துணை நின்ற திராவிட இயக்கம்

துணை நின்ற திராவிட இயக்கம்

தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு

1916ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மூன்று இயக்கங்களுக்கு இந்த ஆண்டு  நூற்றாண்டு.  நீதிக்கட்சி என்று சுருக்கமாக அறியப்படும் தென்னிந்திய நல  உரிமைக் கட்சி, தனித்தமிழ் இயக்கம், அன்னி பெசன்ட் தொடங்கிய ஹோம் ரூல் இயக்கம் ஆகியனவே அவை.

பெசன்ட் அம்மையாரின் இயக்கம் கால ஓட்டத்தில் கரைந்து மறைந்து விட்டது. மற்ற இரு இயக்கங்களும் நூற்றாண்டு காணுகின்றன. நீதிக்கட்சி என்பது, திராவிட இயக்கத்தின் தொடக்க நிலை என்று கூறலாம்.

இருவேறு இயக்கங்களாக இருந்தாலும், திராவிட இயக்கமும், தனித்தமிழ் இயக்கமும் வரலாற்றில் ஒரு மரத்தின் இரு கிளைகள் என்றே கூற வேண்டும். சமூக நீதியில் திராவிட இயக்கமும், மொழித் தூய்மையில் தனித் தமிழ் இயக்கமும் முன்னின்றன. 

மொழித்தூய்மைக் கோட்பாடு தமிழுக்கு மட்டுமே உரியதன்று. உலக நாடுகள் பலவற்றிலும் இத்தகைய போக்குகள் இருந்துள்ளன. கடந்த 500 ஆண்டுகளுக்கு முன்பு வரையில் இங்கிலாந்தில் ஆங்கிலத்தை விடக்  கிரேக்கமும், லத்தீனும்தான் மக்கள் மொழிகளாக இருந்தன. லத்தீன் பட்டுத் துணி போன்றது, ஆங்கிலம் கந்தைத் துணி போன்றது என்று ஆங்கிலேயர்களே  கருதினர். காலம் மாறிற்று. சர் ஜான் செக், மார்ட்டின் லூதர், லீப்னிஸ் போன்ற அறிஞர்கள் அந்நிலையைக் கடுமையாக எதிர்த்தனர். பிறகுதான் மொழிக்கலப்பு அங்கு குறைந்து, ஆங்கில மொழி மேலோங்கிற்று!.

கொரியாவில், தென் கொரிய மறுமலர்ச்சி இயக்கமே நடைபெற்றது. இன்றும் பிரான்சில் ஆங்கில மொழிச் சொற்களை அரசு மடல்களில் பயன்படுத்தக் கூடாது என்றும், பிரெஞ்சுக் கழகம் (பிரெஞ்சு அகாதெமி) தொகுத்துத் தரும் சொற்களைத்தான் பயன்படுத்த வேண்டும் என்றும் அரசு ஆணையே உள்ளது. 

தமிழ் நாட்டிலும் தனித்தமிழ்க்  கோட்பாட்டிற்கான தேவை பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கி விட்டது. மூவேந்தர் ஆட்சி முடிந்து, களப்பிரர், பல்லவர் ஆட்சிக் காலங்களிலேயே பிராகிருத, சமற்கிருத மொழிக்கலப்பு இங்கு  தோன்றிவிட்டது. பிற்காலப் பாண்டியர், சோழர், நாயக்கர் ஆட்சிக் காலங்களிலும் நிலைமை சீரழிந்து கொண்டே வந்தது. 16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பரஞ்சோதி முனிவரே முதலில் நல்ல  தமிழில் எழுதத்  தொடங்கினார். 19ஆம் நூற்றாண்டில் வள்ளலார் இனிய  தமிழை நாட்டுக்குத்  தந்தார். 

