தாமரை பூத்த தருணம்!

தாமரை பூத்த தருணம்!

பா.ஜ.க.

இந்தியாவின் ஆகப்பெரிய அரசியல் கட்சி. அத்வானியாலும் வாஜ்பாயாலும் வளர்த்தெடுக்கப்பட்ட கட்சி.

வாஜ்பாய், மோடி என்கிற இரண்டு பிரதமர்களை உருவாக்கிய கட்சி.

நான்கு முறை ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றிய கட்சி.

காங்கிரஸ் கட்சிக்கு அடுத்தபடியாக அதிக மாநிலங்களில் ஆட்சியைப் பிடித்த கட்சி.

இப்படி பல்வேறு அடையாளங்களைக் கொண்டிருக்கும் பாரதிய ஜனதா கட்சி உருவான தருணம் என்பது ஓர் இக்கட்டான தருணம். அந்தத் தருணம்தான் இந்தியாவின் அரசியல் திசைவழிப் பாதையில் முக்கியமான மாற்றத்தை ஏற்படுத்திய தருணம். அந்தத் தருணத்தை விவரிக்கிறது இந்தச் சிறப்புக் கட்டுரை.

நெருக்கடி நிலைக்குப் பிறகு பல கட்சிகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட ஜனதா கட்சி 1980 தேர்தலில் படுதோல்வி அடைந்திருந்தது. அந்தத் தோல்விக்கு அத்வானி, வாஜ்பாய் போன்ற முன்னாள் ஜனசங்கத்தினர்தான் காரணம் என்ற குரல் கட்சிக்குள் வலுக்கத் தொடங்கியது. குறிப்பாக, நாடு தழுவிய அளவில் உருவான பல மதக்கலவரங்களுக்குப் பின்னணியில் இருந்தது ஆர்.எஸ்.எஸ். அந்த ஆர்.எஸ்.எஸ்ஸின் பிரதிநிதிகள்தான் வாஜ்பாய், அத்வானி உள்ளிட்டோர். அந்த மதக்கலவரங்கள்தான் கட்சியின் மீது மக்களுக்கு இருந்த  நம்பகத்தன்மையைக் குலைத்தது. அதுதான் தோல்விக்கான முழுமுதற் காரணம் என்று ஜனதா கட்சித் தலைவர்கள் விமர்சிக்கத் தொடங்கினர். அத்தோடு, ஜனதாவில் இருக்கும் முன்னாள் ஜனசங்கத்தினர் முற்றிலுமாக வெளியேறவேண்டும் அல்லது வெளியேற்றப்பட வேண்டும் என்றனர்.

ஜனதா கட்சித் தலைவர் சந்திரசேகருக்குக் கடிதம் ஒன்றை எழுதிய முன்னாள் துணைப் பிரதமரும்  ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவருமான ஜெகஜீவன் ராம், முன்னாள் ஜனசங்கத்தினரின் ஆர்.எஸ்.எஸ் தொடர்புகள் குறித்து விரிவாக விவாதிக்கவேண்டிய அவசியம் உருவாகியிருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார்.

ஆர்.எஸ்.எஸ்ஸுடன் தொடர்புபடுத்தித் தங்களைத் தனிமைப்படுத்த முயற்சிப்பதையும் விமரிசிப்பதையும் அத்வானி, வாஜ்பாய் உள்ளிட்ட முன்னாள் ஜன சங்கத்தினர் விரும்பவில்லை. காழ்ப்புணர்வுடனும் உள்நோக்கத்துடனும் செய்யப்படும் விமரிசனங்கள் கட்சியை மேலும் பலவீனப்படுத்தும் என்றனர். மேலும், தாங்கள் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினராக இருந்தாலும், ஜனதா கட்சிக்கே விசுவாசமானவர்கள் என்பதை வலியுறுத்தினர்.

அதேசமயம், ஆர்.எஸ்.எஸ் மீது அப்போது வைக்கப்பட்ட தீவிரமான விமரிசனங்களுக்கு சில விளக்கங்களையும் கொடுத்தனர். நாட்டில் நடக்கும் மதக்கலவரங்களுக்கும் ஆர்.எஸ்.எஸ்ஸுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் ஆர்.எஸ்.எஸ் ஆட்சியைப் பிடிக்கத் திட்டமிடுகிறது என்ற குற்றச்சாட்டு அடிப்படையற்றது என்றும் கூறினர். இன்னும் ஒருபடி மேலே சென்ற வாஜ்பாய், தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ்ஸுக்குச் சில தற்காப்பு யோசனைகளையும் முன்வைத்தார்.

