கேங்ஸ்டர் உலகம்!

கேங்ஸ்டர் உலகம்!

உலகெங்கும் இப்போதும் திரைப்படங்களில் மிகப்பிரபலமாக இருப்பது கேங்ஸ்டர் படங்கள். அதாவது, கதாபாத்திரங்கள் ஒரு குறிப்பிட்ட அல்லது பல குழுக்களில் இருப்பார்கள். அப்படங்களில் அவர்கள் குற்றச் சம்பவங்களை நிகழ்த்துவார்கள். இப்போது ரிலீஸ் ஆகி நன்றாக ஓடிக்கொண்டிருக்கும் விக்ரம் படமும் கேங்ஸ்டர் படம்தான். ஜிகர்தண்டா ஒரு கேங்ஸ்டர் படம். புதுப்பேட்டையும் கேங்க்ஸ்டர் படமே.

வடசென்னை, நாயகன், நந்தா, தளபதி என்பவையும் கேங்ஸ்டர் படங்களின் உதாரணங்கள்.

இத்தகைய கேங்ஸ்டர் படங்கள் பிரபலமானது, த கிரேட் டிப்ரஷன் என்று வழங்கப்பட்ட கொடுமையான பத்து வருடங்களின்போது (1929-1939). அமெரிக்கப் பங்குச் சந்தை செப்டம்பர் 1929ல் கறுப்பு செவ்வாய் என்று வழங்கப்பட்ட நாளில் வீழ்ந்தபோது, அது உலகையே சிறுகச்சிறுக பாதித்தது. இந்தப் பாதிப்பின் விளைவாக ஆங்காங்கே அமெரிக்காவில் சிறுசிறு குழுக்கள் உருவாக ஆரம்பித்து, பல்வேறு கடத்தல் வேலைகளில் ஈடுபடத் துவங்கின. இக்காலகட்டத்தில் இத்தகைய கிரிமினல்களை ஹீரோவாகப் போட்டு எடுக்கும் கேங்ஸ்டர் படங்களும் பிரபலமடையத் துவங்கின. பொருளாதாரம் பாதிக்கப்படும்போது சாதாரண மனிதனை ஹீரோவாகப் போடுவதற்குப் பதில், எந்தத் தொழிலையும் செய்து பணம் சம்பாதித்துக் குடும்பத்தையும் பிறரையும் காக்கும் கேங்ஸ்டர் கதாபாத்திரம், பொருளாதார வீழ்ச்சிக்குக் காரணமான அரசை எதிர்ப்பதில் ஒரு குறியீடாக விளங்குவதாக மக்கள் நினைக்க ஆரம்பித்ததன் விளைவே இப்படங்கள். இதுதான் கேங்ஸ்டர் படங்கள் பிரபலமாக ஆரம்பித்த காலகட்டம்.

(உண்மையில் 1912ல் வெளியான, D.W Griffith எடுத்த The Musketters of Pig Alley படமே, முதலில் உருவான கேங்ஸ்டர் க்ரைம் படங்களில் குறிப்பிடத்தகுந்த படமாகச்  சொல்லப்படுகிறது. இதில் நிஜமாகவே கேங்ஸ்டர்கள் வாழ்ந்த இடங்களில் படப்பிடிப்பு நடத்தப்பட்டு, ஒருசில கேங்க்ஸ்டர்களும் நடித்ததாகச் சொல்லப்படுகிறது).

