தினந்தோறும் கொண்டாட்டம்!

தினந்தோறும் கொண்டாட்டம்!

'கலா சார்தான் முதலில் ஜெயிலர் படம் பார்த்தார். அனியும் நெல்சனும் அவர்கிட்ட படம் எப்படி இருக்குது என்று கேட்டார்கள். அனி, ‘சார்.. படம் பேட்ட மாதிரி வருமா' என்று கேட்டிருக்கிறார்.

கலா சார், ‘பேட்டையா..? இது 2023 பாட்ஷா' என்றார்.

அதுக்கு பிறகு ஆடியோ வெளியீட்டு விழாவில், ‘மெஹா ஹிட்..ரெக்கார்ட் மேக்கர்' என்று மனம் திறந்து வெளிப்படையாகச் சொன்னார். அவர் பெரிய ஜோசியர் ஆகிடலாம் என்றேன்.

ஜெய்லர் படம் பெரிய ஹிட்டானது. ஐந்து நாள்தான் நான் ஹேப்பியா இருந்தேன். வாவ் சூப்பர் அப்படின்னு. அதன்பிறகு, அடுத்தப்படத்துக்கு மனசுபோய் ஒரே டென்ஷன். இதுக்கு மேல், இதுக்கு சமமா எப்படி ஹிட் கொடுக்கிறது? அதைதானே எதிர்பார்ப்பாங்க..ரொம்ப டென்ஷனா இருக்கு. அடுத்தப் படம் என்ன பண்றதுனே தெரியல.

‘பாட்ஷா' படத்தின் மிகப்பெரிய வெற்றிக்குப்பிறகு இதேபோலத்தான் இருந்தேன். அப்போது வருஷத்துக்கு ஒரு படம் பண்ணிகிட்டு இருந்தேன். திரும்பவும் 'பாட்ஷா' மாதிரி படம் பண்ணினால் மாட்டிக்கிவோம்னு அதிலேர்ந்து விலகி ‘முத்து' படம் பண்ணினேன். இப்போ ஜெயிலருக்குப் பிறகு ‘லைகா' வுடன் வேறு பாணியில் படம் பண்ணிட்டு இருக்கேன். எனக்கே இந்த டென்ஷன் இருந்தா நெல்சனுக்கு எவ்வளவு டென்ஷன் இருக்கும்?'

- இது ஜெயிலர் சக்ஸஸ் மீட்டில் ரஜினி பேசியது. அபூர்வராகங்களில் பாண்டியனாக 1975இல் அறிமுகமானபோது 24 வயது. 1978 இல் ஒரே வருடத்தில் 21 படங்கள் வெளியாயின. கடந்த ஐந்து வருடங்களில் ஆறு படங்கள் வெளியாகி அதில் மூன்று ஹிட். தனது 73ஆவது வயதில் ஹீரோவாக நடிக்கும் சூழல். அந்தப் படம் வசூல் வரலாறுகளை அடித்து நொறுக்கி சூப்பர் ஹிட். கையில் லால் சலாம். தலைவர் 170, 171 என்று மூன்று படங்கள். இந்த இடம் உலக சினிமாவிலே அரிதான ஒன்று.

பண விஷயத்திலும் ரஜினி அதிர்ஷ்டசாலிதான். 1976இல் வெளியான மூன்றுமுடிச்சு படத்துக்கு 2000 ரூபாய் சம்பளம் வாங்கியவர், 1978இல் நடித்த ப்ரியா படத்துக்கு ஒரு லட்சத்துப் பத்தாயிரம் பெறுகிறார். தற்போது ரஜினி ஒரு படத்துக்கு எவ்வளவு வாங்குகிறார் என்பதை ஊர்ஜிதப்படுத்த முடியாது. ரஜினியோ தயாரிப்பாளரோ அது பற்றி மூச்சு விடுவதில்லை. உலாவுவது எல்லாம் யூகங்கள்தான். ஒரு படத்துக்கு ரூ.100 கோடி வாங்குவதாக வைத்துக் கொண்டால் அது ப்ரியா படத்தில் வாங்கியதை விட ஒன்பதாயிரத்து தொண்ணூறு (9090) மடங்கு.

இவ்வளவிற்குப் பின் ஜெயிலரின் வெற்றி தரும் கொண்டாட்டமான மகிழ்ச்சி ஐந்து நாளுக்குதான் தாங்குகிறது என்பது ரஜினியின் வார்த்தைகள் சொல்லும் செய்தி. இது மேடைக்கான பேச்சா? ரஜினியின் மனநிலையா?

உலகில் பல கோடி மனிதர்களின் மனது ரஜினியின் வார்த்தைகளைப் போல் விரும்பியதை அடைந்த பின்னும் மன அழுத்தத்தில் பரிதவிக்கிறது.

