குழம்புக் கடை உரிமையாளர் சங்கர்
குழம்புக் கடை உரிமையாளர் சங்கர்

குழம்புக் கடை

உணவே, உயிரே

சென்னை தி.நகர் பேருந்து நிலையத்தின் பின்புறமிருக்கும் முத்துரங்கன் சாலையில் இருக்கும் சங்கர்'ஸ் குழம்புக் கடைக்கு சென்றபோது வியாபாரம் மும்முரமாக நடந்துக்கொண்டிருந்தது. சுடச்சுட வைக்கப்பட்டிருந்த குழம்பு வகைகள் கமகமத்தன. இங்கு குழம்புகள் மட்டுமே விற்கப்படும். சைவம் மட்டுமன்றி அசைவ வகைகளும்.

அவ்வளவு கூட்டத்திலும் ஒவ்வொரு வாடிக்கையாளரிடமும் இன்முகத்தோடு பேசி வேண்டியதை கேட்டு வழங்கிக்கொண்டிருந்தார் உரிமையாளர் சங்கர். ஆட்டுக் கறிக் குழம்பு, கோழிக்கறிக் குழம்பு, மீன் குழம்பு, கோழித் தொக்கு, தலைக்கறி வறுவல், ஆட்டுக்குடல் தொக்கு... சைவ பிரியர்களுக்கு கமகமக்கும் சாம்பார், வடகறி, பொரியல், துவையல் போன்ற வகைகளும் தனியாக.

குழம்புக் கடை
குழம்புக் கடை

கிடைத்த வங்கி வேலையைவிட சொந்தமாக தொழில் செய்வதில் ஆர்வம் மிக்கவராக இருந்த சங்கர், ட்ராவல்ஸ் நடத்திக்கொண்டிருந்தார். மொபைல் டாக்ஸி நிறுவனங்களின் வருகையால் தொழிலில்  பின்னடைவு. அப்போது, வெளிமாநிலத்தில் மென்பொருள் பொறியாளராக பணியாற்றிக் கொண்டிருந்த சங்கரின் மூத்த மகன் நவீன்குமார் ''சாப்பாடு, இட்லி எல்லாம் கூட செய்துவிடுவேன் இந்த குழம்பை வைப்பதுதான் பெரிய வேலையாக இருக்கிறது'' என அப்பாவிடம் அடிக்கடி சொல்வதுண்டு. இதிலிருந்துதான் குழம்புக்கு மட்டும் தனியாக ஒரு கடையை தொடங்கினால் என்னவென்கிற யோசனை வந்தது. உடனே இந்த
'சங்கர்'ஸ் குழம்புக் கடை' பிறந்தது. முதலில் சிஐடி நகரில் தொடங்கப்பட்டு, பின்பு வாடிக்கையாளர்களின் விருப்பத்தை ஏற்று முத்துரங்கன் சாலையில் மற்றொரு கடை என இப்போது இரண்டு கடைகள்.

காலை 11.30 மணிக்கு குழம்பு வகைகள் விற்பனைக்கு தயாராகிவிடுகிறது. மதியம் இரண்டு மணி வரை அனைத்து வகைகளும் கிடைக்கும். பின்னர் தொடுகறிகள் தீர்ந்தாலும் மூன்று மணி வரை குழம்புகள் கிடைக்கின்றன. அப்போதே மாலைக்கான குழம்புகள் தயாராகின்றன. மதியம்
சமைக்கும் குழம்புகளை மாலைவரை வைப்பது கிடையாது. பெரிய ஆர்டர்கள், உணவு விநியோக நிறுவனங்களை சங்கர் ஏற்பதில்லை.

லாபம், புகழ் இவற்றைவிட மனநிறைவு முக்கியம் என நினைக்கிறார் சங்கர். குழம்புக் கடையின் தனிச்சிறப்பை கேள்விப்பட்டு வரும் பல ஃபுட் வீடியோ சேனல்களையும்கூட இதற்காகவே அவர் தவிர்க்கிறாராம். ''வேலைக்கு சென்று, வீட்டு வேலைகளை செய்து களைப்படைவர்களுக்கு பெண்களுக்கு எங்களது கடை மூலம் பெரிய சுமை குறைகிறது. இந்த மனநிறைவும், அமைதியும் போதும்'' என்கிறார் சங்கர். கடையின் மூலதனமாக இருக்கும் 'நம்ம வீட்டுச் சுவை'&க்கு காரணம் இவரது மனைவி கௌரி தான். நல்லெண்ணெய், பாரம்பரியமான மசாலாக்களை பயன்படுத்துவது, கலர் - அஜினொமோட்டோ தவிர்ப்பு இதெல்லாம் குழம்பு கடையிலும் பின்பற்றப்படுகிறது.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com