கோயம்புத்தூர் – பெங்களூரு - திப்புவின் பாதை

கோயம்புத்தூர் – பெங்களூரு - திப்புவின் பாதை

கோவையில் எழுத்தாளர் பாமரன் எங்களை வழியனுப்ப வந்திருந்தார். அவருடன் இரண்டு எலும்பும்தோலுமான குதிரைகளையும் ஓட்டிவந்திருந்தார். ‘’பாதுஷாவுடன் செல்கிறீர்களே.. அவருக்கு குதிரை சவாரிதானே தெரியும்?” என்றார்.

என்னுடன் இருந்த திப்பு சுல்தான் சிரித்தார்.“சரியான நக்கல் பிடித்த மனிதர் போலிருக்கிறதே” என்றார் அந்த மட்டக்குதிரைகளை பரிதாபமாகப் பார்த்துக்கொண்டே.

கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் செல்லும் பேருந்தில் நாங்களிருவரும் ஏறி அமர்ந்தோம். காமிராவைக் கையில் எடுத்ததுமே நடத்துநர் பதறிப்போனார். நாங்கள் சும்மா சுற்றுலாப் பயணிகள் என்றதும் நிம்மதி அடைந்தார். நான் சாம்ராஜ் நகர் என்று உச்சரிக்க,”நகரத்துக்கா?” என்றவாறு பயணச்சீட்டு கிழித்தார். எங்களுடன் சேர்ந்து அந்த காலையில் ஐந்துபேர் பேருந்தில் இருந்தோம்.

பெங்களூரில் இருந்து கனகபுரா, மழவல்லி,

சாம்ராஜ்நகர்,  திம்பம், பண்ணாரி, சத்தியமங்கலம், கோவை, பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, மடத்துக் குளம், பழனி ஆகிய இடங்கள் வழியாக திண்டுக்கல் வரை செல்லும் தேசிய நெடுஞ்சாலை எண் 209-க்கு ஒரு வரலாற்று முக்கியத்துவம் இருக்கிறது. அது மைசூர் புலி என்று அழைக்கப்பட்ட, உலகில் தங்கள் ராணுவத்துக்கு எதிராகபோராடிய எதிரி போர்ப்படைத்தளபதிகளில் சிறந்த பத்துபேரில் ஒருவர் என்று ஆங்கில ராணுவம் சிறப்பிடம் கொடுத்திருக்கிற திப்புசுல்தான் தன் படைகளுடன் தமிழகத்தின் கொங்கு பகுதிக்கு வந்த சாலை. அவர் மைசூரில் இருந்து நஞ்சன்கூடு வழியாகவும் சாம்ராஜ் நகர் வந்து இந்த சாலையில் சேர்வார், அல்லது பெங்களூரிலிருந்து புறப்பட்டும் வருவார். அந்திமழைக்காக இந்த சாலையில் கோவையில் இருந்து பெங்களூர் வரை பயணிப்பது என்று முடிவெடுத்தோம். வழித்துணைக்கு திப்பு சுல்தான்.

