காதல்: உறவை விட பிரிவுக்குத்தான் மனமுதிர்ச்சி தேவைப்படுகிறது 

காதல்: உறவை விட பிரிவுக்குத்தான் மனமுதிர்ச்சி தேவைப்படுகிறது 

ஊடல் வேறு , பிரிவு வேறு. இது அல்லாமல் மிஸ் அண்டர்ஸ்டேண்டிங் என்பது வேறு. இவற்றைப் போட்டுக் குழப்பிக்கொள்ளும் கோஷ்டிதான், பழைய ஃபீலிங்க் இப்பத் தலைத் தூக்குது என தன்னுடைய எக்ஸை (EX) போட்டு டார்ச்சர் செய்வது. ஊடல் அனைவருக்கும் தெரியும். இந்த ஊடல் ஒரு நொடி முதல் ஒரு வாரம் வரை கூட நீடிக்கும். இந்த ஊடல் காலத்தில் ஏற்படும் தற்காலிக பிரிவு முடிவுக்கு வரும் வேளையில் உறவு இன்னும் பலப்பட்டு இருக்கும். ஊடலுக்கு பின்னான கூடலில் கிக் கொஞ்சம்  எக்ஸ்ட்ராவாக கிடைக்கும்.

அடுத்து மிஸ் அண்டர்ஸ்டேண்டிங்க். தவறான புரிதலால் பிரிந்து இருந்தவர்கள், ஒரு கட்டத்துக்குப் பிறகு சரியான புரிதல் வந்தவுடன் ஈகோ பார்க்காமல் இணைந்து கொள்ளலாம்.

பிரிவு என்று வருகையில் அது வாழ்வில் மிக முக்கியமானதாகிறது. ஏன் பிரிந்தார்கள் என்ற காரணம் மிக மிக முக்கியம். உறவுக்குள் கடுமையான ஒரு சீட்டிங் செய்து விட்டு, அதன் காரணமாக ஒரு பிரேக் அப் வந்தால் தவறு செய்தவர்கள் ஒதுங்கி விடுவதுதான் நியாயமானது. ஒருவரின் சீட்டிங்கால் இன்னொருவர் கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பார். சீட்டிங்கின் அளவைப் பொருத்து அந்த பாதிப்பின் ரணம் வாழ்க்கை முழுக்கக் கூட மறக்க முடியாததாக இருக்கலாம். ஆனால் சீட்டிங் செய்தவருக்கு அது ஒரு  சாகசம், அவ்வளவுதான். சீட்டிங் செய்தவர் முதலில் இந்தப் பிரிவை ஏற்றுக்கொண்டு வெளியே மேய ஆரம்பிப்பார். எவ்வளவு மெனக்கெட்டும் சரியான ஆள் கிடைக்காத போது, அதான் கைவசம் இருக்கே நம்ம பழைய ஆளு என நூல் விட ஆரம்பிப்பார்.

தங்கள் வாழ்வின் அற்புத தருணங்களை போட்டோ, வீடியோ மூலம் நினைவு படுத்துவார். போன் போட்டு புலம்புவார். சிலர் நேரில் சென்று டார்ச்சர் செய்வார்கள். ஒரு சிலர் தங்கள் பழைய துணையின் நட்பு வட்டம் மூலம் முயல்வார்கள்.தான் ஒரு பரிதாபமான ஜீவன் போல பில்ட் அப் செய்வார்கள். இவை எல்லாம் பக்கா க்ரைம் வகையில் சேரும். பழைய உறவுக்கு மதிப்புக் கொடுத்து இவற்றை எல்லாம் சகித்துக்கொள்ளக் கூடாது. சகிப்புத்தன்மையையே இவர்கள் பாஸிடிவ் சிக்னலாக எடுத்துக்கொள்வார்கள். எல்லை மீறும் போது தயவு தாட்சண்யம் பார்க்காமல் போலீஸில் புகார் அளித்து விட வேண்டும். தேவைப்பட்டால் சம்மந்தப்பட்டவரின் பெற்றோர் கவனத்துக்குக் கொண்டு செல்லலாம். விட்ட குறை தொட்ட குறையாக இன்னும் பெற்றோர்களுக்கு கொஞ்சம் மரியாதை இருக்கிறது. அவர்களிடம் கொஞ்சம் பயமும் இருக்கிறது.

