ஹம்ப்ரி போகார்ட்
ஹம்ப்ரி போகார்ட்

சான்ஸே இல்லை

நவம்பர் 1942இல் ஹாலிவுட்டில் வெளியான ‘கேஸப்ளாங்கா' (Casablanca) உலகெங்கும் மகத்தான படமாக இன்றும் கொண்டாடப்படுகிறது. காதலிக்காக தியாகம் செய்யும் ஹீரோக்களைத் தமிழில் பலமுறை நாம் பார்த்திருக்கிறோம். அதற்கெல்லாம் மூலகாரணம் இந்தப் படம்தான். மௌனராகம் கார்த்திக் கதாபாத்திரத்தில் ஓரளவு இந்தப் பட பாதிப்பு உண்டு. இத்தகைய க்ளாசிக் படமான கேஸப்ளாங்காவில் நடித்த ஹம்ப்ரி போகார்ட் இன்றும் ஹாலிவுட்டின் மிகச்சிறந்த சூப்பர்ஸ்டாராகக் கொண்டாடப்படுகிறார். நமக்கெல்லாம் தெரிந்த ஹாலிவுட் ஸ்டார்கள், சில்வெஸ்டர் ஸ்டாலோன் மற்றும் அர்நால்ட் ஷ்வார்ட்ஸெனெக்கரில் இருந்துதான் துவங்குகிறார்கள் என்பதால், அற்புதமான பல படங்களில் சான்சே இல்லாத நடிப்பை வழங்கிய பல சூப்பர்ஸ்டார்களைப் பற்றிக் கொஞ்சம் பார்க்கலாம்.

கேஸப்ளாங்கா  ஹம்ப்ரி போகார்ட்டை பிரமாண்டமான சூப்பர்ஸ்டாராக மாற்றியது. இப்போது பார்த்தாலும் அலுக்கவே அலுக்காது. அதற்கு முன்னரே ப்ராட்வேயில் நடிக்கத் துவங்கி, சில படங்களில் நெகட்டிவ் கதாபாத்திரங்கள் செய்து, ஹை சியர்ரா (1941) மற்றும் மால்டீஸ் ஃபால்கன் (1941) படங்களில் நடித்து, அவை நன்றாகப் பேசப்பட்டபோதுதான் கேஸப்ளாங்கா வெளியாகிறது. அதன்பின்னர் கேன்சரால் இறந்த 1957 வரையிலுமே போகார்ட் சூப்பர்ஸ்டாராகவே திகழ்ந்து மறைந்தார். இன்றும் ஹாலிவுட்டில் பலராலும் நினைவுகூரப்படுகிறார்.

தனது முதல் ஆஸ்கர் பரிந்துரைக்கும் இறுதிப் பரிந்துரைக்கும் இடையே நாற்பத்தெட்டு வருடங்கள் நடிப்பில் கழித்த கேதரின் ஹெப்பர்ன், இன்னொரு ஹாலிவுட் சூப்பர்ஸ்டார். சிறுவயதிலேயே, மிகவும் Progressive ஆன பெற்றோருடன் வளர்ந்ததால் எப்போதும் எந்த விஷயமாக இருந்தாலும் வெளிப்படையாகத் தனது கருத்தைப் பேசக்கூடிய இயல்பு கேதரின் ஹெப்பர்னுக்கு இருந்தது. அதேசமயம், மிக இளம் வயதிலேயே அண்ணன் தற்கொலை செய்துகொண்டதால் மனம் பாதிக்கப்பட்டார் கேதரின் (கேதரினுக்குப் பதிமூன்று வயது; அண்ணனுக்குப் பதினைந்து). அதன்பின் அடுத்த எழுபது வருடங்கள், அண்ணனின் பிறந்தநாளையே தனது பிறந்தநாளாகச் சொல்லிவந்தார் கேதரின்.

