காக்க...காக்க...காவல்துறை காக்க! 

காக்க...காக்க...காவல்துறை காக்க! 

பூத்துக் காய்த்து கனிகள் நிறைந்த மரம் பார்க்க அழகாக இருக்கும். அந்தச் செழிப்புக்கு, காரணம் மரத்தின் வேர்கள்தான். கண்ணுக்கு புலப்படாத வேர்களைப் போன்றதே காவல் துறையின் பல்வேறு பணிகள்.

காவல் துறையினரின் பணித் திறனை மேம்படுத்தவும் பிரச்னைகளைக் களைந்திடவும் நாம் செய்ய வேண்டிய சீர்திருத்தங்களைப் பற்றி சிந்தித்தேயாக வேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம்.

இன்று தமிழகத்தின் மக்கள் தொகை 7,78,41,267. அனுமதிக்கப்பட்ட காவல் துறையினரின் எண்ணிக்கையோ 1,24,939. இது எத்தனையோ தசாப்தங்களுக்கு  முன் நிர்ணயிக்கப்பட்ட எண்ணிக்கை. அதிகரித்துள்ள மக்கள் தொகைக்கு ஏற்ப காவல் துறையில் பணியிடங்கள் அதிகரிக்கப்பட வேண்டும். இந்நிலையில் அனுமதிக்கப்பட்ட காவல் பணியிட எண்ணிக்கையிலேயே 13,049 காலியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. தமிழகத்தின் இன்றைய (2021) ஒரு காவலர் 800 பேரை கண்காணித்துக் காக்க வேண்டியவராக இருக்கிறார். இந்தப் பணியை சரியாக அல்லது சுமாராக செய்யக்கூட அதிமானுடரால் (Super Man) மட்டுமே இயலும், போதாக் குறைக்கு காலிப்பணியிடங்கள் வேறு. எனவே காவல் துறையினர் தாங்க முடியாத பணிச்சுமை, மன அழுத்தம் மன உளைச்சல் பணித்திறன் குறைபாடு ஆகியவற்றுடன் ஒவ்வொரு நிமிடமும் போராட நேரிடகிறது.

தமிழகத்தில் சென்ற ஆண்டில் (2020) உயிர்நீத்த காவல் துறையினர் 337 பேர். தென்னக மாநிலங்களிலேயே அதிகப்படியான உயிர்ப்பலியாகிறவர்கள் தமிழக காவல்துறையினர்தான் என்பது ஆற்றொணாத் துயரம். இந்நிலை மாற உடனடியாக மக்கள் தொகைப் பெருக்கத்திற்கு ஏற்ப ஓர் ஆரோக்கியமான விகிதாச்சாரத்தில் காவல் துறைப் பணியிடங்கள் அதிகரிக்கப்பட வேண்டும். காலியிடங்கள் உடனடியாக நிரப்பப்பட வேண்டும்.

காவலர் தேர்வு முறையிலும் மாற்றங்கள் தேவை. காவல் தேர்வுக்கான கல்வித்தகுதியை +2 தேர்ச்சி பெற்றவர்கள் என்ற நிலைக்கு உயர்த்தலாம். காவல் பயிற்சி தருவதற்கு இரு மாவட்டங்களுக்கு ஒரு கல்லூரி என்ற அளவில் காவலர் பயிற்சிக்கல்லூரிகள் முழுமையான வசதிகளுடன் (State of art) நிறுவப்பட வேண்டும். காவலர்களுக்கான பயிற்சி முழுமையாக ஓர் ஆண்டு தரப்பட வேண்டும். பயிற்சிக்கான பாடத்திட்டங்களும் நவீனமயமாக்கப்பட வேண்டும்.

