திலகவதி
திலகவதி

துயரப் பள்ளத்திலிருந்து

கல்மரம்

கடந்த சில ஆண்டுகளாகவே தமிழகத்தின் பல மாவட்டங்களும் பெரிதாகவே மாற்றம் பெற்று விட்டன. நான் என்னுடைய பணி நிமித்தமாக விசாரணை என்றும் ஆய்வு என்றும் மாவட்டங்கள் தோறும் பயணம் செய்ய வேண்டிய சூழல் எனக்கு அடிக்கடி ஏற்படும். தனிப்பட்ட முறையில் எனக்கே பயணங்கள் செய்யப் பிடிக்கும்.

தமிழகத்தின் ஒவ்வொரு குக்கிராமத்தையும் அலசி, நடந்து கடந்து போய் கிராமத்தினரை சந்தித்துப் பேசிக் கலந்துரையாடிவர வேண்டும் என்பது என் விருப்பம்.

ஆயினும் காவல்துறை பணிக்காலத்தில் ஆய்வுக்காக என்று சில மாவட்டங்களுக்கு செல்லும்போது தங்கும் இடம் பற்றி ஆலோசிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். காஞ்சிபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர் ஆகியவை அவற்றுள் சில. ஆனால் எண்பதுகளுக்குப்பிறகு இவை அனைத்தும் மாற்றம் கொண்டன. ஐந்து நட்சத்திர வசதிகளுடன் கும்பகோணம் போன்ற இடங்களிலும் கூட நவீன கட்டடங்கள், விடுதிகள் ஏற்பட்டு விட்டன.

குறுகிய கால இடைவெளியில் நாம் காணாத இடங்களில் கூட அதற்குப் பிறகு பார்க்கும் போது பிரமிப்பு ஏற்படுத்தும் பெரிய பெரிய கட்டடங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், அழகு கொஞ்சும் மாளிகைகள் உருவாகியிருக்கும் அல்லது உருவாகிக் கொண்டிருக்கும். இவை உருவாகும் வேளையில் பணி புரிந்த அத்தனை ஆயிரம் தொழிலாளர்களும் இப்போது எங்கே என்ற கேள்வி என் மனதைக் குடையும்.

இந்தக் கட்டடத்தொழிலாளர் வாழ்வு, இதில் இருந்த அபாயங்கள் போன்றவை பற்றி சிந்தித்தவாறு இருந்தேன். அப்போதுதான் நண்பர்கள் சிலர் திரு. சுப்புவைப்பற்றியும் திரு. கீதா ராமகிருஷ்ணன் பற்றியும் சொன்னார்கள். நான் நேரில் போய் அவர்களைச் சந்தித்தேன். நீண்ட அத்தகைய சந்திப்புகள் தொடர்ந்தன. வழக்குகள், எண்ணங்கள், ஆய்வேடுகள் என்று பலபடியாக கட்டடத் தொழிலாளர் பற்றிய எனது எண்ணங்களை அவை உருமாற்றின.

இந்த வேளையில் சென்னையில் நடேசன் தெருவில் நான் குற்றப்புலனாய்வுத் துறையின் ஒரு பிரிவில் பணி புரிந்த அந்த அலுவலகம் இருந்தது. எனக்குப் பிடித்த சில அலுவலகங்களில் அதுவும் ஒன்று. என்னுடைய வலதுபுற ஜன்னல் வழியே ஓர் அழகிய மரம் தென்படும். அது ஒரு பொன் கொன்றை மரம். அந்த மரம் ஆண்டுமுழுவதும் வெவ்வேறு அணி புனைந்து பார்வையாளரை ஈர்க்கும். இலைகள் உதிர்த்து வெற்றுக்கிளை புனைந்த அலங்காரம்; பிறகு தளிராடை, பிறகு கிளிப்பசுமைக்காட்சி, அதற்குப் பின் கரும்பச்சைக் கோலம், அதைத் தொடர்ந்து வரும் வசந்த காலத்தில் அது தன் பிறப்பைக் கோலாகலமாகக் கொண்டாடும். கொத்துக் கொத்தான பொன் நிறப் பூக்களால் கிளைகளையும் இலைக் கொத்துகளையும் மறைத்து எழில் உருக்காட்டும்.

அலுவலகக் கோப்புகளுக்கு இடையே நான் சில நொடிகள் என்னைப் புதிய உயிராக்க ஜன்னல் வழியே தெரியும் இந்த மரக்காட்சியில் கண் தோய்ப்பேன்.

ஒரு நாள் ஜன்னலுக்கு அப்பால் விண்வெளி பளிச்சிட்டது. மரத்தைக் காணோம். புதிய கட்டடம் வரப் போகிறதாம். மனம் சோர்ந்தேன் நெஞ்சுக்கினிய நண்பனை இழந்தது போன்ற வலி உயிரைப் பிசைந்தது. இந்த வேதனையில் சில தினங்கள் கழிந்தன.

அதற்குப் பிறகு அந்த வளாகத்தில் கட்டடத் தொழிலாளர்களின் நடமாட்டத்தைக் கண்டேன். ஆய்வுக் கட்டுரைகள் சொன்ன பிரச்னைகள் இப்போது தீர்க்கப்பட்டு விட்டனவா? இன்றைய கட்டிடத் தொழிலாளர் நிலை என்ன என்பது பற்றி தெரிந்து கொள்ள ஆசைப்பட்டேன். உணவு இடைவேளை, பணி முடிந்த மாலை வேளை இதற்கெனப்பயன்பட்டது. அங்கிருந்த பெண் தொழிலாளர் பலருக்கு மனதளவில் நெருக்கமானவளாக ஆகியிருந்தேன். கூட்டத்தில் பலவற்றையும் தனிப்பட்ட முறையில் சிலவற்றையும் இரகசியமாக சிலவற்றையும் அந்தப் பெண்கள் தங்கள் துயரங்களை என்னிடம் பகிர்ந்தார்கள். பெண்கள் மட்டும் தான் என்றில்லை அங்கு பணி புரிந்த ஆண்களின் வாழ்க்கையும் துயரார்ந்த ஒன்று தான்.