‘வாழ்க்கை என்பது கொண்டாடுவதற்கே. அதன் மையமே கொண்டாட்டம்தான். யாராவது உங்களைக் கேட்கக்கூடும். அல்லது நீங்களே உங்களைக் கேட்டுக்கொள்ளுங்கள்: நீங்கள் உழைப்பதற்காக வாழ்கிறீர்களா? அல்லது வாழ்வதற்காக உழைக்கிறீர்களா? உங்களுக்கும் மகிழ்ச்சிக்கும் இடையே இருக்கும் மிகப்பெரிய தடைகளில் ஒன்று மன அழுத்தம். மன அழுத்தம் என்பதன் மூலம் நான் சொல்ல வருவது கடந்தகால, நிகழ்கால அல்லது எதிர்கால சூழலில் ஏதாவது கெட்டது நடந்துவிடுமோ என்று உங்கள் மனதில் கற்பனை செய்துகொள்ளுவதால் ஏற்படும் அச்சம், நடுக்கம், அழுத்தம், கவலை, கடினமான சூழல்,' என்கிற ஓஷோவின் கருத்துகள் நாம் என் கொண்டாட்ட மனோநிலையைத் துறந்து வாழ்கிறோம் என்பதைச் சுருக்கமாக விளக்குகின்றன.

பல ஆண்டுகளுக்கு முன்னர் ஜே.கிருஷ்ணமூர்த்தி,  ‘இந்தியா கவலைகள் கொண்ட நாடாக இருந்தாலும் அங்கே ஒரு புன்னகை இருப்பது வினோதமான ஒன்று. இதைக் கவனித்துள்ளீர்களா? ஏழைகள் சிரிக்கிறார்கள். பட்டினியில் இருந்தாலும் சிரிக்கிறார்கள். உலகில் எங்கும் இப்படி இல்லை‘ என்றார். கொண்டாட்டத்தைப் பற்றி அவரிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலாகக் கூறியதன் ஒரு பகுதி இது.

பணமில்லாமல் எப்படி கொண்டாடலாம் என்பதை பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களிடமிருந்து முன்னேறிய சமூகங்கள் கற்றுக் கொள்ளலாம்.

கொண்டாட்டங்களைத் தடுக்கும் மூன்று முக்கிய விஷயங்கள்.

1. வாழ்க்கையின் பிரச்னைகளும் அவற்றைப் பற்றிய கவலைகளும்.

ஒருமுறை தனது வாழ்வின் நிறைந்திருக்கும் பிரச்னைகளை சிஷ்யன் குருவிடம் கூறி என்ன செய்வதென்று கேட்க, ஆழ்ந்த சிந்தனைக்கு சென்ற குரு ஒரு கிலோ உப்பை கொண்டு வரச் சொன்னார்.

அதைச் சரி பாதியாக பிரிக்கச் சொன்னார். ஒரு பாதியை ஒரு பாத்திரத்தில் போட்டு நீர் ஊற்றச் சொல்லி கரைக்கச் சொன்னார். பின் அதைக் குடிக்க சொன்னார். சுவை எப்படி? என்றார்.

 சிஷ்யனால் குடிக்க முடியவில்லை. முகம் அஷ்ட கோணலாகியது. மறு பாதியை எடுத்துக் கொண்டு உடன் வரச் சொன்னார் குரு. சிறிது தூரம் சென்ற பின் ஒரு குளத்தை அடைந்தார்கள். சிஷ்யனை உப்பை குளத்தில் கரைக்கச் சொன்னார். பின் அந்த தண்ணீரைக் குடிக்கச் சொன்னார். சுவை எப்படி என்று மீண்டும் கேட்டார் குரு. ‘மனதை பாத்திரமாக வைத்திருக்காமல் குளமாக மாற்று' என்றார் குரு.

2. அடுத்தநாளைக் குறித்த பயம் கொண்டாட்டங்களில் பங்கேற்க விடாமல் தடுக்கிறது. நாளையைப் பற்றிய நடுக்கம் கொள்ளலாம். ஆனால், பயம் கொள்வதால் பயன் ஏதும் இல்லை. அந்த பயத்தை தயாரிப்புகளால் (preparations) அழியுங்கள். வாழ்க்கை பூந்தோட்டமாகும்.

3. ‘நினைத்ததை அடைந்து விட்டேன். காசு பணத்துக்கு பிரச்னை இல்லை. ஆனாலும் ஏதோ ஒரு வெறுமை. சந்தோஷத்தில் கொண்டாட மனது ஒப்பவில்ø‘‘ என்று புலம்பும் கூட்டமும் அதிகரித்து வருகிறது. இவர்கள்தான் மாடர்ன் சாமியார்களின் கஸ்டமர்கள்.

