தமிழக மக்கள்தொகை குறைந்துவிடும் அபாயம் இருக்கிறது!

தமிழக மக்கள்தொகை குறைந்துவிடும் அபாயம் இருக்கிறது!

அரசுத்துறையிலும் தனியார் துறையிலும் மருத்துவம் என்பது தமிழ்நாட்டில் வெகுவாக முன்னேறிஉள்ளது. கொரோனா சமயத்தில் தமிழ்நாடு மற்ற மாநிலங்களை விட சிறப்பாக செயல்பட்டது. பல்லாண்டுகளாக அரசுகளின் செயல்பாடுகளும் கொள்கைகளுமே இந்த வளர்ச்சிக்கும் வசதிகளுக்கும் காரணம். இந்த பெருந்தொற்று காலகட்டத்தில் சுகாதாரத் துறை எந்த அளவுக்கு முக்கியம் என்று எல்லோரும் உணர்ந்திருக்கிறார்கள். 

பெருந்தொற்றைத் தடுக்க: இப்போதிருக்கும் பெருந்தொற்று பரவாமல் தடுக்க மக்கள் அனைவரும் மாஸ்க் அணிவதை அரசு ஊக்குவிக்க வேண்டும். இது கொரோனா பரவலை மட்டும் தடுப்பது அல்ல. சுற்றுச்சூழல் மாசால் ஏற்படும் நோய்கள், வேறு  காற்றால் பரவும் தொற்றுநோய்கள் ஆகியவற்றையும் தடுக்கக்கூடியது.

அரசு காப்பீட்டுத்திட்டம்: ஆண்டு வருமானம் 72,000 ரூபாய்க்குக் குறைவாக இருப்பவர்களுக்கு அரசே மருத்துவக் காப்பீடு செய்துகொடுக்கிறது. இது மிகவும் நல்ல திட்டம். ஆனால் இதற்கான பிரீமியம், மருத்துவ சிகிச்சைக்கு அளிக்கப்படும் கட்டணம் ஆகியவை நிர்ணயிக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டன. விலைவாசி உயர்வை கருத்தில்கொண்டு இவற்றை உயர்த்தி அமைக்கவேண்டும். குறைவான கட்டணமே இருந்தால் பல தனியார் மருத்துவமனைகள் இந்த திட்டத்தில் இருந்து விலகிவிடுவார்கள் அல்லது நோயாளிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிப்பார்கள். உத்தரபிரதேசத்தில் பித்தப்பை அகற்றும் சிகிச்சையில் அதைச் செய்யாமலேயே பல தனியார் மருத்துவ மனைகள் காப்பீட்டு நிறுவனங்களிடம் கட்டணம் வசூலித்து ஏமாற்றியதாகப் படித்தேன். அதற்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் 22 ஆயிரம் ரூபாய். இந்த குறைந்த பணத்தில் அந்த அறுவைச்

சிகிச்சையை செய்வது சாத்தியமே இல்லை.  நியாயமான கட்டணத்தை அறுவை சிகிச்சைகளுக்கு காப்பீட்டுத் திட்டத்தில் அரசு நிர்ணயிக்கவேண்டும்.

அனைவருக்கும் காப்பீடு: இப்போது வருவாய் குறைவாக இருப்பவர்களுக்குத்தான் அரசு காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதை எல்லோருக்குமாக விரிவு படுத்த வேண்டும். அடிப்படையாக அறுவை சிகிச்சை எல்லோருக்கும் ஒன்றுதான். தனி அறை, ஏசி ரூம் போன்ற வசதிகளை எதிர்பார்ப்பவர்களிடம் கூடுதலாக பிரீமியம் வசூலிக்கலாம். அவர்கள் சற்று அதிகம்  செலுத்தச் சொல்லலாம்.   எப்படியும் இது தனியார் காப்பீட்டுடன் ஒப்பிடும்போது மிகக் குறைவான பிரீமியம் ஆகவே இருக்கும் என்பது என் கணிப்பு. அத்துடன் தனியார் காப்பீடுகள் ஏற்கெனவே இருக்கும் நோய்களுக்கு (Preexisting disease) காப்பீடு வழங்குவதில்லை. ஈஎஸ் ஐ வசதி  உள்ளவர்கள் செலுத்தும் கட்டணமும் அதிகமே. அதையும் தமிழக அரசே இந்த  காப்பீட்டில் இணைத்து பிரீமியம் செலுத்தி அனைவரும் பயன்பெற வழி செய்ய முன்வரவேண்டும்.