இதன்பின் அவ்வப்போது ஆங்காங்கே சில கேங்ஸ்டர் படங்கள் வந்தாலும், எப்போது அமெரிக்கப் பங்குச் சந்தை வீழ்ந்து, இதனால் கடத்தல் தொழில் அதிகமானதோ, அப்போது உருவான கிரிமினல்களை வைத்து எடுக்கப்பட்ட கேங்ஸ்டர் படங்களே பிரபலமாக ஆகத்துவங்கின. உதாரணமாக, அப்போது வாழ்ந்த நிஜமான கேங்ஸ்டர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் அல் கபோன், பேபி ஃபேஸ் நெல்சன், ஜான் டில்லிங்கர் ஆகியோர்.  அமெரிக்காவெங்கும் பிரபலமான கிரிமினல்கள் இவர்கள். இவர்களின் வாழ்க்கையை ஒட்டி எழுதப்பட்ட கதாபாத்திரங்களை வைத்து எடுக்கப்பட்ட கேங்ஸ்டர் படங்கள் பிரபலமாகத் துவங்கின. இரக்கமே இல்லாத கேங்ஸ்டர்கள், அவர்களைப் பிடிக்கத் துடிக்கும் போலீஸ் கதாபாத்திரங்கள் என்ற வகையிலான கேன்ஸ்டர் படங்கள் ஏராளமாக எடுக்கப்பட்டன. உதாரணமாக, 1930ல் வெளியான ‘லிட்டில் சீசர்‘. இந்தப் படம் பிய்த்துக்கொண்டு ஓடியதால், அந்த வருடமே ஹாலிவுட்டில் ஐம்பதுக்கும் மேற்பட்ட கேங்ஸ்டர் படங்கள் எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது. இந்த லிட்டில் சீசர் படமே, அல் கபோனை மையமாக வைத்து (வேறு பெயரில்) எடுக்கப்பட்ட படம்.

இதற்கு அடுத்த வருடமான 1931ல் ‘பப்ளிக் எனிமி‘ என்ற படம் வெளியாகிறது. ஹாலிவுட்டின் அந்நாளைய சூப்பர்ஸ்டார் ஜேம்ஸ் கேக்னியின் முதல் படம் இது. கொடூரமான ஒரு கேங்ஸ்டராக கேக்னி நடித்து உலகப் புகழ் பெற்றார். இப்போதும் எடுக்கப்படும் ஒரு நல்லவன் ஒரு கெட்டவன் என்ற அஞ்சாதே வகையான படங்களின் முன்னோடி இது. இதேபோல் 1934ல் வெளியான Manhattan Melodrama ‘ படமும், இரண்டு சிறுவயது நண்பர்களில் ஒருவன் வக்கீலாகவும் இன்னொருவன் கேங்ஸ்டராகவும் உருவாவதைப் பற்றிய படம். அதேபோல் 1938ல் வந்த ‘Angles with Dirty Faces. இதிலும் இரண்டு ஏழைக் குழந்தைகளில் ஒருவன் கிரிமினலாக்வும், இன்னொருவன் பாதிரியாராகவும் மாறுவதைப் பற்றிக் காட்டப்பட்டது (கடல் வாசனை அடித்தால் நான் பொறுப்பல்ல).

1932ல் வெளியான ‘ஸ்கார்ஃபேஸ்‘ படம் இன்னொரு குறிப்பிடத்தகுந்த படம். இது ஹாலிவுட்டின் பிரபலமான இயக்குநர் ஹோவார்ட் ஹாக்ஸால் எடுக்கப்பட்டது. இதில் கேங்ஸ்டர் டோனி கமோண்ட்டேவாக நடித்தவர் பால் முனி. (பால் முனி தமிழ்நாட்டில் அக்காலத்தில் பிரபலம். தென்னகத்து பால் முனி என்றே அந்நாளைய நடிகர் நாகையா அழைக்கப்படுவது வழக்கம். காரணம் பால் முனி சிறந்த நடிகரும் கூட). இந்த 1932ன் ஸ்கார்ஃபேஸில் தான் ஒரு கேங்ஸ்டர் மெஷின் கன்னால் எதிரிகளை சுட்டுத்தள்ளும் காட்சி இடம்பெற்றது. இதுதான் பின்னாட்களில் கைதி, கே.ஜி.எஃப், ராக்கி மற்றும் விக்ரம் படங்களில் வந்த பெரிய துப்பாக்கிகள், பீரங்கிகள் ஆகியவற்றுக்கு இன்ஸ்பிரேஷன். இதே படம் 1983ல் அல் பசீனோ நடித்து ரீமேக் செய்யப்பட்டது உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். கொடூரமான வன்முறைக் காட்சிகளும் இந்த 1932 ஸ்கார்ஃபேஸில் இடம்பெற்றிருந்தன. இதனால் ஹாலிவுட்டில் பரவலாக விவாதிக்கப்பட்ட படமாக ஸ்கார்ஃபேஸ் மாறியது.

