விஜயகாந்த்
விஜயகாந்த்

கேப்டனுக்கு டூப் போட்டு முட்டி ஜவ்வு கிழிந்த கதை!

"முன்பெல்லாம் சென்னையில் நிறைய டூப் ஷாட் எடுப்பாங்க. நைட் பகல்னு பாக்காம நடிச்சிக் கிட்டு இருப்போம். எல்லா மொழிக்காரர்களும் இங்க தான் வரணும். இப்போ அப்படி இல்லை. தொழில் நுட்பம் வளர்ந்ததால், எல்லாம் மாறிடுச்சு'' என சிறு வருத்தத்துடன் பேச தொடங்கினார் டூப் கலைஞர் பாபு சனவுல்லா.

ரஜினி, விஜயகாந்த், சரத்குமார், முரளி, மோகன் லால், சிரஞ்சீவி, அக்‌ஷய் குமார், அம்பரீஷ், கன்னட பிரபாகர் என இந்திய சினிமாவின் பல முன்னணி ஹீரோக்களுக்கு சண்டைக் காட்சிகளில் உயிரைக் கொடுத்து டூப் போட்டவர், இன்று டிவி சீரியல்களுக்கு உதவி ஸ்டண்ட் மாஸ்டராக இருக்கிறார்.

வலியும் பெருமையும் ஒருசேரக் கலந்திருக்க, தன்னுடைய திரைப் பயணத்தின் வாரஸ்யங்களை நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார் பாபு சனவுல்லா.

‘நான் சின்ன வயசிலேயே ஹைட்டும் வெயிட்டுமாக இருந்ததால், புதுப்பேட்டையில் இருந்த மூக்கண்ணா மாஸ்டரிடம் கொண்டு போய் நிறுத்தினார் என் மாமா. ஏறக்குறைய ஒன்றரை வருட பயிற்சியில் அவரிடம் சிலம்பம், ஜிம்னாஸ்டிக்கெல்லாம் கற்றுக் கொண்டேன். இது நடந்தது 1986இல்.

ஸ்டண்ட் கலைஞராவதற்கு ஒரு போட்டி வைத்தார்கள். அதில் கலந்து கொள்ள தென்னிந்தியா முழுவதிலுமிருந்து நானூறு பேர் வந்திருந்தார்கள். அதில் தேர்வு செய்யப்பட்டவர்கள் தொண்ணூறு பேர். அதில் நானும் ஒருவன். உடனே, மாஸ்டர் ஸ்டண்ட் யூனியனில் உறுப்பினராக சொன்னார். அப்போது உறுப்பினர் கட்டணம் ஐந்தாயிரம் ரூபாய் என்பதால், வட்டிக்கு வாங்கி தான் பணத்தைக் கட்டினேன். அடுத்த மூன்று மாதத்தில் அந்தக் கடனை அடைத்துவிட்டேன்.

பொதுவாக சண்டைக் காட்சிகளில் ஹீரோவால் எது முடியாதோ, அதற்குத்தான் டூப் போடுவார்கள். முதன் முதலில் மலையாள படத்தில் தான் டூப் போட்டேன். பீமன் ரகு என்பவர் தான் வாய்ப்புக் கொடுத்தார். தொடக் கத்தில் மலையாளம், தெலுங்குப்படங்களில் தான் அதிகம் டூப் போட்டேன்.

தமிழில் சூப்பர் சுப்பராயன் மாஸ்டர் தான் கேப்டன் பிரபாகரன் படத்தில் விஜயகாந்துக்கு டூப் போடுவதற்கான வாய்ப்பை கொடுத்தார். அந்தப் படத்தில் விஜயகாந்த்துக்கு போட்ட டூப் கச்சிதமாக இருந்ததால், அதைத் தொடர்ந்து ‘எம்புருஷன்தான் எனக்கு மட்டும்தான்', ‘தாயகம்', 'அலெக்சாண்டர்' என பத்து படங்களுக்கு மேல் டூப் போட்டேன்.

அலெக்சாண்டர் படத்தில் ஒரு காட்சி. ஹீரோயின் வீட்டில் குண்டு வைத்துவிடுவார்கள். அதை எடுக்க விஜயகாந்த் பைக்கில் வேகமாக வருவார். திடீரென லாரி ஒன்று குறுக்கே வந்துவிடும். உடனே அவர் ஜம்ப் செய்து லாரியை தாண்டி வருவார், பைக்கும் லாரிக்கு கீழே வரும். பறந்து வரும் விஜயகாந்த் சரியாக பைக்கில் வந்து உட்காருவார். அந்த ஜம்ப் காட்சிக்கு நான் தான் டூப் போட்டேன். அந்தக் காட்சியை ஏறக்குறைய ஒன்பது முறை எடுத்தார்கள். அப்போதுதான் என்னுடைய முட்டி ஜவ்வு கிழிந்துவிட்டது.

விஜயகாந்த் மருத்துவம் பார்ப்பதற்கும் வீட்டுச் செலவுக்கும் பணம் கொடுத்து உதவினார். இப்போது இருப்பது போல், அப்போது இன்சூரன்ஸ் எல்லாம் இல்லை. கடைசியாக விஜயகாந்த்துக்கு ‘உளவுத்துறை' படத்துக்கு டூப் போட்டதோடு சரி. பிறகு ஜம்ப் காட்சிகளில் நடிப்பதையே விட்டு விட்டேன்.

