நட்பு: பிரிந்தவர்கள் சந்தித்தேதான் ஆகணுமா?

நட்பு: பிரிந்தவர்கள் சந்தித்தேதான் ஆகணுமா?

சொல்வதற்கு ரைமிங்காக இருக்கிறது.வாத்யார் சுஜாதாவின் பிரபலமான தொடரின் தலைப்பு. எனவே ‘பிரிவோம் சந்திப்போம்'-என்ற தலைப்புக்கு ஒரு காவியத்தன்மை கிடைத்து விட்டது.

பிரிந்தவர்கள் சந்திக்கும் உருக்கமான சினிமா காட்சிகளால் கூடுதலாக ஒரு புனிதத்தன்மையும் ஏற்பட்டு விட்டது.

பிரிந்தவர்கள் சந்தித்துதான் ஆக வேண்டுமா என்கிற கேள்வி அடிக்கடி எழும்.

ஏனெனில்...

பிரிந்தவர்களை மீண்டும் சந்தித்துத் தொலைத்த சந்தர்ப்பங்களில் பிரிவு எத்தகைய வலியை ஏற்படுத்தியதோ, அதற்கு இணையான வலியை சந்திப்பும் ஏற்படுத்தித் தொலைத்தது.

பிரிவுக்கும், சந்திப்புக்கும் இடைப்பட்ட காலத்தில் பரஸ்பரம் ஒருவருக்கு ஒருவர் ஏற்படுத்திக் கொண்ட அதிருப்தி, வெறுப்பு, விமர்சனங்கள் போன்றவை சந்திப்புக்கு பின்னரும் பல்லிடுக்கில் மாட்டிய பாக்குத்தூளாய் நெருடிக்கொண்டேதான் இருக்கப் போகிறது.

பிரிந்து சந்தித்தவர்கள் வேறு வழியே இன்றி இந்த சுமையை காலம் முழுக்க சுமந்துத் தொலைத்துதான் ஆகவேண்டும்.

ரொம்பவே எதிர்மறையாக யோசிக்கிறேன் என்று தோன்றுகிறதா?

சமீபத்தில் ஒரு ‘பிரிவோம் சந்திப்போம்‘

எபிசோடை செய்தித் தாள்களில் வாசிக்க நேர்ந்தது.

கேரளாவின் எர்ணாகுளம் பகுதியில் 35 ஆண்டுகளுக்கு முன்பாக பள்ளியில் படித்தவர்கள், ‘96‘ பட பாணியில் மீண்டும் சந்தித்திருக்கிறார்கள்.

இதில் எர்ணாக்குளம் பகுதியை சார்ந்த முன்னாள் பள்ளி மாணவனும், இடுக்கியைச் சேர்ந்த முன்னாள் பள்ளி மாணவியும் அடக்கம்.

பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோது டீனேஜில் இருவருக்கும் ஈர்ப்பு இருந்திருக்கிறது. அதை காதல் என்றும் கருதியிருக்கிறார்கள்.

பள்ளி முடிந்து மேற்படிப்பு காலக்கட்டத்தில், வாழ்க்கையின் ஓட்டத்தில் பெரிய காரணங்கள் எதுவுமின்றி பிரிந்திருக்கிறார்கள்.

இப்போது 50 வயதைக் கடந்த நிலையில் மீண்டும் ஒருவரை ஒருவர் சந்திக்கும் வாய்ப்பு அமைந்திருக்கிறது.

நிகழ்ச்சி முடிந்ததுமே இருவரும் அவரவர் வீட்டுக்குத் திரும்பவில்லை.

பழைய மலரும் நினைவுகளில் மூழ்கியவர்கள், டீனேஜ் காலத்து ஈர்ப்பை புதுப்பித்துக் கொள்ளும் வகையில் புதுப்புது அர்த்தங்கள் காண எங்கோ மறைந்துவிட்டார்கள்.

தலையில் அடித்துக் கொண்ட இரு குடும்பத்தினரும் காவல் நிலையத்தில் ‘காணவில்லை' புகார் கொடுத்துக் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இருவருக்குமே தோளுக்கு மேல் வளர்ந்த குழந்தைகள் இருக்கிறார்கள்.

வெறும் வாயையே மெல்லும் சமூகத்துக்கு அவல் கிடைத்திருக்கிறது. இரு குடும்பங்களும் இனி எப்படி வெளியே தலை காட்டப் போகிறார்களோ தெரியவில்லை.

இது இரு தனிநபரின் விருப்பம், முடிவு என்றெல்லாம் பின்நவீனத்துவம் பேசலாம்.

இரு குடும்பங்களின் சுமூக வாழ்க்கையை துன்பப்படுத்தி இருக்கிறது இந்த ‘பிரிவோம் சந்திப்போம்' என்பதுதான் நெட் ரிசல்ட்.

இப்படிப்பட்ட ‘சந்திப்போம்' எல்லாம் தேவைதானா?

பிரிவது எப்படி இயல்பாக நடக்கிறதோ, சந்திப்பும் அப்படியே நிகழுமென்று நிச்சயமாக சொல்வதற்கில்லை. மேற்படி சந்திப்பைப் போல விபரீதமாகவும் நடக்கலாம்.

எனக்கு நெருங்கிய நண்பர் ஒருவர். அப்போது டீனேஜில் இருந்தார்.

