சில அரசுசாரா குழுக்களின் அதிகாரம் அதிகமாக உள்ளது!

சில அரசுசாரா குழுக்களின் அதிகாரம் அதிகமாக உள்ளது!

படைப்பும் தடையும்

பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் கருத்துரிமையின் மீது ஆங்கிலேயரின் அடக்குமுறை அதிகமாக இருந்தது. குறிப்பாக மாநில அளவில் பிரசுரங்கள் கொண்டு வருவதற்கு மிகப்பெரிய தடை இருந்தது. ஒரு பக்கம் கடுமையான தணிக்கை, மறுபக்கம் கடுமையான குற்றவியல் சட்டங்கள். இதைத் தவிர சிவில் அவதூறு மற்றும் குற்றவியல் அவதூறு மாதிரியான கடுமையான சட்டங்கள் மூலம் அச்சுறுத்த முடிந்தது. அச்சகங்களையும், வெளியீடுகளையும் கட்டாயப் பதிவு செய்வதற்கான சட்டம் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. பிரஸ் - புக் ரெஜிஸ்ட்ரேஷன்

சட்டத்தின்படி விதிமுறைகளை மீறினால் அச்சகத்தையே மூடவோ அல்லது பறிமுதல் செய்கிற அளவுக்கு கடுமையாக இருந்தது. இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் குற்றவியல் சட்டங்கள் கடுமையாக்கப்பட்டன. ரகசியக்கூட்டங்களைத் தடை செய்வதுடன் இறையாண்மைக்கு எதிராக செயல்படுபவர்களை கைது செய்வதற்கும் சட்டங்கள் இயற்றப்பட்டன. மகாத்மா காந்தியடிகள் இந்த கறுப்புச் சட்டங்களை நீக்கும் வரை அரசாங்கத்துடன் ஒத்துழைக்க மாட்டோம் என்ற முடிவை எடுத்தார். முதல் உலக யுத்தம் தொடங்குவதற்கான அறிகுறிகள் ஏற்பட்டதனால் இந்தியர்களை அமைதிப்படுத்தும் நோக்கத்தில் ரௌலட் என்ற நீதிபதியை நியமித்தனர். அவரோ இச்சட்டங்களில் திருத்தங்கள் தேவை இல்லை என்றும், நாட்டின் சூழ்நிலை கருதி இச்சட்டங்கள் தொடர வேண்டும் என்று அறிக்கை சமர்ப்பித்தார். அதனால் இந்த சட்டங்களை திரும்பப் பெற வேண்டுமென்ற இயக்கம், அச்சட்டங்களையே ரௌலட் சட்டம் என்று குறிப்பிட ஆரம்பித்தது.

அன்றைக்கு சுதந்திரத்திற்காகப் போராடியவர்கள் இந்தியா விடுதலைபெற்றவுடன் இத்தகைய அடக்குமுறைகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைப்போம் என்று வாக்குறுதி அளித்ததனால் பலரும் நாடு விடுதலையான பிறகு சுதந்திரக்காற்றை    சுவாசிக்கலாமென்று நம்பினர்.

1950ல் அரசியலைப்பு சட்டம் உருவானபோது கருத்து மற்றும் பேச்சுச் சுதந்திரம் அடிப்படை உரிமையாக்கப்பட்டது.  ஆனால் அந்த உரிமை கட்டுப்பாடற்ற உரிமையல்ல. அவை அச்சட்டத்தின் பிரிவு 19(2)-ன் கீழ் நியாயமான கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டவை என்று கூறப்பட்டது. இறையாண்மைக்கு குந்தகம் விளைவிப்பது, பொது ஒழுங்கு மற்றும் அந்நிய நாடுகளுடனான உறவைக் குலைப்பது, அவதூறு, நீதிமன்ற அவதூறு மற்றும் குற்றமிழைக்கத் தூண்டுவது ஆகியவற்றிற்கு விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் நியாயமானவை என்று கூறப்பட்டது. அத்தகைய கட்டுப்பாடுகள் உண்மையிலேயே நியாயமானவைதானா என்று நிர்ணயிக்கும் அதிகாரம் நீதிமன்றங்களுக்கு வழங்கப்பட்டன.

