நம்பாட்டியும் அதான் நிஜம்!

நம்பாட்டியும் அதான் நிஜம்!

உ ங்கள் எடையைக் குறைத்து சிக்கென்று ஆக முடிவெடுத்து தொப்பையை குறைக்கும் லட்சியத்தோடு புதிதாக வாக்கிங் போக ஆரம்பித்திருக்கிறீர்களா... வாழ்த்துகள். உங்களுக்கு ஒரு நல்ல செய்தி+ ஒரு கெட்ட செய்தி. நல்ல செய்தி: கையை கொடுங்கள், வாழ்நாளுக்குமான ஒரு சிறந்த பழக்கத்தை தொடங்கி இருக்கிறீர்கள். இது நிச்சயம் உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். கெட்ட செய்தி, வாக்கிங் போனால் தொப்பை குறையாது. உடல் எடையும் குறையாது. ஷாக்கை கொறைங்க... ஷாக்கை கொறைங்க. நீங்க நம்பாட்டியும் அதுதான் நிஜம்.

நம்பலையா.. ஒண்ணு பண்ணுங்க, நேரா கிளம்பி அருகில் இருக்கிற பார்க்லயோ அல்லது கடற்கரையிலயோ அதிகாலையில் எழுந்து வாக்கிங் போகிறவர்களை பேட்மின்டன் ஆடுகிறவர்களை கவனியுங்கள். அதில் எத்தனை பேருக்கு தொப்பை இருக்கிறது, எத்தனை பேருக்கு தொப்பை இல்லை என்பதை நோட் பண்ணுங்க. இதில் பெரும்பான்மைக்கு தொப்பை இருக்கிறது அல்லது குண்டாக இருக்கிறார்கள் என்பதைக் கண்டுபிடிப்பீர்கள்.

தொப்பையோடு வாக்கிங் போகிற ஒருத்தரை நிப்பாட்டி ‘‘சார் நீங்க எத்தனை வருஷமா வாக்கிங் போறீங்க‘‘ என்று கேளுங்க... குறைந்தது பத்து அல்லது இருபது வருஷமாவது நடந்துகொண்டிருப்பார் என்கிற அதிர்ச்சியான தகவல் உங்களுக்கு கிடைக்க கூடும். பத்து இருபது வருஷம் நடையா நடந்து ஏன் தொப்பை குறையலை என்கிற அதிர்ச்சி உங்களுக்கு வரக்கூடும். அப்போது உங்களுக்கு புரியவரும் நடையா நடந்தால் தொப்பை குறையாது என்கிற உண்மை!

தொப்பை எப்படியெல்லாம் குறையும் என்று வகுப்பெடுக்க எத்தனையோ பண்டிதர்கள் இருக்கிற இந்த நாட்டில் எப்படியெல்லாம் பண்ணினால் குறையாது என்று யாரும் சொல்லித்தருவதில்லை. அது தெரிந்தால் நாம் நம்முடைய பொன்னான நேரத்தை தேவையில்லாமல் நடையாய் நடந்து வீணடிக்காமலாவது இருப்போம் இல்லையா!

சரி விஷயம் இதுதான் வாக்கிங் பண்ணினால் தொப்பை குறையாது. உடல் எடை வேண்டுமானால் கொஞ்சமே கொஞ்சமாக நீண்ட கால வாக்கிங்கால் குறையலாம். அப்போ ஜாகிங் அல்லது ரன்னிங் பண்ணினால் என்னதான் குறையும். அதனால் என்ன பயன் என்றால்... வாகிங் ஜாகிங் செய்வது உடல்நலத்துக்கு நல்லது. உடலின் உள்ளுறுப்புகள் நன்றாக இயங்க உதவும். தட்ஸ் ஆல்!

வாக்கிங் ஜாகிங் போகிறவர்களை கவனித்தால் தினமும் வாக்கிங் போய் முடித்துவிட்டு அப்படியே பக்கத்து கடைகளில் போண்டா பஜ்ஜி வாங்கி தின்றுவிட்டு அப்படியே ஒரு டீயை வாங்கிக்குடிப்பதை பார்க்கலாம். அப்படி செய்தால் நிச்சயம் தொப்பை குறையாது. அதிலும் ஆரோக்கிய சூப்பு என்று எதை எதையோ கொழகொழப்பாக விற்கிறார்கள். அதெல்லாம் வாங்கி தினமும் குடிக்கவே கூடாது; தினமும் வாக்கிங் போனால் மட்டுமில்லை, வாக்கிங் போகிற இடத்தில் கண்டதையும் வாங்கித்தின்று கொண்டே இருந்தாலும் தொப்பை குறையாது. வாக்கிங் போகிறேன் ஜாகிங் போகிறேன் என்பதாலேயே நார்மலாக சாப்பிடுவதை விட கூடுதலாக சாப்பிடக்கூடாது. உடற்பயிற்சி செய்வது என்பது கண்டமேனிக்கு தின்பதற்கான லைசென்ஸ் இல்லை என்பதை புரிந்துகொள்ள வேண்டும் மக்களே.

