சிந்து பைரவி: சூறையாடும் காவியக்காதல்!
Editorial

சிந்து பைரவி: சூறையாடும் காவியக்காதல்!

கே.பாலசந்தரின் வெற்றிபெற்ற திரைப்படம் “சிந்துபைரவி' கதையை மிகச் சுருக்கமாக  சொல்லவேண்டுமானால், சங்கீதம் பற்றி எதுவுமே தெரியாத, ஒரு பெரிய ஆளுமையைத் திருமணம் செய்து கொண்டோமென்ற எந்த பெருமிதமுமில்லாத பைரவி கதாபாத்திரம் (சுலக்‌ஷனா). சங்கீத மேதை ஜே.கே.பி. யாக கணவன் (சிவக்குமார்). மேடையின் எந்த பெருமிதத்தையும் தன் சங்கீதத்தையும் மனைவியிடம் பகிர்ந்து கொள்ள முடியாமல் தவிக்கும் ஜே.கே.பி., ஒரு மேடையில் பார்வையாளராக வரும் சிந்துவை (சுஹாசினி) சந்திக்கிறார்.

ஆரம்பத்தில் சின்ன மோதலில் ஆரம்பிக்கும் அவர்களின் நட்பு பிறகு காதலாக மாறுகிறது. எல்லா ஆண்களும்

சொல்வது போலவே என் அறிவார்ந்த தோழமை என்றும் என் சங்கீதத்தை ரசிக்கிறாள் என்றும் தனக்குத்தானே சமாதானம் சொல்லிக்கொண்டு அவர்கள் வாழ்வில் இணைகிறார்கள். காலம் கடந்தபின் ஜே.கே.பி.யின் வீட்டில் அது எவ்வளவு பெரிய துயரை கொண்டு வந்திருக்கிறது என்று உணர்ந்து சிந்து விலகுகிறாள். பிரிவு துயர் தாங்காத ஜே.கே.பி. பல சீரழிவுகளுக்கு ஆளாகி பாடுவதையே விட்டுவிடுகிறார். பிறகு அதிலிருந்து சிந்துவின் மறைமுக வேண்டுகோளின்படி மீண்டு வந்து பாட ஆரம்பிக்கும் நாளில் பைரவி, தன்னால் கணவனுக்கு எந்த சுகமும் சந்தோஷமும் இல்லை, சிந்து வந்தவுடன் அவளைக் கணவனுக்கு திருமணம் செய்து வைத்துவிடலாம் என்று முடிவு செய்து விடுகிறாள். ஆனால் மீண்டும் வரும் சிந்து, தான் இத்தனை நாள் அஞ்ஞாதவாசம் இருந்ததெல்லாம் இந்த பரிசை உங்களுக்குக் கொடுக்கத்தான் என்று ஜே.கே.பி.க்கும் தனக்கும் பிறந்த குழந்தையை பைரவியிடம் கொடுத்து விட்டு விடைபெற்றுக் கொள்வதாக கதை முடியும்.

 கலையின் மீதுள்ள தீராத மோகத்தால்,  அதையும் தாண்டி அந்த கலைஞர்களையும் நேசிக்க வைக்கும் கதைகளை, நிஜங்களை நாம் நிறைய கேட்டுக்கொண்டும் பார்த்துக்கொண்டும் அனுபவித்துக்கொண்டும் இருக்கிறோம்.

தான் பெற்ற குழந்தையை பைரவியிடம் கொடுத்துவிட்டு நியாயம் கற்பித்துவிட்டதாய் வெளியே போகும் சிந்து கதாபாத்திரம் அத்தோடு ஜே.கே.பி.யின் மனதிலிருந்து துடைத்து எறியப்பட்டு விடுமா என்ன? ஆண்டாண்டுகளாய் வரம்பு மீறும் ஆண்கள் கலையையும் சேர்த்தே அசிங்கப்படுத்துகிறார்கள் என்றே தோன்றுகிறது.  அது எப்படி  ஆண் கலைஞர்களுக்கு மட்டும் பெண் ரசிகைகள் இருக்கிறார்கள் என்பது புரியவில்லை.

அபூர்வமான காதல், பரிசுத்தமான காதல், காமமற்ற காதல், அறிவார்ந்த தோழமை என்றெல்லாம் பிதற்றிக் கொண்டு நாம் பார்க்கும் படைப்புகளும் நிஜ வாழ்க்கையில் பலரும் இறுதியில் ஒரே மாதிரியான காமத்தில்தான் வந்து நிற்கிறார்கள். சமூகத்தை ஏமாற்றச் சொல்லும் அடைமொழிகளாக மட்டுமே இவை மீந்து நிற்கின்றன.

சிறு குருவி கட்டும் கூடு போன்ற அவன் வீட்டை,  வாழ்விணையை, அவர்களின் நிம்மதியை, அந்த குழந்தைகளின் களங்கமற்ற சிரிப்பை சூறையாடி இவர்களின் காவியக் காதல் நின்றெரிகிறது. குழந்தையை வாங்கிக் கொண்டு தன் வாழ்க்கையை பகிர்ந்து தர விரும்பும் பைரவிகளாய் பெண்கள் இருக்கும்வரை இது தொடர்ந்து கொண்டேதான் இருக்கும்.

நான் எப்போதும் பைரவிகளின் பக்கம் என்றாலும் அவர்களின் தியாக வாழ்வில் உடன்படாதவள். கலை, காதல், காமம் எல்லாவற்றையும் விட மனிதம் மேலானது. 

மார்ச், 2023

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com