19ஆம் நூற்றாண்டின் மத்தியில் அறிஞர் கால்டுவெல்லின் நூல் வெளிவந்து, தமிழ் தனித்தியங்க வல்லது என்பதை நிலைநாட்டியது. பழந்தமிழ் நூல்கள் அச்சேறியதும் அக்காலகட்டத்தில்தான். பிறகு மனோன்மணியம் சுந்தரனார், நல்லுசாமிப் பிள்ளை, பரிதிமாற் கலைஞர் ஆகியோர் தனித்தமிழ் இயக்கத்தின் முன்னோடிகளாக   அமைந்தனர்.

1901ஆம் ஆண்டு வள்ளல் பாண்டித்துரையாரால் தொடங்கப்பட்ட நான்காம் தமிழ்ச் சங்கம்,  1908இல் தொடங்கிய விருதை ஞானியாரின் தமிழ்ச் சங்கம் ஆகியன தனித் தமிழ் இயக்கத்தின் முன்னோடிகளாக இருந்தன.

எனினும் தனித்தமிழை ஓர் இயக்கமாக்கியவர் மறைமலை அடிகளாரே.  1916 ஆம் ஆண்டு அந்த வகையில் தமிழர் வரலாற்றில் ஒரு குறிக்கத்தக்க ஆண்டாக ஆயிற்று. தன்னிலிருந்தே அடிகளார் இயக்கத்தைத் தொடங்கினார் என்று கூற வேண்டும். சுவாமி வேதாசலம் என்னும் தன் பெயரை மறைமலை அடிகள் என்றும், தன்னுடைய ஞான சாகரம் இதழின் பெயரை அறிவுக்கடல் என்றும் அவர் மாற்றிக் கொண்டார்.

சமூகத்தில் ஒரு பெரிய நகர்வை அவ்வியக்கம் ஏற்படுத்தியது. தமிழ் ஆர்வலர்கள் இடையில் பெயர் மாற்றங்கள் நிகழ்ந்தன. திரு.வி.க. போன்றவர்களின் தனித்தமிழ் நடை அனைவரையும் கவர்ந்தது. திராவிட மொழிநூல் ஞாயிறு தேவநேயப் பாவாணர், அடிகளாரைப் பின்பற்றி ‘உலகத்தமிழ்க் கழகம்’ என்னும் அமைப்பை உருவாக்கினார். பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் ‘தென்மொழி’ ஏடு பெரும்பணியாற்றியது. அவரால் பின் உருவாக்கப்பட்ட ‘உலகத் தமிழர் முன்னேற்றக் கழகம்’, இளைஞர்களைத் தன்பால் ஈர்த்தது. திராவிட இயக்கத்தின் முப்பெரும் தலைவர்கள் பெரியார், அண்ணா, கலைஞர் போல, தனித்தமிழ் இயக்கத்தின் முப்பெரும் வழிகாட்டிகளாக மறைமலை அடிகள், பாவாணர், பெருஞ்சித்திரனார் ஆகியோரைக் குறிப்பிடலாம்.

தனித்தமிழ் இயக்க வளர்ச்சிக்குத் திராவிட இயக்கமும் பெருந்துணையாக இருந்தது.  அறிஞர்கள் மத்தியில் தனித்தமிழ் இயக்கம் உருவாக்கிய தாக்கத்தை வெகு மக்களிடையே திராவிட இயக்கம் ஏற்படுத்தியது. 1950களில் திராவிட இயக்கத் தலைவர்களும், தொண்டர்களும் தங்களின் பெயர்களைத் தனித் தமிழில் மாற்றிக் கொண்டனர்.  இரு இயக்கங்களுக்கும் இடையில் உரசல்களும் இருந்தன என்றாலும், 1937ஆம் ஆண்டு அவை நீங்கி, இரு இயக்கங்களும் ஒருங்கிணைந்து இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் களம்  இறங்கின.

மொழித் தூய்மை என்பது பிற மொழிகளை வெறுப்பதன்று, தம் மொழிப்  பெருமையையும், உரிமையையும் மீட்பது. அந்த நற்பணியைத் தொடக்கி வைத்த தனித்த தமிழ் இயக்கத்தின் புகழ் என்றும் ஓங்கட்டும்!!

செப்டெம்பர், 2016.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com