கடந்த சில வருடங்களாக காவல் துறைப் பயிற்சிக்கு ஆட்களை எடுக்கும் போது 10,000, 15,000 என்ற எண்ணிக்கையில் ஆட்களைத் தேர்வு செய்து தாற்காலிக பயிற்சிப் பள்ளிகளில் சில மாதங்கள் தங்க வைத்து பயிற்சி அளித்து காவலர் பதவிக்கு தயார் செய்து விடுகிறார்கள். இது ஏற்கத்தக்கதல்ல. ஒவ்வொரு பயிற்சிப்பள்ளிக்கும் 75-லிருந்து 100 என்ற எண்ணிக்கையில் பயிற்சிக்காக தேர்வு பெற்ற இளைஞர்களை அனுப்ப வேண்டும். எனவே ஆண்டுக்கு 2500 முதல் 3000 பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட வேண்டும். ஒவ்வொரு முறை ஆளினர் சேர்க்கை நடைபெறும் போதும் குறிப்பிட்ட சதவீத எண்ணிக்கையில் பெண்காவலர்களும் பெண் காவல் துறை அதிகாரிகளும் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.

15,000 காவலர்கள் தேர்வு செய்யப்பட்ட போது 800 மகளிரே தேர்வு செய்யப்பட்டதாக ஒரு தகவல் இருக்கிறது. அதற்கடுத்த ஆண்டுகளில் 10,000, 13,000 என்ற எண்ணிக்கையில் காவலர் தேர்வு செய்யப்பட்ட போது மகளிர் ஒருவரும் தேர்வு செய்யப்படவேயில்லை என்பது அதிர்ச்சிகரமான செய்தி.

ஓய்வு பெற இருக்கும் அதிகாரிகளுக்கு 5 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு 21 நாட்கள் பயிற்சி, 3 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு 15 நாட்கள் பயிற்சி, இறுதி இரண்டு ஆண்டுகளில் எட்டு முறை வாரப்பயிற்சி மற்றும் 3 தினப் பயிற்சி என சிறப்பு பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும். இந்தப் பயிற்சிகளில் தங்களுடைய பணம், சொத்து ஆகியவற்றை பராமரிக்கும், பாதுகாக்கும் வழிகள் சொல்லித்தர வேண்டும். குடும்ப உறவுகளைப் பேணுதல், மனநலம் பேணி, இறுதிவரை உற்சாகத்துடன் வாழ்தல் ஆகியவற்றின் அவசியத்தை ஓய்வு பெற இருப்பவர்களுக்கு சொல்லித்தர வேண்டும்.

காவல்துறையில் பணியாற்றும் குடும்பத்தினரின் குழந்தைகளின் கல்வி சிதைவுறுகிறது. இதைத் தவிர்க்க ஸ்டேட் வங்கியினர் தொடங்கி வெற்றிகரமாக நடத்தும் SBOA போல தமிழகத்தில் நான்கு இடங்களிலாவது School Of Excellence என்று காவல் துறையினர் குழந்தைகளுக்கு முன்னுரிமை தரும் உண்டு உறைவிடப் பள்ளிகள் உருவாக்கப்பட வேண்டும்.

பயிற்சி முடிந்ததும் இளங்காவலர்கள் தமிழக சிறப்புக் காவல் பிரிவுக்கு அனுப்பப்படுகிறார்கள். ஆவடி பட்டாலியனில் ஐந்து யூனிட்டுகள் ஒரே இடத்தில் குவித்து வைக்கப்பட்டுள்ளனர். அவ்வாறில்லாமல், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு இயன்றளவு அருகில் பட்டாலியன்களின் இருப்பிடம் அமைய வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் காவல் கண்காணிப்பாளர்கள் அழைத்ததும் விரைந்து செல்ல ஏதுவான குறுகிய தொலைவிலேயே அவர்களது இருப்பிடம் அமைத்துத்தர வேண்டும்.

ஒவ்வொரு சப் டிவிஷனிலும் காவல் துறைக்கென பெரிய மண்டபங்கள் கட்ட வேண்டும். ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்துக்குப் பணி நிமித்தம் வரும் சிறப்பு காவல் படை காவலர்கள் தங்குவதற்கு உதவியாக இருக்கும். மற்ற சமயங்களில் அவை சமுதாய நலக் கூடங்களாகச் செயல்படலாம். அதன்மூலம் கிடைக்கும் நிதி காவலர் நல நிதியில் சேர்க்கப்படலாம்.