இருவருக்குள்ளும் ஒத்து வராமல் (Incompatability) பிரிவது என்பதைத்தான் நாகரிகத்துடன் அணுக வேண்டும். நமக்குள் ஒத்துதான் வரவில்லை , நாம் ஒன்றும் எதிரிகள் அல்லவே என்ற மனோபாவம் வர வேண்டும். இருவருக்குள்ளும் இருக்கும் கணக்கு வழக்குகள், பிரித்துக்கொள்தல், பொருட்களை எடுத்துக்கொள்தல் போன்றவை சுமுகமாக நடக்க வேண்டும். எதிர்காலத்தில் ஏதேனும் தகவல் தேவைப்பட்டாலோ, உதவி தேவைப்பட்டாலோ மட்டுமே தொடர்பு கொள்ள வேண்டும் என்ற தெளிவு இருவருக்குள்ளும் அவசியம். இது டாக்ஸிக் ரிலேஷன்ஷிப் என தீர்க்கமாக முடிவெடுத்து பிரிந்து விட்டால் அந்த உறவை மறந்து விட வேண்டும். கவனியுங்கள் , அந்த நபரை அல்ல, அந்த உறவை மறந்து விட வேண்டும். காதல் மற்றும் காமக் களியாட்டங்களை அசை போடுதல் கூடாது. அதுதான் மீண்டும் டெக்ஸ்டிங்கில் ஆரம்பித்து, செக்ஸ்டிங்குக்கு தள்ளும். வேறு யாரும் கிடைக்காமல் காமத் தகிப்பில் கிடக்கையில், அந்த உறவில் இருந்த டாக்ஸிக் நினைவில் இருந்து மறைந்து காமம் மட்டுமே உச்சம் கொள்ளும். இந்தக் கட்டத்தில் மீண்டும் முட்டாள்த்தனமாக இணைபவர்கள் இருக்கிறார்கள். இவர்கள் மிகக் குறுகிய காலக்கட்டத்தில் மீண்டும், அதிக வலியோடு பிரிவார்கள். இவர்கள் ‘பிரிந்து - சேர்ந்து - பிரிந்து' விளையாட்டு விளையாடுபவர்கள். இது வெறும் உடல் தேவை விளையாட்டு.

ஒரு முறை பிரிந்து விட்டால், உறவை மறந்து அவரை புதிதான ஒரு நபராகக் கருத வேண்டும். தேவைப்படும் போது அளவாகப் பேசிக்கொள்ளலாம் என்ற எளிய உபாயத்தைக் கடைபிடித்தால் நல்லது. வெறியில் அவரை மொத்தமாக பிளாக் செய்வதை விட இது எவ்வளவோ சிறந்தது.

உறவும் இனிக்கவில்லை , உடல் தேவைக்கு வெளியேவும் ஆட்கள் கிடைக்கவில்லை என்பவர்கள் வேண்டுமானால் வெளிப்படையாகப் பேசி முடிவெடுக்கலாம். ரிலேஷன்ஷிப் வேண்டாம். அவ்வப்போது உடலுறவு மட்டும் இருவரும் ஒப்புக்கொண்டால் வைத்துக்கொள்ளலாம் என்று பேசிப்பார்த்து ஒத்து வந்தால் செயல்படுத்தலாம். ஆனால் அந்த அளவுக்குத் தெளிவானவர்கள் இங்கே இல்லை. எல்லாவற்றையும் போட்டுக் குழப்பி அடித்து இவர்களுக்கு ஒரு மெகா காம்போதான் வேண்டும்.

உறவு என்பது எப்படி இயல்பானதோ அதே போல பிரிவு என்பதும் இயல்பானது. அதை கண்ணியமாகவும் பரஸ்பர மரியாதையுடனும் எதிர்கொள்ள வேண்டும்.