சத்தியமங்கலம் செல்லும் சாலையில் இருபுறங்களிலும் புளியமரங்கள். மிக அழகான சாலை. ஆனால் அந்த புளியமரங்கள் அறுவடைக்குத் தயாரான பயிர்களைப் போல நின்று கொண்டிருந்தன. ஆம். இப்பாதை நால்வழிப்பாதையாக ஆகவிருக்கிறது. அப்போது இவை அனைத்தும் வெட்டி எறியப்படும். “நான் படைகொண்டுவந்தபோது இது காட்டுவழி. செம்மண் பாதையில் மாட்டுவண்டிகளிலும் குதிரைகளிலும் பயணம் செய்வோம். வழியெங்கும் குதிரைகளுக்கு லாடம் அடிக்க ஆட்களை வைத்திருந்தேன்.” என சொல்லி புன்னகைத்தார் பாதுஷா. அன்னூர் தாண்டி புஞ்சைப்புளியம்பட்டியில் பேருந்து நுழையும்போது அவ்வூரைச் சேர்ந்த சிவமணி என்கிற வாசகர் நினைவுக்கு வந்துபோனார். சத்தி பேருந்துநிலையத்தில் எங்கள் பேருந்து நிரம்பிவிட்டது. கன்னடப் பேச்சுக் குரல்கள் கேட்கஆரம்பித்தன. எங்களுக்குப் பின்சீட்டில் டாஸ்மாக் பானம் அருந்திய இருவர் ஏறிக்கொண்டனர். நகரம் வந்து இறங்கும்வரை அவர்கள் பேச்சை நிறுத்தவே இல்லை. பசுமையான வாழை, கரும்புவயல்கள் தாண்டி சத்திய மங்கலம் புலிகள் சரணாலயம் என்ற அறிவிப்பைப் பார்த்ததும்,“புலிகளுக்கு ஏன் சரணாலயம்?” என்றார் திப்பு.

“புலிகள் எண்ணிக்கையில் பெருத்து திரிந்ததெல்லாம் உங்கள் காலம். இப்போது அவை சுத்தமாகவே இல்லாமல் போயின. எனவே இருக்கும் ஒன்றிரண்டையாவது காக்கவே இந்த முயற்சி. ஆனால் சரணாலயம் என்ற பெயரில் காட்டுக்குள் இருக்கும் பழங்குடிமக்களை வெளியே துரத்த நடக்கும் வேலையை எதிர்த்துப் போராட்டங்கள் நடகின்றன” என்றதும் பாதுஷா சிரித்தார்.

புலிக்கொடி, புலிச்சின்னம், ஆங்கிலேயன்  ஒருவனை புலி கடிப்பது போன்ற பிரெஞ்சு பொறியாளர் ஒருவர் செய்துகொடுத்திருந்த எந்திரப்பொறி போன்றவைதான் திப்புவை நினைத்தால் நினைவுக்கு வருபவை. “ஒருமுறை வேட்டையின்போது என் துப்பாக்கி எட்டி விழுந்த நிலையில், கத்தியும் நழுவிவிட்ட சூழலில் என் மீது  பாய்ந்த புலியைக் கொன்று மீண்டது நினைவுக்கு வருகிறது”என்றார் பாதுஷா. படித்திருக்கிறேன் என்றேன் பண்ணாரியில் பெருங்கூட்டம் ஏறிக்கொண்டது. கன்னடக் குரல்கள் பெருத்து ஒலித்தன. என் மக்கள் என்று திப்பு பெருமிதம் கொண்டார். ஒரு பெண்மணி தன் குழந்தைக்கு அரை டிக்கெட் எடுக்கமறுத்து நடத்துநருடன் போராடினார். ஆனால் நடத்துநரோ விடாமல் பயணச்சீட்டைத் திணித்து பணமும் பெற்றார். எங்களிடம் வந்து,“பணம் வாங்கிப்புட்டேன்” என்றார் பெருமையுடன்.

ஆனால் அடுத்த சில நிமிடங்கள் அமைதிக்குப் பின்னர் “பணம் வாங்கினேல்ல எங்க உட்கார சீட்?” என்று  அப்பெண்மணி கன்னடத்தில் சீற ஆரம்பித்தார். கூட்ட நெரிசலில் நடத்துநர் வாய்பேசாமல் தன் இடத்தை அளித்துவிட்டு எங்கள் அருகே வந்து நின்றுகொண்டார்.  ‘’புலிகள் அழிந்துவிட்டதாக சொன்னீரே?” திப்பு அர்த்தத்துடன் சொன்னார்.

