செல்போன் இல்லாத உலகு:
அணைத்து வையுங்கள்

செல்போன் இல்லாத உலகு: அணைத்து வையுங்கள்

சமீபத்தில் வெளியான 83 என்ற திரைப்படத்தில் 1983-ஆம் ஆண்டு நடந்த உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியைப் பார்க்க லண்டனுக்குப் போய் இறங்குகிறார் கபில்தேவின் மனைவி ரோமி. கபில்தேவ் ஊரில் என்ன விசேஷம் என்று கேட்க, ‘எல்லாம் லேட்டாதான் நடக்குது. பதினெட்டு வருஷமா ஒருத்தர் தொலைபேசி தொடர்புக்கு விண்ணப்பம் போட்டுட்டு காத்திட்டுருக்காருன்னு வரும்போது பேப்பர்ல படிச்சேன்!' என்று சொல்வார்.

ஒரு தொலைபேசி இணைப்புக்காக ஆண்டுக்கணக்கில் காத்திருந்தகாலம் போய், இன்று எல்லோரும் கையில் செல்போன் வைத்துள்ளோம். ட்ரங்க்கால்கள் புக் செய்வது, அவசர செய்தி சொல்ல, ஊரில் இருக்கும் ஒரே வீட்டுக்கு போன் செய்து தகவலைப் பரிமாறுவது, இந்த நேரம் அழைப்பேன்,வந்து காத்திருக்கவும் என்று முன்கூட்டியே கடிதம் போட்டு போன் செய்வது, டெலிபோன் பூத்துகளில் இரவு ஒன்பது மணிக்குமேல் அரைக்கட்டணம் என்பதால் காத்திருப்பது, ஆசையாக காதலியுடன் பேசுகையில் எவனாவது ஒட்டுக்கேட்பது... எல்லாம் இரண்டாயிரங்களின் தொடக்கத்தில் செல்போன் வருகையில் பழங்கதை ஆனது.

‘டேய்... உனக்குத் தெரியுமா, ஒரு காலத்தில் நம் செல்போனுக்கு இன் கமிங் வந்தாலும் பணம் கட்டணும்' என்று  சொன்னால் சிறுபிள்ளைகள் நம்ப மறுக்கிறார்கள்.

செல்போனும் அதுசார்ந்த தொழில்நுட்பமும் வேகமாக வளர்ந்த அளவுக்கு வேறெதுவும் இவ்வளவு குறுகிய காலத்தில் அதுவும் இவ்வளவு வேகத்தில் பரவி இருக்குமா என்று தெரியவில்லை!

பட்டன் போன் போய் ஸ்மார்ட்போன் வந்து, வீடுகளில் எல்லாரும் ஆளுக்கொரு ஸ்மார்ட்போன் என்று ஆகி, குனிந்த தலை நிமிராமல் யூட்யூப் அல்லது வாட்ஸப் அல்லது பிற செயலில்களில் உலவிக்கொண்டுள்ளனர்.

செல்போன் வந்தபிறகு முதலில் எஸ்.எம்.எஸ்கள் மோசடி செய்துகொண்டிருந்தார்கள்; பிறகு போன் செய்து பின் நம்பர் கேட்டு அக்கவுண்டுகளில் பணத்தை சுருட்டினார்கள். வாட்ஸப் போன்ற செயலிகளில் வரும் செய்தி எல்லாம் உண்மைதான் என நம்புவதால் சும்மாவே ஏமாறவிரும்பும் தமிழன், தொடர்ந்து ஏமாந்துகொண்டே இருக்கிறான்.

இரவு முழுக்க போனில் நேரம் செலவழித்து புண்ணாய்ப் போய்கொண்டுள்ளன பல குடும்பங்கள்.

