தமிழ்நாடு அரசியல்:  வரலாற்று திருப்பங்கள்!

தமிழ்நாடு அரசியல்:  வரலாற்று திருப்பங்கள்!

காலம் தோறும், நகர்ந்து செல்லும் வரலாறு, மாற்றத்திற்கான புதிய புதிய வேலைத் திட்டங்களை முன்மொழிந்து கொண்டே செல்கிறது. இவைதான் வரலாற்று திருப்பங்களுக்கு காரணமாக அமைந்து விடுகின்றன. இந்த திருப்பங்கள் இல்லையேல் வரலாற்றில் எந்த மாற்றமும் இல்லாமல் போய்விடும் என்பதை உறுதிபடக் கூற முடியும்.

பொதுவாக, வரலாற்றுத் திருப்பங்கள் அமைவதற்கு இரண்டு முக்கிய கூறுகள் தேவைப்படுகின்றன, ஒன்று வரலாற்றின் திசை வழியை மாற்றி அமைக்கும் சம்பவங்கள். மற்றொன்று அதை நிறைவேற்றும் தலைவர்களும் அதை சாத்தியப்படுத்தும் இயக்கங்களும். வரலாற்றுச் சம்பவங்களுக்குக் காரணமான தலைவர்கள் காலந்தோறும் நினைவு கொள்ளப்படுகிறார்கள். ஆனால் வரலாற்றை மாற்றி அமைத்த சம்பவங்கள் மட்டும் சரிவர நினைவுகூரப்படுவதில்லை.

எப்படியிருந்தாலும், எதிர்காலத்தை நோக்கிப் பயணம் செய்வதில் இந்த வரலாற்றுச் சம்பவங்களின் ஆழத்தைக் கற்றறிதல் அவசியம் என்பதை இப்பொழுதுதாவது, நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். எதிர்காலம் வீரியம் கொண்டதாக அமைய வேண்டும் என்றால், கடந்த கால வீரியங்கள் அனைத்தையும் கணக்கில் கொள்ள வேண்டும். உரிய ஆய்வுக்குப் பின் எதிர்கால வேலைத்திட்டத்துடன் இது இணைக்கப்பட வேண்டும். தமிழ் சமூகத்தின் எதிர்காலத்தை அப்பொழுதுதான் வீரியம் மிகுந்த பக்கங்களைக் கொண்டதாகத் மாற்றியமைக்கும். நமது வரலாற்றுக் கடமையை நம்மால் நிறைவு செய்ய முடியும்.

கடந்த நூறாண்டுகளில், திராவிட இயக்கம், காங்கிரஸ் இயக்கம், பொதுவுடமை இயக்கம்,தலித் இயக்கம், சிறுபான்மையினரின் இயக்கம் என்று பலரும் தமிழ்நாட்டின் திருப்புமுனையில் பங்கேற்று உள்ளனர். இவை ஒவ்வொன்றின் வளர்ச்சியிலும் வரலாற்று சம்பவங்களுக்கு உரிய பங்கிருப்பதை யாராலும் மறுக்க முடியாது. இதைப் போலவே தனித்துவம் கொண்ட தமிழ் மண்ணையும் தொன்மையான தமிழர்களின் விவசாயத்தையும் காப்பாற்ற வேண்டும் என்ற குரல் ஓர் இயக்கமாகவே இப்பொழுது மாறி வருவதையும் கூர்ந்து கவனிக்க வேண்டும். இதற்கான நம்மாழ்வாரின் அர்ப்பணிப்பை யாராலும் மறுத்து விட இயலாது ஆனாலும் ஒரு காலத்தில் எழுந்த வரலாற்றுத் தேவை என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். அதைப் போல லட்சக்கணக்கில் உணர்வு பூர்வமாக மக்களைத் திரட்டிய ஜல்லிக்கட்டுப் போராட்டமும் மக்கள் எழுச்சியின் இன்றைய குறியீடு. கூடங்குளம், மீத்தேன் எதிர்ப்பு போராட்டம் என்ற கார்ப்பரேட்டின் செயல் திட்டங்களை முறியடிக்கும் போராட்டங்களும் தன் வழிப் போராட்டங்களாகவே தோன்றியுள்ளன.