காவல் துறையில் பதவி உயர்வு என்பது மிக மிக முக்கியமானது. அதை அடைய ஆண்டுக்கணக்கில் சிரத்தையாக கர்மயோகத்தைச் செய்தபடி காத்திருக்கும் அதிகாரிகளுக்கிடையே ‘ஆள் பிடிப்பவர்களும்‘ தற்செயல் வெற்றியாளர்களும் அதைப் பெறுவது காவல் துறையின் ஆன்மாவை அரிக்கும் செயல்பாடுகள்.  அதிகாரி உண்மையிலேயே அரிதினும் அரிதான அதிமானுடச் செயல்பாடு எனும்படியாக மிக மிக மிகச் சிறப்பான பணியை ஆற்றியிருந்தால் அவருக்கு ஒரு பண முடிப்போ, பாராட்டுச் சான்றிதழோ வழங்கலாமே தவிர அவருக்குப் பணி மூப்பு அடிப்படையில் அல்லாத பதவி உயர்வை வழங்கக் கூடாது.

நீதிபதிகளின் நியமனங்களை எப்படி (அரசியல்வாதிகளின் தலையீடு இல்லாதபடிக்கு) நீதிபதிகள் அடங்கிய கொலீஜியமே பரிந்துரைக்கிறதோ அதைப் போல, பணிமூப்பு அடிப்படையிலான மாவட்டக் காவல்துறை அதிகாரிக்கு ஈடான பதவியில் இருப்போர் மற்றும் அனைத்து ஐ.பி.எஸ்.அதிகாரிகளின் இட மாறுதல்களைத் தீர்மானித்து நடைமுறைப்படுத்த அரசியல்வாதிகள் அல்லாத ஒரு குழு அமைக்க வேண்டும். அந்தக் குழுவில் உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவர், ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவர், டி.ஜி.பி.க்கள் இருவர், ஐ.ஜி.க்கள் இருவர் ஆகியோர் உறுப்பினர்களாக இடம்பெற வேண்டும். 

தமிழ்நாடு காவல் துறைக்குத் தலைமை தாங்கும் டிஜிபி பதவியில் ஒரு நேரத்தில் ஒருவர் மட்டுமே நியமிக்கப்பட வேண்டும். ஏதேனும் தவிர்க்கவியலா சூழலில் இரண்டு அதிகாரிகளைத் தலைமைப் பதவியில் நியமிக்க நேர்ந்தால், இருவரில் ஒருவர் மட்டுமே உச்சத் தலைமைப் பதவியில் இருக்கும் பணி மூப்பு உடையவராகவும் இரண்டாமவர் அவருக்கு படி நிலையில் பல ஆண்டுகள் இளையவராக உள்ளவராகவுமே பணி நியமனம் செய்யலாம். இவர்களின் பொறுப்புகள் வரையறுக்கப்பட வேண்டும்.

கால மாற்றம், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியின் மேம்பாட்டினை கவனத்தில் கொண்டு காவல் துறையில் சில பிரிவுகளை அகற்றலாம், சில பிரிவுகளை புதிதாகச் சேர்க்கலாம், சில பிரிவுகளை வலிமை கொள்ளச் செய்யலாம்.

பொருளாதார குற்றப்பிரிவு, போதைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு ஆகியவை குற்றம் நடந்து பாதிக்கப்பட்டவர்கள் புகார் கொடுத்த பிறகே செயலபடத் தொடங்குகின்றன. அவை வருமுன் காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அதிகாரம் பெற்றவையாக வேண்டும்.

பொருளாதாரக் குற்றப் பிரிவு  தொடங்குவதற்கு முன் பல்லாயிரக் கணக்கானவர்களிடம் நிதியை பல கோடி அளவில் வசூல் செய்த பிறகு சட்டென்று காணாமல் போய்விட்ட ‘பெரிய மனிதர்களைக்' கண்டுபிடித்து லாரிக்கணக்கான ஆவணங்களைக் கைப்பற்றி ஆய்வு செய்ய வேண்டிய பணிக்கு கமிஷன்கள் நியமிக்கப்பட்டன. இவை யானைகளாகத் தொடர்ந்து அரசு நிதியை மென்றபடி வருடக் கணக்காகத் தொடர்ந்து கலைஞர் ‘மனோகரா' வில் எழுதிய வசனம் போல, ‘இளவரசருக்கு வியாதி குணமாகிவிடவும் கூடாது. இளவரசர் இறந்தும் போய்விடக் கூடாது' என்று தம் பணியை நீட்டித்துக் கொண்டே போயின என்பதும் ஒரு காலக் கொடுமை. இதைச் சுட்டிக் காட்டுவது குற்றமாகிவிடும் என்று எல்லாம் தெரிந்தும் மௌனமாகக் கடந்து போக வேண்டியுள்ளது.

