ஓவியா
ஓவியா

தோழமை தேவை

ஆண் - பெண் உறவில் சிக்கல் ஏற்படுவதற்கு இந்த சமூக அமைப்பு தான் காரணமாக இருக்கின்றது. ஆணும் பெண்ணும் எப்போது மகிழ்ச்சியாக இருக்க முடியும் என்றால் அவர்கள் தோழர்களாக இருக்கும் போது தான்.  குடும்ப அமைப்பில் ஆணுக்கும் பெண்ணுக்கும் தோழமை சாத்தியமில்லாமல் இருக்கின்றது. குடும்ப அமைப்பு ஆணை எஜமானராகவும் பெண்ணை அவனுக்குக் கட்டுப்பட்டவராக வைக்கிறது. இப்படியான அமைப்பில் தான் தோழமை சாத்தியமில்லாமல் போகிறது. தோழமை சாத்தியமில்லாமல் போவதுதான் எல்லா உறவுகளுக்கும் சிக்கலாக அமைகிறது.

ஓவியா

வீட்டைக் கொளுத்தும் தீக்குச்சி!

பாரத தேவி

முன்பெல்லாம் தூரத்துக்-காட்டிற்கு விடியற்காலை நான்கு மணிக்கு வயது பெண்கள் கதிர் அறுக்க, கரும்பு வெட்ட என்று வேலைக்குப் போனால் மச்சான், அண்ணன் என்ற முறை உள்ள இரண்டு மூன்று இளைஞர்கள் துணைவருவார்கள். போகும் பாதையோ புதர்கள் நிறைந்த வனக்காடு ஆனாலும் எந்த பயமும் இல்லாமல் பாட்டு, கதை என்று பேசிக் கொண்டு போய் வருவார்கள். ஆண்கள் என்ற அச்சமே இல்லாதிருந்தது.

 ஆனால் இப்போது அறுபது வயதுக் கிழவனை நம்பி ஐந்து வயதுப் பெண்ணை அனுப்ப முடியவில்லை. முன்பெல்லாம் ஆண்கள் அன்பு, பாசம், கருணை என்று தான் இருந்தார்கள். ஆனால் இப்போது உறவுகளை மட்டுமல்ல சிறு பெண்குழந்தையின் மழலைத் தனத்தைக் கூட மறந்து கொடூரச் செயலில் ஈடுபடுகிறார்கள். அதற்குக் காரணம் அலைபேசி, இண்டர்நெட் என்ற மின்சாதனங்கள் தான் காரணம், இதில் குடி வேறு. அதனால் தான் இந்த ஆண்கள் மனிதத்தை இழந்து, மனசாட்சியை மறந்து விட்டு பெண்களின் உடல் மீது வெறிபிடித்து அலைகிறார்கள். அவர்களின் மனதில் எப்போதும் காமமும், வக்கிரமும் புகுந்து கொண்டு அவர்களை ஆட்டுவிக்கிறது. எப்போதும் நல்லவை நல்லதற்காகப் பயன்படுவதில்லை. மரத்தை வெட்டும் அரிவாள் ஆளைவெட்டுகிறது. குத்து விளக்கு ஏற்ற வேண்டிய தீக்குச்சி வீட்டைக் கொளுத்துகிறது. நல்ல பயணத்திற்குப் பயன்பட வேண்டிய கார், கடத்தலுக்குப் பயன்படுகிறது!

அக்கறை காட்டவேண்டும்!

சந்திரபிரபா ராமகிருஷ்ணன்

பெண் எதிர்பார்ப்பது என்ன? தங்களைப்

புரிஞ்சிக்கிடணும்;விட்டுக்கொடுக்கணும். இதைத்தான் ஆண்களிடம் எதிர்பார்ப்பதாக என் அனுபவத்தில் கருதுகிறேன். கூடவே இருக்கிற ஒரே ஒருத்தியைப் புரிஞ்சிக்கிடுங்க என்றுதான் எதிர்பார்க்கிறோம். பெண்கள் மட்டும் தங்கள் வீட்டுக்காரரை சரியாகப் புரிந்துகொள்கிறார்கள் இல்லையா? எங்க வீட்டுக்காரர்தானே.. அவர் அங்க தான் இருப்பாரு.. அங்க தான் திரிவாருன்னு சரியா

சொல்லிடறாங்க இல்லையா? ஏன் அந்த அக்கறை ஆண்களிடம் இருப்பதில்லை? ஆண்களுக்கு வேலை முக்கியம்தான். வெளியே போய் உழைக்கிறாங்கதான். எல்லாம் முக்கியம்தான். வீட்டுக்கு வந்தால் வீட்டில் இருக்கிறவங்களையும் புரிஞ்சிக்க வேண்டியதுதானே.. புரிந்துகொள்ள சிரமம் என்று சொல்வதற்கு அவங்க தூரத்திலேயா இருக்காங்க.. ஒரே வீட்டில்தானே வசிக்கிறோம்? புரிந்துகொள்ளத் தேவைப்படுவது அக்கறைதான். மற்றது அனைத்துமே இரண்டாம் பட்சமே.

நவம்பர், 2021.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com