இவை எல்லாவற்றையும் வரலாற்றுச் சம்வங்களாகக் கருத முடியும்.

சமூக நீதிப் போராட்டங்கள் தமிழகத்தில் அடிப்படையான திருப்புமுனையை உருவாக்கியுள்ளன. இதையும் வரலாற்று சம்பவங்கள் அடிப்படையில் ஆராய்ந்து பார்ப்பது அவசியம் என்று தோன்றுகிறது. பிராமணர் அல்லாதாரின் இட ஒதுக்கீடு போராட்டமாகத்தான், தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தினரால் கையிலெடுக்கப்பட்டது. எண்ணிக்கையில் பெரும்பான்மையாக இருந்தவர்கள் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் அடி எடுத்து வைக்க முடியாத சூழல். சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட எல்லா அரசியல் இயக்கங்களும் இதில் பங்கு பெற்று மேலும் இதனை வளர்த்தெடுத்தன என்பதை யாராலும் மறுக்க முடியாது. தந்தை பெரியாருக்கு இதில் முன்னணி பாத்திரம் உண்டு என்பதும் ஒரு மாபெரும் வரலாற்று உண்மையாகும்.

சமூக நீதியில் தமிழ்நாடு மற்றைய மாநிலங்களை விட, ஒன்றுபட்டு நிற்பதற்குரிய காரணங்களை ஆராய்ந்தால் அதில் ஆழமான பல நுட்பங்கள் இருப்பதை உணர்ந்து கொள்ளலாம். சமூக நீதியை அனைவரும் ஒரு பகுதியைத் தவிர, மற்றைய பகுதிகள் இணைந்து போராடியதை ஆராய்ந்து பார்த்து அறிந்து கொள்ள முடியும். வைக்கம் போராட்டம், சேரன் மாதேவிப் போராட்டம் இவை இரண்டும் முக்கியமானவை. இந்த இரண்டு போராட்டங்களிலும் பெரியாரின் பங்கு அடிப்படையானது என்றாலும், கம்யூனிஸ்டு தலைவர் ஜீவா பங்கேற்றுள்ளார். தமிழக காங்கிரஸ் கட்சியிலும் இது பிரதிபலித்தது.

இந்தித் திணிப்பை எதிர்த்து தமிழ் மக்கள் நடத்திய இயக்கங்கள் இந்தியக் கூட்டாட்சி வரலாற்றில் முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளன. இந்தியத் துணைக் கண்டத்தில் இன்று வரை வலிமையோடு நின்று சமஸ்கிருத ஆதிக்கத்தை எதிர்த்து நிற்கும் மொழி தமிழ்மொழி மட்டும் தான். இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் மூலம், 1967 ஆம் ஆண்டில் ஆட்சி மாற்றம் ஏற்படுவதற்கு அடிப்படை காரணமாக அமைந்தது. இதை மாபெரும் வரலாற்று நிகழ்வென்றால் இதில் பொதுவுணர்வுடன் பங்கேற்றவர்களின் எண்ணிக்கையும் மிக மிக அதிகம். அந்தப் பொதுத் தன்மையையும் வரலாற்றுத் தொடர்ச்சியோடு ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