கடலோரக் காவல் படை கோயில்கள் பாதுகாப்பு படை ஆகியவை வலிமை படுத்தப்பட வேண்டும். அதற்கென தனிப்பயிற்சி, தளவாடங்கள் ஆகியவற்றைக் கையாளும் திறன் ஆகியவை கற்பிக்கப்பட வேண்டும்.

தொழில் நுட்ப மாற்றங்கள், சட்ட சீர் திருத்தங்கள் ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு சில பரிவுகளை நீக்கி விடலாம் எடுத்துக்காட்டாக வீடியோ பைரசி செல், சிவில் சப்ளைஸ் பிரிவு ஆகியவை செயல்பட வேண்டிய தேவை இல்லை.

G.R.P என்று அழைக்கப்படும் மாநில ரயில்வே காவல் துறையும் தன் பொறுப்புகளை R.P.F வசம் ஒப்படைத்துவிட்டு வெளியேறலாம்.

 அனைத்துக் காவல் நிலையங்களிலும், லாக்கப் அறைகளிலும் கண்காணிப்பு கேமிரா கட்டாயம் இருக்க வேண்டும். இருப்பது மட்டும் போதாது. அவை சரியாகச் செயல்படவும் வேண்டும். அந்தச் சரக காவல் நிலையங்களுக்குப்  பொறுப்பாக இருக்கக் கூடிய அதிகாரிகள் அவ்வப்போது காவல் நிலையங்களுக்கு விசிட் செய்து அந்த கண்காணிப்பு கேமிராக்கள் சரியாக இயங்குகின்றனவா என்று ஆய்வு செய்ய வேண்டும். காவல் நிலையங்களில் மட்டுமன்றி பொதுமக்கள் கூடுமிடங்களில் உள்ள கண்காணிப்பு கேமிராக்கள்  செயல்படாமல் இருப்பது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட காவல் எல்லையின் அதிகாரி (இன்ஸ்பெக்டர் / சப் இன்ஸ்பெக்டர்) தண்டிக்கப்பட வேண்டும்.

ஒருவரைக் கைது செய்யும்போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் என பத்துக் கட்டளைகளை உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. அவற்றை அனைத்துக் காவல் நிலைய வாசலிலும் தமிழில் அறிவிப்புப் பலகையில் வைத்திருக்க வேண்டும். 

விசாகா கமிஷன் பரிந்துரைத்ததைப் போல ஒரு மைய கமிட்டியும், மாவட்ட கமிட்டியும் நிரந்தர அமைப்பாக செயல்பட வேண்டும். அத்தகைய கமிட்டியின் உறுப்பினர்கள் பற்றிய எல்லா தகவல்களும் இடம் பெற்ற பலகைகள் காவல் அலுவலகம் மற்றும் காவல் நிலையங்களிலும் இடம் பெற வேண்டும்.

பெண் எஸ்.பி.யிடம் தவறாக நடந்துகொண்ட டி.ஜி.பி.யை நீண்ட யோசனைக்குப் பின்னர் மூன்று வாரங்கள் கழித்தே பணியிடை நீக்கம் செய்திருக்கிறது அரசு. அவ்வாறில்லாமல், எந்தத் தவறாக இருந்தாலும் தவறிழைத்த காவலர்களுக்கும் காவல் துறை அதிகாரிகளுக்கும் துறை ரீதியான விசாரணையை உடனடியாகத் தொடங்குவதுடன் அதற்கேற்ற தண்டனையை 60 தினங்களுக்குள்ளும் வழங்க வேண்டும்.

