நடப்புகளை பகிர்ந்து கொள்ளுங்கள்

நடப்புகளை பகிர்ந்து கொள்ளுங்கள்
Published on

என் தந்தையார் காலமாகி ஓராண்டு ஆனபிறகு என் திருமணம் நடந்தது. என் கணவர் என் தந்தையார் இருந்தால் என்னை எப்படி அன்புடன் பார்த்துக்கொள்வாரோ அதே போல் பார்த்துக்கொள்கிறார். என் மொபைல்போனில் கணவரது எண்ணை அப்பா என்றுதான் பதிவு செய்திருக்கிறேன்,' நெகிழ்ச்சியுடன் சொல்கிறார் திருமதி வரலட்சுமி சிவகுமார். அருகில் இருந்த அவரது கணவர், கால்நடை மருத்துவப் பல்கலைக் கழக ஓய்வுபெற்ற பேராசிரியர் டி.சிவகுமார் புன்னகைக்கிறார்.

அவரிடம் கேட்டபோது, ‘எங்களுக்குள் எந்த ஒளிவுமறைவும் இருக்கக்கூடாது என்பதில் நான் ஆரம்பத்தில் இருந்தே உறுதியாக இருந்தேன். புதிதாக திருமணமான தம்பதியரிடம் ஒரு நம்பிக்கையின்மை இருக்கலாம். இதனால் சின்ன நெருடல் உருவாகலாம். ஆனால் இதை முதலில் அகற்றி நம்பிக்கையை விதைக்கவேண்டும். இந்த விதை விரைவில் வளர்ந்து மரமாகி வாழ்க்கை முழுக்க துணை வரும். சின்னச் சின்ன விஷயங்களைக் கூட பகிர்ந்துகொள்ளவேண்டும். சிலபேர் வெளியூர் பயணமாக சில நாட்கள் போனால் துணைவரிடம் பேசமாட்டார்கள். அப்படி இல்லாமல் அங்கங்கே நடப்பதைப் பகிர்ந்துகொள்வது நல்லது. ஆரம்பத்தில் எல்லாவற்றையும் சொல்கிறார்களே என்று தோன்றினாலும், சுமையாகத் தோன்றினாலும் அது ஒரு சுகமான சுமையாக மாறிவிடும்,' என்கிறார் சிவகுமார்.

கணவர் விட்ட இடத்தில் தொடர்கிறார் வரலட்சுமி  சிவகுமார், ‘குடும்ப வாழ்க்கையில் விட்டுக்கொடுத்துச்  செல்வது மிக முக்கியமானது.  திருமணமாகி வேறொரு வீட்டுக்கு  செல்லும் பெண்ணாக நாம் இருக்கிறோம். அப்போது அந்த வீட்டில் இருப்பவர்கள் மீது அன்பு செலுத்துவது அவர்கள் நம்மீது அன்பு செலுத்த வழி செய்யும். கணவனுக்கு நாம் எந்த அளவுக்கு ஆதரவக இருக்க முடியுமோ அந்த அளவுக்கு இருக்கவேண்டும். சின்ன சின்ன சண்டைகள் வருவது சகஜம். ஆனால் வார்த்தைகள் விடுவதற்குமுன் யோசிக்கவேண்டும். தவறெனில் உடனே மன்னிப்புக் கோரிவிடுவது அவசியம்,' என முடிக்கிறார்.

ஆகஸ்ட், 2022

logo
Andhimazhai
www.andhimazhai.com