‘என்னிடம் எல்லாம் இருக்கிறது ஆனால் மகிழ்ச்சியைக் கொண்டாட முடியவில்லை' என்று ஒரு அரசன் ஜென் துறவியிடம் வந்து தீர்வு கேட்டு மன்றாடினான்.

‘நான் ஒன்று சொல்வேன் செய்வீர்களா? '

‘கண்டிப்பாக'

 ' உங்கள் அரண்மனையில் இருக்கும் விலையுயர்ந்த எல்லாவற்றையும் வைரங்களாகவும் வைடூரியங்களாகவும் மாற்றி அதை ஒரு பெரிய பையில் போட்டு படைகளின்றி ஆயுதமின்றி நான் சொல்லும் இடத்துக்கு வாருங்கள்' என்றார் துறவி. ஒரு மாதத்துக்குப் பின் அரசன் துறவியை சொன்னபடி தனியாக வந்து சந்தித்தான்.

துறவியின் கையில் அரசன் வைரங்கள் வைடூரியங்கள் அடங்கிய பையைக் கொடுத்தார். அதைப் பிரித்துப் பார்த்த துறவி, அதை எடுத்துக்கொண்டு எதிர்பாராத கணத்தில் ஒடத் தொடங்கினார். அதிர்ந்த அரசன் துரத்தினார்... துரத்தினார்... பிடிக்க முடியவில்லை. அந்தக் காடு அரசருக்குப் பரிச்சயமில்லாத ஒன்று.

மாயமான துறவியைத் தேடி நீண்ட தூரம் அலைந்து, பின் சோர்வாக ஒரு மரத்தின் கீழ் அமர்ந்தார். ஏமாற்றப்பட்டது மனதை அதிகமாக கோபப்படுத்தியது. அவருக்கு தெரிந்த கெட்ட வார்த்தைகளால் துறவியை அர்ச்சித்தார்.

நீண்ட நேரம் கழித்து எதிர்பாராதவிதமாகத் துறவி திரும்பி வந்தார், கையில் அரசரின் பை. புன்னகையுடன் அரசரிடம் தந்தார். வாங்கிய அரசர் எல்லாம் இருக்கிறதா என்று வேகவேகமாக சரிபார்த்தார். முகத்தில் மகிழ்ச்சி.

‘நீ ஒரு ஏமாற்றுக்காரன். நான் உன்னைத் தேடி வேட்டையாடிக் கொன்று விடுவேன் என்ற பயத்தில் திரும்பக் கொடுத்தாயா? நீ கேட்டிருந்தால் என் அரச சபையில் பெரிய அதிகாரமும் சகல வசதிகளும் செய்து கொடுத்திருப்பேன். ஏன் இப்படி?' என்றார் அரசர்.

‘நான் யாருக்கும் பயப்படாதவன். ஒரு மணி நேரம் முன்பு இதே செல்வம் உங்களிடமிருந்தது. மகிழ்ச்சி இல்லை. நிச்சயமற்ற தன்மைக்குப் பின் மீண்டும் இப்போது அதே செல்வம் உங்கள் கையில். ஆனால் மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள். மகிழ்ச்சி என்பது உங்களுக்குள் உள்ளது. அனைத்தும் மனசுக்குள் உள்ளதே. தேடுதல் பெரிதாக இருக்கும்போதும் கிடைப்பதும் பெரிதாகக் கிடைக்கும். மகிழ்ச்சியும் பெரிதாகக் கிட்டும். இந்த பொருட்களையெல்லாம் உரிமை கொண்டிருப்பதிலோ, அறிந்துகொண்டிருப்பதிலோ மகிழ்ச்சி இல்லை. மகிழ்ச்சியான கொண்டாட்டக் காரர் ஆகுங்கள். கொண்டாடுங்கள் வாழ்வை,' என்ற துறவியை இறுக அனைத்து முத்தமிட்டான் அரசன்.

இந்த இதழில், நாற்பது பேர் தாங்கள் எப்படி மகிழ்ச்சியைக் கொண்டாடுகிறோம் என்று பகிர்ந்துள்ளனர். பண்டிகை தினத்தன்று மட்டுமல்ல எல்லா நாளும் கொண்டாடப்பட வேண்டிய தகுதி உங்கள் வாழ்க்கைக்கு உள்ளது. அப்புறம் என்ன..கொண்டாடுங்கள் உங்கள் வாழ்வை தினம் தினம்.

என்றும் உங்கள்

அந்திமழை இளங்கோவன்

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com