முதலில் திரைப்படங்களுக்கான தணிக்கை  சட்டம் கொண்டு வரப்பட்டது. அச்சட்டம் அரசமைப்புக்கு விரோதமானதல்ல என்று தீர்ப்பளிக்கப்பட்டது. ஏனெனில் சாதாரண படிக்காத மக்கள் படத்தைப் பார்த்து தவறான கற்பனையை ஏற்றுகொண்டுவிடுவார்கள். அதனால் எத்தகைய காட்சிகளை மக்கள் பார்க்கலாம் என்று வரையறுக்கும் தணிக்கை முறை அவசியமானது என்று கூறப்பட்டது.  அத்தகைய முன் தணிக்கை முறை அச்சு ஊடகங்களுக்கு கிடையாது. இருப்பினும் நெருக்கடி நிலையின் போது (1975-77) ஊடகங்களுக்கும் கடுமையான முன் தணிக்கை முறை நடைமுறைப்படுத்தப்பட்டது.

 தமிழ்நாட்டில் நாடகங்களை தணிக்கைக்கு உட்படுத்தப்படும் சட்டம் (1954) கொண்டுவரப்பட்டது. நாடகங்களை பொதுவெளியில் நடத்துவதற்கு காவல்துறையிடம் அனுமதிபெற வேண்டும். குறிப்பாக எம்.ஆர் ராதாவின் நாடகங்களைத் தடை செய்வதற்காகத்தான் இச்சட்டம் கொண்டுவரப்பட்டது (ஆனால் 2012ல் மேடைக்கலைஞர் ஞாநி போட்ட வழக்கில் இச்சட்டம் அரசமைப்பு சட்டத்திற்கு முரணானது என்று சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துவிட்டது). 

   ஆக மொத்தம் தொடர்ந்து இத்தகைய தடைகள் கருத்து சுதந்திரத்திற்கு விரோதமாக செயல்பட்டு வந்தன. அது தவிர மிகப்பெரும் ஊடகங்களான அகில இந்திய வானொலி மற்றும் தொலைக்காட்சி அரசாங்கத்தின் நேரடி பொறுப்பிலிருந்தது. அதன் மூலம் எத்தகைய கருத்துக்கள் மக்களிடம் சென்றடைய வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரமும் மத்திய அரசிடம் இருந்தது.

   காகிதத் தட்டுப்பாடு இருக்கும் போது அயல்நாட்டிலிருந்து இறக்குமதி செய்தார்கள். இதனால் காகிதத்தின் இறக்குமதிக்கான வரியை உயர்த்தியபோது செய்தித்தாள்களின் விலை அதிகமானது. அதனால் வாசிப்பவர்கள் எண்ணிக்கையைக் குறைய வைக்கவும் அரசால் முடியும் என்று நிரூபணமானது.    இது தவிர கருத்து உரிமைகளுக்கு முன்தடை விதிக்க  நீதிமன்றங்கள் பயன்பட்டன. ஜெயலலிதாவைப் பற்றி எழுத்தாளர் வாஸந்தி எழுதி வெளியிட்ட  புத்தகத்தை வெளியிடக்கூடாதென்று உயர்நீதிமன்றம் தடைவிதித்தது. அரசியல் தலைவர்களைப் பற்றி எழுத முற்படும்போதெல்லாம் அரசாங்கங்கள் விதிக்கமுடியாத தடையாணைகளை நீதிமன்றங்கள் மூலம் பெற்றனர். அதையும் மீறி பத்திரிகைகள் செய்திகள் வெளியிடும்போது அவர்கள் மீது கிரிமினல் அவதூறு வழக்குகள் போடப்பட்டன. ஜெயலலிதாவின் ஆட்சியில் 500க்கும் மேற்பட்ட வழக்குகள் ஊடகங்களின் மீதும், எதிர்க்கட்சி தலைவர்களின் மீதும் தொடரப்பட்டன. 