முதல்முதலாக டெல்லிக்குப் போனபோது ரயில்நிலையத்துக்கு வந்து அழைத்துப் போகுமாறு நண்பருக்குக் கடிதம் போட்டுவிட்டுப் போயிருந்தேன். அது கிடைத்ததா கிடைக்கவில்லையா என்ற அச்சம் மேலிட்டது. புதுடெல்லியில் விடியற்காலையில் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் நுழைந்தது. அந்த குளிர்வேளையில் நண்பர் வராவிட்டால் எங்கே போவது என்ற எண்ணம் கடுங்குளிரைவிட மிக அதிகமாக வாட்டியது. ரயிலில் இருந்து இறங்கியவுடன் நண்பரைக் காணவில்லை. எல்லோரும் போன பிறகு படிகளை நிர்க்கதியாக நோக்கியபோது நண்பர் இறங்கி வந்துகொண்டிருந்தார். அந்த கணத்தில் அடைந்த மகிழ்வு இன்னும் நினைவில் உள்ளது.

ஆனால் செல்போன் அறிமுகமாகி இருக்கும் இந்த காலத்தில் ரயில்நிலையங்களில் நம்மைக் கண்டுபிடித்துக் கூட்டிச் செல்வதற்குள் பத்துமுறை எங்கே நிற்கிறாய், வந்துட்டியா, ஏன் இவ்வளவு லேட்டு என தொடர்ச்சியாக பத்துமுறை நேரடி வர்ணனை செய்தால்தான் ஆளையே பிடிக்கமுடிகிறது.

செல்போன்கள் மூலம் தகவல்தொடர்பு எளிதானது. ஆனால் இவ்வளவு வேகமான தொடர்பை சமாளிக்க நாம் தகவமைத்துக்கொண்டோமா என்பது மிகப்பெரிய கேள்வி.

விடுதிகளில் ஞாயிற்றுக்கிழமையானால் இருக்கும் ஒரே போன் அருகே மாணவர்கள் காத்திருப்போம். வீட்டில் இருந்து வரும் சில நிமிட அழைப்புகளில் ததும்பி வழிந்த அன்பும் ஆதுரமும் தற்போதைய கைபேசிகளில், சதா அணுகிவிடக்கூடிய சாத்தியத்தால் காணாமல் போய்விட்டதா?

பெரும்பாலும் நண்பர் ஒருவர் நான் அழைக்கும்போதெல்லாம் பாத்ரூமிலேயே இருப்பார். அங்கிருந்துதான் பேசுவார். ‘என்ன பாசு.. எப்பபாத்தாலும் இங்கியே இருக்கீங்க..' என்றால், ‘நான் உள்ளே போனபிறகுதான் கூப்பிடறீங்க.. எந்த காலையும் மிஸ்பண்ணக்கூடாதுங்கறதால நான் கைலேயே போனை புடிச்சிகிட்டே இருப்பேன்,' என்று விளக்கமளித்தார். அப்படி என்ன ராணுவகேந்திர முக்கியத்துவம் வாய்ந்த அழைப்பு என்னுடையது நீங்க மீஸ்பண்ணாமல் இருப்பதற்கு என்று நானும் கேட்கவில்லை. அவரும் சொல்லவில்லை என்பது வேறு விசயம்.

எப்பப்பாத்தாலும் ஏன் போனையே பாத்திட்டுருக்கீங்க என்று மனைவி சண்டை பிடிப்பதாக சொல்லி வருத்தப்பட்டுக்கொண்டிருந்த அண்ணன் ஒருவரை எனக்குத் தெரியும். அவர் கொஞ்சநாளாக இப்படிச் சொல்வதை நிறுத்தி இருந்தார். என்னண்ணே ஆச்சு என்றேன். மனைவிக்கும் ஒரு ஸ்மார்ட்போன் வாங்கிக் கொடுத்துட்டேன் தம்பி! வீட்டுல சத்தமே இல்லை என்றார் சீரியஸாக.

தூரத்தில் இருக்கும் உறவுகள் முகம்பார்த்துப் பேசிக்கொள்ள, அமெரிக்காவில் இருக்கும் பேரக்குழந்தைகளுக்கு திருஷ்டி கழிக்க, அன்பைப்பரிமாற என எவ்வளவோ பெரிய வரப்பிரசாதம்தான் செல்போன்! ஆனால் இதை தங்கள் வக்கிர உணர்ச்சிகளின் வடிகாலாக சதா பயன்படுத்திக்கொண்டிருக்கும் மனிதர்களின் கும்பலும் பெருத்துத்தான் போயிருக்கிறது!

