சம்சாரம் அது மின்சாரம்: பாசப்போராட்டம்

சம்சாரம் அது மின்சாரம்: பாசப்போராட்டம்

தமிழ்ச் சமூகத்தின் வாழ்வியலில் பெண்களின் பங்களிப்புதான் மிக அதிகம். அதிலும் ஒரு குடும்பத்தில் வந்து சேரும் புதிய மருமகள்தான் அந்தக் குடும்பத்தின் அடுத்தத் தலைமுறைக்கான அச்சாணி, வழிகாட்டி. அந்த அச்சாணி எப்படியிருக்குமோ என்று நினைத்து பயப்படும் மாமியார்களும், மாமனார்களும்தான் இன்றுவரையிலும் அதிகம்.

அப்படிப்பட்ட நிலையில் ‘‘சம்சாரம் அது மின்சாரம் ‘உமா‘ மாதிரியான ஒரு மருமகள் கிடைத்தால் போதும்'' என்று இன்றுவரையிலும் தமிழ்நாட்டில் பேச வைத்திருப்பதென்பதே ஒரு சாதனைதான். அதைச் செய்து காண்பித்தவர் நடிகை லட்சுமி.

சிறந்த நடிகைக்கான தேசிய விருதை தனது இளம் வயதிலேயே பெற்றிருக்கும் லட்சுமி, கதாபாத்திரமாகவே வாழ்வதென்பதுதான் நடிப்பு என்ற கொள்கையை உடையவர். இந்த ‘உமா' கதாபாத்திரம் அவருக்குக் கிடைக்கப் பெற்றது அவர் பெற்ற பெருமையும்கூட..!

சிதறு தேங்காய்போல் உடையக் காத்திருக்கும் அம்மையப்பனின் குடும்பத்தில் மூத்த மருமகளாக கால் பதிக்கும் உமா, தான் பிரசவத்திற்காக பிறந்த வீட்டுக்குப் போய்விட்டு குழந்தையுடன் வீடு திரும்பும்போது வீடே இரண்டாகிப் போய்க் கிடப்பதைப் பார்த்து சும்மா இராமல் பலவித நாடகங்களை, பாசப் போராட்டங்களை நடத்தி அந்தக் குடும்பத்தினரை ஒன்றாய் இணைக்கிறார்.

இதற்காக அமைக்கப்பட்டிருக்கும் திரைக்கதையில் ‘உமா'வாக நடித்திருக்கும் லட்சுமி காட்டியிருக்கும் நடிப்புதான் படத்திற்குக் கிடைத்த மிகப் பெரிய பலம்.

கஞ்சத்தனமான கணவரைச் சமாளித்து, யாருக்கும் அடங்காத, சொல் பேச்சுக் கேட்காத நாத்தனாரின் திருமண வாழ்க்கையை சரி செய்து.. கணவருடன் தனித்திருக்க வாய்ப்பு கிடைக்காத கோபத்தில் பிறந்து வீட்டுக்குப் போகும் தனது ஓரகத்தியை சமாளித்து அழைத்து வந்து அவர்கள் வாழ வழிகாட்டி.. பத்தாம் வகுப்பை தாண்டுவதற்கே திக்கித் திணறிக் கொண்டிருக்கும் தனது கொழுந்தனை பாஸ் செய்ய வைத்து.. பேசவே தெரியாத தனது மாமியாருக்குத் தைரியத்தைக் கொடுத்து.. நன்றியையும், பாசத்தையும் பிள்ளைகளிடமிருந்து எதிர்பார்க்கும் மாமனாருக்கு அடுத்தத் தலைமுறையைப் பற்றிப் புரிய வைத்து..

அப்பப்பா.. இந்த ‘உமா'வின் பேச்சும், சொல்லும், செயலும் அந்தக் குடும்பத்தைக் கடைசியில் ஒன்று சேர்க்கவே என்று நினைத்த தருணத்தில் கடைசி நேர டிவிஸ்ட்டாக ‘உமா' அடித்த அந்தர்பல்டிதான் இன்றைய 2000-மாவது தலைமுறையினருக்கும் ஒரு எடுத்துக்காட்டாய் இருக்கிறது.

‘உமா‘வாக வாழ்ந்த லட்சுமி தனது நடிப்புக்கு இந்தப் படத்தில் கிடைத்த வாய்ப்புகளையெல்லாம் பயன்படுத்தியிருக்கிறார். பெண் பார்க்கும் படலத்தில் துவங்கி, வீட்டுக்கு வந்தவுடன் ஒவ்வொருவரையும் திகிலுடன் பார்த்துக் கொள்ளத் தொடங்கி, எதுவுமே தெரியாத மாமியாரிடம் தன் அம்மாவைப் போல பாசம் காட்டி ‘‘நீங்க ரொம்ப ஐஸ் வைச்சிட்டீங்களே அத்தை'' என்று செல்லம் கொஞ்சி சிரிக்க வைக்கிறார்.