அக்காலகட்டத்தில் வார்னர் பிரதர்ஸ் எடுத்த இந்த மூன்று படங்களிலுமே, வில்லன் கேங்ஸ்டர் கதாபாத்திரத்தை மக்கள் பெரிதாக ரசிக்க ஆரம்பித்தனர். இப்போது கே.ஜி.எஃப் ரசிக்கப்படுவது போல. இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகிலேயே இப்படித்தான் இருந்திருக்கிறது.

இந்தப் படங்கள் வெளியானபின்னர்தான் ஹாலிவுட்டில் Hay's Code என்று வழங்கப்பட்ட சென்சார் விதிகள் கடுமையாக அமல்படுத்தப்பட்டன. வில்லன்களை Glorify செய்வது, கொடூர வன்முறைக் காட்சிகளை வெட்டுவது, கிரிமினல்களை சைக்கோக்களாகவே சித்தரிக்கவேண்டும் என்ற விதி, கிரிமினல் வேலைகளில் ஈடுபட்டால் மரணம் என்பதுபோன்ற சித்தரிப்புகள் எல்லாமே அப்போதுதான் உருவாக்கப்பட்டன.

இந்த சென்சார் விதிகளுக்கு ஹாலிவுட் முதலாளிகள் அஞ்சவில்லை. மாறாக, எப்படி வெறிபிடித்த கேங்ஸ்டர்களை மக்கள் விரும்பினார்களோ, அந்தக் கதாபாத்திரங்களை அப்படியே வைத்துக்கொண்டு, அவர்களை போலீஸாக மாற்றிவிட்டனர். அதாவது, வழக்கமாக ஒரு கேங்ஸ்டர்தான் கே.ஜி.ஃப் படத்தின் ராக்கி போல சித்தரிக்கப்படுவான் என்றால், அவனுக்கு எதிரியாக, அவனைப் பிடிக்கவரும் போலீஸ்காரரை சைக்கோ போலீசாக ஆக்கிவிடுவது. இதன்மூலம் ஹாலிவுட்டின் சென்சார் விதிகளை மீறாமல், அதேசமயம் மக்கள் விரும்பிய வன்முறையை ஹாலிவுட்டால் கொடுக்க முடிந்தது. இப்படி வெளியான முதல் படம், 1935ல் வந்த G-Men. இதில் நாம் மேலே பார்த்த, கேங்ஸ்டராக நடித்த அதே ஜேம்ஸ் கேக்னி, இப்போது ரகசிய போலீசாக நடித்தார். போக்கிரி, காக்கி சட்டை போல, கொடூரமான, கேங்ஸ்டராக நடித்து வில்லன்களின் கேங்கில் நுழையும் ரகசிய போலீஸ். அதே வன்முறை, அதே கொடூரம். ஆனால் இம்முறை அவற்றை நிகழ்த்துவது போலீஸ் என்றதால் சென்சார் விதிகளுக்குத் தப்பியது இந்தப் படம்.

இந்தப் படத்துக்குப் பிறகு, நல்லவர்கள் கிரிமினல்களால் பாதிக்கப்பட்டு, கோபம் கொண்டு, போலீசுடன் சேர்ந்து கிரிமினல் கேங்ஸ்டர்களைப் பழிவாங்கும் விதமான கேங்ஸ்டர் படங்கள் உருவாக ஆரம்பித்தன. அவற்றில் Bullets or Ballots (1936), The Amazing Dr. Clitterhouse (1938) (இதில் கேங்ஸ்டர், இன்னொரு சூப்பர்ஸ்டார் ஹம்ப்ரி போகார்ட்), I am the Law (1938) ஆகிய படங்கள் அடக்கம்.

