2001 ஆம் ஆண்டு ஊடகங்களுக்கெல்லாம் பெரும் தீனி போட்ட வழக்குகளில் ஒன்று சரவணபவன் அண்ணாச்சி ராஜகோபால் வழக்கு. தன் ஓட்டலில் மேலாளராகப் பணியாற்றிய ஜீவஜோதி என்ற பெண்ணின் கணவர் சாந்தகுமார் என்பவரைக் கூலிப்படை வைத்துக் கடத்திக்கொலை செய்துவிட்டதாகச் சொல்லப்பட்டது. இதற்குக் காரணம் அண்ணாச்சிக்கு ஜோதிடத்தின் மேல் இருந்த நம்பிக்கை. ஏற்கெனவே இரு மனைவியரைக் கொண்டிருந்த ராஜகோபால், மூன்றாவதாக ஜீவஜோதியை மணந்துகொண்டால் அவருக்கு ஓஹோ என யோகம் பிறக்கும் என்று ஆரூடம் சொல்லப்பட்ட நிலையில்தான், இந்த குற்றச் செயல். அவரது வெற்றியைக் கோண்டாடிய ஊடகங்கள் இந்த வழக்கையும் விடாமல் பின் தொடர்ந்து இஷ்டத்துக்கு எழுதித் தீர்த்தன.
ஜீவஜோதியின் புகாருக்குப் பின்னால் நடந்த வழக்கு விசாரணையில் பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் அவருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 55 லட்சம் அபராதமும் விதித்தது. இதை அடுத்து 2009-இல் சென்னை உயர்நீதிமன்ற மேல்முறையீட்டில் இந்த தண்டனையே ஆயுள்தண்டனையாக மாற்றப்பட்டது. உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்தார். பத்து ஆண்டுகள் கழித்து 2019 மார்ச் மாதம் உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றத் தீர்ப்பை உறுதி செய்தது. இதைஅடுத்து உடல்நிலை சரியில்லை என நீதிமன்றத்தில் சரண்டைய அவகாசம் கேட்டார். அவரது கோரிக்கை உச்சநீதிமன்றத்தில் மறுக்கப்பட்ட நிலையில் 2019ஜூலை மாதம் கோர்ட்டில் சரணடைந்த அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அதே ஆண்டு ஜூலை 18 அன்று உடல்நலக்குறைவால் அவர் மரணம் அடைந்தார். மிக எளிய பின்னணியில் இருந்து, தன் உழைப்பால் உயரங்களை எட்டிய அவர் செய்த ஒரு தவறு, பெரும் சறுக்கலை அளித்தது.
11, நவம்பர் 2004. அன்று தீபாவளி தினம். பலருக்கு மிகவும் அதிர்ச்சி அளிக்கும் விதமாக காஞ்சி சங்கராச்சாரியர் ஜெயேந்திர சரஸ்வதி ஹைதராபாத்தில் கொலைவழக்கில் கைது செய்யப்பட்டார். அவ்வளவு உயர்வான இடத்தில் வைத்து வணங்கப்பட்ட ஒருவர், காவல்துறையால் கைதுசெய்யப்படுவதற்குக் காரணமாக காஞ்சி வரதராஜப் பெருமாள் ஆலயத்தில் சங்கரராமன் என்பவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வு காரணமாக அமைந்தது. தன்னைப் பற்றி மொட்டைக்கடுதாசிகளைப் போட்டுவந்த அவரை கூலிப்படை மூலம் தீர்த்துக் கட்டினார் என்று குற்றம் சாட்டப்பட்டது. இளைய சஙகராச்சாரியர் விஜயேந்திரர், காண்ட்ராக்டர் ரவி சுப்ரமணியன், மடத்தின் மேலாளர் சுந்தரேசன், கூலிப்படைத் தலைவன் அப்பு உள்ளிட்ட 24 பேர் இந்த வழக்கில் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டிருந்தனர். மிக மிக அபூர்வமான வழக்கு. இது அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா தவிர வேறு யாரும் இந்த கைதுக்குத் துணிந்திருக்கமாட்டார்கள் என்று பரவலாகப் பேசப்பட்டது. பின்னர் தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. சங்கராச்சாரியார்களின் கோரிக்கைக்கு ஏற்ப, உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, இந்த வழக்கு புதுச்சேரிக்கு மாற்றப்பட்டு அங்கே நடந்து வந்தது. 189 அரசுத் தரப்பு சாட்சிகளில் 83 பேர் பிழற்சாட்சிகளாக மாறினர்.
2013 ஆம் ஆண்டு அனைத்து குற்றவாளிகளையும் விடுவித்து புதுச்சேரி மாவட்ட அமர்வுகள் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதை யடுத்து, இந்த வழக்கில் புதுச்சேரி அரசு மேல்முறையீடு செய்யவில்லை. பல ஆண்டுகள் மக்களிடையே பேசுபொருளாக இருந்துவந்ததும் அரசியல்ரீதியாக பல அடுக்குகளைக் கொண்டதுமான கொலைவழக்கு இது.