‘மன்னன்' படத்தின் தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவி நடித்தார். அந்தப் படத்தின் இறுதிக்கட்ட சண்டை காட்சியை மட்டும் ஒன்றரை மாதம் எடுத்தார்கள். ஏறக்குறைய பதினெட்டு நாட்கள் சிரஞ்சீவிக்குப் பதிலாக டூப் போட்டேன். அதற்காக சிரஞ்சீவி ஆறாயிரம் ரூபாய் மதிப்புள்ள ஷூவை பரிசாகக் கொடுத்தார் அப்போதெல்லாம் இரண்டு நாட்களுக்கு டூப் போட்டால் 650 ரூபாய் தருவார்கள். ரவுடியாக நடித்தால் 550 ரூபாய். அதற்கு மேல் சென்றால் ஒவ்வொரு நாளுக்கும் 250 ரூபாய் கூடுதலாக தருவார்கள். இப்போது ஒரு நாளைக்கு 7500 ரூபாய் தர்றாங்க. ஏறக்குறைய நானூறு படங்களில் டூப் கலைஞராகவும் சண்டைக் கலைஞராகவும் வேலை பார்த்துள்ளேன். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, போஜ்புரி மொழி படங்களும் அடங்கும்.

இந்த தொழிலில் மட்டும் தான் ஆபத்து கண்முன்னே தெரியும். முன்பெல்லாம் நாற்பது அடி, ஐம்பது அடி குதிக்க வேண்டும் என்றால் வெறும் அட்டைப் பெட்டிகளின் மேல் தான் குதிக்க வேண்டும். அவை கொஞ்சம் விலகினாலும் எங்கள் உயிருக்கு உத்தரவாதம் இல்லை.

தெலுங்கில் வெங்கடேஷும் ஸ்ரீப்ரியாவும் நடித்த ஒரு படத்தில், எண்பது அடி ரயில்வே பாலத்தின் மேல் சண்டை காட்சி நடக்கும். ரயில் வரும் போது ஒருவர் மேலிருந்து கீழே குதிப்பது போன்ற ஒரு காட்சி. மற்றவர்கள் தயங்கியபோது நான் குதிக்க முன்வந்தேன். பாதுகாப்புக்கு சில ஏற்பாடுகளை மாஸ்டரிடம் செய்ய சொன்னேன். முதலில் பெட்டும், அதற்கு மேல் அட்டைப் பெட்டிகளும், அதற்கும் மேல் வைக்கோலையும் பரப்ப சொன்னேன். அன்று அந்த காட்சியை எடுக்க முடியாமல் போனது. பின்னர், அந்தக் காட்சியை எடுக்கும் போது என்னால் போகமுடியாத சூழல். எனக்கு பதிலாக வேறு ஒருவர் குதித்தார். அன்று அட்டை பெட்டிகளையும், பெட்டும் மட்டும் போட்டிருக்கிறார்கள். அவர் மேலிருந்து கீழே குதிக்கும் போது, கொஞ்சம் விலகி சேற்றில் குதித்துவிட்டார். இதனால் அவரின் இரண்டு கால்களும் நொறுங்கி விட்டன. இந்த மாதிரியான விபத்தெல்லாம் இந்த தொழிலில்

சகஜம்!.' என்றவரிடம், நடிகர்கள் டூப் கலைஞர்களிடம் எப்படி நடந்து கொள்வார்கள் எனக் கேட்டோம்.

‘சரத்குமார் படப்பிடிப்புக்கு வரும் போதே கத்தை கத்தையாக பணத்தை கவரில் போட்டு எடுத்து வருவார். சண்டைக் காட்சிகளில் யாராவது ஜம்ப் செய்கிறார்கள் என்றால், உடனே ஐந்நூறு கொடுத்துவிடுவார். ரஜினிகாந்த் கடைசி நாள் படப்பிடிப்பின்போது தான் ஒரு தொகையைக் கொடுப்பார். விஜயகாந்த் தினந்தோறும் எதாவது கொடுத்து அசத்தி விடுவார். அவர் படப்பிடிப்பில் சாப்பாட்டுக்குக் குறை இருக்காது.

அதேபோல், சண்டைக் காட்சிகளில் விஜயகாந்தை அடித்துக் கொள்ள முடியாது. டைம்மிங்கில் எதாவது மிஸ்ஸாகிவிட்டாலும் சண்டையை நிறுத்த மாட்டார். அவரே சில விஷயங்களை செய்து அசத்திவிடுவார். ரஜினிகாந்த் அப்படி இல்லை. எதாவது தவறு நடந்துவிட்டால் உடனே நிறுத்திவிடுவார். முரளி என்ன சொல்கிறோமோ அப்படியே செய்துவிடுவார். விஜயகாந்த், சரத்குமார், முரளி இவர்கள் மூவருக்கும் நான் டூப் போட்டால் கச்சிதமாக இருக்கும்.'' என்றார்.

சூப்பர் சுப்பராயன், பெப்சி விஜயன், தியாகராஜன், ராக்கி ராஜேஷ், ஜூடோ ரத்தினம் என பல ஸ்டண்ட் மாஸ்டர்களிடம் பாபு சனவுல்லா வேலை பார்த்திருக்கிறார்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com