தட்டிக்கொடுத்து வளர்த்த பள்ளி!

தட்டிக்கொடுத்து வளர்த்த பள்ளி!

ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி அது.  மிக அருகில்தான் என் வீடு .ஆனாலும் அம்மாவை விட்டு விலகி பள்ளிக்கு வர விருப்பமே இல்லை.

அந்த பிஞ்சு வயதில் பிரிவு என்னை ஏங்க வைத்தது. தரையில் உட்கார்ந்து இருக்கும் நான் என்னுடைய புத்தகப் பையை வேண்டும் என்றே கதவுக்கு வெளியே வீசி எறிவேன். அதை எடுத்துவர சொல்லி ஆசிரியர் சொல்லும்போது பையை எடுத்துக் கொண்டு அப்படியே வீட்டுக்கு ஓட்டம் பிடித்து விடுவேன்.  பல நாட்கள் இப்படி செய்த பிறகு அப்பா அம்மாவை அழைத்து வரச் சொன்னார்கள்.அவர்கள் சமாதானப்படுத்திய பிறகு நான் ஒழுங்காக பள்ளிக்கு செல்ல ஆரம்பித்தது ஞாபகம் இருக்கிறது. தற்போதைய நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வட்டத்தில் வடுகம் என்பதுதான் எனது கிராமம்.

அ ஆ இ ஈ என்று கோரசாக கத்திக் கொண்டு படிப்பதில் ஆர்வம் வந்தது. அப்போது எங்கள் ஊரில் வேல்முருகன் என்ற திரையரங்கம் இருந்தது. அதில் எங்கள் பள்ளி ஆசிரியர்களும் பங்குதாரர்களாக இருந்தார்கள். எம்.ஜி.ஆர் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும்.  நாங்களாகவே எம்.ஜி.ஆருக்கும் சிவாஜிக்கும் சண்டை இருப்பது போல் பாவித்துக்கொண்டு சிவாஜி படம் ஓடினால் போஸ்டரைக் கிழிப்பதுண்டு. அப்படி ஒரு நாள் கிழித்துக்கொண்டிருக்கும் பொழுது கையும் போஸ்டருமாக பிடிக்கப்பட்டேன்.

ஆசிரியர்கள் முன்னால் நிறுத்தப்பட்டேன். இதை விசாரித்த நடேசன் ஆசிரியர்  என்னை அடிக்க வில்லை. அன்பாக சொன்னார். ‘உனக்குப் பிடித்தவர்களை நீ பெருமைப்படுத்து. உனக்குப் பிடிக்காதவர்களை வேறு சிலருக்கு பிடிக்கும் அல்லவா.. இனிமேல் இதுபோல் செய்யாதே' என்று சொன்னார்.

இளம் வயதில் அவர் சொன்ன வார்த்தைகள் நெஞ்சில் பதிந்தது. நாம் விரும்பாவிட்டாலும் யாரையும் வெறுக்கக் கூடாது என்று உறுதி எடுத்துக் கொண்டேன்.

மூன்றாம் வகுப்பு படிக்கும் பொழுது கணக்கு ஆசிரியர் கேட்டார். ‘கணக்கிலேயே உனக்குப் பிடித்தது எது' என்று.

நான் ‘ஒன்றாம் மற்றும் பத்தாம் வாய்ப்பாடுகள்' என்று சொன்னேன். எனது குறும்பு மொழிகள் அவருக்குப் பிடித்துப் போய் செல்லப் பிள்ளை ஆனேன்.

எங்கள் தோட்டத்திற்கு அருகில் இருக்கும் ராஜம்மாள் டீச்சரும் அன்பாக இருப்பார்கள். அவர்களுடைய சைக்கிளை எடுத்துக்கொண்டு சுற்றி வருவதில் அலாதி பெருமை.

நான் நிறைய குறும்புகள் செய்த போதும் அதை குறையாக சொல்லாமல் தட்டிக் கொடுத்த ஆசிரியர்கள் இன்னும் நெஞ்சில் இருக்கிறார்கள்.

ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை வடுகம் அரசினர் உயர்நிலைப் பள்ளியில் படித்தேன்.

அப்பொழுது பாய்ச்சல் என்ற ஊரைச் சேர்ந்த திரு.ஆ.கைலாசநாதர் என்பவர் எனக்கு தமிழ் வாத்தியாராக இருந்தார். அனைவருக்கும் அவர் வகுப்பு எடுப்பார்.  வெள்ளை உடையை அணிந்து கொண்டு காலில் செருப்பு இல்லாமல் சரஸ்வதி தேவியாக இருப்பார்.  சனி, ஞாயிறு விடுமுறையின் போது தனி வகுப்பை பள்ளியிலேயே நடத்துவார். கையெழுத்து மிக அழகாக இருக்க வேண்டும், என் கைப்பிடித்து எழுதப் பழக்கினார்.