இந்த கொலை 2003 ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்றது. காலை நடைப்பயிற்சிக்கு சென்ற தி.மு.க மூத்த பிரமுகர் தா.கிருஷ்ணன் வெட்டிக்கொல்லப்பட்டார். இந்த கொலைவழக்கில் தி.மு.க தலைவரின் மகன் மு.க. அழகிரி அதிரடியாக கைது செய்யப்பட்டது இன்றுவரை பேசப்படும் பொருளாகத் தொடர்கிறது. அப்போது அ.தி.மு.க ஆட்சி. அழகிரியுடன் சேர்த்து அவரது ஆதரவாளர்கள் பி.எம்.மன்னன், எஸ்ஸார் கோபி, முபாரக் மந்திரி, கராத்தே சிவா உட்பட்டோர் கைது செய்யப்பட்டனர். மதுரை முதன்மை அமர்வு நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்தது. இந்நிலையில் 2006-இல் தி.மு.க. ஆட்சிக்கு வந்தது. இந்த வழக்கை வேறு மாநிலத்தில் விசாரிக்கவேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. பின்னர் இவ்வழக்கு ஆந்திராவில் உள்ள சித்தூர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்துக்கு 2007 ஆம் ஆண்டு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் 2008 ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கப்பட்டது. அழகிரி உட்பட குற்றம் சாட்டப்பட்டோர் அனைவரும் குற்றம் நிரூபிக்கப்படாததால் விடுவிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து 2009 நாடாளுமன்றத் தேர்தலில் மதுரை எம்பியாக தேர்வு செய்யப்பட்ட அழகிரி மத்திய ரசாயனத்துறை அமைச்சராகவும் பதவியேற்றார். 2011-இல் தி.மு.க ஆட்சி போய், அ.தி.மு.க ஆட்சி வந்ததும் தா.கி. கொலைவழக்கில் சித்தூர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் இதை உச்சநீதிமன்றம், மேல்முறையீட்டை சம்பந்தப்பட்ட மாநிலமான ஆந்திரம் தான் செய்யவேண்டும் எனக் கூறி தள்ளுபடி செய்துவிட்டது. பல்வேறு உள்கட்சிக் காரணங்களால் 2014 ஆம் ஆண்டு அழகிரி திமுகவில் இருந்து நீக்கப்பட்டார்.
கொடநாடு பங்களாவில் நடந்த கொள்ளை, அப்பல்லோ மருத்துவமனையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சேர்க்கப்பட்டு மரணமடைந்த பின்னர் நடந்த பல்வேறு மர்ம நிகழ்வுகளில் அனைவரின் கவனத்தையும் கவர்ந்ததாக அமைந்தது. ஊட்டி மலைப்பிரதேசத்திலுள்ள கொடநாடு எஸ்டேட் கோடைக்காலங்களில் ஜெயலலிதா ஓய்வு எடுக்கும் இடம். 2017-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28 ஆம் தேதி இந்த எஸ்டேட்டில் நுழைந்த ஒரு கும்பல், பாதுகாவலரைக் கொலை செய்ததுடன் அந்த மாளிகையிலும் கொள்ளையடித்துச் சென்றுள்ளது. கிஷன் பகதூர் என்ற ஒரு பாதுகாவலர் காயத்துடன் தப்பினார்.
சுமார் 200 கோடி பணமாக இருப்பதாகவும் அதைக் கொள்ளை யடிக்க வந்திருப்பதாகவும் இந்த கும்பலை அழைத்துவந்த ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ், அதில் இருந்த இன்னொரு நபரான சயனிடம் கூறியதாக தகவல்கள் வெளியாயின. ஆனால் அவர்களுக்குக் கிடைத்ததும் பத்து கை கடிகாரங்களும் ஒரு ஸ்படிக காண்டாமிருக சிலையும்தான் என்று சொல்லப்பட்டது.
இக்கொள்ளை நடந்து சில நாள்களில் கனகராஜ் சாலை விபத்தில் இறந்தார். சயன் என்பவரின் வாகனம் விபத்தில் சிக்கியதில் அவரது மனைவியும் மகளும் இறந்தனர். இந்த எஸ்டேட்டின் சிசிடிசி காமிரா பொறுப்பாளர் தற்கொலை செய்துகொண்டார். இந்த எஸ்டேட்டில் இருந்து கொள்ளை போன பொருட்கள் என்ன? யார் யாருக்குத் தொடர்பு என்பது பற்றி பல அரசியல் ஊகங்கள் உலவின. அ.தி.மு.க ஆட்சி போய், தி.மு.க ஆட்சியிலும் கூட இதில் உண்மை ஏதும் வெளிவரவில்லை. சிபிசிஐடியின் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடந்துகொண்டிருக்கிறது. ஜெயலலிதா இருந்தபோது பலரும் போய் கைகட்டி நின்ற இடம். இங்கு நடந்த கொள்ளை, கொலைகள் பற்றி அ.தி.மு.க ஆட்சியில் அக்கறை காட்டாதது உறுத்தல்தான்.