இது போதாதென்று பத்திரிகையாளர்கள் மீது நேரடித் தாக்குதல்களும் நடத்தப்பட்டு வருகின்றன. கடந்த வாரம் திருவல்லிக்கேணியில் ஹிந்து பத்திரிகையாளர் புகைப்படம் எடுக்க கூடாது என்று தாக்கப்பட்டார்.  அரசு தவிர, சட்டத்தைத் தங்கள் கையில் எடுத்துக் கொண்டு தனிப்பட்ட குழுக்களும் ஊடகங்கள் மீது தாக்குதலில் ஈடுபட்டு வருகிறார்கள்.   எத்தகைய செய்திகளை வெளியிடலாம் என்பதை அரசியல் செல்வாக்கு படைத்தவர்களும், வலிமையான தொழில் நிறுவனங்களும் முடிவு செய்கிறார்கள். பொருளாதார வரவின் காரணமாக விளம்பரங்களை அதிகமாகக் கொடுப்பவர்களைப் பற்றி விமர்சனங்கள் எழுதாததோடு அவர்களைப் பாராட்டும் செய்திகளை தாராளமாக வெளியிடுகிறார்கள். ஊடகங்களையும், தொலைக்காட்சிகளையும் சொந்தமாக்கிக் கொள்கிறார்கள். எல்லா அரசியல் கட்சிகளுக்கும், தொழில் நிறுவனங்களுக்கும் சொந்தமான தொலைக்காட்சிகள் இருக்கின்றன. மாற்றுக்கருத்துகளை ஒழுங்கு செய்வது அவர்களே.

 எதிராக எழுதுகிறார்கள் என்று எழுத்தாளர்களைத் தாக்குகின்றனர் அல்லது அவர்கள் மீது வழக்குகளைத் தொடுத்து மிரட்டுகின்றனர். குஷ்பு பேட்டியில் சொன்ன கருத்திற்காக அவர் மீது பல கிரிமினல் வழக்குகள் போடப்படடன. தகவல் தொழில் நுட்ப சட்டம் 66 (அ) பிரிவில் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்வோர்கள் மீதும் வழக்குகள் போடப்பட்டு வந்தன. உச்சநீதிமன்றம் அச்சட்டப் பிரிவை ரத்து செய்த பின்னரும் அதன் இதர பிரிவுகளில் போடப்படும் வழக்குகள் தொடர்ந்துதான் வருகின்றன.  தகவல் அறியும் சட்டம் மூலம் ஒளிவுமறைவான செயல்பாடுகளை உறுதி செய்வோம் என்று கூறினாலும் பழைய அரசு அலுவல் ரகசிய சட்டம் இன்னும் ரத்து செய்யப்படவில்லை. தகவல் தர மறுக்கும் அதிகாரிகளுக்கு எதிராக நீதிமன்றங்களை நாடித்தான் தகவல்களைப் பெறவேண்டுமென்ற நிலை உள்ளது.  எத்தனை  நீதிபதிகள் தங்களது சொத்துக்கணக்கை தாக்கல் செய்திருக்கிறார்கள் என்று கேட்டபோது அத்தகைய தகவல்களை தரமுடியாதென்று உச்சநீதிமன்றமே தனது நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து தடை உத்தரவைப் பெற்றுக்கொண்ட செயலை உலகத்தில் எங்கேயுமே காணமுடியாது.

அரசு மட்டுமல்ல, அரசு சாரா குழுக்களுடைய அதிகாரங்களும் பெருகி வருகின்றன. அதைத் தடுக்க அரசு எந்த நடவடிக்கையையும் எடுக்க முன்வருவதில்லை. இது தான் இன்றைய நிலை.

( நீதிபதி கே சந்துரு நமது செய்தியாளரிடம் கூறியதில் இருந்து)

ஏப்ரல், 2017.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com