கல்லூரியில் அவ்வப்போது நாடகங்கள் நடித்து, தியேட்டரில் அட்டகாசமான ரோல்கள் செய்து, பின்னர் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்து, பல படங்கள் நடித்து, மிக இளம் வயதில் திருமணம் செய்து, ஆறே வருடங்களில் விவாகரத்து செய்துகொண்டு, அதன்பின் திருமணமே செய்யாமல் வாழ்ந்து, புகழ்பெற்ற நடிகர் ஸ்பென்சர் டிரேசியுடன் அவரது இறப்பு வரை இருபத்தேழு வருடங்கள் பார்ட்னராக இருந்து, எப்போதுமே வெளிப்படையாகப் பேசி, நவீன உடைகளை அறிமுகப்படுத்தி, அட்டகாசமான வாழ்க்கை வாழ்ந்தவர் கேதரின். தனது தொண்ணூற்றாறாவது வயதில் 2003ல் மறைந்தவர். ஹாலிவுட்டின் நிஜமான லேடி சூப்பர்ஸ்டார்.

ஹாலிவுட்டின் செக்ஸியான நடிகர் யார்? வருடாவருடம் இந்தப் பட்டியல் இப்போதும் வெளிவருகிறது. ஆனால் எந்தப் பட்டியலும் போடாமலேயே இன்றும் ஹாலிவுட்டின் மிக செக்ஸியான நடிகராகக் கருதப்படுபவர் கேரி க்ராண்ட். இங்கிலாந்தில் பிறந்து, ஹாலிவுட்டின் அந்நாளைய பல சூப்பர்ஹிட்களில் நடித்தவர். ஆல்ஃப்ரெட் ஹிட்ச்காக்குடன் இணைந்து நான்கு படங்கள் கொடுத்தவர் (சஸ்பிஷன், நொட்டோரியஸ், டு கேட்ச் எ தீஃப் & நார்த் பை நார்த்வெஸ்ட்). ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தின் திரை உருவாக்கத்துக்கு இவரை வைத்தே குணநலன்களையும் உடல்மொழியையும் உடைகளையும் வடிவமைத்ததாக ஒரு கதை உண்டு. 1966ல் தனது அறுபத்து இரண்டாம் வயதில் திடீரென்று சினிமாவில் இருந்து ஓய்வுபெற்றவர். சினிமா அலுத்துவிட்டதே காரணம். ‘நான் பாட்டுக்கு ஒரு கிழவனாக நடித்திருந்திருக்கலாம்; ஆனால் சினிமாவை விடவும் நல்ல பல விஷயங்களை அறிந்துகொண்டதே நான் சினிமாவை விட்டு விலகுவதற்குக் காரணம்' என்பது அவரது புகழ்பெற்ற கருத்து. இறுதிவரை வில்லனாக நடிக்காத நடிகரும் கூட.  ரிடையர் ஆனபின்னர் தனது மகளை கவனித்துக்கொண்டார். ஹிட்ச்காக் அழைத்தும்கூட தனது முடிவை மாற்றிக்கொள்ளவே இல்லை. அதேசமயம் வியாபாரத்தில் இந்தக் காலகட்டத்தில் சிறந்தும் விளங்கினார். எம்.ஜி.எம் நிறுவனத்தின் இயக்குநராகப் பணிபுரிந்திருக்கிறார்.

புகழ்பெற்ற நாவலான ‘La Cousine Bette‘ என்பதில் இருந்து தனது பெயரையே பெட்டி டேவிஸ் என்று மாற்றிக்கொண்ட ரூத் எலிஸபெத் டேவிஸ், ஹாலிவுட்டின் அடுத்த பிரமாண்டமான பிரபலம். 1938இல் இருந்து வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்தின் பல படங்களில் தொடர்ந்து நடித்ததால், வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்தின் மூன்று சகோதரர்களுடன் நான்காவது சகோதரர் என்றே பத்திரிகைகள் இவரை அழைத்தன. ஆனால் உண்மையில் வார்னர் பிரதர்ஸ் மட்டும் அல்லாமல் பல தயாரிப்பு நிறுவனங்களும் அந்நாட்களில் காண்ட்ராக்ட் எனப்படும் கொடூரமான ஒப்பந்தங்கள் போட்டு, நடிகர்களைப் பல வருடங்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பார்கள். அதை எதிர்த்து வழக்குப் போட்டு, அதில் தோற்றவர் பெட்டி டேவிஸ். அதேசமயம், இரண்டாம் உலகப் போரின்போது, ராணுவ வீரர்கள் நடிக நடிகையருடன் பேசி மகிழும் War Canteen என்ற அமைப்பைத் துவங்கி, போருக்கும் அமெரிக்கப் படையினருக்கும் பெரும் ஆதரவும் தந்தவர். பல குறும்படங்களில் நடித்து, அமெரிக்க மக்களை போரின்போது ஊக்கப்படுத்தியவர். ஒரு காலகட்டத்தில், பத்து முறை ஆஸ்கருக்குப் பரிந்துரை செய்யப்பட்டு அக்காலத்தில் மிக அதிகப் பரிந்துரைகள் என்ற சாதனை படைத்தவர். பெட்டி டேவிஸின் 73ஆம் வயதில், Bette Davis Eye என்ற 1974 பாடல் திரும்பவும் ரெகார்ட் செய்யப்பட்டு 1981இல் வெளிவந்து சூப்பர் ஹிட் ஆகி, அந்த வருடத்தின் சிறந்த பாடலுக்கான கிராமி விருது பெற்றது. அப்போது, ‘என்னை இந்தப் புதிய தலைமுறையில் இன்றியமையாத ஓர் அங்கமாக இந்தப் பாடல் மூலம் இடம்பெறச்செய்தமைக்கு நன்றி' என்ற கடிதத்தை பாடலை ரெகார்ட் செய்த கிம் கார்ன்ஸுக்கு அனுப்பியிருக்கிறார் பெட்டி டேவிஸ். அவரது கண்கள் மிகவும் பிரபலமானவை.