உடனடியாக திருவள்ளூர், நாமக்கல், விழுப்புரம், நாகை, விருதுநகர், நாகர்கோயில் ஆகிய மாவட்டங்களில் முதற்கட்டமாக காவலர் மருத்துவமனைகள் வேண்டும். அந்தந்த மண்டலங்களில் பணியாற்றும் அனைத்துக் காவலர்களின் தரவுகளுடன் அவர்களின் ரத்தப் பிரிவும் பொறிக்கப்பட்ட தகவல் பலகையை மருத்துவமனையில் பொதுப் பார்வைக்கு வைக்க வேண்டும். யாரேனும் காவலருக்கு விபத்து மற்றும் அறுவை      சிகிச்சை நேரத்தில் ரத்தம் தேவைப்பட்டால், அந்தத் தகவல் பலகையிலிருந்து பொருத்தமான குருதிக் கொடையாளி கண்டறியப்பட்டு நோயாளிகள் காப்பாற்றப்பட வேண்டும்.

காவல் துறையினரின் நலம் நாடும் திட்டங்களில் சில அதிகாரிகள் சிறப்புக் கவனம் செலுத்துவார்கள். அத்தகைய காலங்களில் காவலர்களுக்கு என சொந்த வீடுகள் (Own your house scheme) ஏற்படுத்துவது பற்றி திட்டங்கள் ஏற்படுத்தப்பட்டன. அவை சிறப்பாக நடைமுறைப்படுத்தப்பட்டன. அதற்காக காவலர் வீட்டு வசதி வாரியம் அமைக்கப்பட்டது. காலப்போக்கில் அது காவல் துறையினருக்கு குடியிருப்புகள் (பணிக்காலத்தில் பயன்படுத்த ) அமைக்கும் நிறுவனமாகக் குறுகிப் போனது.

முடிந்த வரை காவலர்களுக்கு பணிக்காலத்தில் 100% குடியிருப்புகள் வழங்க அரசு உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும். காவல் துறையில் பணியாற்றியவர்களுக்கு ஓய்வுக்குப்பின் சொந்த வீடு அமைய ஆவன செய்ய வேண்டும்.

மாவட்டம் தோறும் ஓய்வு பெற்ற காவல் ஆளினர் நலம் பேண சிறப்பு ஏற்பாடுகள் செய்தால் சிறப்பாக இருக்கும். தமிழகத்தில் பத்துக்கு குறையாமல் காவல் ஆளினர்களுக்கான முதியோர் இல்லங்கள் அமைக்கப்பட வேண்டும்.

காவல்துறையில் மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்தங்களைப் பரிந்துரைக்க ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி பூர்ணலிங்கம் தலைமையில் அரசு  கமிஷன் ஒன்றினை அமைத்தது. அந்தக் கமிஷன் மொத்தம் 444 பரிந்துரைகளை ஆய்வுக்குப் பின் அறிக்கையாக அரசுக்குச் சமர்ப்பித்தது. அவற்றில் எத்தனை பரிந்துரைகள் நிறைவேற்றப் பட்டிருக்கின்றன என்கிற தரவுகள் இல்லை. எனக்குத் தெரிந்தே வீடியோ பைரசி பிரிவை வேறு பிரிவுடன் இணைக்கும்படி பூர்ணலிங்கம் கமிஷன் பரிந்துரை செய்திருந்தது. எனினும் கமிஷனின் பரிந்துரைகளில் இது மட்டும் 2011 வரை செயல்படுத்தப்படாததாகவே பலப்பல ஆண்டுகள் தொடர்ந்தது. அதற்கு முக்கிய காரணம், அத்துறையில் பொற்கனிகள் கொய்து பழகிய ஓர் அதிகாரியின் நாசுக்கான சதி வேலைதான்.

பல மாநிலங்களில் உள்துறைக்கு என தனி அமைச்சர்கள் இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் கக்கனுக்குப் பிறகு உள்துறையும் காவல் துறையும் தனியாக அதற்கென ஒரு அமைச்சரையும் அமைச்சகத்தையும் பெறவில்லை என்பது காவல்துறைக்கு இழைக்கப்பட்ட துயரம். இந்தத் தொழில்நுட்ப யுகத்தில் காவல்துறை சந்திக்க வேண்டிய சவால்கள் பெருகியபடி இருக்கின்றன. உயரப் பறக்கும் ஜெட்களில் செல்லும் குற்றவாளிகளை மாட்டு வண்டிகளில் காவல்துறை துரத்துகிறது. காவல்துறை சமூகத்தின் முதுகெலும்பு. அதைக் கழற்றி வீசி விடப் போகிறீர்களா?

ஏப்ரல், 2021

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com