திராவிட இயக்க நாடகங்கள்

திராவிட இயக்க நாடகங்கள்

வாள் முனையைவிடப் பேனா முனை கூர்மையானது' என்ற பிரெஞ்சு சிந்தனையாளர் வால்டேரின் கூற்றினை மேடைகளில் முழங்கியும், எழுதியும் வந்த திராவிட இயக்கத்தினர் அடிப்படையில் செயல்பாட்டுவாதிகள்.

திராவிடக் கருத்தியல் பிரசாரத்திற்குத் தொடக்கம் முதலாகவே எழுத்தும் கலையும்  பெரிய அளவில் பயன்பட்டன. 1967ஆம் ஆண்டில் திராவிட முன்னேற்றக் கழகம் தமிழ்நாடு மாநிலப் பேரவைத் தேர்தலில் வெற்றியடைந்தது. ஆட்சியைக் கைப்பற்றியதும் ‘கூத்தாடிகள் ஆட்சியைப் பிடித்து விட்டார்கள்‘ என்று மேனாள் முதலமைச்சர் பக்தவத்சலம் சொன்னது தற்செயலானது அல்ல.  ஐம்பதுகள் காலகட்டத்தில் பெரும்பான்மை மக்கள் கல்வியறிவு பெற்றிடாத தமிழகத்தில் திராவிட இயக்கத்தினர்,  நிகழ்த்துக் கலையான நாடகங்கள்மூலம் திராவிட இயக்க அரசியலைப் பரப்பிட முயன்று வெற்றியடைந்தனர்.

ஈரோடு நகரில்  தமிழ் மாகாண நாடகக் கலை அபிவிருத்தி மாநாடு (1944)  நடைபெற்றபோது அறிஞர் அண்ணா பேசிய பேச்சு, நாடகம் பற்றிய திராவிட இயக்கத்தினரின் கருத்தைப் புலப்படுத்துகிறது: ‘‘எலும்பு பெண்ணுருவான அருட்கதைகளைப் பற்றிப் பாடியும் ஆடியும் வந்தது போதும். நமது பெண்மக்கள் எலும்புருவானதுதவிரப் பயன் எதுவுமில்லை. இனிப் பெண்கள் எலும்புருவாகும் பரிதாப வாழ்வைச்  சித்திரிக்கும் நாடகங்களை நடத்துங்கள். கண்ணைப் பெயர்த்தெடுத்து அப்பிய கண்ணப்பர் கதையை ஆடியது போதும். இனிக் கோயில்களில் கும்பாபிஷேகம் செய்பவன் ஊரில் கொள்ளையடிக்கும் விஷயத்தை விளக்கும் நாடகத்தை நடத்திக் காட்டுங்கள்; வாழ்க்கையைச் சித்திரித்துக் காட்டுங்கள். ஏழையின் கண்ணீர், விதவையின் துயரம், மதத் தரகர்களின் மமதை ஆகியவற்றை விளக்கும் அறிவு வளர்ச்சி நாடகங்களை நடத்துங்கள்.''