சமீபத்திய புயல்களும் இயற்கைப் பேரழிவுகளும் வந்து மின்சாரத்தை வாரக்கணக்கில் முறித்துப் போடுகின்ற நிலையில் ஸ்மார்ட்போன்கள் வெறும் உயிரற்ற பொருட்கள் ஆகிறபோதுதான் பக்கத்துவீட்டுக்காரனும் லேண்ட்லைன்களும் நினைவுக்கு வருகின்றன.

சென்னையை உலுக்கிப்போட்ட ஒரு புயலின்போதுதான் செல்போனை கைவிட்டு அடுக்குமாடி குடியிருப்புவாசிகள் தங்கள் அடுத்துவீட்டுக்காரனை அன்புடன் பார்த்தார்கள். ஆண்டுக்கணக்கில் பேசாமல் முகத்தைத்திருப்பிக் கொண்டிருந்தவர்கள், நேருக்கு நேர் பார்த்துக்கொண்டார்கள். நகரங்களில் இருக்கும் நிலைதான் இப்படி என்றில்லை. கிராமப்புறங்களிலும் சிறுநகரங்களிலும்கூட மெல்ல விஷயம் இப்படித்தான் மாறிக்கொண்டிருக்கிறது. செல்போன் மூலம் மணிக்கணக்கில் கடலைபோடுகிறவர்கள் நேரில் பார்க்கும்போது பேச்சைத் தவிர்க்கிறார்கள். சமூகம், போனில் தான் இனி தொடர்பு கொள்ளும் போலிருக்கிறது!

செல்போன் இல்லாதபோது மிக மகிழ்ச்சியாக இருந்ததாகச் சொல்கிறார் விற்பனை பிரதிநிதி நண்பர் ஒருவர். ‘முன்பெல்லாம் வெளியூருக்கு வேலைக்குப் போவதாகச் சொல்லிவிட்டுக் கிளம்பினால் திரும்பிவந்து ரிப்போர்ட் கொடுக்கும்வரை தலைமையகம் எதுவும் கேட்காது! ஆனால் இப்போது போனில் ஒரு செயலியைப் போட்டுவைத்துள்ள ஆபீஸ், என் எல்லா நடவடிக்கைகளையும் நொடிக்குநொடி கண்காணித்துக்கொண்டிருக்கிறது! அதே வேலைதான். அதே விற்பனைதான். ஆனால் கண்காணிப்பையும் கட்டுப்பாட்டையும் இந்த செல்போன் வந்து எகிற வைத்துவிட்டது!' என பகிர்ந்துகொள்கிறார்.

இன்னொரு நண்பர், ‘முன்பெல்லாம் மனைவி ஊரில் இல்லை என்றால் வெளியே நண்பர்களைப் பார்த்துவிட்டு நள்ளிரவில் வீட்டுக்குத் திரும்புவேன். இப்போதெல்லாம் மணிக்கொருமுறை போன் செய்து என்னைக் கண்காணிக்கிறது வீட்டு மேலிடம். மாலை ஏழுமணிக்கு மேல் வாய் குளறாமல் பேசுவது எவ்வளவு கஷ்டம் தெரியுமா? அத்துடன் போன இடத்தில் நாலு பேரிடம் பேசுவதற்குப் பதிலாக இதற்குப் பதில் சொல்வதே ரோதனையாக இருக்கிறது‘ என்கிறார்.

‘இதற்குத் தாங்க.. எனக்கு எப்போ தேவையோ அப்ப மட்டும் போனை ஆன் செய்து அழைத்துப் பேசுவேன், மற்ற நேரம் முழுக்க ஆப் பண்ணியே வெச்சிருப்பேன்,' என்கிறார் இன்னொரு அண்ணன். இந்த அண்ணனைப் போல் நாமும் வாழமுடிந்துவிட்டால்... நன்றாகத்தான் இருக்கும்போல!

ஏப்ரல், 2022

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com