இவற்றின் பின் வெளியான குறிப்பிடத்தக்க கேங்ஸ்டர் படங்கள் மூன்றிலும் ஹம்ப்ரி போகார்ட் நடித்தார். The Roaring Twenties (1939), They Drive by The Night (1940) மற்றும் High Sierra (1941). மூன்றையும் இயக்கியவர் ரவுல் வால்ஷ். இதில் ஹை சியர்ரா படம் கொஞ்சம் வித்தியாசமானது. சிறையில் இருந்து விடுவிக்கப்படும் கிரிமினல் ஒருவன், ஒரு ஹோட்டலைக் கொள்ளையடிக்கும் முயற்சியில் ஒரு பெண் மீது காதல்வயப்படுவது. இறுதியில் பரிதாபமாக இறப்பது. எமோஷனல் கேங்ஸ்டர் படம்.

இந்தப் படங்களுக்குப் பின் ஹாலிவுட்டில் ஒரு புதிய அலை வீசத்துவங்கியது. Noir - நுவார் என்ற புதிய வகை முயற்சி. ஆனால் அப்போது அந்த வகைக்குப் பெயர் வைக்கப்படவில்லை. பின்நாட்களிலேயே அந்த வகையான படங்களுக்கு நுவார் என்ற பெயர் பெரிதும் ஒப்புக்கொள்ளப்பட்டது. நுவார் என்றால் இருள்மை. ப்ளாக் அண்ட் ஒயிட் படங்களில் இருட்டான பின்னணியோடு, பல்வேறு கதாபாத்திரங்களின் மாறுபட்ட குணாதிசயங்களை அதேபோன்ற ஒளிப்பதிவோடு காட்டும் வகையான படங்கள். இந்தப் படங்களில் வரும் கதாபாத்திரங்கள், வாழ்க்கையைப் பற்றி நம்பிக்கையின்மையோடு பேசுவார்கள். தமிழில் அந்த நாள் படம் ஒரு நுவார் படம் என்று சொல்லலாம்.  நாற்பதுகளில் இருந்து ஐம்பதுகளின் இறுதிவரை நுவார் படங்களின் பொற்காலம் என்றே சொல்லும் அளவு அத்தனை நுவார் படங்கள் வெளியாயின. இவற்றில் கேங்ஸ்டர் படங்களும் தப்பவில்லை.

இரண்டாம் உலகப்போர் முடிவடைந்தபின் உலகெங்கும் மக்களின் வாழ்க்கையும் பார்வையும் மாறத் துவங்கின. கேங்ஸ்டர் படங்களில் வில்லன்கள் பணக்காரர்களாக, முதலாளிகளாக, வியாபாரிகளாக, சீட்டாட்ட விடுதிகளை நடத்துபவர்களாக மாறினர். உதாரணமாக, 1948இல் வெளியான 'I Walk Alone'. இது பர்ட் லங்காஸ்டரும் கிர்க் டக்ளசும் (மைக்கேல் டக்ளசின் தந்தை - அக்கால ஹாலிவுட் சூப்பர்ஸ்டார்) நடித்தது. இதில், ஹீரோ பர்ட் லங்காஸ்டர், அவர் நண்பனான கிரிமினலால் வஞ்சிக்கப்பட்டு 14 வருடங்கள் சிறையில் இருப்பார். இந்தக் காலகட்டத்தில் வில்லன் கிர்க் டக்ளஸ் பணக்காரராகி, மான்ஹாட்டனில் ஒரு நைட் க்ளப் வைத்துக்கொண்டிருக்கும் கிரிமினலாக மாறியிருப்பார். இருவருக்குமான போராட்டமே படம்.