திராவிட இயக்கத்தினர் நிகழ்த்திய புராண வரலாற்று நாடகங்களில்கூட வைதிக சநாதனத்திற்கும் ஆரியத்திற்கும் எதிரான கருத்துகள் வலியுறுத்தப்பட்டன; தமிழ்ப் பண்பாட்டை நிறுவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன; உரையாடல்களிலும் தமிழ்மொழி நடை புதுப்புனைவுடன் வெளியானது. கலைஞர் எழுதிய 'மணிமகுடம்' நாடகத்தில் ஏழைமக்கள் வாழ்கிற வீடுகளை அழித்துவிட்டு, அங்கே கோயில் கட்டுவது என்று மன்னன் முடிவு செய்கிறான். அந்தக் கொடிக்கால் நகரத்தைக் கோயில் எழுப்புவதற்குப் பயன்படுத்தக் கூடாது என்பது நாடகத்தின் மையக் கருத்து. இதனால் புரட்சி வெடிக்கிறது. நாடகத்தில் கலைஞரின் உரையாடலுக்குச் சான்று: ‘‘நாங்கள் வெளியேறுகிறோம்! அமைச்சருக்குச் சிரமம் வேண்டாம். ஆண்டவனே! நீ இருந்தால் கேள், இந்த அக்கிரமக்காரர்களை! அய்யோ! ஆயிரம் வீடுகளை எரித்துவிட்டு, அங்கே நீ இருந்து சிரிக்கப் போகிறாயாமே! அடுக்குமா, உனக்கு இந்த அநியாயம், சொல்? சிரி, நன்றாகச் சிரி! ஏழைகளின் கண்ணீரில் நீந்திக்கொண்டே சிரி! ஏழைகள் சமுதாயமே, நீ அழு! ஆண்டவன் சிரிக்கப்போகிறான் - அந்தரத்திலே இருக்க இடமின்றித் தொங்கும் அவனுக்கு அரசாங் கத்தார் ஆடம்பரமான ஆலயம் அமைக்கப் போகிறார்கள்! ஆகவே, எதிர்க்க முடியாத ஏழையே! ஏமாற்றப்பட்ட தோழனே! நீ அழு அழு ! இளி!  அஞ்சு! குனி ! பிதற்று ! புலம்பு! ஒப்பாரி வை ! கண்ணீர் உனக்கு மட்டுந்தான்  சொந்தம் - அதை யாரும் அபகரிக்க முடியாது ! ஆகவே, அழு, நண்பா அழு! உனக்கு விடுதலையே கிடையாது ! இந்தச் சீமான்கள் இருக்கும்வரை ! இந்தக் குருநாதர்கள் இருக்கும்வரை ! உனக்கு விடுதலையே கிடையாது! விடுதலை கிடையாது!''

திராவிட இயக்கக் கருத்தியலின் முதல் நாடகமாகக் கருதப்படுவது 1934 ஆம் ஆண்டு சென்னை விக்டோரியா பப்ளிக் ஹாலில், பெரியார் தலைமையில் அரங்கேறிய பாரதிதாசனின் ‘இரணியன் அல்லது இணையற்ற வீரன்' நாடகம்தான். தொன்மக் கதையை மறுவாசிப்புச் செய்து புதிய பிரதியாக எழுதப்பட்ட அந்த நாடகம் பின்னர்  தமிழக அரசால்  தடைசெய்யப்பட்டது. 

திராவிட இயக்கக் கவிஞரான பாரதிதாசன் அமைதி, படித்த பெண்கள், கற்கண்டு, பொறுமை கடலினும் பெரிது, இன்பக்கடல், குடும்ப விளக்கும் குண்டுக்கல்லும், விகட கோர்ட் போன்ற சமூக நாடகங்களையும் சேரதாண்டவம், பிசிராந்தையார், தலைமலை கண்ட தேவர், கழைக்கூத்தியின் காதல், சௌமியன், நல்ல தீர்ப்பு, சத்திமுத்தப் புலவர், அம்மைச்சி போன்ற  வரலாற்று நாடகங்களையும் படைத்திருக்கிறார்.  அமைதி நாடகம் பண்ணையாரின் கொடுமையை எதிர்த்து எழுதப்பட்டது. கற்கண்டு நாடகத்தில் இளம்பெண்ணை முதியவன் மணந்திடும் கொடுமை எதிர்க்கப்படுகிறது. இன்பக்கடல் நாடகம் காசுக் காக ஒருத்தியையும் காதலுக்காக ஒருத்தியையும் மணந்துகொள்ள விரும்பும் ஒருவனின் முயற்சியைத் தடுத்தது. பொறுமை கடலினும் பெரிது என்னும் நாடகம் அனைவருக்கும் உபதேசம் கூறித் தன் காரியத்தில் கண்ணாக இருக்கும் பணக்காரரை மற்றவர்கள் பழிவாங்கும் நிகழ்வைச் சொல்வது. விகடகோர்ட் என்ற நாடகம் கடவுள், சமய நம்பிக்கை போன்றவற்றைப் பகடி செய்தது. பாரதிதாசனின் நாடகங்களில் திராவிட இயக்கக் கொள்கைகள் வெளிப்பட்டன; தமிழரின் தனித்துவத்துவத்திற்கு முன்னுரிமை தரப்பட்டது.