சிறிய குடும்பப் பிரச்சினை ஒன்றின் போது வாக்குவாதம் திடீரென தீவிரமாக, ஏதோ கோபத்தில் தன் தாய்மாமனின் மனைவியை கைநீட்டி அறைந்து விட்டார்.

இரு குடும்பங்களும் கடுமையான பகைக்கு உள்ளாகின.

இருபத்தைந்து ஆண்டுகள் கழித்தும் அந்த பகையின் உக்கிரம் குறையவே இல்லை. நடந்தது என்ன

சாதாரண சம்பவமா?

இப்படிப்பட்ட உறவுப் பிரிவில் சந்திப்பு எப்படி சாத்தியமாகும்?

அப்படியே சந்தித்தாலும் பிரிவுக்கு முந்தைய அணுக்கம் திரும்பவும் இருக்குமா?

அப்படியெனில் பிரிந்தவர்கள் சந்திக்கவே கூடாதா?

கூடலாம்.

அதற்கான தேவை, வாழ்க்கை ஓட்டத்தில் ஒருவேளை ஏற்பட்டால்.

சமீபத்தில் தெலுங்கில் ‘பலகம்' என்றொரு படம் வெளியானது.

தெலுங்கானாவின் குக்கிராமத்தில் நன்கு வாழ்ந்த ஒரு பெருசு மண்டையைப் போடுகிறது.

கிழவரின் மகள், இவர்களது குடும்பத்தினரிடமிருந்து 20 ஆண்டுகளுக்கு முன்பே பிரிந்துப் போனவர்.

அப்பாவின் சாவுக்காக பிறந்த வீட்டுக்கு இத்தனை ஆண்டுகள் கழித்து வருகிறார்.

பிரிவுக்கு மிகவும் சப்பையான ஒரு காரணம்.

வீட்டுக்கு வந்த மருமகனுக்கு கிழவரின் மகன்கள் சரியான மரியாதை தரவில்லை. அதாவது விருந்தின் போது மாப்பிள்ளைக்கு நல்லி எலும்பு பரிமாறாமல், தன்னுடைய அண்ணன் கேட்டதால் அவர் தட்டில் போட்டுவிட்டார் இந்த மகள்.

இந்த காரணம் கொஞ்சம் கொஞ்சமாக பேச்சுவார்த்தையில் தடித்து, 20 ஆண்டுகள் பிரிவு ஏற்பட்டு விட்டது.

அந்தப் பெண் எப்படி மீண்டும் தன்னுடைய அண்ணன்களோடு இணைகிறார், குடும்பம் ஒன்றுபடுகிறது என்கிற பீம்சிங் காலத்துக் கதையை நகைச்சுவையோடும், உருக்கத்தோடும், பிரமாதமான தெலுங்கு நாட்டுப்புற இசையோடும் சொல்லுகிறார்கள்.

இதுபோல மொக்கையான காரணங்களுக்காக பிரிந்தவர்களே கூட மீண்டும் ஒன்றுசேர ஒரு பெரும் வலியை சுமக்க வேண்டியிருக்கிறது. இருபது ஆண்டுக்கால கசப்பான நினைவுகளை மறக்கவும் முடியாமல், மன்னிக்கவும் முடியாமல் ஏதோ ஒரு வழியில்லா நிலையால், சூழலால் சகித்துக் கொண்டு போக வேண்டியிருக்கிறது.

இது சினிமாக்கதை மட்டுமல்ல. நம்முடைய குடும்பங்களில் நாம் கண்ட, கேட்ட கதையும் கூடதான்.

ஏற்கெனவே குறிப்பிட்டதைப் போல பிரிவின் போது ஏற்படக்கூடிய வலியின் தீவிரம், எத்தனை காலம் கழித்து மீண்டும் சந்திக்கும்போதும் ஏற்பட்டே தீரும்.

இந்த வலியை எதிர்கொள்ள தயாராக இருப்பவர்கள் சந்திக்கலாம்.

சில சந்திப்புகளில் சுயமரியாதையை விட்டுத்தரவும் வேண்டியிருக்கும். எனவே சுயமரியாதை இயக்கத்தார் சந்திப்பைப் பற்றி நினைத்துக்கூடப் பார்க்க வேண்டாம்.

ஒரு வகையில் பிரிவும் கூட நல்லதுதான்.

உறவிலோ, நட்பிலோ ஏற்படக்கூடிய பிரிவுகள் பெரும்பாலும் இருத்தரப்பையும் போட்டி போட்டு முன்னேறதான் வைத்திருக்கிறது. அப்படியெனில் கறை நல்லது மாதிரி பிரிவு நல்லதா?

முரண்கள் அதிகரித்துக் கொண்டே போகையில் போலியாக ஒட்டிக் கொண்டிருப்பதைவிட பிரிந்துவிடுவது மேலானது.

பிரிந்த பின்பு வெறுப்பை அதிகரித்துக் கொண்டே செல்லாமல் உறவில், நட்பில் இருந்தபோது நிகழ்ந்த மகிழ்ச்சியான நினைவுகளை மட்டும் அசைபோட்டுக் கொண்டிருப்பது நல்லது.

திரும்பவும் சந்திக்கக்கூடத் தேவையில்லை. முந்தைய நெருக்கத்துக்கு மனதளவில் மரியாதை செலுத்தினாலே போதும். பிரிவின் வலியை காலப்போக்கில் நாம் குணப்படுத்திக் கொள்ளலாம்.

ஏப்ரல், 2023 அந்திமழை இதழ்

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com