சினிமாவிற்கு போக எதற்கு நாடகம் படிக்க வேண்டும்?

சினிமாவிற்கு போக எதற்கு நாடகம் படிக்க வேண்டும்?

அரவான், பரமபதம், கற்றுத் தேர்ந்தவர்கள், ஸ்னேக், கொங்கை தீ, கர்ணன், வம்சவதம், சத்யலீலா உள்ளிட்ட பல நாடகங்களை அரங்கேற்றி இருக்கிறது ‘மூன்றாம் அரங்கு'. இதன் நிறுவனர் கே.எஸ்.கருணாபிரசாத். கல்லூரியில் படிக்கும்போது கூத்துப்பட்டறையில் நாடகம் கற்றுக்கொண்டு அதனுடனே பயணம் செய்தவர் இவர்.

‘‘கூத்துப்பட்டறையிலிருந்து 1992ஆம் ஆண்டு வெளியேறிவிட்டேன். குடும்பத்திலிருந்தும் அப்போது கடுமையான நெருக்கடியைத் தந்தார்கள். வேலைக்குச் சேர்ந்துவிடலாம் என்று முடிவெடுத்து நண்பர் ஒருவரின் மூலமாக அம்பத்தூர் அருகில் பட்டரவாக்கத்தில் உள்ள தார்பாய் தயாரிக்கும் தனியார் கம்பெனியில் காசாளராகப் பணிக்குச் சேர்ந்தேன். எனக்குள் ஒரே ஏக்கமும் வருத்தமும் இயலாமையும் ஏற்பட ஆரம்பித்து மிகுந்த மனச்சோர்வுக்கு ஆளாகி, வேலையில் நாட்டமில்லாமல் இருந்தேன்.

ஆனாலும் எந்தச் சூழலிலும் நாடகத்தை கைவிட்டு விடக்கூடாது என்று திட்டவட்டமாக முடிவுசெய்துகொண்டேன். ஆனால், வீட்டிற்குப் பணம் தர வேண்டுமே, பிழைப்புக்கு என்ன செய்வது? என்று யோசித்து, நண்பர் ஆறுமுகமும் நானும்

சேர்ந்து ஸ்கிரீன் பிரிண்டிங் கம்பெனி ஆரம்பிக்கலாம் என்று முடிவெடுத்தோம். முதல் ஆர்டரே ஐநூறு பத்திரிகை அடிப்பதற்கு வந்தது. அந்த நேரத்தில் அது பெரிய ஆர்டர். அதனைத் தொடர்ந்து நண்பர்கள் மூலமாக நிறைய ஆர்டர்கள் வரத்தொடங்கியது. அப்போதுதான் எதிர்காலம் குறித்த ஒரு நம்பிக்கை வந்தது. மறைந்த எழுத்தாளர் ஞாநி, வேலு

சரவணன், முருகபூபதி ஆகியோருடனான தொடர்புகள் உருவாயின.

முருகபூபதி இயக்கிய ‘சரித்திரத்தின் அதீத மியூசியம்' என்ற நாடகம் மிகுந்த வரவேற்பைப்பெற்றது. அந்தநாடகத்தை சென்னை அலையன்ஸ் பிரான்சேஸில் நிகழ்த்துவதற்கு ஏற்பாடு செய்தோம். நாடகத்தை அரங்கத்தில் இல்லாமல் திறந்தவெளியில் நடத்துவது என்று முடிவெடுத்தோம். ஆனால், திறந்த வெளியில் நாடகம் நடத்துவதற்கு லைட்டிங்குக்குப் பணம் இல்லாமல் போனதால் தீப்பந்தங்களை ஏற்றி வைத்து நாடகத்தை நடத்தினோம். அந்த நாடகத்தைப் பார்த்த எல்லோரும் அதிர்ந்து போனார்கள். நாடகத்தைப் பார்த்த ந.முத்துசாமி, தமிழ்ச்செல்வன், கோணங்கி போன்றவர்களுக்கும் நாடகம் வெகுவாக பிடித்துப்போய்விட்டது.

அதனைத் தொடர்ந்து எஸ்.ராமகிருஷ்ணன் தமிழில் மொழிபெயர்த்துத் தந்த தாஸ்தாயெவ்ஸ்கியின் ‘மரணவீட்டின் குறிப்புகள்'என்ற நாடகத்தில் முருகபூபதியோடு இணைந்து நடித்தேன். அதற்கு மேடை அமைப்பு மற்றும் உடையமைப்பு மிகவும் வித்தியாசமான முறையில் வடிவமைத்திருந்தோம். நாடகம் பார்த்த எல்லோருக்கும் நாங்கள் பயன்படுத்திய பொருட்கள் புதுவிதமாக இருந்தது. இப்படியே முருகபூபதியுடனான பயணம் இரண்டாயிரத்து நான்காம் ஆண்டு வரை சென்றுகொண்டிருந்தது.

இதற்கிடையில், எனது ஸ்கிரீன் பிரிண்டிங் வேலை அதிகரிப்பு போன்ற சில காரணங்களால் முருகபூபதியுடன் தொடர்ந்து செயல்பட முடியால் போய்விட்டது. அதனால் சில காலம் நாடகத்தில் ஈடுபடாமல் மன இறுக்கத்தில் இருந்தேன். பிறகுதான் நாம யோசிக்கிற விஷயங்களை பேச வேண்டும் என நினைத்து தனியாக ஒரு நாடகக் குழுவை ஆரம்பிக்க முடிவெடுத்தேன். இந்தியா போன்ற மூன்றாம் உலக நாட்டைச் சார்ந்த ஒருவனின் குரலாக இந்த அரங்கமாக இருக்க வேண்டும் என்று நினைத்து குழுவிற்கு மூன்றாம் உலக அரங்கு என்றே பெயர்வைக்கலாம் என முடிவெடுத்தேன். ஆனால், அதிலிருந்த உலகு என்ற வார்த்தையை எடுத்துவிட்டு ‘மூன்றாம் அரங்கு' என்று பெயர்வைத்துவிட்டேன்.