தமிழகத்தில் மருத்துவர்கள் குறைவா?

இல்லவே இல்லை. தமிழ்நாட்டில் இப்போது 250 பேருக்கு ஒரு மருத்துவர் உள்ளார்.  இந்த அளவுக்கு மருத்துவர்கள் தேவை இல்லை.  எனவே புதிய மருத்துவக்கல்லூரிகள் திறப்பதில் அர்த்தம் இல்லை. அத்துடன் இந்த புதிய கல்லூரிகளில் எல்லாம் பயிற்சி அளிக்க தரம்வாய்ந்த பேராசிரியர்களும் நம்மிடம் இல்லை. ஆகவே நாம் இதை தவிர்த்து, தற்போது இருக்கும் கல்லூரிகளை மேம்படுத்தினாலேயே போதுமானது.

எம்டி பொதுமருத்துவம் போன்ற முதுகலை படித்தவர்கள் எல்லாம் அத்துடன் நிறுத்தாமல் மேலும் சூப்பர் ஸ்பெஷலைசேஷன் ( டிஎம், எசிஹெச்) தகுதிக்கு படிக்கிறார்கள். தேவைக்கு அதிகமான அளவுக்கு இவர்களின் எண்ணிக்கை உள்ளது. இதற்கு அவசியம் இல்லை. இதனால் அடிப்படையாகத் தேவைப்படும் பொதுமருத்துவர்கள் குறைந்துவிடுவார்கள். இதை தேவைக்கு ஏற்றமாதிரி மாற்றி அமைப்பது நல்லது. அப்போதுதான் சமநிலை உருவாகும். தேவையான துறைகளில் போதுமான அளவுக்கு மருத்துவர்கள் இருப்பார்கள். 

மனிதவளத்துறை: சுகாதாரத்துறையில் பெரிய குறைபாடு என்றால் இங்கே மனிதவளத் துறை என்றே ஒன்று கிடையாது. 50& 60 படுக்கைகள் கொண்ட மருத்துவமனைகள் அமைக்கும்போதேகூட மனிதவளப் பிரிவு பற்றி அனுமதி வழங்கும்போது கேட்பார்கள். ஆனால் தமிழக அரசில் அப்படிக் கிடையவே கிடையாது. இந்த துறை இருந்தால்தான் எந்த அளவுக்கு ஆட்கள், பயிற்சி தேவை என்பதையெல்லாம் தெரிந்துகொள்ள முடியும். அதற்கு ஏற்றமாதிரி கொள்கை உருவாக்கம் செய்யமுடியும். எல்லா மருத்துவக் கல்லூரிகளிலும் இந்த துறை உருவாக்கி எங்கே எந்த மாதிரி ஆட்களை நியமனம் செய்யவேண்டும் என்று முடிவுசெய்யவேண்டும்.  மருத்துவத்தில் வேறு வேறு துறைகள் இருப்பதால் சரியான, தேவையான ஆட்களைப் போடுவது என்பது மிக முக்கியம்.

டேட்டா சயின்டிஸ்ட் வேண்டும்!

