஞரை சந்திக்கக் கூடாது?'எனக்கேட்டார் மாறன். கலைஞர் அப்போது முதலமைச்சர். அவரை சென்று சந்தித்தேன். ஒருவருடம் கழித்து, கலைஞரின் நாற்பத்தெட்டாவது பிறந்தநாளுக்கு ‘காலகட்டத்தின் தளபதி' என்ற தலைப்பில் முரசொலியில் ஒரு கட்டுரை எழுதினேன்.

1969இல் சென்னையில் கடுமையான குடிநீர் பஞ்சம். ஒரே வாரத்தில், சென்னையின் அத்தனை வட்டங்களிலும் ஐந்நூறு குடிநீர் குழாய்கள் அமைத்தார், கலைஞர். இந்த செயல், அவரின் பொருளாதார அறிவை காட்டுவதாக எழுதியிருந்தேன். அதைப் படித்த கலைஞர், என்னை அழைத்துப் பாராட்டினார்.

அந்தசமயத்தில் முனைவர் பட்ட ஆய்விற்காக, ‘மத்திய - மாநில நிதி உறவுகள்'என்ற தலைப்பைத் தேர்ந்தெடுத்திருந்தேன். அதற்காக நிறைய தகவல்களைத் திரட்டி வைத்திருந்தேன். அதை வைத்து, மாநில சுயாட்சி பயிற்சிப்பாசறை ஒன்று நடத்த முடிவெடுத்தேன். நிகழ்வு தொடர்பாக முரசொலிக்கு கொடுத்த விளம்பரத்தை பார்த்த கலைஞர் என்னை அழைத்து, ‘எதுக்கு நீ சொந்த செலவில் இதைச் செய்கிறாய்? கட்சியே இதை ஏற்று நடத்தும்' என்றார். பதினைந்து நாட்கள் அந்த பயிற்சிப் பாசறை நடந்தது. தொடக்க விழாவுக்கும் நிறைவு விழாவுக்கும் கலைஞரே வந்தார். அதன் பின்னர், கலைஞர் என்னிடம் பேரன்பு காட்டினார். தினந்தோறும் காலை மாலை என அவரை சந்திக்கத் தொடங்கினேன். அவர் திரைப்படங்களுக்குச் சென்றால், அவருடன் செல்வேன். அவருக்கு உதவியாளர் போன்றும், அவருடன் தொடர்ந்து பேசுவதற்கும் செல்கிற நான் கன்னிமாரா நூலகத்திற்கு சென்று புத்தகங்களையும் கொண்டு வந்து தருவேன்.

1975இல் என்னுடைய திருமணம், கலைஞர் தலைமையில்தான் நடந்தது.   கல்யாணத்துக்கு வந்தவர் ‘எங்கே சாப்பாடு?' என்று கேட்டார்.

'அவரவர் வீட்டில்' என்றேன்.

மேடையேறிய கலைஞர், ‘மணமகன் கொள்கை பிடிவாதக்காரராக இருக்கிறார்' என்றார்.                                                           

எனக்கு பெரியார், அண்ணா முதல் இரண்டு இடத்தில் இருக்கும் தலைவர்கள் என்றால், கலைஞர் மூன்றாவது தலைவர். அவரிடம் இருக்கும் பண்புகளிலேயே மிக முக்கியமான பண்பு அனுசரிப்பதுதான். திறமையானவர்களை அடையாளம் கண்டுவிட்டால், அவர்களை தன்னுடனே வைத்துக் கொள்ளத் தன்னைக் கூட கீழிறக்கிக் கொள்பவர். கலைஞரின் திறமையைப் பார்த்து வியந்திருக்கிறேன். பிழையின்றி எழுதுவார். முரசொலிக்கு அவர் கடிதம் எழுதும் போது நான் உடனிருப்பேன். மனதில் நினைப்பதை, பத்து நிமிடத்தில் எழுதிவிடுவார். எழுதியதைக் காட்டுவார், ஓர் ஒற்றுப் பிழை கூட இருக்காது.

நடைப்பயிற்சி செல்லும்போது, ‘நாகநாதன் இன்னைக்கு நாட்டில் என்ன விசேஷம்?' எனக் கேட்பார். அன்றாட அரசியல், பொருளாதாரம், இலக்கியம், தினசரி செய்திகள் என எல்லாவற்றையும் பற்றி பேசுவோம். நான் எதாவது ஒரு கருத்தை கூறினால், அதற்கு அவர் ஒரு கருத்தைச் சொல்வார். 

எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில், நக்சலைட்டுகள் மீது கொடுமையான தாக்குதல் நடத்தினார்கள். காவல் அதிகாரி தேவாரம் அப்பாவி இளைஞர்களைச் சுட்டுக் கொன்றார். நீதிபதி தார்குண்டே தலைமையில் மனித உரிமை அமைப்பொன்று அறிக்கை வெளியிட்டிருந்தது. அதற்கு சோ ராமசாமி கூட ஆதரவு தெரிவித்திருந்தார். இதை கலைஞரிடம் சொன்னேன்.                                                                      

‘என்ன செய்யலாம்' என்றார். ‘சட்ட மன்றத்தில் இது குறித்து கேள்வி எழுப்பணும்' என்றேன்.  உடனே, சிபிஎம் தலைவர் உமாநாத்தை சந்தித்த கலைஞர், ‘நான் எதிர்க்கட்சி. இந்த பிரச்னை குறித்து கேள்வி எழுப்பினால், வேறு மாதிரி முதல்வர் எம்ஜிஆர்  முடிவு எடுக்க வாய்ப்புண்டு. எல்லா கட்சிக் காரர்களும் பேசுங்க. இதை ஒரு மக்கள் பிரச்னையாக மாத்துங்க' என்றார். இது தான் அவரிடம் இருக்கும் சிறப்புத்தன்மை. நாம் ஒரு பிரச்னையை அவரிடம் சொன்னால், அதற்கு தீர்வு காண வேண்டும் என்றுதான் நினைப்பார். பிரச்னையை அரசியலாக்கி புகழ்தேடமாட்டார்.

அரசியல் முள்வேலி போன்றது என்பார் கலைஞர். 1989இல் திமுக ஆட்சி கலைக்கப்பட்டது. மறுநாள் காலையில் நடைப்பயிற்சி செல்கிறோம். ‘முதலமைச்சர் பதவி காலியாகிடுச்சிய்யா.. நான் ப்ரீயாகிட்டேன். இனி எழுத்துப் பணியில் கவனம் செலுத்தப் போகிறேன்' என சிரித்துக் கொண்டே சொல்கிறார். அந்த சமயத்தில் தான், திருக்குறள் தெளிவுரையை முரசொலி இதழில் தொடராக எழுதினார். மு.வ உட்படப் பலர் எழுதிய உரைகளைப் படித்துவிட்டு, அவர்கள் சொல்லாத விஷயங்களை, திருக்குறளின் மூலம் சிதையாமல் எழுதுவார். எந்தக் காலகட்டத்திலும் அவர் எழுத்துப் பணியை கைவிடவில்லை.

1996ஆம் ஆண்டு என்று நினைக்கிறேன். கலைஞர் இறந்துவிட்டதாக வதந்தி கிளப்பினார்கள். வழக்கம் போல், காலையில் நடைப்பயிற்சி செய்துவிட்டு, நான் கல்லூரிக்கு வந்துவிட்டேன். மாலை நான்கு மணிக்கு, எனக்கு ஏகப்பட்ட தொலைபேசி அழைப்புகள்.

‘நாகநாதன்... கலைஞர் நல்லாருக்காரா? வடசென்னை முழுவதும் கடை அடைப்பாமே...!' என நண்பர்கள் கேள்வி கேட்டு நச்சரிக்க தொடங்கினர். கல்லூரி முடிந்து வீட்டுக்குச் சென்றேன், கலைஞரிடமிருந்து அழைப்பு,

‘வதந்திகளை கேள்விப்பட்டியா...? வீட்டுக்கு வர்றீயா...?' என்றார்.

அண்ணாவின் பேச்சை ஒலிநாடாவில் கேட்டுக் கொண்டு, அமைதியாக உட்கார்ந்திருந்தார், கலைஞர். ஏறக்குறைய நாற்பத்தைந்து நிமிடம் இருவரும் கேட்டுக்கொண்டிருந்தோம். முடிந்ததும். ‘என்ன...? அண்ணா பேச்சை கேட்ட்டாய் அல்லவா?  எவ்ளோ உணர்வா, சந்தோஷமா இருக்குல்ல' என்றார். பகுத்தறிவுவாதியான கலைஞர் மரணத்தை கண்டு அஞ்சாதவர்.

ஒரு முறை கலைஞர் கலந்து கொண்ட திருமண விழாவில் நானும் கலந்து கொண்டேன். வாழ்த்துரை வழங்க அழைத்தார்கள். என்ன பேசுவதென்று உடனே யோசித்தேன். ‘தந்தை பெரியாரும் பகுத்தறிவும் போல, பேரறிஞர் அண்ணாவும் தமிழ் பண்பாடும் போல, திருக்குறளும் கலைஞரின் தெளிவுரையும் போல மணமக்கள் வாழ்வாங்கு வாழ' என பேசினேன். உடனே கலைஞர் திரும்பிப் பார்த்தார். அவர் அப்படி பார்த்தாலே ஏதோ ஒரு பொருள் இருக்கிறது என்று அர்த்தம். மறுநாள் காலையில் நடைப்பயிற்சி செல்கிறோம், ‘நேற்று நீ பேசியது, எனக்கு மின்னல் வேகத்தில் தாக்கியது மாதிரி இருந்துதுய்யா' என்றார் கலைஞர். அது தான் அவரின் உயரிய பண்பு.

