சஞ்சய்
சஞ்சய்

சன்னி லியோனுக்கு டூப் போடுகிறவர்!

‘லேடீஸ் டூப் என்றாலே சஞ்சயை கூப்பிடுங்க' என்கிற அளவுக்கு உயர்ந்திருக்கிறார் 23 வயதே ஆன அந்த தேனாம்பேட்டை இளைஞர். சினிமாவில் கால் பதித்த ஐந்து ஆண்டுகளுக்குள் த்ரிஷா, ஐஸ்வர்யா ராஜேஷ், அமலா பால், சன்னி லியோன், மடோனா செபஸ்டின், ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்ட பல முன்னணி ஹீரோயின்களுக்கு இவரே டூப் போடும் நாயகர்.

படப்பிடிப்பிற்காக மதுரைக்குச் செல்லத் தயாராகிக் கொண்டிருந்த சஞ்சயை அந்திமழைக்காக சந்தித்துப் பேசினோம். ‘படிப்பு சரியாக வராததால், ஊர் சுத்திக் கொண்டு இருந்தேன். ‘இவனை இப்படியே விட்டால், சரிப்பட்டு வரமாட்டான்' என்று பாண்டியன் மாஸ்டரிடம் கொண்டு போய் நிறுத்தினார் அப்பா.

மாஸ்டர் தான் எனக்கு சிலம்பம், கத்தி சண்டை, மான் கராத்தே போன்றவற்றோடு ஒழுக்கத்தையும் சேர்த்துக் கற்றுக் கொடுத்தார். அவரிடம் பயிற்சி பெறுவதற்காக சூர்யா, ஜெயம் ரவி, தன்ஷிகா போன்ற பெரிய பெரிய நடிகர்களும், ஸ்டண்ட் மாஸ்டர்களும் வருவார்கள். அவர்களைப் பார்த்து தான் எனக்கு சினிமா மீதே ஆசை வந்தது.

எனக்கு பதினெட்டு வயசு ஆனவுடன் என்னை ஸ்டண்ட் யூனியனில் சேர்க்க சொல்லி அப்பாவிடம் கேட்டார் மாஸ்டர். அப்பா பணம் இல்லை என்று மறுத்துவிட்டார்.

 ‘பையனுக்கு நல்ல எதிர்காலம் இருக்கு. கலரா இருக்கான், டூப்புக்கெலாம் மேட்சாவான், என்னை நம்பி சேர்த்துவிடு' என அப்பாவை வற்புறுத்தினார் மாஸ்டர். மனம் மாறிய அப்பா, சேர்த்து வைத்திருந்த மூன்றரை லட்சம் பணத்தை யூனியனில் கட்டி, யூனியன் கார்டு வாங்கி கொடுத்தார்.

யூனியனில் சேர்ந்த பிறகு, எல்லா நாளும் படப்பிடிப்பு தளத்தில் இருப்பேன். முதன் முதலாக ‘ஆடை' படத்தில் அமலா பாலுக்கு டூப் போட்டேன். அதன் பிறகு த்ரிஷா, ஐஸ்வர்யா ராஜேஷ், மடோனா செபஸ்டின், ப்ரியா பவானி சங்கர், அதிதி ஷங்கர் என பல ஹீரோயின்களுக்கு டூப் போட ஆரம்பித்தேன்.

டூப் கலைஞராக என்னை நெகிழ வைத்த சில சம்பவங்களை சொல்கிறேன். ‘வானம் கொட்டட்டும்' படத்தில் விக்ரம் பிரபுவிடம் சண்டை போடும் மடோனா செபஸ்டின், பாலத்தின் மேலிருந்து கீழே குதிக்கும் காட்சியை பார்த்திருப்பீர்கள். அதில் குதித்தது நான் தான். காலை ஐந்து மணிக்கு அந்தக் காட்சியை எடுத்தார்கள். இருட்டில் கீழே பார்த்தால் என்ன இருக்கிறது என்று கூட தெரியாது. இருபது அடி கீழே குதிக்க வேண்டும்.

‘ஏரி தண்ணீர் என்பதால் எதுவேண்டுமானாலும் இருக்கலாம். நேக்கா குதிக்கலன்னா, சேத்தில் மாட்டிக்கிவீங்க' என்றார்கள். பக்கத்திலிருந்த மடோனா செபஸ்டின் ‘நீ குதிப்பீயா... உனக்கு பயம் இல்லையே' என்று அக்கறையுடன் கேட்டார்.

தைரியமாக குதித்துவிட்டேன். எல்லோருக்கும் பயம். உடனே எல்லோரும் கீழே வந்துவிட்டார்கள். மடோனா செபஸ்டின் பக்கத்தில் வந்து ‘சஞ்சய் Are you Alright ?' என கேட்டாங்க. ஒரே டேக்கில் அந்த காட்சி ஓகே ஆனது.

