ச.பாலமுருகன்
ச.பாலமுருகன்

கைமாற்றிய துயர்

சோளகர் தொட்டி

தமிழக வரலாற்றில் மனித உரிமை மிக மோசமாக மறுக்கப்பட்ட காலம் வீரப்பன் தேடுதல் வேட்டை நடக்கத் துவங்கிய காலம். 1993- இல் கூட்டு அதிரடிப்படையை தமிழக, கர்நாடக அரசுகள் இணைந்து உருவாக்கின. இந்த தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட துணை இராணுவப்படைகள் மற்றும் அதிரடிப்படைகள் தங்களை சட்டத்திற்கு மேலானவர்கள் என கருதினர்.

விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட மனிதர்களின் நிலையை அவர்களின் குடும்பத்தினர் அறியும் சூழலில்லை. அவர்கள் எங்கே வைக்கப்பட்டிருக்கின்றனர் என்பதே கூட எவருக்கும் தெரியாத நிலை இருந்தது. விசாரணைக்கென அழைத்துச் செல்லப்பட்ட எல்லா பெண்களும் வயது வேறுபாடின்றி கூட்டு பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டனர். அவர்களின் நியாயத்தை பேச எவருமற்ற நிலை இருந்தது. அந்த சூழலில் தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கம் அமைக்க ஈரோடு மாவட்டம் பர்கூர் மலைப்பகுதிக்குச் சென்ற தோழர் வி.பி.குணசேகரன் உள்ளிட்டவர்களிடம் சில பெண்கள் அவர்களின் கணவர்களை அழைத்துச் சென்ற அதிரடிப்படை அவர்களை உயிரோடு வைத்துள்ளதா இல்லையா என தெரியவில்லை, தாலியை அணிந்து கொள்வதா அல்லது அகற்றி விடுவதா? என கண்ணீர் மல்க தெரிவித்தனர். அதன் பின்பு தொடர்ந்து மனித உரிமை செயல்பாடுகளில் ஈடுபட்டு வரும் இயக்கங்கள் ஒன்று சேர்ந்து இந்த அநீதிக்கு எதிராக போராட முடிவு செய்து சேர்ந்து செயல்படத் துவங்கினோம். மக்கள் சிவில் உரிமைக் கழகம் (கக்இஃ)என்ற இயக்கத்தில் செயல்பட்ட நாங்களும் , தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கம், மதுரை மக்கள் கண்காணிப்பகம், சோக்கோ அறக்கட்டளை, சிக்ரம் பெங்களுர் ஆகியோர் கூட்டு இயக்கமாக அதிரடிப்படையின் அத்து மீறல்களை எதிர்ப்பதை இயக்கமாக்கினோம்.

 அந்த காலகட்டத்தில் ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் தாளவாடி மலைப்பகுதியில் உள்ள சோளகர் தொட்டி என்ற கிராமத்தினர் தமிழ்நாடு பழங்குடி மக்கள்

சங்கத்தின் தொடர்பில் இருந்தனர். அந்த கிராமத்தைச் சார்ந்த சித்தன் என்பவர் வீரப்பனுடன் இருப்பதாக காவல்துறை கருதியதால் அந்த கிராமத்திலிருந்து சில ஆண்களையும், பெண்களையும் கர்நாடகா மாதேஸ்வரன் மலையில் வைத்து சித்ரவதை செய்வதாக அறிய முடிந்தது. அந்த அநீதிக்கு எதிராக தொடுக்கப்பட்ட சட்ட நடவடிக்கையில் அது உயர்

நீதிமன்றத்தில் முக்கியமான மனித உரிமை வழக்காக மாற எனது சில முன் முயற்சிகள் அமைந்தன. அந்த வழக்கு காவல்துறையின் அத்துமீறல்களைத் தடுக்க உதவியது. அதன் பின்பு பாதிக்கப்பட்ட மக்களுக்காக எடுத்த தொடர் கூட்டு நடவடிக்கையால் தேசிய மனித உரிமை ஆணையம் கர்நாடக உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி சதாசிவா என்பவர் தலைமையில் விசாரணை தொடங்கியது. அந்த விசாரணைக்கு பழங்குடி மற்றும் பாதிக்கப்பட்ட மலைகிராம மக்களை நிறுத்தும் போதே அந்த மக்கள் பட்ட இன்னல்கள் பெரும் துயரமாகவும், அதுவரை எவரும் அறியாத கதைகளாகவும் இருந்தன. உண்மையில் அது எனக்குள் ஒரு பெரும் சுமையை ஏற்றியது.அம் மக்களின் துயரங்கள் பாறைகளை விட கனமானவை, நெருப்பை விட வெப்பமானவை. அந்த கதைகளை சுமக்க சக்தியற்றவனாய் நான் உணர்ந்தேன். இந்த கதைகளை சொல்லும் ஒரு துவக்கப் புள்ளியாக சோளகர் தொட்டி கிராமத்தில் இருந்த மக்கள் இருப்பதாக கருத முடிந்தது. உண்மையில் காவல்துறையின்சித்திரவதை ஒரு புறம் இருந்த போதும் பூர்வ குடிகளை அவர்களின் சொந்த மண்ணிலிருந்து அப்புறப்படுத்தும் அவலத்திலிருந்து அந்த கதைகள் துவங்குவதை உணர முடிந்தது.