1999ஆம் ஆண்டு பாஜகவுடன் கூட்டணி வைப்பது குறித்து என்னிடம் கேட்டார், கலைஞர். நான் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். அரசியல் சூழல் காரணமாக தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தது திமுக. அந்த கூட்டணி காரணமாகத்தான் சென்னையில் மென்பொருள் பூங்கா (Tidel park) வந்தது.

எனக்கு தேர்தலில் அரசியலில் பெரிய ஈடுபாடு இல்லை என்பது கலைஞருக்கு தெரியும். இருந்தாலும், கடந்த 2006ஆம் ஆண்டு ஜனவரி மாத வாக்கில், ‘நாகநாதன் நீங்க சட்டமன்ற தேர்தலில் நிக்குறீங்க' என்றார் கலைஞர். ‘என்னிடம் பணமே இல்லையே. நான் எப்படிங்க நிற்பது' என்றேன். ‘செலவை நான் பாத்துக்கிறேன்' என்றார். நான் ஒரு பைசாவையும் செலவு செய்யாமல்தான் தேர்தலில் நின்றேன். எல்லா செலவும் அவர் தான் செய்தார். தேர்தல் முடிவுக்குப் பிறகு நான் சிரித்துக் கொண்டு இருந்தேன். கலைஞர்தான் கொஞ்சம் வருத்தத்துடன்  இருந்தார்.

2006இல் அவர் முதலமைச்சர் ஆனதும், என்னை திட்டக்குழு தலைவராக அறிவித்தார். நான் வேண்டாம் என்று சொன்னேன். பேராசிரியர் அழைத்து ‘கலைஞர் வருத்தப்படுகிறார். பதவியை ஏற்றுக் கொள்' என்றார். பெரும் தகைமையாளர் கலைஞர்.

2009ஆம் ஆண்டிற்குப் பிறகு கலைஞர் நடைப்பயிற்சியை நிறுத்திவிட்டார். அவர் உடல் நலிவுற்றிருந்த போது கூட என்னைப் பார்க்க விரும்பியதாக எனக்கு தகவல் கிடைத்தது. உடனே அவரைப் பார்க்க சென்றேன். கையைப் பிடித்துக் கொண்டார். கண்கலங்கிவிட்டேன்!

கலைஞர் எப்போதும் இங்க் பேனாவால் தான் எழுதுவார். அவர் எழுதும் போது கரகரவென சத்தம் கேட்கும். வியர்த்து ஊற்றும்.

ஒருமுறை தினமணிக்கு சிறுகதை கேட்டிருந்தார்கள். விடியற்காலை நான்கு மணிக்கு நடைப்பயிற்சி சென்று கொண்டிருக்கிறோம். ஒரு யாசகம் கேட்பவர் 'ஐயா' என கூப்பிட, ‘நாகநாதன் எனக்கு கதைக்கான கரு கிடைத்துவிட்டது. நான் வீட்டுக்கு செல்கிறேன். நீ பல்கலைக்கழகம் போகும்போது வந்து, இதை வாங்கிக் கொண்டு போய் தினமணியில் கொடுத்துவிடு' என்றார்.

நான் எட்டரை மணிக்குச் சென்றேன். கதை எழுதி முடிக்கவில்லை. நான் போய் நிற்கிறேன். அதைக் கூட பார்க்காமல், கரகரவென எழுதிக் கொண்டிருக்கிறார். எழுதியதையெல்லாம் கீழே போட்டுக் கொண்டிருக்கிறார். இருபத்தி ஏழு பக்கம் எழுதி முடித்ததும், திரும்பி பார்த்தவர்,

‘நீ எப்போது வந்தாய்' என்றார். நான் வந்து இருபது நிமிஷம் ஆகுது' என்றேன். ஏசியில் உட்கார்ந்து எழுதியவருக்கு வியர்த்து ஊற்றியது. 'வேர்க்கிறதே என்று பயந்துவிடாதே. எழுத்துப்பணியில் ஈடுபடும்போது இதுபோன்று வியர்ப்பது இயல்பானது' என்றார்.

இது போன்ற பல நிகழ்வுகளில் கலைஞரின் பேனா வலிமையை நேரில் பார்க்கும் வாய்ப்பு பெற்றவன் நான்.  பேனாவின் வலிமையை உணர்ந்தவர் கலைஞர். திறன் மிக்க எழுத்தாளர்களை இதனால் தான் கலைஞர் போற்றி வந்து இருக்கிறார். கவிஞர்கள், எழுத்தாளர்கள் எந்தக் கட்சியில் இருக்கிறார் என்று சிறிதளவும் எண்ணிப்பார்க்க மாட்டார் . பேனாவின் வலிமையை முற்றும் உணர்ந்தவர் கலைஞர். அவரின் பேனாவின் வலிமையை நான் கண்டு களித்து உணர்ந்தவன்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com