பிரபல நடிகை ஜோன் க்ராஃபோர்டுக்கும் பெட்டி டேவிஸுக்கும் இருந்த பகைமை மிகப்பிரபலமானது. 2017இல் இதை வைத்து Feud என்ற சீரீஸே வெளிவந்திருக்கிறது. இரண்டு பேரும் மாறிமாறி, பல வழிகளைப் பின்பற்றி நூதனமாக ஒருவருடன் ஒருவர் சண்டைபோட்டுக்கொண்டார்கள். 1933இல் துவங்கிய இந்த சண்டை, 1977இல் ஜோன் க்ராஃபோர்ட் இறக்கும்போதுதான் முடிந்தது. அப்போது பெட்டி டேவிஸ், ‘இறந்தவர்களைப் பற்றி எப்போதுமே நல்ல விஷயங்களையே பேசவேண்டும்; எனவே, ஜோன் க்ராஃபோர்ட் இறந்துவிட்டார். Good!' என்று பேசியது வைரலானது.

ஜேம்ஸ் ஸ்டீவர்ட் அடுத்த ஹாலிவுட் பிரபலம். ஆல்ஃப்ரெட் ஹிட்ச்காக்கின் வெர்டிகோவில் நடித்தவர் என்றால் பலருக்கும் புரிந்துவிடும் (ரோப், ரியர் விண்டோ, த மேன் ஹூ ந்யூ டூமச் ஆகிய படங்களிலும் ஹிட்ச்காக்குடன் பணிபுரிந்திருக்கிறார்). இவரது

சிறப்பம்சம் என்னவெனில், பல கதாபாத்திரங்களில் எம்.ஜி.ஆர் போலவே நல்லவராகவும், சிறப்பான கொள்கைவாதியாகவும் நடித்ததே. இவருமே மிகப்பிரபலமான சூப்பர்ஸ்டார்தான். இரண்டாம் உலகப்போரில் முதல் ஹாலிவுட் ஸ்டாராகப் பங்குபெற்று இருபதுக்கும் மேற்பட்ட சண்டைகளில் கலந்துகொண்டவர். ராணுவத்தில் ப்ரிகேடியர் ஜெனரலாக உயர்ந்தவர். வாழ்க்கை முழுதும் மிகச்சில நண்பர்களையே தன்னைச்சுற்றி வைத்துக்கொண்டவர். நாற்பதாவது வயது வரை திருமணம் செய்யாமல் இருந்து, அந்நாளைய Great American Bachelor என்று பத்திரிகைகளில் கிசுகிசுக்கப்பட்டவர். அக்கார்டியனை சிறப்பாக வாசிக்கக் கூடியவர்.

போர் முடிந்து, தந்தையின் கடையைப் பார்த்துக்கொள்ளலாம் என்று முடிவு செய்தவரை, ஃப்ராங்க் காப்ராதான் அழைத்துவந்து It's a wonderful Life படத்தில் நடிக்கவைக்கிறார். படம் பயங்கரமாகப் பேசப்பட (வசூலில் ஃப்ளாப். ஆனால் விமர்சக ரீதியில் ஹிட்), ஜேம்ஸ் ஸ்டீவர்ட்டின் இரண்டாம் இன்னிங்ஸ் ஹாலிவுட்டில் துவங்கியது. இதன்பின்னர் தடதடவெனப் பல படங்களில் பல வருடங்கள் நடித்தார்.