காங்கிரஸ் கட்சியினரின் ஆட்சியின் மீதான விமர்சனத்துடன் அன்றைய தமிழ்ச் சமூகத்தில் ஆதிக்கம் செலுத்திய சமூகக் கொடுமைகளுக்கு எதிராகச் சமூக சீர்திருத்தக் கருத்துகள் நாடகங்கள் மூலம் முன்வைக்கப்பட்டன. குறிப்பாக வைதிக சநாதனம் ஏற்படுத்தியிருந்த சாதிய ஏற்றத்தாழ்வு, தீண்டாமை, பால் சமத்துவமின்மை,  புராணக் கட்டுக்கதைகள், சமஸ்கிருத ஆதிக்கம் போன்றவற்றுக்கு எதிரான விமர்சனங்களை நாடகங்கள் சித்தரித்தன. அதேவேளையில் தமிழ் மொழி, தமிழர் பற்றிய பேச்சுகளும் உரத்த குரலில் முன்மொழியப்பட்டன. திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தோற்றுவித்த சி.என்.அண்ணாதுரை எழுத்தாக்கத்தில் உருவான ‘சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம் அல்லது  சந்திரமோகன்' நாடகம் தமிழகத்தில் ஏற்கெனவே நிகழ்த்தப்பட்ட நாடகங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டு விளங்கியது.

திராவிட இயக்கத்தின் கொள்கைப் பிரசாரமாக அறிஞர் அண்ணாவின் நாடகங்கள் விளங்கின. அதில் சந்திரமோகன் நாடகம் முக்கியமானது.

சிவாஜியின் துணைவனான  சந்திரமோகன் ஆரியரின் கபடம், சூழ்ச்சி குறித்து சிவாஜியை எச்சரிக்கிறான். பகுத்தறிவை வலியுறுத்தும் வகையில் சிவாஜியின் இறுதிக் கூற்று அமைகிறது. சந்திரமோகனிடம் அவன், ‘‘வீரனே! அஞ்சா நெஞ்சு படைத்த நீ, மக்களிடம் பரவியிருக்கும் மயக்கத்தைப் போக்கு. வாளால் அரசுகளை அமைத்து விடலாம்! ஆனால் அது நிலைக்க அறிவு தேவை! அந்த ஆயுதத்தை வீசு! நாடு முழுவதும் வீசு! பட்டி தொட்டிகளில் எல்லாம் வீசு! மக்களை வீரர்களாக்கு! சந்திரமோகனா, சகலரையும் சந்திரமோகன்களாக்கு! ஜெயம் பெறுவாய்!'' என்று கூறுகிறான். இந்த நாடகம் திராவிட இயக்க மாநாடுகளிலும், பிற இடங்களிலும் பல தடவைகள் நடிக்கப்பட்டது. அறிஞர் அண்ணா, காகபட்டராக நடித்தார்.

அறிஞர் அண்ணா  சந்திரோதயம், வேலைக்காரி, ஓர் இரவு, காதல் ஜோதி, எதையும் தாங்கும் இதயம், பாவையின் பயணம், அவன் பித்தனா?, இரக்கம் எங்கே?, புதிய மடாதிபதி, சொர்க்க வாசல், நல்லதம்பி, கண்ணீர்த்துளி, கண்ணாயிரத்தின் உலகம் முதலான  சமூக நாடகங்களை எழுதியிருக்கிறார். சந்திரோதயம் நாடகம், ஜமீன்தார்களின் கொடூர நடத்தைகளையும் மடங்களில் நடக்கும் கயமையையும் பிறரை ஏய்த்துப் பிழைக்கும் சூழ்ச்சிகளையும் காட்டுகிறது. வேலைக்காரி நாடகத்தில் சாதிப் பற்று, பணத்திமிர், பொருளாதார ஏற்றத்தாழ்வு, கடவுள் நம்பிக்கை, பெண்களின் அவல நிலை இடம் பெற்றுள்ளன. ‘கத்தியைத் தீட்டாதே! புத்தியைத் தீட்டு', ‘சட்டம் ஓர் இருட்டறை, அதிலே வக்கீலின் வாதம் ஓர் விளக்கு' போன்ற அண்ணாவின்  நாடக வசனங்கள் குறிப்பிடத்தக்கன. திராவிட இயக்க மாநாடுகளில் இரவுவேளையில் இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் அண்ணாவின் நாடகங்களைக் கண்டு ரசித்தனர்.

