திருப்புமுனை தருணங்கள்

திருப்புமுனை தருணங்கள்

நான் தனியாளாக இருந்தபோது அழகான பெண்களைக் கவர்வதை மட்டுமே நோக்கமாகக் கொண்டிருந்தேன். குழந்தைகளைப் பெற்றதுதான் என் வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது' - ஜோ டாஸ்லின், இந்தோனேசிய நடிகர் ‘மனிதனின் ஒரே கடவுள் மனிதன் தான் என்று அவன் உணரும் காலமே வரலாற்றின் திருப்புமுனையாக அமையும்' - ஹென்றி டி லூபாக் ‘என் வாழ்க்கை, திருப்புமுனைகள் நிறைந்த ஒரு நீளமான வளைவு'- பியரே ட்ரூடோ

அமெரிக்காவில் ஜார்ஜ் ஈஸ்ட்மென் என்பவர் 1889 ஆம் ஆண்டு ஈஸ்ட்மென் கோடாக் என்ற புகைப்படக் கருவிகள் நிறுவனத்தைக் கட்டமைக்கிறார். புகைப்படக் கலையை பரவலாக்குவது அதன் நோக்கம். அதற்காக கோடாக் காமிராக்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. சில ஆண்டுகளில் இது பிரபலமடைகிறது. 1976 ஆம் ஆண்டு நிலவரப்படி கோடாக் அசைக்கமுடியாத நிறுவனமாக இருந்தது. காமிரா விற்பனை சந்தையில் 85 சதவீதம் கோடாக் தான். பிலிம் சுருள் சந்தையில் 90 சதவீதம் இவர்கள் கையில். இந்த வெற்றி நிரந்தரமானது என அந்நிறுவனமும் பொதுமக்களும் கருதினார்கள்.

பிறகு சில ஆண்டுகளில் டிஜிட்டல் தொழில்நுட்பம் அறிமுகமானது. இதை அந்நிறுவனம் சரியாக உள்வாங்கிப் பொருட்படுத்தவில்லை. அதற்கேற்ப தங்களை மாற்றிக்கொள்ளவில்லை. 2012 ஆம் ஆண்டு கோடாக் நிறுவனம் திவால் ஆனது.

திருப்பு முனைகளை எதிர்கொள்ளும்போது அதை தனிமனிதனோ, நிறுவனமோ, அரசியல் கட்சிகளோ புரிந்துகொண்டு தங்களை அதற்கேற்ப மாற்றிக்கொள்ளாவிட்டால் அத்தோடு கதை முடிந்துவிடும். வீழ்ச்சியை சந்திக்கவேண்டியதுதான்.

The World is Flat: A Brief History of the Twenty-first Century என்ற புத்தகத்தை எழுதியவர் தாமஸ் ப்ரைட்மேன். உலகம் தட்டையாகி விட்டது என்று சொல்லும் அவர் அதற்கான காரணங்களாக பத்து விஷயங்களைக் குறிப்பிடுகிறார். ஒவ்வொன்றையும் நாம் திருப்புமுனைக்காரணிகளாகக் கொள்ளமுடியும்.

1.பெர்லின் சுவர் இடிப்பு, 2. நெட்ஸ்கேப் உலாவி அறிமுகம் 3. ஒர்க் ப்ளோ மென்பொருட்கள் அறிமுகம் 4. தரவேற்ற வசதிகள் 5. அவுட்சோர் ஸிங் 6. ஆஃப்ஷோரிங் (வேறு நாடுகளுக்கு போய் தயாரிப்பு ஆலைகள் தொடங்குவது) 7. விநியோக சங்கிலி வளர்ச்சி 8. இன்சோர்சிங்(ஒரு நிறுவன ஊழியர்கள் இன்னொரு நிறுவனத்தில் பணிபுரிவது)9. இன்ஃபார்மிங் (தகவல்கள் பரவலாக்கம்  உ.ம். கூகுள்) 10. வயர்லெஸ் தொழில்நுட்பம்.

மனிதகுல வரலாற்றை எடுத்துக்கொண்டால் நாடோடியாகத் திரிந்துகொண்டிருந்தவன் ஓரிடத்தில் தங்கி வாழ்ந்ததும் நெருப்பை அறிந்ததும் சமைத்து உண்ண ஆரம்பித்ததும் சக்கரத்தைக் கண்டறிந்ததும் திருப்புமுனைகளாகச் சொல்லப்படுகின்றன. அவன் அடுத்த தலைமுறைக்கு சொத்து சேர்க்க ஆரம்பித்தது உலகின் தீமைகளுக்கெல்லாம் காரணமான திருப்புமுனையாகும்.

திருப்புமுனைகள் நிகழ்ந்து கொண்டிருக்கும்போது உலகம் அதை உணர்வதில்லை என்பதுதான் எதார்த்தம். வரலாறுதான் திருப்புமுனைகளைக் கண்டுகொள்கிறது.

இந்தியாவை எடுத்துக்கொண்டால் சில தவறான திருப்புமுனைகளை உணரமுடிகிறது. பதவி, பணம், வாழ்வு ஆகியவற்றை நிரந்தரம் என நினைக்கும் அதிகார வர்க்கம், ஊழல் குற்றச்சாட்டுகளில் பணம் எங்கே வந்து எங்கே போகிறது என்கிற (money trail) பாதையைக் கண்டுபிடித்து நிரூபிக்க முடியாமல் போவது, ஊழலையும் லஞ்சத்தையும் மக்கள் சாதாரணமாக ஏற்றுக்கொள்வது, அதில் ஈடுபடுவோரைக் கொண்டாடுவது ஆகியவற்றை சுட்டிக்காட்ட முடியும். இதை ஒரு சமூகத்தின் வீழ்ச்சியாகக் காணமுடியும்.

இந்த இதழில் கடந்த 100 ஆண்டுகளில் அரசியல், சினிமா, பொருளாதாரம், இலக்கியம்  ஆகியவற்றில் நிகழ்வான சில திருப்புமுனைகளைச் சுட்டும் கட்டுரைகள் இடம்பெறுகின்றன. இவையல்லாத சில திருப்புமுனைகளைச் சுட்டிக்காட்ட விரும்பினால் நீங்கள் எங்களுக்கு எழுதலாம்.

‘வாழ்க்கை என்பது எப்போதும் எதாவது திருப்புமுனைகளில் நிலைகொண்டு இருக்கிறது'- இர்வின் எட்மன்

அந்திமழை இளங்கோவன்.

டிசம்பர், 2022

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com