அதே மாதிரி ‘ஓ மை கோஸ்ட்' படத்தில் சன்னி லியோனிக்கு டூப் போட்டுள்ளேன். அவங்க தைரிய-மானவங்க.  ‘ரோப்' காட்சி ஒன்றில் என் காட்சிகளை நானே நடிக்கிறேன் என தைரியமா நடிச்சாங்க.

‘சொப்பன சுந்தரி' படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு நான் தான் டூப். ‘அப்படியே பொண்ணு மாதிரி இருக்கிறே...' என்பாங்க. அதேபோல், த்ரிஷா,

சாந்தினி, லட்சுமி ராய், ரைசா வில்சன், இவானா போன்ற பல ஹீரோயின்களுக்கு டூப் போட்டுள்ளேன்.

சமீபத்தில் பரத்துக்கு டூப் போட்டேன். இயக்குநர் வசந்த பாலன் இயக்கத்தில் பரத் - ஐஸ்வர்யா ராஜேஷ் இருவரும் நடிக்கும் வெப் சீரிஸ் அது. பரத் நாற்பது அடி உயர கட்டடத்திலிருந்து கீழே குதிக்க வேண்டும். குதிப்பதற்கு முன் பரத் எனக்காக கடவுளிடம் வேண்டிக் கொண்டார்.

ரோப் கட்டிக் கொண்டு கீழே குதித்தேன். சின்ன சின்ன தவறுகளால் அந்தக் காட்சியை மூன்று முறை எடுத்தார்கள். எடுத்து முடித்ததும் கைகொடுத்துப் பாராட்டினார் பரத்.

திரைப்படங்களுக்கு மட்டுமல்லாமல் சீரியல்களுக்கும் டூப் போடுறேன். சன் டீவி, விஜய் டீவி போன்ற எல்லா சீரியல்களுக்கும் லேடீஸ் டூப்நான் தான் போடுகிறேன்,' என்றவரிடம் ஒரு நாளைக்கு உங்களுக்கு எவ்வளவு சம்பளம் என்று கேட்டோம்.

‘ஒரு கால் ஷீட்டுக்கு எங்களுக்கு 3600 ரூபாய். டூப்பெல்லாம் போட்டால் இன்னும் கூடுதலாக சம்பளம் கிடைக்கும். ரிஸ்க்குக்கு ஏற்ற மாதிரி சம்பளம் இருக்கும். யூனியனில் ஒவ்வொரு டூப்புக்கும் ஒவ்வொரு சம்பளப் பட்டியல் உண்டு.

டூப் கலைஞர்களுக்கு எதாவது பிரச்னை என்றால் அதை யூனியன் தான் பார்த்துக் கொள்ளும். யூனியன் தான் எங்களுக்கு கோயில்.'

இந்த தொழிலில் உள்ள ரிஸ்க் என்ன?

 ‘கார் விபத்து காட்சிகள், ஜம்ப், வாட்டர் ஜம்ப், கிளாஸ் ஜம்ப் போன்ற காட்சிகளில் டூப் போடுவது கொஞ்சம் ரிஸ்க் தான். எது எப்போது நடக்கும் என்றே தெரியாது.

மலையாள படம் ஒன்றில் ஹீரோயினுக்கு டூப் போட்டேன். ரோட்டில் ஒரு டெம்போ டிராவலர் வந்து கொண்டிருக்கும், அது வருவதற்கு முன்னால் ரோட்டை கடந்துவிடலாம் என நினைப்பார் ஹீரோயின். ஆனால், அந்த டெம்போ டிராவலரை முந்திக் கொண்டு வரும் கார் மோதி ஹீரோயின் கீழே விழுந்து உயிரிழந்துவிடுவார். அந்தக் காட்சிக்கு டூப் போட்டேன். சின்னச் சின்ன தவறுகளால் அந்த ஒரு காட்சியை மட்டும் 25 முறை எடுத்தார்கள். அந்த காட்சியில் நடித்ததற்காக கை கால்களில் நிறைய அடிப்பட்டது,' என்றார். சமீபத்தில் லால் சலாம் படத்தில் விஷ்ணு விஷாலுக்கு டூப் போட்டுள்ளார்.

‘கடந்த ஐந்தாறு வருடத்தில் பல ஹீரோயின்களுக்கு டூப் போட்டுள்ளேன். தமிழ், மலையாளம், தெலுங்கு, ஒரிசா, பெங்காலி, மராட்டி, புனே போன்ற பல்வேறு மொழி திரைப்படங்களுக்கும் டூப் போடுகிறேன். இதுவரை எத்தனை படங்கள் டூப் போட்டு இருப்பேன் என்றே தெரியாது. தற்போது மட்டும் நாற்பது படங்களுக்கு டூப் போட்டுக் கொண்டிருக்கிறேன். என்னுடைய ஒரே லட்சியம், ஸ்டண்ட் மாஸ்டர் ஆக வேண்டும் என்பதுதான்,' என உற்சாகமாக பேசி முடித்தார்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com