தனது மார்பில் பால் கட்டிக் கொண்டு வலிக்கும்போது நடுவில் இருந்த கோட்டையும் தாண்டி மாமியாரை தன் வீட்டுக்குள் அழைக்கும் அத்தருணத்தில் ‘‘கோடென்ன கோடு.. அதுவொரு சாதாரண சாக்பீஸ்'' என்று நம்மை சொல்ல வைப்பார்.

வீட்டு வேலைக்காரப் பெண்ணான மனோரமாவின் உதவியோடு கிஷ்முவை வீட்டுக்கு வரவழைத்து நாடகமாடி மனோரமாவின் ஓவர் ஆக்ட்டிங்கிற்காக ஜன்னல் வழியே கைகளைக் கூப்பி மன்னிப்பு கேட்கும் அந்தக் காட்சி இன்றைக்கும் மறக்காது.

நாத்தனார், மற்றும் ஓரகத்தியிடத்தில் ஏதோ படித்தவள்போல் பேசாமல் குடும்பத்தில் ஒருத்தியாகப் பேசுவதாக நினைத்து சமரசங்களை செய்யும் வித்தையிலும் லட்சுமி ஜொலித்திருப்பார்.

பிள்ளைக்கு வாங்கிய பால் பவுடர் டின்களைக்கூட கணக்குப் பார்க்கும் கணவரிடத்தில் தன் கோபத்தைக் காட்டி மொத்த டப்பாக்களையும் தள்ளிவிட்டுவிட்டு ‘‘எதெதெதுக்குத்தான் கணக்குப் பார்க்குறதுன்னு விவஸ்தை இல்லையா..?'' என்று சீறும்போதும் ஒரு தாய்க்கான கோபத்தைக் காட்டுவார் லட்சுமி.

கிளைமாக்ஸ் காட்சியில் ‘‘கூட்டுக் குடும்பம்ங்கிறது ஒரு நல்ல பூ மாதிரி. எல்லோருமா சேர்ந்து அதைக் கசக்கிட்டோம்... அப்புறம், அதை மோந்து பார்க்கக் கூடாது... அசிங்கம். இப்படியே... ஒரு அடி விலகி நின்னு, நீ.. சௌக்கியமா... நான் சௌக்கியம்... நீ நல்லாயிருக்கியா... நான் நல்லாயிருக்கேன். பண்டிகை, நாளு, கிழமை இப்படி ஏதாவது நாள்ல எல்லாரும் ஒண்ணா சேர்ந்துக்கலாம். ஒரு நட்போட, அது நல்லாயிருக்கும்.

அதைவிட்டுவிட்டு, மறுபடியும் ஒண்ணா வந்துட்டோம்னா... திரும்பவும் ஏதாவது வாய் வார்த்தை, தகராறு,

சண்டைன்னு வந்தா... அதை தாங்கிக்கிறதுக்கு மனசுலயும் சக்தி இல்ல... உடம்புலயும் சக்தி இல்ல...'' என்று தூணைப் பிடித்துக் கொண்டு எங்கோ பார்த்துக் கொண்டு

சொட்டாய் வடியும் கண்ணீருடன் இந்த ‘உமா' உதிர்த்த வார்த்தைகள்தான் படம் பார்க்க வந்த அத்தனை தாய்க்குலங்களுக்கும் பிடித்துப் போனது.

குடும்பங்கள் ஒன்றாக சேர்வதும், சேராததும் இங்கே பிரச்னையில்லை. மீண்டும் குடும்பத்தில் பிரச்னை வராமல் இருக்க வேண்டும். அதுதான் முக்கியம் என்பதை இந்த ‘உமா‘ என்ற லட்சுமி தனது கதாபாத்திரத்தின் வாயிலாகச் சொன்னார். இதுவொரு தத்துவம்போல இன்றுவரையிலும் தமிழ்க் குடும்பங்களில் தொடர்ந்து பின்பற்றப்படுகிறது.

‘உமா' என்ற மருமகள்தான் எந்தக் காலத்திலும் நமக்குத் தேவையானவர்கள் என்கிற பிம்பம், தமிழ்ச் சமூகத்தில் உருவானதற்கு காரணமாக அமைந்திருந்தது லட்சுமி என்ற அந்த ராட்சசியின் யதார்த்தமான நடிப்பு என்றால் அது மிகையில்லை.!

மார்ச், 2023

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com