டிஜிட்டல் உலகம்:
களவாடிய பொழுதுகள்

டிஜிட்டல் உலகம்: களவாடிய பொழுதுகள்

பெரும்பான்மையான மனிதர்கள், முன் எப்போதும் இருந்ததைவிட இப்போது செல்போன், சமூக வலைதளங்கள், கேம்ஸ், அடல்ட் வலைதளங்கள் மற்றும் பல டிஜிட்டல் உலகின் பரந்து விரிந்த கைகளுக்குள் சிக்கி, தன் நிலை மறந்து காலம் கழிக்கிறார்கள்.

‘மக்கள் சராசரியாக ஒரு நாளைக்கு 16 மணி நேரத்தில் 150 முறை தங்களது செல்போனை எடுத்து பார்க்கிறார்கள், 6.5 நிமிடத்திற்கு ஒருமுறை தனது செல்போனை பார்க்கிறார்கள்‘ - மொபைல் டெக்னாலஜி கன்சல்டன்ட் டோமி அஹோமென் ஆய்வில் கிடைத்த தகவல் இது (பிப்ரவரி 2013).

 ஜனவரி 2022 இல் நடந்த ஆய்வின்படி அமெரிக்கர்கள் நாளொன்றுக்கு 344 தடவை தங்களது செல்போனை பார்க்கிறார்கள். 71% பேர் காலை கண்விழித்ததும் முதலில் பார்ப்பது செல்போனைத் தான். தன் வீடு தீ பிடித்தாலோ அல்லது வேறு இயற்கை அழிவிற்கு ஆளானாலோ முதலில் தன் செல்போனைத்தான் எடுத்துக் கொள்வேன் என்பது 53% அமெரிக்கர்களின் கருத்து. சராசரியாக அமெரிக்கர்கள் ஒரு நாளைக்கு இரண்டு மணி 54 நிமிடங்கள் நேரத்தை செல்போனில் செலவழிக்கிறார்கள். அதாவது வருடத்திற்கு நாற்பத்து நான்கு நாட்கள்.

48 சதவீத மக்கள் தங்களது செல்போன் பேட்டரி சார்ஜ் 20 சதவீதத்திற்கு கீழே போகும் போது ஒருவித பதட்டத்திற்கு ஆளாகிறார்கள், 35% பேர் வாகனத்தை ஓட்டிக் கொண்டு செல்லும் போது செல்போனை உபயோகிக்கிறார்கள்; விபத்திற்கு இது ஒரு முக்கியக் காரணமாகிறது.

அமெரிக்காவில் நிகழ்ந்த ஆய்வின் முடிவுகள் பெரும்பான்மையான நாடுகளுக்கு- இந்தியா உட்பட பொருந்திப் போகிறது.

‘சமூக ஊடக நிறுவன உரிமையாளர்கள் தாங்கள் சிறப்பானதொரு உலகத்தை கட்டமைத்துக் கொண்டிருப்பதாக நடிப்பதை நிறுத்த வேண்டும். தாங்களும் டி ஷர்ட் அணிந்த புகையிலை விவசாயிகள்தான். குழந்தைகளை அடிமையாக்கும் ஒரு பொருளை விற்றுக் கொண்டிருக்கிறோம் என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும். உண்மை இதுவே. தனக்கு விழும் லைக்குகளை செக் பண்ணிக் கொண்டிருப்பது புகைபிடிக்கும் பழக்கத்திற்கு சமமாகும்,' இது 12 மே 2017 அன்று ஹெச்பிஓ தொலைக்காட்சியில் அமெரிக்க தொலைக்காட்சி பிரபலமான பில் மஹர் கூறியது.

 பெங்களூரைச் சேர்ந்த சுனிதா, தனது செல்போனை பார்த்த கணவனின் விரல்களை சமையலறை கத்தியால் வெட்டிய சம்பவம் ஓர் உதாரணம். குடும்ப உறுப்பினர்களின் செல்போன் பழக்கத்தால் ஏற்படும் வித விதமான பிரச்சினைகள் பல்வேறு சிந்தனைகளை/ சிக்கல்களை உருவாக்கி கொண்டிருக்கிறது. பல பெரும் நிறுவனங்கள் வேலை இடத்தில் ஸ்மார்ட்போன்களை தடைசெய்து அடிப்படையான பட்டன் போன்களை மட்டுமே அனுமதிக்கின்றன.