ஆர்.எஸ்.எஸ் ஆதரவு ஆர்கனைசர் உள்ளிட்ட பத்திரிகைகள் ஆட்சி, அதிகாரம் தொடர்பான விவகாரங்களில் எவ்வித சார்பு நிலையையும் எடுக்கவேண்டாம் என்றும் அரசியல் கட்சிகளின் இளைஞர் அமைப்புகளிலோ அல்லது தொழிற்சங்கங்களிலோ ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் சேரவேண்டாம் என்றும் கோரிக்கை விடுத்தார். முக்கியமாக, இந்து ராஷ்ட்ரம் என்றால் அது பாரத ராஷ்ட்ரமே என்பதை ஆர்.எஸ்.எஸ் வெளிப்படையாகத் தெரிவிக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். அந்தக் கோரிக்கைக்குச் செவிமடுப்பதன்மூலம் ஆர்.எஸ்.எஸ் மீதும் முன்னாள் ஜனசங்கத்தினர் மீதும் சொல்லப்படுகின்ற விமரிசினங்கள் குறையும் என்பது வாஜ்பாயின் எதிர்பார்ப்பு.

ஆனால் அத்தகைய யோசனைகளும் கருத்துகளும் ஜனதா கட்சியின் மூத்த மற்றும் முக்கியத் தலைவர்களை எந்த வகையிலும் திருப்திப்படுத்தவில்லை. சில தருணங்களில் முன்னாள் ஜனசங்கத்தினரை விட்டு ஒதுங்க ஆரம்பித்தனர். பல தருணங்களில் அவர்களை ஒதுக்க ஆரம்பித்தனர்.

அதைப் புரிந்துகொண்ட அத்வானியும் வாஜ்பாயும் ஒரு முடிவுக்கு வந்தனர். இனியும் ஜனதாவில் நீடித்திருப்பதில் அர்த்தமில்லை. ஜனதாவில் நீடிப்பது முன்னாள் ஜனசங்கத்தினரை மேலும் பலவீனப்படுத்தும். ஆக, ஜனதாவில் இருந்து வெளியேறுவது ஒன்றே எல்லா பிரச்னைகளுக்குமான தீர்வு என்று பேசத் தொடங்கினர். உடனடியாகத் தொண்டர்களிடம் கருத்துக்கேட்கத் தொடங்கினர். அதைச் செய்ய வேண்டிய பொறுப்பு அத்வானியிடமும் சுந்தர் சிங் பண்டாரியிடமும் ஒப்படைக்கப்பட்டது.

சுமார் இரண்டு மாதங்கள் சுற்றுப்பயணம் செய்த அத்வானியும் பண்டாரியும் தொண்டர்களின் நாடிபிடித்துப் பார்த்தனர். அதன்மூலம் முன்னாள் ஜனசங்கத்தினர் ஒரு முடிவை நோக்கி நகரத் தொடங்கிவிட்டனர் என்ற செய்தி ஜனதா கட்சியின் முக்கியத் தலைவர்களுக்கு மன மகிழ்ச்சியைக் கொடுத்தது. இலக்கு நெருங்கிக் கொண்டிருப்பதை உணர்ந்தனர். 1980 ஏப்ரல் மாதம் கூடிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு கூட்டத்தில் முன்னாள் ஜனசங்கத்தினர் குறித்து இறுதியான, உறுதியான முடிவை எடுக்கவேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தினர். ஜெகஜீவன் ராம் போன்ற மூத்த தலைவர்கள் பலரும் முன்னாள் ஜனசங்கத்தினரின் நீக்கத்துக்கு ஆதரவான நிலைப்பாட்டில் இருந்தனர். அதற்கான ஆதரவைத் திரட்டும் முயற்சியிலும் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர்.

ஒருகட்டத்தில், ஆர்.எஸ்.எஸ்ஸில் அங்கம் வகிக்கும் வாஜ்பாய், அத்வானி உள்ளிட்ட அத்தனை ஜனசங்கத்தினரையும் கட்சியை விட்டு நீக்குவதாக அறிவித்தனர் ஜனதா கட்சித் தலைவர்கள். இதுதான் நடக்கும் என்பதை அத்வானியும் வாஜ்பாயும் இன்னபிற தலைவர்களும் ஏற்கெனவே உணர்ந்திருந்தனர். அதனால் அதிகம் அலட்டிக்கொள்ளாமல் ஆகவேண்டிய காரியங்களைச் செய்யத் தயாராகினர். முதல் கட்டமாக மாநாடு கூட்டி, அடுத்து என்ன செய்வது என்பது பற்றி விரிவாக விவாதித்து முடிவெடுப்பது என்று தீர்மானித்தனர். முன்னதாக, ஆர்.எஸ்.எஸ் தலைமையுடன் விரிவாக ஆலோசித்தனர்.

