சுந்தரமும் அன்பும்!

சுந்தரமும் அன்பும்!

பிற இல்லங்களில் இருப்பதுபோன்ற சராசரி அப்பா மகன் உறவு எங்கள் இல்லத்தில் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. அப்பா ‘தேசாந்திரி' என்பதால் சின்னவயதில் அவர் பெரும்பாலும் வெளியூர்ப் பயணங்களில் இருப்பார்.

எனக்கு தந்தையைப் பிரிந்திருப்பதன் கனம் அவ்வளவாகத் தெரியாது. அவர் வீட்டில் இருக்கும்போதுகூட கிரிக்கெட், ஷட்டில்காக் என விளையாடிக்கொண்டே இருப்பேன்.

சின்னவயதில் நாங்கள் குடியிருந்த வீட்டில் ஒரு கயிற்றுக்கட்டில் இருக்கும். அதில் படுத்துக்கொண்டு இரவெல்லாம் அவர் கதை சொல்லிக்கொண்டே இருப்பார். அந்த நினைவுதான் அப்பா என்றதும் பளிச்சென்று மனதில் நிற்கிறது.

அம்மாவை விட எனக்குப் பழகுவதற்கும் எதையும் சொல்வதற்கும் முதல் மனிதராக வீட்டில் இருப்பவர் அவரே. ஒன்றாக அமர்ந்து உலக சினிமாக்களைப் பார்ப்போம். ஆழமாக விவாதிப்போம். அவருடைய அணுகுமுறையும் என்னுடைய அணுகுமுறையும் வெவ்வேறு. அவர் எந்த படைப்பிலும் ஆழகான உள்ளடக்கம் இருக்கிறதா என்று பார்ப்பார். நான் அது எவ்விதம் படைக்கப்பட்டிருக்கிறது என்றுதான் பார்ப்பேன். நான் இயங்க விரும்பிய திரைத் துறையில் எனக்கு முதல் ஆசானாக, வழிகாட்டியாக அவரே அமைந்துள்ளது பெரிய வரம்.

எல்லோரும் சொல்வார்கள் உங்கள் அப்பா பேசினால் அது கண்ணுக்குள் காட்சிகளாக ஓடும் என்று அப்பாவின் கதைகளைப் படிப்பதை விட அவர் சொல்லிக் கேட்பதில் சுவாரசியம் அதிகம். அவர் சொல்ல ஆரம்பித்த சில நிமிடங்களில் என் கண்முன்னால் காட்சிகள் விரிய ஆரம்பிக்கும். அவர் எழுதி பாதியில் விட்ட கதைகள், இன்னும் எழுத்தாக  மாறாத கதைகள் என நிறைய அவர் சொல்லிக்கொண்டே இருக்கிறார். அவற்றைக் கேட்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்திருக்கிறது.

எனது ப்ளஸ் 1, பிளஸ் 2 ஆகிய இரு ஆண்டுகள் படிப்புக்காக ராஜபாளையத்தில் சித்தி வீட்டில் இருந்தேன். அப்போதுதான் அப்பா அருகில் இல்லாததன் சுமையை உணர்ந்தேன். வாய்ப்புக்கிடைக்கும்போது அல்லது வாய்ப்புகளை உருவாக்கிக்கொண்டு சென்னைக்கு ஓடிவந்துவிடுவதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தேன்.

என்னுடைய வகுப்பு மதிப்பெண் அறிக்கைகளை அவர் கவனித்ததே இல்லை. அப்படியே வாங்கி கையெழுத்திட்டு கொடுத்துவிடுவார். இந்த பள்ளிக்கல்வி என்பது அறிவுபுகட்டமட்டுமே. வேறொன்றும் இல்லை; மதிப்பெண்கள் பின்னால் அலையவேண்டியது இல்லை. வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்றவர்களை குறைந்த அல்லது நடுத்தர மதிப்பெண் எடுப்பவர்கள் பெருவெற்றி பெற்றிருக்கிறார்கள் என்று சொல்வார். நான் அவருடனே இருந்து கதைகள் சினிமா என வளர்ந்ததால் அது சார்ந்த படிப்பையே தெரிவு செய்தேன்.

அதிலேயே இயங்கிக்கொண்டிருக்கிறேன். எதை வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் கடுமையாக உழைக்கவேண்டும் என்பார்.

அவரிடம் இருந்து கற்றுக்கொண்டது அவருடைய திட்டமிடலும் ஒழுங்கும்தான். அன்றைன்றைக்கு என்னென்ன செய்யவேண்டும் எழுதவேண்டுமென திட்டமிட்டு செயல்படுவார். அதையே நானும் பின்பற்ற முயற்சித்து வந்திருக்கிறேன்.

கூடவே இருப்பதால் தந்தையின் எழுத்துலக உயரம் அவ்வளவாகப் புரியாமல் இருந்திருக்கலாம். ஆனால் அவருடைய வாசகர்கள் என்னை யார் என்று கேட்டு அறிந்தவுடன் அடையும் நெகிழ்ச்சி எனக்குப் பெருமையை அளித்திருக்கிறது. மதுரையில் புத்தகக் கண்காட்சி போட்டிருந்தோம். தேனியைச் சேர்ந்த ஒருவர் வந்தார். அப்பாவைத்தேடினார். அவர் எங்கோ போயிருந்த நிலையில் என்னை அறிமுகம் செய்துகொண்டேன். என் கைகளை இறுகக் பற்றிய நிலையில் கண்கள் கலங்க நின்றுகொண்டே இருந்தார். சிறுவயதில் வீட்டை விட்டு எங்கோ சென்றவர் அவர். அப்பாவின் எழுத்துகளால் பாதிக்கப்பட்டு, இப்போது முறையான வாழ்வுக்குத் திரும்பி இருப்பதாகச் சொன்னார்.

இன்னொரு பெண் வாசகர் தன் கணவருடன் வந்திருந்தார். அவர் அப்பாவின் மிக தீவிர வாசகி. என்னைப் பார்த்து நெகிழ்ச்சியுடன் பேசிக்கொண்டிருந்தபோது அப்பாவின் தலை தூரத்தில் தென்பட்டதும் அவர் கைகள் நடுங்க ஆரம்பித்து உணர்ச்சிப்பெருக்கில் கண்கள் குளமாகின. அவருக்கு தண்ணீர் கொடுத்தேன். அவரால் அதை வாங்க முடியாத அளவுக்கு அவர் கைகள் நடுங்கின. எந்த அளவுக்கு அவர் அப்பாவின் எழுத்துகளால் பாதிக்கப்பட்டிருப்பார் என உணர்ந்துகொண்டேன்.

அப்பா எப்போதும் என்னை கோபத்தில் அடித்ததே கிடையாது. குரல் மட்டும் மாறுபடும். அத்துடன் தன் ஆழமான பாச உணர்ச்சிகளை அவர் காட்டவே மாட்டார். நெகிழ்வான தருணங்களில் எங்களை அது பாதிக்கும் என்பதற்காக அவற்றை மறைத்துக்கொள்வார் என்றே கருதுகிறேன். அவர் எனக்கு அளித்திருப்பது முழுமையான சுதந்தரமும் அன்புமான இளமைக்காலம்!

எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனின் மகன் ஹரிபிரசாத் ஊடகவியலில் செயல்படுவர். தேசாந்திரி பதிப்பக நிர்வாகி.

ஜனவரி, 2021

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com