என்னதான் வாகிங் ஜாகிங் பண்ணினாலும் இரவெல்லாம் சரக்கு அடித்துவிட்டு தூங்கினால் நிச்சயம் தொப்பை குறையாது. குடிப்பழக்கம் தொப்பைக்கு முக்கியக் காரணம். தினமும் ஒரு கட்டிங்தான் ஒரு ஸ்மால்தான் என என்ன காரணகாரியங்கள் சொன்னாலும் ஒருதுளி என்றாலும் தவறுதான். இல்லைங்க எனக்கு குடிக்காமல் வேலை ஓடாது என்று நினைத்தால் தொப்பைக்கு மரியாதை கொடுத்து பொட்டிட்டு பூவிட்டு பத்திரமாக வயிற்றோடு வைத்துக்கொள்ளுங்கள்.

யோகா பண்ணினால் தொப்பை குறையும் என்று நினைக்கிறவர்கள் உண்டு. யோகா மாஸ்டர்களுக்கே தொப்பைகள் இருப்பதை கவனித்திருக்கிறீர்களா! யோகாசனங்களில் சில குறிப்பிட்ட மிகவும் கடினமான வகைகளை செய்தால்தான் குறையும் மற்றபடி யோகா பண்ணினாலும் குறையாது. ஸ்விம்மிங் பண்ணினால் தொப்பை குறையும் என நினைக்கிறார்கள். நீச்சல் பயிற்சி பண்ணினாலும் தொப்பை குறையாது.

அப்புறம் என்ன பண்ணினால்தான் தொப்பை குறையும். சில பாய்ன்ட்ஸ் சொல்கிறேன்.

1) எடைகுறைப்பு வேறு; தொப்பைகுறைப்பு வேறு என்பதை புரிந்துகொள்ளுங்கள். எடைகுறைப்பில் தொப்பையும் கொஞ்சம் குறையும்தான் ஆனால் மொத்தமாகக் குறையாது

2) தொப்பையை குறைப்பது ஒரு ப்ராஸஸ் அது பல ஆண்டுகளாக நீங்கள் உங்கள் வயிற்றில் கட்டிய இரும்புக்கோட்டை அதை தகர்ப்பது அத்தனை சுலபமில்லை என்பதை ஏற்றுக்கொள்ளுங்கள்.

3) தொப்பையைக் குறைப்பதற்கான வழிமுறைகள் உடற்பயிற்சிகள் நிறைய உள்ளன அதை தெரிந்துகொள்ளுங்கள். அதை முறையான பயிற்றுனர் உதவியோடு பின்பற்றுங்கள்.

4) என்ன உடற்பயிற்சி செய்தாலும் உணவுக்கட்டுப்பாடு இல்லையென்றால் எல்லாமே பாழ்தான். தட்டில்

என்ன இருக்கிறது என்பதில் கவனம் செலுத்தமுடியாவிட்டால் தொப்பை ஒரு இன்ச் கூட குறையாது. குடி,புகை, கஞ்சா பழக்கங்களை கைவிடுங்கள்.

5) நாம் எந்த உடற்பயிற்சியை வேண்டுமானாலும் தேர்ந்தெடுக்கலாம், அது நீச்சலோ யோகாவோ ஓட்டமோ டென்னிஸோ எதுவாக இருந்தாலும் அதை பூப்போல உடலுக்கு வலிக்காமல் செய்தால் எந்த பலனும் இருக்காது. ஒவ்வொருநாளும் ஒரு அடியாவது முன்னேற்றம் இருக்கவேண்டும். வலியில்லாமல் பலனில்லை. எனவே வலியை தாங்க தயாராயிருங்கள்.

6) நிறைய நிறைய பணம் செலவழிக்காதீர்கள். பொருட்கள் தொப்பையைக் குறைக்காது, உங்கள் பர்ஸைதான் இளைக்க வைக்கும். நிறைய நிறைய நேரத்தை உடற்பயிற்சிக்காக செலவழியுங்கள். அதுதான் நல்ல ரிசல்ட்களை தரும்.

7)சின்ன சின்ன ரிசல்ட்களுக்கே திருப்தி அடைந்துவிடாதீர்கள். அது உங்கள் பயணத்தில் பெரிய முட்டுக்கட்டையாக இருக்க நேரலாம். பெரிதினும் பெரிது கேளுங்கள்.

8 ) காலம் மிகவும் முக்கியம். ஒரே நாளில் எதுவுமே குறையாது. எனவே போதுமான கால அவகாசமும் பொறுமையும் முக்கியம். அதுவரை விடாப்பிடியாக பயிற்சிகளைச் செய்யவேண்டும்.

9) தொப்பை இருக்கிறவர்கள் எல்லாம் ஆரோக்கியமற்றவர்கள் என்றும் தொப்பை இல்லாதவர்கள் ஆரோக்கியமானவர்கள் என்பது ஒரு மூடநம்பிக்கை. தொப்பைக்கும் ஆரோக்கியத்துக்கும் தொடர்பில்லை என்பதை புரிந்துகொள்ளுங்கள்.

10) பிறகு.. இந்த சிறப்பிதழில் வந்திருக்கும் கட்டுரைகளை எல்லாம் படித்துவிட்டு நீங்களே ஒரு முடிவுக்கு வாருங்கள்! ( ஆசிரியர், கொஞ்சம் கவனிங்க.. மீட்டருக்கு மேல கூவியிருக்கேன்!)

ஜூன், 2022

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com