சுதந்திரப் போராட்டத்தில் பல்வேறு நிகழ்வுகள் தனித்தனியாக நடந்தன. இவை அனைத்தும் காங்கிரஸ் கட்சியால் நடத்தப்பட்டதைப் போல பின்னர் பதிவு பெற்றன. இதன் உண்மைகளையும் தனித்தனியாக ஆராய வேண்டும். இவ்வாறு ஆராய்ந்து பார்த்தால் தேசிய போராட்டத்தில், தமிழகத்தின அணுகுமுறை வித்தியாசம் கொண்டதாக இருப்பதை அறிந்து கொள்ள முடியும். 1937 ஆம் ஆண்டில் நடைபெற்ற அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிக்கு ஒரு தேர்தல் நடைபெறுகிறது. ஜீவா, காமராஜர், முத்துராமலிங்க தேவர் மூவரும் தேர்ந்தெடுக்கப் படுகிறார்கள். இவர்களைக் கொண்டு நடத்தப்பட்ட அகில இந்திய தலைவரின் தேர்தலில், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் வெற்றி பெறுவதற்கும் காந்தியடிகளால் முன்னிறுத்தப்பட்ட பட்டாபி சீதாராமையா தோல்வி அடைவதற்கும் தமிழகத்தில் இருந்து சென்ற காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள் தான் காரணம். இதற்கான வரலாற்றுக் காரணங்களும் இருக்கத்தான் செய்கின்றன.

அதேபோல சுதந்திரத்திற்கு பின்பு, காங்கிரஸ் கட்சிக்குள்ளும் சமூக நீதி ஆதரவாளர்கள் சமூக நீதி எதிர்ப்பாளர்கள் என்ற இரண்டு பிரிவுகள் போராடிக் கொண்டிருந்தனர். தந்தை பெரியார் காங்கிரசிலிருந்து பிரிந்ததற்கான காரணம் சமூக நீதிதான். ராஜாஜி சென்னை மாகாணத்தின் முதலமைச்சராகப் பதவியேற்ற பின்னர், குலக்கல்வித் திட்டம் அமலுக்கு வந்ததும் ராஜாஜி அகற்றப்பட்டு மீண்டும் காமராஜர் தமிழ்நாட்டிற்கு முதலமைச்சராக வந்தார் என்பதற்கும் சமூக நீதிதான் காரணம். இந்த மாற்றங்களுக்கு கண்ணுக்குத் தெரியாமல் தமிழகத்தின் அடியாழத்தில் நடைபெற்ற சமூக நீதிப் போராட்டங்களைக் காரணமாகச் சொல்ல முடியும்.

இன்று எல்லாப் பிரச்னைகளுக்கான தீர்வுகளும் கார்ப்பரேட்டு நலனை அடிப்படையாகக் கொண்டுதான் யோசிக்கப்படுகின்றன. காமராசர் சோசலிசத் தின் மீது நம்பிக்கை கொண்டவர். சோவியத் நாடு சென்று திரும்பிய பின்னர்,  கல்வி, மதிய உணவு, எளிய மக்களுக்கான மருத்துவம் ஆகியவற்றில் அக்கறை கொண்டிருந்தார். தொழில் வளர்ச்சி தமிழ்நாட்டில் ஏற்பட்டது. நாட்டின் பல பகுதிகளில் தொழிற்பேட்டைகள் தொடங்கப்பட்டன. ஒவ்வொரு மாவட்டத்திலும் அதன் தன்மைக்கேற்றவாறு தொழிற்சாலைகள்,  மருத்துவக் கல்லூரிகள், மதிய உணவு திட்டம் போன்ற அடிப்படையான மக்கள் நேயத் திட்டங்கள் கொண்டு வரப்பட்டன. இன்றும் தமிழகம் தொழிற்துறையில் முன்னணியில் இருப்பதற்கு காமராஜர் காலத்தில் உருவாக்கப்பட்ட தொழிற்துறைக் கண்ணோட்டங்களே அடிப்படைக் காரணம் என்பதை யாராலும் மறுக்க முடியாது. இதற்கு காமராஜரின் அர்ப்பணிப்பு முக்கிய காரணம் என்றாலும் ஒரு காலத்தின் வரலாற்றுத் தேவையின் கூட்டு முயற்சி என்ற அடிப்படையிலும் இதனை ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