நவீனவளர்ச்சியில் நாம் எங்கே பின் தங்குகிறோம் என்றால் நமக்கு டேட்டா சயின்டிஸ்ட் யாரும் இல்லை.  உதாரணத்துக்கு ஒரு மருத்துவமனையில் நன்கு உழைக்கிறார்கள். இருப்பினும் நோயாளியிடம் பெரிய முன்னேற்றம் இல்லை என வைத்துக் கொள்வோம். இதை நன்கு அலசி ஆராய நமக்கு டேட்டா தேவை. நோயாளிக்கு சிகிச்சை அளிக்கும் நேரம், காத்திருக்கும் நேரம், பார்க்கும் மருத்துவரின் திறன், அறுவைசிகிச்சையில் உதவியாளர் திறன் போன்ற பல விஷயங்களை ஒப்பிட்டு சரிசெய்ய இது தேவை. கூட்டமோ புறநோயாளிகள் பிரிவில் அதிகமாக இருக்கும்.  இரண்டு மருத்துவர்கள் மட்டும் அவர்களைப் பார்க்க முடியாது. அதிகமாக மருத்துவர்கள் போடவேண்டும். இதையெல்லாம் டேட்டாவை வைத்துத்தான் முறையாகச் செய்யமுடியும். வெளிநாடுகளில் ஒரு நாளைக்கு 20 சிடி ஸ்கேனுக்கு மேல் ஒரு மருத்துவர் பார்க்ககூடாது என்று வரைமுறை உள்ளது. அதற்குமேல் பார்த்தால் பிழை ஏற்படலாமென்பதால் இந்த ஏற்பாடு. பணிச்

சுமை அதிகமாக இருந்தால் தரம் குறைந்துவிடும். இதற்கேற்ப பணிகள் பகிர்ந்தளிக்கப்படவேண்டும்.அந்த அளவுக்கு மருத்துவர்கள் இருக்கிறார்களா என்பதும் கண்டறியப்படும்.

ஆரம்ப சுகாதார மையம்: ஆரம்பசுகாதார மையங்களுக்கு மருத்துவர்கள் போவதில்லை என்ற குறை உண்டு. இதற்கு பல காரணங்கள். இந்த மருத்துமனைகள் அந்த காலத்தில் போக்குவரத்து வசதி இல்லாத இடங்களில் யாரோ தானமாக  நிலம் கொடுத்தார்கள் என்பதால் கட்டி வைத்திருப்பார்கள். அங்கே போய்வருவது என்பது சிரமமாக இருக்கும். இவற்றை தற்போதைய நிலைமைக்கு ஏற்ப இடம்மாற்றி அமைத்தால் மருத்துவர்கள் அங்கே பணிபுரியும் நேரம் அதிகரிக்கும். பஸ்ஸில் நோயாளிகளும் மருத்துவரும் எளிதில் வந்துபோய்விடமுடியும்.

இது அல்லாமல்  சில மையங்களில் மக்களின் எதிர்பார்ப்பு அதிகம், புகார் எழுதுவது, நோட்டீஸ் ஒட்டுவது போன்ற நடவடிக்கைகள் இருக்கும். இந்த இடங்களுக்கு மருத்துவர்கள் சென்று பணிபுரிய விரும்புவது இல்லை. இதுபோன்ற தருணங்களில் மேலதிகாரிகள் மருத்துவர்களுக்கு ஆதரவாக இருக்கவேண்டும். உள்ளூர் பிரச்னைகளைப் புரிந்து ஆதரவு அளித்தால்தான் இதை சரிசெய்யமுடியும்.

காலையில் பணிபுரிவது மட்டுமல்லாமல்  மாலையிலும் அங்கே பணிபுரியவேண்டும் என்கிறார்கள். மருத்துவர்கள் எங்கிருந்தோ வந்து செல்கிறார்கள். அவர்களுக்கு அங்கே மாலையிலும் பணிபுரிவது கடினமாக இருக்கலாம். சம்பளத்தில் குறைந்தது 25% கூடுதலாகத் தருவதன் மூலம் அல்லது இடைக்கால அடிப்படையில் வேறு மருத்துவர் நியமிப்பதன்மூலம் இதைச் சரிசெய்யமுடியும்.

மருத்துவர்களுக்கு செய்யவேண்டிய வசதிகள்: உலக அளவில் மருத்துவர்களுக்கு கொடுக்கப்படும் சம்பளம் என்பது இந்தியாவில்தான் மிகக்குறைவு. சென்னையில் ஐஐடி போன்ற நிறுவனங்களில் அங்கு பணிபுரிபவர்களுக்குத் தேவையான குடியிருப்பு வசதிகள் செய்துதரப்பட்டுள்ளன. அதேபோல் பொறியியல், அரசு ஊழியர்கள் போன்றவர்களுக்கு உண்டு. ஆனால் மருத்துவர்களுக்கு ஆரம்பத்தில் இருந்தே தங்குவதற்கான வசதிகள் கிடையாது. சுகாதார துறை அந்த காலத்தில் இருந்தே மருத்துவர்களுக்குச் செய்துதரவேண்டிய வசதிகளை தொலைநோக்கில் இருந்து பார்த்து செய்யவில்லை. இதனால்தான் நல்ல மருத்துவர்கள் பலர் வெளிநாடுகளுக்குச் சென்றுவிடுகிறார்கள்.