 கால் நியூபோர்ட் 2019 இல் எழுதிய ‘டிஜிட்டல் மினிமலிஸம்' என்ற புத்தகம் குறைவான டெக்னாலஜியுடன் சிறப்பாக வாழ்வது எப்படி என்பதை விரிவாகப் பேசுகிறது. அப்புத்தகம் வெளியானவுடன் படித்த என்னால் அதிலுள்ள பல விஷயங்களுடன் உடன்பட முடியவில்லை. ஆனால் கடந்த மூன்று வருடங்களில் இந்தியாவில் அதீத செல்போன் பயன்பாட்டினால் ஏற்படும் பாதிப்புகளை கண்கூடாக பார்க்கும் போது விரிவாகப் பேசுவது அவசியம் என்று தோன்றியதால் இந்த சிறப்பிதழ்.

‘மனிதர்களின் பழக்க வழக்கங்களில் ஏற்படும் அடிமைத்தனமானது போதைப்பொருளுக்கு ஏற்படும் அடிமைத்தனத்தை ஒத்திருக்கிறது என்பதற்கு ஆதாரங்கள் கிடைத்துக் கொண்டிருக்கின்றன. சூதாட்டத்திற்கும் இணையத்துக்கும் அடிமையாவது இதற்கு நன்கு அறியப்பட்ட உதாரணங்களாகும். இது 2010 இல் அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் ட்ரக் அண்ட் ஆல்கஹால் அபியூஸ் ஆய்விதழ் பதிவு செய்யும் தகவல்.

 சமூக ஊடகங்கள், தங்களைப் பயன்படுத்துபவர்களை எப்படி ஆள நினைக்கின்றன?

‘உங்கள் நேரத்தையும் கவனத்தையும் எந்த அளவுக்கு நாம் அதிகமாக ஈர்க்கமுடியும்; பயன்படுத்திக்கொள்ள முடியும்? என்பதை அடிப்படையாகக் கொண்டே பேஸ்புக் முதலான சமூக ஊடகங்கள் கட்டமைக்கப்படுகின்றன. அதாவது அவ்வப்போது உங்கள் போட்டோவுக்கு சில லைக்குகள், உங்கள் பதிவுக்கு சில கருத்துகள் என விழவைத்து, உங்களை கொஞ்சம் சுகமாக உணரவைப்போம் என்று இதற்கு அர்த்தம்,' என்று 2017இல் ஃபேஸ்புக் நிறுவனத்தின் முதல் தலைவராக இருந்த சீன் பார்க்கர் ஒரு நிகழ்வில் கூறியதிலிருந்து இதை அறிந்து கொள்ளலாம்.

வாட்ஸ் அப்பில் வந்த ஒரு மெசேஜை பார்க்க  செல்போனை எடுக்கும் ஒருவர் அப்படியே வேறு மெசேஜ் களையும் பார்க்க, தொடர்ந்து மற்றவர்களின் ஸ்டேட்டஸ்களையும் பார்க்கிறார். தனது ஸ்டேட்டஸை யார் யார் பார்த்திருக்கிறார்கள் என்று பார்க்கிறார். சில குறிப்பிட்ட மெசேஜ்களுக்கு எதிர்வினை ஆற்றுவது பார்வர்ட் செய்வது, அப்படியே மற்றும் ஒரு சமூக ஊடகத்தை எட்டிப் பார்த்துவிட்டு இன்ஸ்டாகிராம் சென்று ட்விட்டர் வழியாக ஒரு ரவுண்ட் முடித்து செல்போனை கீழே வைக்கும் போது அரை மணிநேரம் போனதே பலருக்கு தெரிவதில்லை. வாட்ஸ் அப் ஸ்டேட்டஸுக்காக தினமும் ஒரு மணி நேரம் வரை செலவு செய்யும் பலர் எனக்கு நண்பர்கள்.

 எவ்வளவு நேரம் செல்போனிலோ சமூக ஊடகங்களிலோ செலவழிக்க வேண்டும் என்று யாரும் யாரிடமும் சொல்ல முடியாதுதான். ஆனால் அதில் செலவிடும் நேரம், அவரது வேலையையோ, மன நலத்தையோ, சமூக உறவையோ பாதிக்காத வண்ணம் பார்த்துக் கொள்வது அவரது கடமை.

செல்போன் தூரத்திலிருந்து முகம் தெரியாத யாரையோ அருகில் அழைத்து வருகையில் அருகிலிருக்கும் பலரிடமிருந்து விலகிப் போகச் செய்கிறது. போனை கீழே வையுங்கள். உங்களுக்கு முன்னால் அமர்ந்திருப்பவரைவிட முக்கியமானவர்கள் யாரும் இல்லை.

‘எந்த தொழில்நுட்பமும் உங்கள் கட்டுப்பாட்டிலிருப்பதே சரி. ஆனால் அந்தத் தொழில்நுட்பத்தின் கட்டுப்பாட்டில் நீங்கள் இருப்பது சரியானது அல்ல' என்ற எழுத்தாளர் அபிஜித் நஸ்காரின் வார்த்தைகளின் அர்த்தத்தை யோசித்துப்பாருங்கள்!

ஏப்ரல், 2022

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com