அந்த சமயத்தில் கூத்துப்பட்டறையின் படுகளம் நாடகத்தைப் பார்க்க நேர்ந்தது. அந்த நாடகத்தில் வரும் அரவான் கதாபாத்திரம் எனக்குள் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது. அப்போது. எஸ்.ராமகிருஷ்ணனின் உபபாண்டவம் படித்திருந்தேன். படுகளம் நாடகத்தை பார்த்த உடனே எஸ்.ராமகிருஷ்ணனிடம் பேசினேன். அரவானை மையமாக வைத்து ஒருநாடகப் பிரதியை உருவாக்கித் தரமுடியுமா என்று அவரிடம் கேட்டேன். அவரும் ஒப்புக்கொண்டார்.

பத்து நாட்களில் கதையை எழுதி முடித்துவிட்டுப் படிக்கக் கொடுத்தார். கே.கே.நகரிலிருந்த அவருடைய வீட்டில் தனியாக அமர்ந்து அந்தக் கதையைப்படித்தேன். படித்தவுடன் அப்படி ஒரு உணர்ச்சி எனக்குள் மேலெழுந்துவிட்டது. வசனங்களை அட்டகாசமாக எழுதியிருந்தார். கடைசிப் பகுதி மட்டும் எனக்கு சவால் நிறைந்ததாக இருந்தது. ஏனெனில், தன்னுடைய வெட்டப்பட்ட தலையுடன் அரவான் நீதிகேட்பதுதான் அந்தக்காட்சி. இதை எப்படி காட்சிப்படுத்தப்போகிறேன் என்றே தெரியாமல் இருந்தது.

இறுதிக் காட்சியில், அரவான் தனது துண்டிக்கப்பட்ட தலையோடு வந்துபேசுவதைக் காண்பிக்க, நமது மரபுக் கலையான தெருக்கூத்தில் வரும் சடங்கைப் பின்பற்றினேன். பனைமரம் தன்னை முழுவதுமாக பயன்பாட்டுக்குக் கொடுத்து மீண்டும் இந்த மண்ணிற்கே உரமாகி உயர்ந்து நிற்பது. அதை அடிப்படையாக வைத்து என்னுடைய இடுப்பிலிருந்து பனை ஓலைகள் படர்ந்து நிற்பது போன்று வடிவமைத்த அதேநேரத்தில் எனது தலை துண்டிக்கப்பட்ட வெற்றுடம்பு மட்டுமே வெளித்தெரிவதுபோல் வடிவமைத்தேன். அந்த காட்சியைப் பார்த்த எல்லோரும் மிரண்டு போனார்கள். மூன்றாம் அரங்கின் முதல் நாடகமான அரவானுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

ஓவியர் சந்துரு சார், லலித்கலா அகடாமியில் ஓவியக்கண்காட்சி ஒன்றை வைத்திருந்தார். அந்த கண்காட்சியில் நகுலன், பிரமிள், சந்துரு, பிரான்சிஸ் கிருபா ஆகியோரது கவிதைகளை வைத்து நாடகம் ஒன்றை அரங்கேற்றியிருந்தேன். அந்தநாடகம் பார்த்துச் சென்ற தமிழச்சி தங்கப்பாண்டியன் அவர்களுடைய முதல் கவிதைத் தொகுப்பைக் கொடுத்து நாடகம் ஒன்றை இயக்குமாறு கேட்டுக்கோண்டார். அதற்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து அவரது பல்வேறு கவிதைகளைத் தொடர்ந்து நாடகங்களாக இயக்கியிருக்கிறேன்.

என்னுடைய எல்லா நாடகங்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தாலும், யாருடைய நலனுக்காக நாடகம் இயக்கினேனோ அவர்களிடமிருந்தே வரவேற்பு கிடைக்க-வில்லை. நாடகத்தில் இன்று சாதிய ஒன்று கூடல் என்பது மறைமுகமாக உருவாகியுள்ளது. நிறைய சிக்கல்கள் நிறைந்த துறையாக நாடகத் துறை உள்ளது. அதிலிருந்து முழுமையாக நான் விலகிநிற்கிறேன். நாடகத்தை நான் சமூக மாற்றத்திற்கான ஆயுதமாகப் பார்க்கிறேன். இத்துடன் போதி வனம் என்கிற பதிப்பகத்தை நடத்துகிறேன். இப்போதெல்லாம் நாடகத்தைப் படித்துவிட்டு வந்த மாணவர்களால் நாடகத்தை தொடர முடியவில்லை. நடிப்புப்பயிற்சி கொடுக்கும் மையங்களை உருவாக்குவது அல்லது சினிமாவிற்கு போவதுமாகத்தான் உள்ளனர். சினிமாவிற்கு போக எதற்கு நாடகம் படிக்கவேண்டும்?'' ஆவேசத்துடன் கேட்கிறார், கருணா பிரசாத்.

அக்டோபர், 2021

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com