பழங்குடிகளை எப்படி ஓர் எழுத்தாளன் உணர்வது? என்ற கேள்வி என்னுள் எழுந்தது. ஒரு வனத்திற்கு சென்று திரும்பும் பயணியாக யோசித்தால் உயிரோட்டமான ஒரு கதை எழவில்லை. என்னை ஒரு பழங்குடியாக கருதிய போது சோளகர் தொட்டியும், பழங்குடிகளின் வாழ்வும், தொன்மமும் தங்களை எழுத என் முன் வந்து வந்தது. நான் அதற்காக ஆப்பிரிக்க எழுத்தாளர்  சினுவா ஆச்சிபீக்கு நன்றிக் கடன்பட்டுள்ளேன். எனது அந்த பார்வைக்கு அவரே முன்னோடி.

ஒரு மனித உரிமை செயல்பாட்டாளன், இடதுசாரி, வழக்குரைஞர் என்பது எனக்கு அம் மக்களின் துயரங்களை கூடுதலாக அறியவும், அதை துணிச்சலோடு வெளிப்படுத்தும் சுதந்திரத்தை உறுதிப்படுத்தியது.

நாவல் பாதிக்கு மேல் சென்ற போது அது சரியாக அமையாது இருந்ததை உணர்ந்து மீண்டும் முதலிலிருந்து எழுதத் தொடங்கினேன். அப்போதுதான் நாவலுக்கான பாதை தென்பட்டது. அதுவரை இல்லாத பல பாத்திரங்கள் நாவலில் உருவாயின. கொத்தல்லி என்ற மாமனிதனை அப்போதுதான் நான் கண்டேன். நாவல் அதற்கான தேவையை கேட்டு என்னிடமிருந்து வாங்கிக் கொண்டது. நான் காவல்துறையின்  சித்திரவதையினை குறைந்த பக்கங்களே எழுத துணிந்தேன். ஆனால் அந்தக் குறைந்த பக்கத்து பதிவுகள் மீளா துயருக்கும், அதிர்வுக்கும் உள்ளாக்கி விடுபவையாக உள்ளதை வாசகர்கள் அறிவர்கள். எனக்குள் ஒரு பெரும் சுமையும், அந்த ஏற்றப்பட்ட சுமையினை எங்கோ இறக்கி வைத்து ஓட வேண்டும் என்ற உந்துதலும் அழுத்தமும் இருந்தது. ஒருவகையில் நான் அந்த துயரை வாசகருக்குக் கைமாற்றி விட்டு தப்பித்து ஓட நினைத்தேன் என்று கூட சொல்லலாம். ஆனால் அதையும் தாண்டி அந்த நாவல் எங்களைப் போன்று மனித உரிமைகளுக்காக போராடிய எல்லோரின் நியாயத்தையும் வாசகருடன் பேசுகின்றது. வாசகர்களின் உள்ளத்தின் ஆழத்தில் உள்ள கருனை மற்றும் மனித நேயத்தை அது தட்டி எழுப்புகின்றது. ஒரு வகையில் எங்களின் காலத்தை அந்த நாவல் உயிர்ப்புடன் வைத்திருக்கின்றது. கடந்த காலத்தில் எளிய மக்கள் மீது அரச வன்முறை எப்படிப் படர்ந்தது அதில் எவர் பக்கம் வாசகர்கள் நிற்க வேண்டும் என்ற நியாயத்தை சோளகர் தொட்டி எக்காலத்திலும் பேசும் என் நம்புகின்றேன்.

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் அதே பர்கூர் மலையில் சோளகர் தொட்டி கதையை மகா கலைஞன் எழுத்தாளர் பவா செல்லத்துரை

சொல்லும் ஒரு நிகழ்வுக்கு தாமரைக்கரை என்ற ஊரில் நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதற்கு முன்பு அவ்வளவு பெரும் கூட்டத்தை அம் மக்கள் எதிர் கொண்டதில்லை. மழை பொழிந்த போதும் அடுத்த நாள் அந்தக் கதையைக் கேட்க பெரும்பாலான மக்கள் அங்கேயே தங்கினர். அடுத்த நாள் சோளகர் தொட்டி கதையை கேட்ட மக்கள் கண்களில் கண்ணீர் பெருகியது. தொடர்ந்து மக்களுடன் வேலை செய்த வி.பி.குண சேகரன் உள்ளிட்டோரும் அழுதனர். நானும் அவர்களுடன்  சேர்ந்து அழுதேன்.

அப்போது நான் ஒன்றை உணர்ந்தேன். நான் சோளகர் தொட்டி படைப்பை உருவாக்கவில்லை. அந்தப் படைப்புதான் என்னைத் தேர்வு செய்து தன்னை உருவாக்கி கொண்டது. பிற மொழிகளில் அது  செல்லும் காலத்தில், அதன் வீச்சு கூடுதலாக இருக்கக் கூடும்.

ஜனவரி-2022

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com