அதேபோல், நுவார் - கேங்ஸ்டர் படங்களும் ஏராளமாக வெளியாயின. 1949 ல் வெளியான White Heat படம் அப்படிப்பட்டது. இதில் ஜேம்ஸ் கேக்னி, பத்து வருடங்கள் கழித்து மீண்டும் ஒரு சைக்கோ கேங்ஸ்டராக நடித்தார். அதே வருடம் வெளியான Gun crazy படம், ஒரு காதல் ஜோடி, கொடூரமான சம்பவங்களை அரங்கேற்றும் கதையைச் சொன்னது (இது நிஜவாழ்க்கை ஜோடியான Bonny and Clyde கதையை ஒட்டியது என்பது அவர்களைப் பற்றித் தெரிந்தவர்களுக்குப் புரியும்).

இந்தக் காலகட்டத்தில்தான் ஹிட்ச்காக் தனது உளவியல் ரீதியான த்ரில்லர் படங்களை இயக்கத் துவங்கியிருந்தார். எனவே, கேங்ஸ்டர் படங்களின் புகழ் மெதுவாக மங்கி, நுவார் மற்றும் சைக்கலாஜிகல் த்ரில்லர் படங்கள் பிரபலமாக ஆரம்பித்தன. அப்படிப் பிரபலமான சைக்கலாஜிகல் த்ரில்லர் படங்களில் ஹிட்ச்காக் படங்கள் இல்லாமல் Double Indemnity(1944), The postman Always Rings Twice (1946), They Live by Night (1949), Out of The Post (1947) ஆகியவை அடக்கம். இவை இன்றும் மிகப்பிரபலமான படங்கள்.  ஆனாலும் இடையிடையே The big Heat (1953), On the Waterfront (1954 - மார்லன் பிராண்டோ நடித்த புகழ்பெற்ற படம்), The Big Combo (1955)  போன்ற கேங்ஸ்டர் படங்களும் வரத் தவறவில்லை.

ஐம்பதுகளின் இறுதியில் நுவார் படங்களில் இருந்து வேறு ஒரு மாற்றம் உருவாக ஆரம்பித்தது. முப்பதுகளில் வாழ்ந்த நிஜவாழ்க்கை கேங்ஸ்டர்களை வைத்து மறு உருவாக்கம் செய்யப்பட்ட படங்கள் வெளியாக ஆரம்பித்தன. அவற்றில்  Machine Gun Kelly (1958), Al Capone (1959), The Rise Fall of Legs Diamond(1960) ஆகியவை குறிப்பிடத்தக்கவை.

அறுபதுகளின் துவக்கத்தில் மறுபடி இன்னொரு அலை அடித்தது. அது - ஜேம்ஸ் பாண்ட். டாக்டர் நோ படத்தில் இருந்து இந்த ரகசிய உளவாளி பிரபலமடைய ஆரம்பித்தார். அன்றில் இருந்து இன்றுவரை பாண்ட் படங்கள் வந்துகொண்டே இருக்கின்றன. கூடவே மென்மையான ம்யூசிகல்கள், ரொமாண்டிக் படங்கள் ஆகியவையும் அறுபதுகளில் ஏராளமாக எடுக்கப்பட்டன. அதேபோல் சூப்பர்ஸ்டார்கள் தங்களது படங்களில் மூக்கை நுழைக்க ஆரம்பித்தனர். இதே காலகட்டத்தில் தொலைக்காட்சி மிகப் பிரபலம் ஆகி, பல சீரீஸ்கள் எடுக்கப்பட்டன (இப்போது ஓ.டி.டி பிரபலம் ஆனதைப் போல). இந்தக் காலகட்டத்தில்தான், அனைவருக்கும் பொதுவான படங்கள் என்பது மாறி, வயது ரீதியாக ரேட்டிங் கொடுக்கப்படும் முறையும் அமல்படுத்தப்பட்டது. இதனால் ஹாலிவுட் படங்களில் வன்முறை குறைந்து, பொதுவான அம்சங்கள் அதிகரித்தன.