பிரிவில் இன்னொரு நுட்பமான விஷயம் இருக்கிறது. ஒருவர் நண்பர்களுக்கு , சமூகத்திற்கு, மற்ற உறவுகளுக்கு மிகவும் இனியவராகவும் நல்லவராகவும் இருப்பார். ஆனால் இந்த குறிப்பிட்ட காதல் / லிவ் இன் / திருமணம் போன்ற உறவில் மட்டும் கெட்டவராக, சீட்டிங் செய்பவராக அல்லது இணைக்குப் பிடிக்காத செயல்களைச் செய்பவராக இருப்பார். இவர் கிரிமினல் அல்ல. இந்த குறிப்பிட்ட உறவில் மட்டும் அவர் சரியாக இல்லை என்று சொல்லலாம். இதை இணை கனத்த மனதுடன் ஒப்புக்கொண்டு, தொடரலாம் அல்லது பிரியலாம்.

இது அல்லாமல் இன்னொரு பிரிவினர் இருக்கிறார்கள். அவர்கள் முழு முற்றான கிரிமினல்கள். நட்பு , சமூகம் , உறவு , காதல்,காமம் என அனைத்திலும் குற்றம் இழைக்கக் கூடியவர்கள். இவர்களுக்கு கொஞ்சமும் கருணை காட்டாமல் காவல்துறையில் பிடித்துக் கொடுத்து விட வேண்டும்.

மூன்றாவதாக இன்னொரு பிரிவினர் உள்ளனர். இவர்கள்தான் வேடிக்கையானவர்கள். இந்தப் பிரிவில் ஆண்கள் அதிகம் இருப்பார்கள். சமூகக் குற்றங்கள் செய்வார்கள். கொலை , கொள்ளை, லஞ்சம், ஊழல், குழந்தையைக் கடத்துதல் என எத்தனை குற்றங்கள் உள்ளதோ அத்தனையும் செய்பவர்களாக இருப்பார்கள். ஆனால் தங்கள் இணையிடம் செக்ஸ் விஷயத்தில் லாயலாக இருப்பார்கள். இதற்கே இணைக்கு அடி உதை எல்லாம் விழும். ஆனால் செக்ஸில் தன்னைத் தவிர யாரிடமும் போகாத காரணத்தால் இவர்களிடம் உறவில் இருக்கும் பெண்கள் இவர்களுக்காக உயிரையும் கொடுப்பார்கள். அதீதமாகக் காதலிப்பார்கள். எல்லா குற்றச் செயலிலும் பக்கபலமாக இருப்பார்கள்.

இது மிக மிகத் தவறு. இந்த டிராப்பில் எந்தப் பெண்ணும் மாட்டிக்கொள்ளக்கூடாது. ஏனெனில் அவன் இதுவரை காட்டி வந்த ‘செக்ஸ் லாயல்டி' கூட எந்தக் கணமும் நொறுங்கலாம்.

ப்ராக்டிக்கலாகச் சொன்னால் அனைவருக்கும் உறவு தேவைப்படுகிறது. இன்னொரு உறவு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளவர்கள் தைரியமாக புது உறவை நாடிச் செல்கிறார்கள். இதற்கு மேல் நமக்கு உறவே கிடைக்காது என்று நினைப்பவர்கள் இருக்கும் உறவிலேயே அட்ஜஸ்ட் செய்துகொண்டு வாழ்கிறார்கள். இனி உறவே தேவையில்லை என உறுதியாக முடிவெடுத்து விலகியவர்கள் குறைந்த காலத்துக்குள்ளேயே உறவுக்கு ஏங்குகிறார்கள்.

ஒரு கோணத்தில் பார்த்தால் உறவை விட பிரிவுக்குதான் மனமுதிர்ச்சி தேவைப்படுகிறது. உறவுக்குள் முட்டாள்தனமாக, உணர்ச்சிவசப்பட்டு, மிகையுணர்ச்சியின் காரணமாக தொபுக் என்று குதித்து விடலாம். பிரிவுக்குதான் நிதானமும் , திட்டமிடுதலும், கண்ணியமும், மனமுதிர்ச்சியும் தேவைப்படுகிறது.

பிரிவு என்று முடிவான பின்பு பிரிவுதான். இதில் உறுதியாக இருந்தாலே வாழ்வின் புதிய பாதைகள் துலங்கும்.

பிரிவோம் சந்திப்போம் என்பது வேண்டாம். பிரிவோம் சிந்திப்போம்.

ஏப்ரல், 2023 அந்திமழை இதழ்

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com