தமிழகத் திருப்புமுனை வரலாற்றில் கம்யூனிஸ்டுகளுக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பு இருப்பதை யாராலும் மறுக்க முடியாது. சமத்துவத்திற்கான வலுவான கருதுகோள் சித்தாந்த அடிப்படையில் கம்யூனிஸ்டுகளிடம் தான் இருக்கிறது. தந்தை பெரியார், கம்யூனிஸ்ட் கட்சியின் மீது மிகுந்த ஆதரவைக் கொண்டிருந்தவர். குடியரசு பத்திரிகையில் சிங்காரவேலர் இணைந்து பணியாற்றிய காலத்தை ஒரு பொற்காலம் என்று குறிப்பிட முடியும். உலக நாடுகள் பலவற்றில் கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கை தடை செய்யப்பட்டிருந்தது. முதன் முதலில் தந்தை பெரியார் அவர்கள் அதை துணிவுடன் குடியரசு பத்திரிகையில் வெளியிட்டார். பொருளாதார சமத்துவம், சமூக சமத்துவம் என்ற இரண்டு கொள்கைகளை மிக ஆழமாக கொண்டு தமிழ்நாட்டில் கம்யூனிஸ்ட்டு செயல்படுத்தியதற்கும் உரிய வரலாற்றுக் காரணங்கள் இருக்கின்றன.

உடைமையற்ற வர்க்கத்தை, உடைமை வர்க்கமாக மாற்றும் போராட்டம் எளிதானதல்ல. சிறைக்கொடுமைகளையும், கொடிய தண்டனைகளையும், சித்ரவதைகளையும் உள்ளடக்கியது. காவிரி நதிக்கரையிலும், தாமிரபரணி வடிநிலத்திலும் வைகைப் பாசனத்திலும் சிலரிடம் மட்டுமே ஆயிரம் ஏக்கர், இரண்டாயிரம் ஏக்கர் சொந்தமானது என்று நிலம் குவிந்திருந்தது. பெரும்பாலான மக்களின் வாழ்க்கை கொத்தடிமை வாழ்க்கை. மடங்களும், ஆலயங்களும் பெரும் அளவில் நிலத்தைக் கையில் வைத்திருந்தன.   நில உறவு முறைகளில் ஏற்பட்டும் மாற்றம்தான், தமிழகத்தின் சமூக பொருளாதார வாழ்க்கையில் ஏற்படும் அடிப்படை மாற்றம் என்பதை உணர்ந்த கம்யூனிஸ்டு கட்சி, நில உச்சவரம்பு சட்டம் வேண்டும் என்ற போராட்டத்தை முன்வைத்து நாடு தழுவிய சிறை நிரப்பு போராட்டத்தை நடத்தி, நில உச்ச வரம்பு சட்டத்தைக் கொண்டு வந்தது. நிலமற்ற ஏழைகளும், குத்தகைதாரர்களுக்கும் பெரும் அளவில் நில உரிமை பெற்றார்கள். இது எளிய கிராமப்புற மக்களின் வாழ்க்கையில் நடைபெற்ற மிக முக்கியமான திருப்பு முனையாகும். அடித்தள மக்களின் மேம்பாட்டிற்குப் பெரிதும் உதவி செய்தது.

வறுமையும் பசியும் பல வரலாற்றுச் சம்பவங்களைக் கொண்டுள்ளது. வறுமையிலிருந்து தங்களை விடுதலை செய்து கொள்ள, தொழில் வளர்ச்சி முக்கியம் என்னும் வரலாற்றுப் பூர்வமான உணர்வு பலரிடம் இருந்தது. கம்யூனிஸ்டு கட்சி இதை ஓர் இயக்கமாக முன்னெடுத்தது. கள ஆய்வு செய்தும், அதற்கான கவன ஈர்ப்பு போராட்டங்களை முன்னெடுத்தும் செயலில் இறங்கியது. நெய்வேலி நிலக்கரி சுரங்கம், சேலம் இரும்பு உருக்காலை, திருச்சியின் தொழில்வளர்ச்சி, கோவையின் தொழில்வளர்ச்சி என்று அனைத்திற்கும் முன்மொழிவை தந்தவை கம்யூனிஸ்ட் கட்சியும் தொழில்சங்கங்களும் தான். இதைப் போல, தொழிலாளர் நலச்சட்டங்கள், பெண்ணுரிமை சட்டங்கள், குழந்தைகள் சட்டங்கள் என்ற பலவற்றிற்கு காரணமாக கம்யூனிஸ்ட் கட்சி முன் நின்றது என்பது உண்மை. தொழில் வளர்வதன் மூலம் தான் ஒரு நாட்டை மாற்ற முடியும், தொழிலாளர்களுடைய பங்களிப்பும் முக்கியமானது என்பதை கொள்கையாகக் கொண்டது இதற்கு காரணமாகும். இவை ஒரு கட்சி கொண்டிருந்த கண்ணோட்டம் என்ற போதிலும், அதற்குள்ளிருந்த வரலாற்று நிகழ்வுகளை ஆராய்ந்துப் பார்க்க வேண்டும்.