அப்போதுதான்  Bonny and Clyde (1967) வெளியாகிறது. வாரன் பெட்டியும் ஃபே டன்னவேவும் நடித்த இந்த நிஜவாழ்க்கைப் படம், மறுபடியும் கேங்க்ஸ்டர் படங்கள் எடுக்கப்படுவதற்கு ஒரு முக்கியமான காரணமாக அமைந்தது.  முதல் முறையாக, கேங்ஸ்டர்கள் செய்யும் செயல்கள் மக்களுக்கு

லேசான புன்னகையை வரவழைத்தன. ஓரளவு நகைச்சுவை சார்ந்த சம்பவங்கள், அதே சமயம் திடீரென்ற வன்முறைச் செயல்கள் என்று மாறிமாறிப் பயணிக்கும் கேங்ஸ்டர் படமாக இது அமைந்தது (ஜிகர்தண்டா ஸ்டைல்).  அதற்கு முன்னர் எடுக்கப்பட்ட கேங்ஸ்டர் படங்களில் வில்லன்கள் பணக்காரர்களாகவும், நாகரீக உடை அணிபவர்களாகவும் இருக்க, இந்தப் படத்தில் பான்னியும் க்ளைடும் இயல்பான மக்களின் உடை அணிந்து, அறுபதுகளின் வாழ்க்கைமுறையையே கேள்வி கேட்கும்விதமாக இருந்ததால், அக்கால இளைஞர்களுக்கு இப்படம் பிடித்தது. Rebel Counter Culture என்று சொல்லும்படியான கூறுகள் இப்படத்தில் இருந்ததுதான் இப்படத்தின் வெற்றிக்குப் பெரிய காரணமாக அமைந்தது.

இந்தக் காலகட்டத்திலேயே செர்ஜியோ லியோனி, செர்ஜியோ கார்புச்சி ஆகியோர் எடுத்த வெஸ்டர்ன்கள், கன்ஸ் ஆஃப் நவரோன் போன்ற ராணுவப் படங்கள் ஆகியவையும் ஏராளமாக எடுக்கப்பட்டுக்கொண்டிருந்தன. அவையும் ஹாலிவுட் மட்டுமல்லாமல் உலகெங்கும் ஹிட்டாயின.

அடுத்து வெளியான இன்னொரு கேங்ஸ்டர் படம், உலகெங்கும் கேங்ஸ்டர் படங்களின் தலைவிதியையே மாற்றியது. அந்தப் படத்தை ஒட்டி அதன்பின் உலகம் முழுக்க எடுக்கப்பட்ட கேங்க்ஸ்டர் படங்கள் எப்படியும் ஆயிரத்தைத் தாண்டும். தமிழிலேயே அவ்வப்போது இன்றுவரை அந்தப் படமே திரும்பத்திரும்ப எடுக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. ஃப்ரான்சிஸ் ஃபோர்ட் காப்பலா எடுத்த ‘The GodFather' படம்தான் அது. அதைப்பற்றி அனைவருக்கும் தெரியும். அத்தனை பிரபலமான படம். அந்தப் படம், உண்மையில் அமெரிக்காவுக்குப் பிற நாடுகளில் இருந்து வந்த அகதிகளுக்கான நம்பிக்கையை விதைக்கும் படமாகவும் இருந்தது. எங்கிருந்து வந்தாலும் எப்படியாவது வாழ்ந்துவிடலாம் என்ற நம்பிக்கையை அப்படம் உருவாக்கியது. அதேபோல், பான்னி அண்ட் க்ளைட் படத்துக்கும் காட்ஃபாதருக்குமான இன்னொரு ஒற்றுமை, தான் பெரிதும் நம்பியிருந்த தனது கேங்ஸ்டர்களே தனக்கு எதிராகத் திரும்புவது. இதன்மூலம் கேங்ஸ்டர் நல்லவனாகக் காட்டப்பட்டு, அவன் கேங் துரோகிகளாக சித்தரிக்கப்படுவது.

காட்ஃபாதர் படத்துக்குப் பின்னர் செர்ஜியோ லியோனி இயக்கிய Once Upon a Time In America' (1984), இன்றளவும் ஒரு அற்புதமான கேங்ஸ்டர் படமாகக் கருதப்படுகிறது. இதற்கும் காட்ஃபாதருக்கும் சில ஒற்றுமைகள் உண்டு. இதுவும் காட்ஃபாதர் 2 வில் ப்ளாஷ் பேக்கில் வரும்  ராபர்ட் டி நீரோ நடித்ததே. நாயகன் படம் பார்த்தவர்கள், அதற்கும் இதற்கும் இருக்கும் ஒற்றுமைகளை உணரலாம்.