நாங்கள் எழுதுகின்ற காலாண்டு அரையாண்டு தேர்வுகளில் ஒரு பக்கம் மட்டும் எழுதிவிட்டு மறுபக்கம் எதுவும் எழுதாத காகிதங்களை ஒன்றாகச் சேர்த்து ஒரு நோட்டு தயாரிப்பார். அவரே தைத்து காக்கி அட்டை போட்டு அழகு ஆக்குவார். ஒவ்வொரு ஆண்டும் காலாண்டு அரையாண்டு தேர்வில் ஒவ்வொரு படத்திலும் முதல் மதிப்பெண்கள் வாங்கும் நபருக்கு அவர் அந்த நோட்டுகளை பரிசாகக் கொடுப்பார். ஏறக்குறைய எல்லா நோட்டுகளையும் நானே பெற்று இருக்கின்றேன்.

அந்த சிறு கிராமத்தில் சுமாராக படிப்பதே சூப்பராக இருக்கும். 35 மார்க்குக்கு குறைவாக எத்தனை மதிப்பெண் வாங்குகிறோமோ அத்தனை முறை அந்த தேர்வின் விடைகளை எழுதி வர வேண்டும்.  ஆனால் எனக்கு மட்டும் நூற்றுக்கு எத்தனை மதிப்பெண்கள் குறைவாக வாங்கி இருக்கிறேனோ அத்தனை முறை நான் எழுத வேண்டும்.  36 மதிப்பெண் பெற்ற மாணவன் ஒருமுறை கூட அப்படி எழுத தேவையில்லை. ஆனால் 96 மார்க் வாங்கும் நான், நான்கு முறை எழுத வேண்டும்.  அந்த அளவுக்கு தனிப் பாசமும் அக்கறையையும்  ஆசிரியர்கள் காட்டினார்கள். அதேபோலவே நானும் பத்தாம் வகுப்பில் கணக்கில் 95 மார்க் எடுத்தேன்.

பட்டடத்தைச் சேர்ந்த பொன்னுசாமி வாத்தியார் வகுப்பு நடத்துவது மிக சுவாரஸ்யமாக இருக்கும். எங்களை பெஞ்சில் அமர வைக்காமல் அவரைச் சுற்றி கீழே அமர வைத்துக்கொண்டு பாடத்திட்டத்தில் இல்லாத கதைகளையும் கட்டுரைகளையும் பேசச் சொல்வார்.

ஆசிரியரும் உறவினருமான பெரியசாமி அவர்கள் பொன்னியின் செல்வன் நாவலை  நான்காம் வகுப்பு படிக்கும் போது எனக்கு  அறிமுகப்படுத்தினார்கள். அதைத் தொடர்ந்து படித்து வந்த  நான் வந்தியத்தேவன் மீது பைத்தியம் பிடித்தவன் போல் ஆகிவிட்டேன். 

வடுகம் அரசினர் உயர்நிலைப்பள்ளி  தொடங்கியதிலிருந்து 500க்கு 400க்கு மேல் யாரும் வாங்கவில்லை. 1984 ஆம் ஆண்டு நான் எழுதிய பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் சரியாக 400 மார்க் வாங்கி அந்த பள்ளியில் ஒரு புதிய தொடக்கத்தை ஏற்படுத்தினேன்.

என்னை பெருமைப்படுத்தும் விதமாக நான்தான் முதல் முதலில் மதிப்பெண் சான்றிதழை பெற வேண்டும் என்று கூறி எங்கள் தோட்டத்திற்கு ஆள் அனுப்பினார்கள்.  என்னுடைய அப்பாவுக்கு அவ்வளவு சந்தோஷம்.

சின்ன  திறமை இருந்தாலும் கூட அதனை ஆசிரியர்கள் பெரிதாக ஊக்குவித்து மேம்படுத்தினார்கள். சுய முயற்சியை, உழைப்பைக் கற்றுக் கொடுத்தார்கள். தங்களால் முடிந்த அளவுக்கு அவர்கள் சொந்த பணத்தைப் போட்டு பரிசுப் பொருட்களையும் பாராட்டுகளையும் வழங்கி மகிழ்ந்தார்கள். தமிழ் மீது ஆர்வம் ஏற்பட எனது அரசு ஆசிரியர்களே மிக முக்கிய காரணம்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய தொகுதி-1, தேர்வில்  தமிழ் இலக்கியத்தை ஒரு பாடமாக எடுத்து முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்று காவல்துறை பணியில் டி.எஸ்.பி. பணியில் சேர்ந்ததற்கு காரணம் அன்று என்னுடைய ஆசிரியர்கள் கற்றுக்கொடுத்த தமிழ் ஆர்வமும் சுயமாக தேடும் முயற்சியும் ஆகும். என் வாழ்க்கையில் ஒளியேற்றிய இந்த அரசுப் பள்ளி ஆசிரியப் பெருமக்களை  வணங்கி மகிழ்கிறேன்.

மரு. ஆர்.சிவகுமார் ஐபிஎஸ், துணை இயக்குநர் ( நிர்வாகம்), தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகம், ஊனமாஞ்சேரி, வண்டலூர்

நவம்பர், 2022

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com