இடைப்பட்ட காலத்தில் சென்னை வழக்கம் போல வரலாறு காணாத மழையையும் வெள்ளத்தையும் சந்தித்தது. கட்டட வேலை நின்று போய் விட்டது. அவர்கள் தங்கியிருந்து வியாசர்பாடி அருகே இருந்த இடம் எனக்குத் தெரியும் என்பதால் இந்த வெள்ளத்தில் அவர்கள் எப்படி இருக்கிறார்களோ என்ற கவலை ஏற்பட்டது.

மிகுந்த சிரமத்துக்கிடையே அங்கு போனேன். துயரப் பள்ளத்திலும் கண்ணீர் வெள்ளத்திலுமாக அவர்கள் ஒரு கணம் மிதந்து மறுகணம் ஆழ்ந்தது கண்டேன். சொல் கடந்த வேதனை. உடுத்துவதற்கான ஒரே ஒரு காய்ந்த ஆடை இல்லை. உட்கார  சற்றே உலர்வான ஓர் இடம் இல்லை. அடுப்பே வெள்ளத்தில் முழுகி விட்டிருந்தது. ரேஷனில் வழங்கப் பட்ட உணவுப் பொருட்கள் எல்லாம் ஊறிப் போயிருந்தன. பக்கத்திலிருந்த ஒரு பள்ளிக் கூடத்தில் அரசும், ஒரு தனியார் அமைப்பும் உணவு வழங்கின. அதை வாங்கி உண்டனர். தங்களைப் பின் தொடா;ந்து வந்த நாய்க்கும் பரிமாறினர்.

இந்த சூழலில் நான் கொடுத்த பிஸ்கெட் பாக்கெட்டுகள், போர்வைகள், துண்டுகள் இவற்றுக்கான இடம் தேடுவதே கூட கஷ்டமாகத் தான் இருந்திருக்கும் அவர்களுக்கு. மழையினால் வேலை நின்று விட்டதால் அன்றாட வருமானம் நின்று போய் விட்டதே பெரிய துன்பமாகத் தெரிந்தது அவர்களுக்கு.

வீடு வந்து சேர்ந்த பிறகும் மனம் அந்த தொழிலாளர்களின் வலி மிகுந்த வாழ்க்கையையே சுற்றிச் சுழன்றது. என்ன வாழ்க்கை? எத்தனை அபாயங்கள்? பாம்பும், தேளும், மனித மிருகங்களும் கொத்தித் துரத்தும் இரவுகள். அதற்கிடையே  சற்றேனும் உறங்கித்தான் ஆக வேண்டும். இல்லாவிட்டால் மறுநாள் வேலை கெடும். தலைச்சுமையுடன் சாரத்தில் ஏறியாக வேண்டுமே?

இந்த வேளையில்தான் ‘தாமரை'யின் ஆசிரியர் பொறுப்பில் இருந்த கே.சி.எஸ். அருணாசலம் அவர்கள் என்னை சந்தித்து தாமரைக்கு ஒரு தொடர் வேண்டுமெனக் கேட்டார். நான் தயக்கத்துடனே சம்மதித்தேன் எழுதினேன். ஆனால் என் மன  சேகரத்திலிருந்து சிலவற்றை மட்டுமே அப்படைப்பில் பதிவு செய்தேன். தாமரையில் தொடர் நிறைவுற்றது. ஆனால் மனம் நிறைவடையவில்லை.

சில ஆண்டுகள் கழித்து ‘கல்மர'த்தை நாவல் வடிவில் செம்மைப்படுத்தி மீண்டும் ஒரு முறை புத்தம் புதியதாக எழுதினேன்.

எனினும் இந்த வடிவிலும் அவர்களின் வாழ்க்கைச் சித்திரத்தை முழுமையானதாக நான் வடிக்கவில்லை. வேண்டுமென்றே பல முக்கிய தகவல்களைப் பதிவு செய்யாமல் விட்டிருந்தேன். கட்டடத் தொழிலில் ஈடுபடுபவர்களின் கண்ணியத்தைக் காக்கும் கடமையை மேற்கொண்டதால் நான் வலிந்து எடுத்த முடிவு அது.

நாவல், நல்ல வரவேற்பைப் பெற்றது. பல இடங்களில் கட்டடத் தொழிலாளர்களே முன்னின்று விழா எடுத்து என்னைப் பாராட்டினார்கள். ஓய்வு நேரத்தில் படிக்கத் தெரிந்தவர்கள் உரத்துப் படிக்க அனைவரும் அமர்ந்து கேட்டு மகிழ்ந்ததாகச்  சொன்னார்கள். அதுவே நான் பெற்ற விருதுகளில் பெரிய விருது என மகிழ்ந்தேன்.

இப்போது அமைப்பு சாரா தொழிலாளர் நலம் பேணும் அமைப்பை அரசு உருவாக்கியிருக்கிறது. கட்டிட வேலையின் போது ஏற்படும் உயிரிழப்புகள், கொடுங்காயங்கள், ஊனங்கள் ஆகிய அனைத்துக்கும் நஷ்ட ஈடு வழங்கப்படுகிறது.

ஆயினும் அவர்கள் நலம் பேண அனைத்துப் பெரு நகரங்களிலும் தங்குமிடங்கள், கல்வி வசதி போன்ற பல வசதிகள் தரப்பட வேண்டும் என்பது என் அவா.

ஜனவரி -2022

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com