என் .எஸ் .கிருஷ்ணன் மெல்லிய நகைச்சுவை மூலம் சமூக விமர்சனக் கருத்துகளை நாடகமாக்கிட முயன்றதற்கு எடுத்துக்காட்டு அவருடைய ‘நல்லத்தம்பி‘ நாடகம். அவர், பகுத்தறிவுப் பிரச்சாரத்தையும் காந்தியத்தையும் ஒத்திசைந்து செல்கிற  போக்கை நாடகம் நிகழ்த்துவதில் பின்பற்றினார். வைதிக சநாதன வருணாசிரம நெறிக்கு மற்றாக நாட்டுப்புற மக்களின் வாழ்க்கையையும்  பண்பாட்டையும் உயர்த்திப் பிடித்தார் என் எஸ் கிருஷ்ணன் என்பதற்கு அடையாளம் ‘கிந்தனார்' சமூக அங்கத நாடகம்.

1944&ஆம் ஆண்டு 'திராவிட நடிகர் கழகம்' என்ற பெயரில் தோற்றுவிக்கப்பட்ட நாடகக் குழுவினரின் முதல் நாடகமாக கலைஞரின் 'பழனியப்பன்' நடத்தப் பட்டது. கலைஞர், தான் எழுதும் நாடகத்தில் மட்டும் நடிப்பது என்ற நிபந்தனையுடன்  நடித்தார். நாடகமும் அரசியலும் இரு கண்கள் என்று தன்னுடைய இளம் வயதில் ஆர்வத்துடன் செயல்பட்ட கலைஞரின் பொருளியல் நிலை வளமற்று இருந்தது. அவருடைய இரண்டாவது திருமணம் 1948ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 15ஆம் நாள் நடைபெற்றது. திருமணச் செலவினங்களை ஈடுகட்டும்வகையில் திருச்சி நகரில் அண்ணா தலைமையில் 'தூக்குமேடை' நாடகம் நிகழ்த்தப்பட்டது. நாடகத்திற்கு வசூலான எண்ணூறு ரூபாய் திருமணச் செலவிற்குப் பயன்படுத்தப்பட்டது.         

அறுபதுகளில் எளிய மக்களின் அன்றாட வாழ்க்கை, புயலினால் பெரும் பாதிப்பிற்குள்ளானபோது, திராவிட முன்னேற்றக்கழகம், கலைஞர் தலைமையில் குழு அமைத்தது. புயலின் சீற்றத்தினால் நலிவடைந்த மக்களுக்குக் கைத்தறி வேட்டி, சேலை, துண்டு வழங்கிடுவதற்காக ரூ.25,000 நிதி திரட்டப்பட்டதில், நாடகங்கள் பெருமளவில் உதவின. நிதி திரட்டுவதற்காக கலைஞரின் தூக்குமேடை நாடகம் நிகழ்த்தப்பட்டது. கலைஞர் பாண்டியனாகவும்  சிவாஜி அபிநயசுந்தரராகவும் வேடமேற்றுச்  சிறப்பாக நடித்தனர்.