கர்நாடக எல்லையை நோக்கி விரைந்த வேளையில் சாலையில் இருபுறமும் காடுகள் அடர்ந்தன. ஒருகாலத்தில் வீரப்பன் அலைந்த பகுதி. நக்கீரனில் வாசித்த பகுதிகள். திம்பம் மலைப்பாதையில் பேருந்து நுழைந்தது. ஆரம்பத்திலேயே 27 கொண்டைஊசி வளைவுகள் என்று பீதியைக் கிளப்பினார்கள். உடனுக்குடன் வளைவுகள் வந்துகொண்டே இருந்தன. 27 வளைவுகளையும் சின்னப்பிள்ளைபோல திப்பு எண்ணிக்கொண்டே வந்தார். அடிக்கடி வாகனங்கள் கெட்டுப்போய் நின்று பெரும் நெரிசல் ஏற்படும் பகுதியாம். ஒவ்வொரு வளைவிலும் தூரத்தே கடந்துவந்த பாதையையும் அப்பால் தெரியும் பசுமை யான காடுகளையும் மலைகளையும் கண்டோம். எங்கள் பேருந்து பெரிய கேக்கின் மீது ஊர்ந்து செல்லும் எறும்பு போல என்று நினைத்துக்கொண்டேன்.  சுமார் முக்கால் மணி நேரத்தில் எங்கள் பேருந்து ஓட்டுநர் இந்த சிக்கலான மலைப்பாதையைக் கடந்தார். திம்பத்தைக் கடந்து ஆசனூரில் பேருந்து நிறுத்தப்பட, உணவுக்காக இறங்கினோம்.

அழகான மலைகளால் சூழ்ந்த சாலையைக் கடந்து எதிர்ப்புறமிருந்த கடையில் பரோட்டா சாப்பிட்டோம். தன் காலத்தில்தான் இங்கே பரோட்டா அறிமுகமானது என்ற தகவலைப் பகிர்ந்தார் பாதுஷா. அவர் எத்தனை பரோட்டா  சாப்பிட்டார் என்ற அரிய தகவல் இங்கே வேண்டாம். இதற்கு அடுத்து கர்நாடக மாநில சோதனைச்சாவடி. தாண்டியதும் ஜாங்கிரி போன்ற கன்னட எழுத்துப் பெயர்ப்பலகைகளில் அடுத்த மாநிலம் விரியத்தொடங்கியது.

சாம்ராஜ்நகரம் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதி. பேருந்து நிலையத்தைச் சுற்றி வந்தபோது வாயிலில் எழுதப்பட்டு வைக்கப்பட்டிருந்த திப்பு சுல்தான் ஆட்டோ ஸ்டாண்ட் என்ற பெயர்ப்பலகையைப் பார்த்ததும்  பாதுஷா மகிழ்ச்சி அடைந்தார்.

இங்கிருந்து கிளம்பி நஞ்சன்கூடு வழியாக மைசூர் போய்விடலாம். ஆனால் எங்கள் பாதை பெங்களூருவுக்கு என்பதால் கொள்ளேகால் நோக்கிக் கிளம்பினோம். செம்மண் பூமியில் பயணம் செய்தபோது கொள்ளேகால் பற்றி எனக்கு ஞாபகம் வந்தது இங்கே ஒரு விருந்தினர் மாளிகையில் இருந்து நடிகர் ராஜ்குமாரை வீரப்பன் கடத்திச் சென்றதுதான்.

கொள்ளேகால் சின்னதாய் புழுதியுடன் வரவேற்க அங்கேயொரு பேருந்து மாறினோம். மழவல்லி, கனகபுரா வழியாக பெங்களூரு செல்லும் பேருந்து. காவி நிறத்தில் இருந்த பேருந்தில் பின் பக்கம் வழியாக மட்டுமே ஏறமுடியும். முன்பக்கம் படிக்கட்டு இல்லை. அங்கேயும் பக்கவாட்டில் சீட்டுப் போட்டிருந்தார்கள்.