சாதியைப் போல இந்திய சமூகத்திற்கு தீமை செய்தது வேறு எதுவுமே இல்லை என்று கூறமுடியும்.  காந்தியடிகள் அரிஜன சேவா திட்டத்தை காங்கிரஸ் கட்சியின் திட்டமாக முன் வைத்தார். சாதியை அகற்றும் சமூக மாற்றத்திற்கான தீவிரமான முன்னெடுப்புகளை கூடுதலாகப் பொருளாதார அடிப்படையில் கம்யூனிஸ்டுகள் முன் வைத்தனர். திராவிட இயக்கங்களும் சாதிய வேறுபாடுகளை அகற்றுவதற்கு தொடர்ந்து பல முயற்சிகளை எடுத்து வந்தன. ஆனால் இதற்காக தலித் சமூகத்தில் பிறந்தவர்கள் தங்கள் உள் காயங்களை உணர்ந்து, நடத்திய போராட்டங்கள் வரலாற்றில் கவனிக்கப்பட வேண்டியவை. அயோத்திதாச பண்டிதர் முதல் எம்.சி.ராஜா, இளையபெருமாள் உள்ளிட்ட பலரை இதற்கு உதாரணமாக சொல்ல முடியும். இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் தோழர் தொல் திருமாவளவனின் பங்களிப்பு இன்றைய காலத்தின் தேவைகளை உணர்வதாக இருக்கிறது. சமூக சமத்துவத்திற்கு இவர்கள் நடத்திய இயக்கங்களையும் வரலாற்று திருப்புமுனை இயக்கங்களாக கருத வேண்டும், இதன் பின்னணியில் அமைந்த வரலாற்று நிகழ்வுகளையும் தனித்தனியாக ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

தமிழகத்தின் சமூக நல்லிணக்கம் சிறுபான்மையினரின் பங்களிப்போடு உருவான ஒன்று. மன்னர்கள் காலத்திலிருந்து இந்த ஒற்றுமையை உருவாக்குவதற்கான அடித்தளங்கள் இங்கே அமைக்கப்பட்டிருக்கிறது. கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் அவர்களும், முஸ்லிம் லீக் போன்ற அமைப்புகளும் பெரும் தொண்டு புரிந்துள்ளனர். இன்றும் சிலஅமைப்புகள் அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகின்றன. அதைப்போலவே கல்வியிலும் மருத்துவத்திலும் அதிக அக்கறை காட்டிய கிருத்துவமதமும் மத நல்லிணக்கத்தை வளர்த்தெடுத்துள்ளது. ஒரு சமூகம் மேம்பாடு காண,வரலாற்றின் முக்கிய நிகழ்வுகளின் சாரத்தை ஒருங்கிணைக்க அதற்குத் தெரிந்திருக்க வேண்டும். வரலாற்றுச் சம்பவங்களின் படிப்பினைகளை ஆராய்ந்து, களமிறங்கி போராடும் வலிமை கொண்ட தலைமுறையால் தான் இதனை சாத்தியப்படுத்த முடியும். அது நிகழும் என்ற எதிர்பார்ப்புடன் கட்டுரையை நிறைவு செய்கிறேன்.

டிசம்பர், 2022

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com