காதலின் சிலுவைகள்

சேது
சேது
சேது
Published on

பாலுமகேந்திராவின் பள்ளியிலிருந்து கிளம்பியவர்களின் பட்டியலில் முதலாவதாக பாலாவின் பெயரை எழுதி வைத்த படம் சேது. யூகத்திற்கு அப்பாற்பட்ட அதே நேரம் கையாள்வதற்குச் சிரமமான காதலின் தனித்த கடினத்தைச் சொல்ல முற்பட்ட படம்.

அச்சு அசலான பதின்பருவத்தின் தளைகளற்ற ஆண் மனம் ஒன்றை கொஞ்சமும் புனைவுத் தன்மை துருத்தாத வண்ணம் சித்தரித்தார் விக்ரம். நாயகவேஷத்தின் அதீதங்கள் எதுவும் கலக்காமல் படிகம் போன்ற துல்லியத்தோடு ஆடவனின் தனியாவர்த்தன உலகம் நம் கண் முன்னால் விரிந்தது. அங்கே தென்பட்ட தேவதை அபிதாவின் மீது சேதுவுக்கு ஏற்பட்ட வாஞ்சை ஆதுரமாகித் தேடலாய்க் கனிந்து காதலாவதெல்லாமும் நம்பகத்தின் ஓடுபாதையில் பிசகாமல் நிகழ்ந்தேறியது.

சொல்ல வந்த காதலின் ஒற்றை இழையை, முன்பறியா யதார்த்த நேர்த்தியுடன் சித்தரித்ததும், தன்னைத் தானே நகர்த்திக் கொண்டு செல்லக்கூடிய திரைக் கதையின் சொலல் முறையும் சேதுவின் பலங்கள். குரல் மொழி இசை எனத் தன் மூன்று மலர்களைக் கொண்டு இந்தப் படத்தை உயிர்ப்பித்தார் இளையராஜா.

பச்சை வண்ணம் ததும்பும் பிறழ் மனங்களின் வனாந்திரமாம் பாண்டி மடத்திலிருந்து, தன் மன மீள்தலை நிரூபித்தபடி, காதலாளைத் தேடி வருகிற சேது, அவளற்ற தன் உலகில் எஞ்சுகிற ஒரே இடமான அதே மடத்துக்குத் திரும்புகிறதோடு முடிகிறது படம். துக்கமும், கண்ணீரும் காதலை எப்போதும் சுற்றி இருக்கிற எடையற்ற குறளிகள். அல்லது காதலின் இருபுறச் சிலுவைகள்.

நவம்பர், 2018.

logo
Andhimazhai
www.andhimazhai.com