இந்த இரண்டு படங்களுக்குப் பிறகு, ஏராளமான, பிரபலமான கேங்ஸ்டர் படங்கள் வந்துவிட்டன. மார்ட்டின் ஸ்கார்சேசி எடுத்த ‘ Goodfellas', 'Casino', 'Gangs of New York', 'The Departed', 'The Irishman', ப்ரையன் டி பா(ல்)மா எடுத்த புதிய ஸ்கார்ஃபேஸ், The Untouchables, கோயன் சகோதரர்களின் Millaer's, அல் பசீனோ நடித்த டான்னி ப்ராஸ்கோ, க்வெண்டின் டாரண்டினோ எழுத மட்டும் செய்த 'True Romance', 'Natural Born Killers', அவரே எழுதி இயக்கிய Reservoir Dogs, Pulp fiction, jackie Brown மைக்கேல் மான் இயக்கிய ‘Heat ஓஷன்ஸ் லெவன் சீரீஸ்கள், Public Enemies ஆகியவை இவற்றில் குறிப்பிடத்தக்க படங்கள்.

கேங்ஸ்டர் படங்களில் இருக்கும் வன்முறை, வில்லனை ஹீரோவாகக் காட்டுவது, அவன் அரசையும் சிஸ்டத்தையும் கேள்வி கேட்பது ஆகியவை எல்லாமே திரைரசிகர்களுக்குப் பிடித்தே இருக்கிறது என்பதை இந்த கேங்ஸ்டர் படங்களின் வீச்சு நன்றாகவே நிரூபிக்கிறது. கே.ஜி.எஃப் இரண்டு படங்களுமே ஹாலிவுட்டின் அறுபதுகளின் நுவார் கேங்ஸ்டர் ஸ்டைல் படங்களை அப்படியே எடுத்துக்கொண்டு உருவாக்கப்பட்டவை. அந்த சைக்காலஜி நன்றாகவே வேலை செய்திருக்கிறது என்பதை கே.ஜி.ஃப் படங்களின் வசூல் நிரூபிக்கிறது. ஆனால் இந்தியாவுக்கும் அமெரிக்கா போன்ற பிற நாடுகளுக்கும் இருக்கும் வித்தியாசம், அமெரிக்காவில் படங்களைப் படங்களாகவே பார்ப்பார்கள். அந்தத் தெளிவு அங்கே பெரும்பாலானோருக்கு உண்டு. இந்தியாவில் அப்படி அல்ல. ஹீரோ செய்வதை நாமும் செய்யவேண்டும் என்ற ஆர்வமும் வெறியும் இங்கே உண்டு. இதுதான் இந்தியாவுக்கும் பிற நாடுகளுக்கும் திரைப்படங்கள் சார்ந்த வித்தியாசம். எனவே அத்தகைய நாட்டில் நாம் எடுக்கும் படங்களால் பிறருக்கு எந்தவிதமான பிரச்னையும் வந்துவிடக்கூடாது என்பதை மட்டும் நாம் மனதில் கொண்டால் போதும் என்று தோன்றுகிறது.

அமெரிக்காவிலேயே நாற்பதுகளிலும் ஐம்பதுகளிலும் கேங்ஸ்டர் படங்களில் காட்டிய வன்முறைக்காகவே சென்சார் விதிகள் மாற்றப்பட்டிருக்கின்றன. நான் உடனே, நல்ல படங்கள் மட்டும்தான் வேண்டும் என்று போதனை செய்யவில்லை. மாறாக, எடுக்கும் படங்களில் நாம் சொல்லும் விஷயங்கள் மக்களுக்கு இயல்பில் போய்ச்சேர்ந்துவிட்டால் போதும் என்பதே என் கருத்து.

ஜூலை, 2022

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com