கலைஞர் எழுதிய ‘காகிதப்பூ' நாடகம் தேர்தல் நிதி திரட்டுவதற்காக 1966&ஆம் ஆண்டில் தமிழகமெங்கும் பல இடங்களில் நடத்தப்பட்டது. கட்சித் தோழர்களுடன் பொது மக்களும் காகிதப்பூ நாடகத்தைப் பார்த்து மகிழ்ந்தனர். காகிதப்பூ நாடகம் நிகழ்த்துவதன் மூலம் கிடைத்த பணமானது, தி.மு.க.வின் தேர்தல் நிதியாகப் பயன்பட்டது. காகிதப்பூ நாடகம் மூலம் ஒரே நாளில் திருச்சியில் ரூ.13 ஆயிரம், கடலூரில் ரூ.6 ஆயிரம், கள்ளக்குறிச்சியில் ரூ.10 ஆயிரம், மன்னையில் ரூ.12 ஆயிரம், தஞ்சையில் ரூ.10 ஆயிரம் வசூலானது. திண்டிவனத்தில் நடைபெற்ற காகிதப்பூ நாடகம் மூலம் ஒரே நாளில் ரூ.13,250 வசூலானது. நாடகத்தின் மூலம் வசூலான தொகையானது, அன்றைய காலகட்டத்தில் மிகப்பெரியது. கலைஞர் 1969&ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் முதல்வராகப் பொறுப்பேற்று ஆட்சி செய்தபோது சோ எழுதிய ‘முகமது பின் துக்ளக்' நாடகம், திராவிட இயக்க அரசியலின் மேம்போக்கான அம்சங்களையும் பகட்டுத்தனங்களையும் கேலி செய்தது.

சோவின் நாடகத்திற்கு எதிராகக் கலைஞர் 'நானே அறிவாளி' என்ற பெயரில் அங்கதமாக நாடகமெழுதி, நிகழ்த்திட ஏற்பாடு செய்தார்.          தமிழகத்தின் முதல்வராக எம்.ஜி. ராமச்சந்திரன் செயல்பட்டபோது எதிர்க்கட்சி தலைவராகச் செயல்பட்ட கலைஞர், அ.இ.அ.தி.மு.க. ஆட்சியை அம்பலப்படுத்தும் அரசியல் நோக்கில் 'புனித ராஜ்யம்' என்ற நாடகத்தை 1979&ஆம் ஆண்டில் எழுதி நிகழ்த்தினார்.

பெரியாரின் பகுத்தறிவுக் கருத்துகளுக்கு நாடக வடிவம் கொடுத்து தமிழ்நாடு முழுவதும் சுயமரியாதைப் பிரசாரம் செய்தவர் எம் ஆர் ராதா.   அவர், நாடகத்தில் ஏற்படுத்திய கலகப் பண்பாடு, திராவிட இயக்க நாடக வரலாற்றில் ஒப்பீடு அற்றது. எம். ஆர். ராதாவின் ராமாயண நாடகம் பெரியார் தலைமையில் 1954 ஆம் ஆண்டு  சென்னை ஒற்றைவாடை தியேட்டரில் அரங்கேறியது. வால்மீகி ராமாயணம் உள்ளிட்ட பல்வேறு ராமாயணங்களிலிருந்தும் தனது நாடகத்துக்கான ஆதாரங்களை மேற்கோள்களாக எழுதி அரங்கின் வாயிலில் வைத்து, சநாதனவாதிகளின் வாயை அடைத்தார், எம்.ஆர். ராதா. அவர்களால் ராதாவின் நாடகத்தைக் கீமாயணம் என்று சொல்ல முடிந்ததேயன்றி அவரை மறுக்க முடியவில்லை . ஆறு வாரங்கள் சென்னையில்  ராமாயணம் நாடகம் நடத்தியபிறகு திருச்சி நகருக்குச் சென்றார் ராதா. ‘‘என் ராமாயண நாடகம் இந்துக்களின் மனதைப் புண்படுத்துகிறது என்று கருதுகிறவர்கள் கண்டிப்பாய் என் நாடகத்திற்கு வர வேண்டாம். அவர்கள் காசும் எனக்கு வேண்டாம். மீறி வந்து பார்த்தால், அவர்கள் மனம் புண்பட்டால் அதற்கு நான் ஜவாப்தாரியல்ல என்பதைக் கண்டிப்பாய் அறியவும்'' என்று விளம்பரத்தட்டியை வெளியே வைத்துவிட்டு 18.12.54 அன்று திருச்சி ரத்தினவேல் தேவர் மன்றத்தில் தடையை மீறி நாடகம் நடத்த முனைந்தபோது எம். ஆர். ராதா வீட்டிலேயே கைது செய்யப்பட்டார்.