பேருந்துகிளம்பிய சில கணங்களில் இந்தியாவின் மிகவும் செழிப்பான பகுதி ஒன்றின் வழியாக பயணம் செய்துகொண்டிருப்பதை உணரமுடிந்தது. பச்சைப் பசேலென்ற வயல்களில் கோடை காலச்சாகுபடியால் செழித்திருந்தன. தென்னை மரங்களில் மினுமினுப்பில் பேருந்து கொஞ்சதூரம் வயல்கள், ஊர்ப்புறங்கள் வழியாகச் சென்று அகன்ற சாலையை அடைந்தது. அரைமணி நேரப் பயணத்தில் வடக்குநோக்கிச் சென்ற காவிரியைக் கடந்தோம். கர்நாடகாவில் சென்று காவிரியைக் காணும் தமிழர்கள் அது பாயும் பகுதிகளின் செழுமையைக் கண்டு பொறாமை அடைவார்கள். 

மைசூர் அருகே கிருஷ்ணசாகர் அணையில் தேங்கிய பின்னர் வழிந்தோடி வரும் காவிரி. திப்புசுல்தான் தான் முதலில் கண்ணம்பாடியில் காவிரிக்குக் குறுக்கே அணைகட்ட திட்டமிட்டவர்.  இன்றைக்கு கர்நாடகத்தின் மைசூரும் மாண்டியாவும் செழிப்பது இந்த அணையால்தான். அவர் கட்டியிருந்தால் ஒருவேளை அவர் பெயர் இந்த அணைக்கு வைக்கப் பட்டிருக்கலாம்.

மழவல்லிக்குச் சென்றபோது அதுவரை ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த திப்பு விழித்துக் கொண்டார்.அவருக்கு சுமார் 215 ஆண்டுகளுக்கு முன்னால் நடந்தது நினைவுக்கு வந்திருக்கவேண்டும். மழவல்லியில் மார்ச் 27, 1799 அன்று நான்காவது ஆங்கிலோ- மைசூர் போரில் திப்புவின் படைகள் கர்னல் ஆர்தர் வெல்லெஸ்லி தலைமையிலான படைகளை எதிர்கொண்டு போரில் பின் வாங்கின. திப்புவே நேரடியாக அங்கே தலைமைதாங்கி ஆங்கிலப்படைகளை எதிர்கொண்டிருந்தார். அப்போரில் திப்புவின் படையைச் சேர்ந்த 2600 பேர் இறந்தனர். மழவல்லியில் அவர்களுக்கான நடுகற்களைப் பார்க்கமுடியும். தீரன் சின்னமலை தன் படைகளுடன் அந்த யுத்தத்தில் திப்புவுக்காக ஆங்கிலேயரை எதிர்கொண்டதும் இன்னொரு வீரவரலாறு. பின்வாங்கிச் சென்ற திப்பு இறுதியில் ஸ்ரீரங்கப்பட்டினத்தில் நிலைகொண்டார். துரோகிகள் உதவியுடன் ஆங்கிலப்படை மே 4-ந்தேதி ஸ்ரீரங்கப்பட்டினத்துள் நுழைந்தது. வீரனாக இறுதிவரைப் போராடி திப்பு வீழ்ந்தார். பிணக்குவியலில் இருந்து அவரது உடலைக் கண்டெடுத்தார்கள்.

பேருந்து பெங்களூரு நோக்கி கனகபுரா வழியாகச் சென்றது. பாதுஷாவிடம் பேசுவதற்கு எனக்கு எதுவும் இல்லை. மேற்குப்புறத்தில் குன்றுகளுக்கு இடையே சூரியன் மிகவேகமாக அஸ்தமனம் ஆகிக் கொண்டிருந்தான். விரிந்து பெருத்த மாநகரமாக பெங்களூரு அண்மித்தபோது எனக்கு அருகில் இருந்த இடம் காலியாக இருந்தது.

ஜூலை, 2014.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com