பெயரைக் கேட்டதுமே ஒருவித மென்மையான உணர்வுடன், பல ரொமாண்டிக் படங்கள் நினைவுவரக்கூடிய அடுத்த சூப்பர்ஸ்டார், ஆட்ரி ஹெப்பர்ன். உலகில் மிகச்சில நபர்களே செய்திருக்கும் சாதனையான EGOT (எம்மி, கிராம்மி, ஆஸ்கர் மற்றும் டோனி விருதுகளை வென்றவர்கள்) சாதனைக்கு

சொந்தக்காரர். இன்றுவரை உலகம் முழுக்கப் பல படங்களுக்கு இன்ஸ்பிரேஷனாக விளங்கும் ரோமன் ஹாலிடே படத்தில் நடித்தவர். வெறும் 28 படங்களில் மட்டுமே நடித்தவர். அவற்றில் பல படங்கள் சூப்பர்ஹிட்கள்.  கேரி கிராண்ட்டுடன் ஆட்ரி நடித்த இடச்ணூச்ஞீஞு குறிப்பிடத்தகுந்த படங்களில் ஒன்று. கனவுக்கன்னி என்று தாராளமாக ஆட்ரி ஹெப்பர்னை சொல்லமுடியும். அவரது Breakdfast at Tiffany's இன்றும் ஒரு கிளாஸிக்காகக் கொண்டாடப்படுகிறது.

இதுவரை நாம் பார்த்த ஆறு மிகப்பெரிய சூப்பர்ஸ்டார்களைத் தவிர, இன்னும் மார்லன் ப்ராண்டோ, இங்க்ரிட் பெர்க்மேன், ஃப்ரெட் ஆஸ்டய்ர்,  க்ரேட்டா கார்போ, ஹென்ரி ஃபோண்டா, மார்லின் மன்ரோ, க்ளார்க் கேபிள், எலிஸபெத் டெய்லர், ஜேம்ஸ் காக்னி, ஜூடி கார்லாண்ட், ஸ்பென்சர் ட்ரேசி, மார்லீன் டைட்ரிச், சார்லி சாப்ளின், பெட்டி டேவிஸ் புகழ் ஜோன் க்ராஃபோர்ட், கேரி கூப்பர், பார்பாரா ஸ்டான்விக், க்ரெகரி பெக், க்ளாடெட் கோல்பெர்ட், ஜான் வெய்ன், க்ரேஸ் கெல்லி, லாரன்ஸ் ஒலிவியே, ஜிஞ்சர் ரோஜர்ஸ், ஜீன் கெல்லி, மே வெஸ்ட், ஆர்சன் வெல்ஸ், விவியன் லே, கிர்க் டக்ளஸ், லிலியன் ஜிஷ், ஜேம்ஸ் டீன், ஷிர்லி டெம்பிள், பர்ட் லங்காஸ்டர், ரீடா ஹேவொர்த் (ஷஷாங்க் ரிடெம்ப்ஷன் படத்தில் போஸ்டர் நடிகை), சிட்னி பாய்ட்டியர் என்று ஒரு மிகப்பெரிய அந்நாளைய சூப்பர்ஸ்டார்கள் பட்டியல் உண்டு. நம்மூரில் தியாகராஜ பாகவதர் காலம்தொட்டு ஜெய்சங்கரின் காலம் வரை அங்கே நடித்துக்கொண்டிருந்தவர்கள் இவர்கள். இவர்களின் பல படங்கள் சென்னையில் பிய்த்துக்கொண்டு ஓடியுள்ளன. இந்த பிரமாண்டமான சூப்பர்ஸ்டார்களில், வரிசைப்படி முதல் ஆறு பேரையே இந்தக் கட்டுரையில் பார்த்திருக்கிறோம். அனைவருமே வேறு லெவல் நடிகர்கள். சான்சே இல்லாத பல படங்களில் நடித்திருப்பவர்கள்(கட்டுரை தலைப்பு வந்தாச்சு!). ஹாலிவுட் பிதாமகர்கள் என்று தாராளமாக இவர்களைச் சொல்லலாம்.

டிசம்பர், 2021.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com