முரண்பாடான செயல்பாடுகளும் அடாவடியான நடத்தையும் மிக்கவனைக் கதாநாயகனாக்கிய ரத்தக் கண்ணீர் நாடகம், எம்.ஆர்.ராதாவின் நாடகங்களில் பிரபலமானது. எம்.ஆர். ராதா கும்பகோணம் நகரில் நாடகம் நடத்தியபோது ராமன் வேடத்திலேயே கைதானார். காவல்துறையினர், ‘ராமன் வேடத்தைக் கலையுங்கள்' எனக் கூறியபோது அவர், ‘வேடம் கலையாது, வில் கீழே விழாது, கலசம் கீழே வராது' எனக் கூறி, ஒரு கையில் கள்ளுக் கலயமும், மறுகையில் சிகரெட்டுமாகக் காவல் நிலையம் நோக்கி நடந்தார். வீதியையும் நிகழ்த்துக் கலை மேடையாக்கும் வித்தை அவருக்குத் தெரிந்திருந்தது.

திராவிட இயக்கத்தில் இணைந்து செயலாற்றியவர்கள் எழுதிய நாடகங்களின் எண்ணிக்கை அளவற்றவை. குறிப்பிடத்தக்க நாடக ஆசிரியர்களும் நாடகங்களும் பின்வருமாறு: ப. கண்ணன் & மின்னொளி நந்திவர்மன், பகைமை வென்றான், பாண்டிய மகுடம்; ஏ.கே.வேலன் &கைதி, எரிமலை, சூறாவளி; சாம்பாஜி, கங்கைக்கு அப்பால், காவேரிக் கரையினிலே; சி.பி.சிற்றரசு & தங்க விலங்கு, போர்வாள், இரத்த தடாகம்; தில்லை வில்லாளன் - ஆரியரின் வஞ்சம், தமிழர்களின் எழுச்சி; பேசும் ஓவியம், திரை ; எஸ்.எஸ்.தென்னரசு - சந்த மழை;  கே.ஜி.இராதாமணாளன் - அரக்கு மாளிகை; ஏ.வி.பி.ஆசைத்தம்பி & வாழ்க்கை வாழ்வதற்கே; கே.ஏ. மதியழகன்& பவள நாட்டு எல்லை; முரசொலி மாறன்& நாளை நமதே, ஊஞ்சல் மனம், அபாய விளக்கு; இரா. செழியன் - காணிக்கை, போராட்டம், சமீன் மளிகை;  முரசொலி சொர்ணம்  விடைகொடு தாயே, முரசொலி அடியார் - அண்ணா ஒரு காவியம், தென்திசை தீபம்; கண்ணதாசன் - சிவகங்கைச் சீமை, ராஜ தண்டனை. இந்தப் பட்டியல் இன்னும் நீளும். 

ஐரோப்பிய யதார்த்த வகையிலான நாடகங்களின் வடிவத்தோடும் கூர்மையான உரையாடல்களும்  விறுவிறுப்பான காட்சி அமைப்புகளும் கொண்ட திராவிட இயக்க நாடக மரபு, தி.மு.க. தமிழக ஆட்சியைக் கைப்பற்றியதும் மெல்ல நசிவடைந்தது. வெகுஜனரீதியில் காத்திரமான உரையாடல்கள் மூலம்  பிரபலமாக விளங்கிய திராவிட இயக்க நாடக மரபு அறுபட்டுப் போவதற்கு ஆதிக்கக் கருத்தியலாளர்களும், சார்பு நிறுவனங்களும் திட்டமிட்டுச் செயலாற்றியுள்ளனர்.  அதேவேளையில் திராவிட இயக்கத்தினர் ஆட்சி அதிகாரத்திற்குள் நுழைந்தவுடன் தங்களுடைய படைப்பு, நாடக முயற்சிகளைக் கைவிட்டனர் என்பதும் உண்மைதான்.

அக்டோபர், 2021

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com