வெளிநாட்டில் மருத்துவ மாணவர்கள்; வெளிநாடுகளுக்குப் போய் மருத்துவம் படித்துவருகிறவர்கள் இங்கே வந்ததும் எப்எம்ஜி என்ற தேர்வு எழுதி பாஸ் ஆனால்தான் பணிபுரியமுடியும். 100 பேர் இப்படிப் போய்வந்து தேர்வு எழுதினால் 15 சதவீதம் பேர்தான் பாஸ் பண்ண முடிகிறது. மீதம் 85% பேர்  என்ன செய்வார்கள்? இது ஒரு கொடுமை! பாஸ் பண்ண முடியாத மருத்துவர்கள் அதிகமாக வெளிவரும் தரமற்ற வெளிநாட்டு மருத்துவப் பல்கலைகளைத் தடை செய்துவிட்டால் என்ன? ஆவலுடன் படிக்கப்போகும் மருத்துவ மாணவர்கள் ஏமாறுவது தடுக்கப்படும்.

நீட் தேர்வு: நீட் தேர்வு நடத்தப்படுகிறது அல்லவா? இதில் தகுதி மதிப்பெண் என்று மிகக்குறைவான மதிப்பெண் நிர்ணயிக்கப்படுகிறது. இதனால் மிகக் குறைவாக மதிப்பெண் பெற்றவர்கள் மிக அதிகப் பணம் கொடுத்து தனியார் கல்லூரிகளில் சேர்கிறார்கள். இதற்குப் பதிலாக எவ்வளவு சீட் இருக்கிறதோ அதைப் போல் இரண்டு மடங்கு மாணவர்கள் மட்டும் தேர்ச்சி அடைவதாக தகுதி மதிப்பெண்ணை நிர்ணயித்தால் தரமான மாணவர்கள் மட்டும் எம்பிபிஎஸ் படிப்புக்குச்  சேர்வார்கள். தனியார் துறை கல்லூரிகளில் மாணாக்கர்கள் இல்லாத நிலையில் கட்டணம் மிகக்குறையும். 

நவீன வளர்ச்சி: சிகிச்சைப் பிரிவுகளில் நமது அரசு மருத்துவக் கல்லூரிகள் நன்றாக வளர்ந்துள்ளன. ஆனால் பயோகெமிஸ்ட்ரி, மைக்ரோபயலாஜி போன்ற துறைகள் புறக்கணிக்கப்பட்ட துறைகளாகவே உள்ளன. போதிய அளவு நிதி ஒதுக்கீடு இல்லை. இதனால் அவை வளராமல் உள்ளன. அவற்றுக்கு நிதி ஒதுக்குவதுடன் திறமையானவர்களை அத்துறைகளில் நியமிக்க  வேண்டும்.

எல்லா மாவட்ட மருத்துவமனைகள், மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளிலும் என்ஏபிஎல் (NABL) எனப்படும் தரச்சான்று வாங்கும் அளவுக்கு ஆய்வக வசதிகள் மேம்படவேண்டும். எந்த மருத்துவமனைகளில் அந்த அளவுக்கு ஆட்களோ திறமைசாலிகளோ இல்லையோ வெளியே இருந்து நிபுணர்களைப் பணியமர்த்தி இதைச் செய்யவேண்டும். ஏனெனில் டயக்னோசிஸ் என்பது இப்போது மருத்துவத்தில் மிக முக்கியமான அங்கமாக ஆகிவிட்டது.