டெல்லி ஃபெரோஷ் ஷா கோட்லா மைதானத்தில் 1980 ஏப்ரல் 5 அன்று தொடங்கி இரண்டு நாள்களுக்கு மாநாடு நடத்தப்பட்டது. நாடு தழுவிய அளவில் இருந்து ஏராளமான ஸ்வயம்சேவகர்கள் மாநாட்டுக்கு வந்திருந்தனர். சுமார் நான்காயிரம் பேர் திரண்டிருந்த மாநாட்டின் இறுதி நாளன்று புதிய கட்சியைத் தொடங்குவது என்று முடிவுசெய்யப்பட்டது. அன்றைய தினமே கட்சியின் பெயரும் அறிவிக்கப்பட்டது.

பாரதிய ஜனதா கட்சி!

மிக எளிமையான பெயர். ஜனதாவின் முன்னொட்டாகத் தங்கள் பாரம்பரியத்தைப் பறைசாற்றும் ‘பாரதிய' என்ற பதத்தைச் சேர்த்திருந்தனர். இதே முன்னொட்டைத்தான் முன்பு  ஜனசங்கத்துக்கும் வைத்திருந்தனர். இன்னும் சொல்லப் போனால், பாரதிய ஜனசங்கம் என்ற பழைய பெயரையே மீண்டும் சூட்டிவிடலாம் என்று பலரும்

யோசனை கூறினர். ஆனால் புதிய ரத்தம் பாய்ச்ச வேண்டிய சூழலில், கட்சியின் பெயரும் புதியதாக இருக்கவேண்டும் என்று தீர்மானித்தனர் தலைவர்கள். ஆக, பாரதிய மக்களின் கட்சியாக இருக்கவேண்டும் என்ற எண்ணத்தோடு பாரதிய ஜனதா கட்சி என்கிற புதிய கட்சி உருவானது.

புதிய கட்சியின் தலைவராக அடல் பிஹாரி வாஜ்பாய் தேர்ந்தெடுக்கப்பட்டார். பொதுச்செயலாளர்களாக லால் கிருஷ்ண அத்வானி, சிக்கந்தர் பக்த், சூரஜ்பான் ஆகிய மூவரும் தேர்வுசெய்யப்பட்டனர். ஜனதாவில் இருந்த முன்னணித் தலைவர்கள் பலரும் கட்சியின் முக்கியப் பொறுப்புகளுக்கு நியமிக்கப்பட்டனர். கடந்த மக்களவைத் தேர்தலில் வெற்றிபெற்ற முன்னாள் ஜனசங்கத்தினர் பலரும் பாரதிய ஜனதா கட்சியில்  இணைந்தனர். 93 எம்.பிக்களுடன் ஜனதாவுக்குள் இருந்தவர்கள் வெறும் 16 எம்.பிக்களுடன் அங்கிருந்து வெளியேறி, தனிக்கட்சியைத் தொடங்கியிருந்தனர்.

கட்சித் தொண்டர்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் மாநாட்டில் பேசிய வாஜ்பாய், நாங்கள் ஜனசங்கத்தைப் போல அல்லாமல் இன்னும் தீவிரமாகவும் சிறப்பாகவும் செயல்படுவோம் என்று வாக்குறுதி கொடுத்தார். அதேசமயம், பழைய ஜனதா கட்சியையும் அதன் செயல்பாடுகளையும் வாஜ்பாய் விமரிசிக்கவில்லை. மாறாக, ஜனதா கட்சியின் இருந்ததன் மூலமும், ஜனதா அரசில் பங்கேற்றதன் மூலமும் பெற்ற அரசியல் அனுபவங்களைக் கொண்டு புதிய கட்சியை சரியான பாதையில் செலுத்துவோம் என்றார் வாஜ்பாய்.

ஜனசங்கத்தின் நிறுவனர்களான சியாமா பிரசாத் முகர்ஜி, தீனதயாள் உபாத்யாயாவின் படங்களைத்தான் கட்சி தொடங்கிய மாநாட்டு மேடையில் வைத்திருந்தனர். அதேசமயம், மைய நீரோட்டத்தில் இருந்து விலகிவிடக்கூடாது என்பதற்காக ஜெயப்ரகாஷ் நாராயணனின் படத்தையும் மேடையில் வைத்திருந்தனர்.

புதிய கட்சிக்குச் சின்னம், கொடி ஆகியவற்றைத் தேர்வு செய்யும் பணிகள் தொடங்கின. கட்சியின் கொடியில் மூன்றில் இரண்டு பங்கு காவி நிறமும் ஒரு பங்கு பச்சை நிறமும் இருக்கும் வகையில் கொடி வடிவமைக்கப்பட்டது. இது ஜனசங்கம், ஜனதா ஆகிய கட்சிகளின் கொடியை ஓரளவுக்கு ஒத்திருந்தது. முக்கியமான வேறுபாடு என்னவென்றால், கொடியின் நடுவில் தாமரை பொறிக்கப்பட்டிருந்தது. ஏனென்றால், தங்களுடைய சின்னமாக தாமரையைக் கொண்டுவர வேண்டும் என்பது அத்வானி, வாஜ்பாய் உள்ளிட்டோரின் விருப்பம்.

அடுத்து கட்சிக்கான சின்னத்தைத் தேர்வுசெய்ய விரும்பினர். மக்களவைத் தேர்தல் எதுவும் கண்ணுக் கெட்டிய தூரத்துக்கு இல்லை என்றபோதும் மாநில சட்டமன்றத் தேர்தல்கள் எதுவும் வந்தால் அவற்றை எதிர்கொள்வதற்கு ஏதுவாக, கட்சிக்கென்று பிரத்யேக சின்னத்தைப் பெற முடிவுசெய்தனர். அதற்காக இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் எஸ்.எல்.ஷக்தரைச் சந்தித்துப் பேச அத்வானி தலைமையில் ஒரு குழு சென்றது.

உண்மையில் ஏர் உழவனைப் போன்ற தோற்றம் கொண்ட சின்னம்தான் அத்வானியின் விருப்பம். ஆனால் தேர்தல் ஆணையத்தில் பதிவுசெய்யப்படாத கட்சியாக பாஜக இருந்ததால் சுயேட்சை சின்னங்களில் இருந்து ஒன்றையே தரமுடியும் என்று சொல்லிவிட்டது தலைமைத் தேர்தல் ஆணையம். முன்னரே முடிவு செய்திருந்தது போல சுயேட்சை சின்னங்களின் பட்டியலில் இருந்த தாமரைச் சின்னத்தைத் தங்கள் கட்சிக்கு ஒதுக்குமாறு கோரினார் அத்வானி. பிறகு விதிமுறைப்படி தாமரை சின்னத்தை பாஜகவுக்கு ஒதுக்கியது இந்தியத் தேர்தல் ஆணையம்.

புதிய கட்சியை மக்களிடம் கொண்டுசெல்ல வேண்டிய பெரும் பொறுப்பை வாஜ்பாய், அத்வானி, சுந்தர் சிங் பண்டாரி உள்ளிட்ட தலைவர்கள் ஏற்றுக்கொண்டு நாடு தழுவிய அளவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டனர். அவர்களுக்குத் துணையாக ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் பலரும் இருந்தனர். கூடவே, ஜனதாவிலிருந்து விலகிய மக்களவை மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களும் சேர்ந்துகொண்டனர். பிரபல வழக்கறிஞர்கள் ராம் ஜெத்மலானி, மொரார்ஜி தேசாய் அமைச்சரவையில் இடம்பெற்ற சாந்தி பூஷன் போன்றோர் பாஜகவில் சேர்ந்தனர்.

இந்தியாவைச் சூழ்ந்திருக்கும் இந்திரா என்கிற இருள் அகன்றே தீரும், சூரியன் என்கிற தேர்தல் உதித்தே தீரும், தாமரை மலர்ந்தே தீரும் என்று வாஜ்பாய் பேசியது மாநாட்டில் திரண்டிருந்த தொண்டர்களை உற்சாக வெள்ளத்தில் மிதக்கவைத்தது. ஆம், தாமரை மலர்ந்தே தீருமென்று சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன்பே முழங்கியிருந்தார் வாஜ்பாய்!

(ஆர். முத்துக்குமார், எழுத்தாளர். ‘தமிழக அரசியல் வரலாறு', ‘இந்துத்வ இயக்க வரலாறு' முதலான நூல்களின் ஆசிரியர். தொடர்புக்கு: writermuthukumar@gmail.com)

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com