மக்கள் தொகை:  தமிழ்நாட்டின் இப்போதைய பிரச்னைகளில் ஒன்று குழந்தை பிறப்பு சம்பந்தமானது. ஒரு நாட்டின் குறிப்பிட்ட மக்கள் தொகை நிலையாக இருக்கவேண்டும் என்றால் பிறப்பு விகிதமானது 2.1 என்ற நிலையில் இருக்கவேண்டும். அப்போது பிறப்பும் இறப்பும் சமமான நிலையில் இருக்கும். பீகார் போன்ற மாநிலங்களில் 3க்கு மேல் இந்த விகிதம் இருக்கிறது. அங்கு மக்கள் தொகை கூடிக்கொண்டே போகும். அதே சமயம் 2.1 என்கிற விகிதத்துக்குக் குறைந்தால் மக்கள் தொகை குறையும். இதை Total Fertility Ratio கீச்tடிணி என்பார்கள். தமிழ்நாட்டில் இது 1.6 ஆக உள்ளது. எனவே தமிழ்நாட்டின் மக்கள் தொகை இனி குறைய ஆரம்பிக்கும். ஆகவே இங்கே குறைந்தது இரண்டு குழந்தைகளாவது பெற்றுக்கொள்ளுங்கள் என பரப்புரை செய்யவேண்டும். இதை மாநில அரசு கவனத்தில் கொள்ளவேண்டும்.

 நோய்த்தடுப்பு வாரம்:  ஆண்டுதோறும்  ஒரு வாரம் ‘நோய்த்தடுப்பு வாரம்‘  (Preventive Medicine week)  என ஒதுக்கி,  அந்நாட்களில் வெவ்வேறு வயதினருக்கு ஏற்ப வெவ்வேறு ரத்த பரிசோ தனைகளைச் செய்யவேண்டும்.  தேவையான தடுப்பு ஊசிகளையும் வழங்கலாம்!  அரசே இலவசமாகவோ சிறு கட்டணத்துடனோ இந்த

பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். இதே சமயத்தில் தனியார் மருத்துவமனைகளும் இதே பரிசோதனைகளை வயதுக் கேற்ப மேற்கொள்ள முன்வரவேண்டும். போட்டி இருப்பதால் கட்டணமும் குறைவாகவே இருக்கும். இதன் மூலம் தமிழ்நாட்டு மக்கள் தொகையில் பெரும்பாலோர்  பரிசோதனை செய்துகொள்ள முன்வருவர். சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், புற்றுநோய்கள், சிறுநீரகக் கோளாறுகள் போன்ற பல நோய்களைக் குறைந்த பொருட்செலவில் கண்டறிந்து முளையிலேயே கிள்ளி எறியலாம்!

தரம் வாய்ந்த ஆய்வு மையம்: சென்னை மருத்துவக்கல்லூரியில் மிகத் தரம்வாய்ந்த ஆய்வுமையம்

(World class research center)  அமைக்கவேண்டியது மிக அவசியம்.  இங்கே மிகமிக அதிக எண்ணிக்கையிலான பல்வேறு நோயாளிகள்

சிகிச்சைக்கு வந்து செல்கிறார்கள். இந்நோய்களைப் பற்றி ஆய்வுகள் மேற்கொண்டால் இந்தியாவுக்கே ஏன் உலகுக்கே கூட நாம் மிக அரிய ஆய்வுத் தகவல்களை வழங்கமுடியும். எனவே இங்கே சுமார் ஆயிரம் கோடி வரை செலவழித்து மிக நவீனமான ஆய்வுமையம் ஒன்றைத் தொடங்கவேண்டும். மிகத் தரம்வாய்ந்த ஆய்வகங்கள் அமைக்கவேண்டும். இந்த மையம் மேற்கொள்ளும் ஆய்வுக்கட்டுரைகள் மருத்துவ உலகத்துக்கே பெரும் கொடையாக அமைய ஏற்பாடு செய்யலாம். இந்த ஆய்வு மையத்தை  பிற தமிழக மருத்துவமனைகளுடன் இணைந்து செயல்படுமாறு அமைக்கவேண்டும்.

(மருத்துவர் ஆர்.விஜயகுமார், எம்.டி. டி.எம்.

சிறுநீரகவியல் துறைத் தலைவர் (ஓய்வு),  ஸ்டான்லி மருத்துவக்கல்லூரி)

ஏப்ரல், 2021

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com