நான் பிச்சைக்காரன் இல்லை!

நான் பிச்சைக்காரன் இல்லை!

வார இதழில் ஜோக்ஸ் தேர்ந்தெடுப்பது வேலை அல்ல, அது ஒரு தனிக்கலை. அந்த வேலைதான் எனக்கு இடப்பட்டிருந்தது.

போஸ்ட்கார்டிலும் கடிதங்களிலும் வருகிற ஆயிரக்கணக்கான ஜோக்குகளில் சிரிப்பு வருகிற மாதிரியான சிறந்த நகைச்சுவைகளை தேர்ந்தெடுக்க வேண்டும். கண்டமேனிக்கு மொக்கை ஜோக்குகள் படித்து படித்து நம்முடைய மூளையின் சிரிப்புமூட்டும் நியூரான்கள் எல்லாம் கண்டமாகிவிடும். நம் கனவுகளில் மன்னர்கள் பதுங்கு குழிகளுக்குள்ளேயே வாழ்வார்கள், வாத்தியார்கள் மாணவர்களிடம் பல்பு வாங்குவார்கள், மனைவிகளிடம் கணவன்கள் அச்சத்தில் நடுங்குவார்கள், டாக்டர்கள் பேஷண்ட்களை கொலை செய்வார்கள்.

 ஒருநாள் சாவகாசமாக மதிய உணவுக்குப் பிறகு மேஜையில் குவிந்திருந்த ஜோக்குகளை ஒவ்வொன்றாக படிக்கத்தொடங்கினேன். அந்த கடிதத்தை முதலில் படித்த போது சிரிப்பு வந்துவிட்டது. யாரோ வம்பிழுக்கிறார்கள் என நினைத்தேன். ஆனால் அது நிஜம் என்றதும் மனசு கனத்துவிட்டது.

‘சார் எனக்கு பணம் தேவைப்படுகிறது. எனக்கு வயது ஆகிவிட்டது. என் மகனிடம்தான் எல்லாவற்றிக்கும் காசு கேட்க வேண்டி இருக்கிறது. முன்பெல்லாம் வாரத்திற்கு என்னுடைய இரண்டு ஜோக்காவது தேர்ந்தெடுப்பீர்கள், இப்போதெல்லாம் மாதம் ஒரு ஜோக்கு கூட தேர்ந்தெடுப்பதில்லை. தயவு செய்து என்னுடைய ஜோக்குகள் நிறைய தேர்ந்தெடுத்து என் மானத்தை காப்பாற்றுங்கள். மிகவும் கஷ்டமாக இருக்கிறது,' என்பதாக அந்த கடிதம் நீண்டிருந்தது. ஜோக்கை தேர்ந்தெடுக்க செய்யும், சென்டிமென்ட் தாக்குதல் என நினைத்தேன். அவர் அனுப்பிய ஜோக்குகளில் எதுவும் தேறவில்லை என்று தூக்கிப்போட்டுவிட்டேன்.

அடுத்த வாரமே மீண்டும் கடிதம் அதே பாணியில். அதே கோரிக்கை. நிறைய ஜோக்குகள் எதுவுமே சிரிப்புவரவில்லை. ரிஜெக்ட்! வருத்தமாகவும் இருக்கிறது. யார் இந்தாளு என்னதான்யா உன் பிரச்னை. இரண்டு ஜோக்கை தேர்ந்தெடுத்து போட்டால் ஒண்ணும் அறம் தவறிவிடப்போவதில்லை. ஆனாலும் பண்ணமாட்டேன். அது என் அதிகாரபீடம். அங்கே என்னிடம் ஒரு  செங்கோல் இருந்தது. ரிஜெக்ட் சிம்மாசனத்தில் அமர்ந்துகொண்டு, இந்த ஜோக்கை பிடித்து கொண்டுபோய் எண்ணெய் கொப்பரையில் போடுங்கள் என்று ஆணையிட்டே பழகிவிட்டது!

மூன்றாவது கடிதமும் வந்துவிட்டது. இந்த முறை இன்னும் மன்றாடல் அதிகமாகவே இருந்தது. ‘ஐயா நீங்கள் ஏன் என்னுடைய ஜோக்குகளை நிராகரிக்கத் தொடங்கி இருக்கிறீர்கள் என்று தெரியவிலை. நான் இதுவரை ஐநூறு ஜோக்குகள் அனுப்பிவிட்டேன். அதில் ஒன்றுகூடவா நன்றாக இல்லை. நான் உங்கள் இதழில் முப்பது ஆண்டுகளாக ஜோக் எழுதுகிறேன். இதுவரை ஆயிரக்கணக்கில் என் ஜோக்குகள் பிரசுரமாகி இருக்கிறது. என்னை நிராகரித்துவிடாதீர்கள்' என்று கெஞ்சும் தொனியில் நீண்டது கடிதம். ஜோக்குகள் இந்தமுறையும் தேறவில்லை. ஒரு குற்றவுணர்ச்சி என்னை எட்டி உதைக்க அவருடைய எண்ணுக்கே போனில் அழைக்க முடிவெடுத்தேன்.

அது அந்த எழுத்தாளரின் மகனுடைய எண்(ஜோக் எழுதுபவரும் எழுத்தாளர்தானே...). மகன் மிகுந்த மரியாதைக்குறைவாக அவரைப்பற்றி பேசினார். ‘அந்தாளுக்கு வேற வேலை இல்ல சார், உடம்பு சரியில்லாத ஆளு தினமும் இதுக்குன்னு கௌம்பி போய் லெட்டர் போட்டுட்டு வராப்டி... இதுக்கு பேப்பர் வாங்குற செலவு பேனா செலவுனு அதைவேற கேட்டுட்டே இருப்பாரு,' என்று சலித்துக்கொண்டார். நான் அவரிடம் பேசவேண்டும் என்று சொன்னேன். வீட்டுக்கு போனதும் போன் தரேன் என்றார். அவரிடம் போன் இல்லை என்பது தெரிந்தது.

அன்று இரவு அவர் பேசினார். ‘மொத மொத ஜோக் எழுதி அது விகடன்ல பிரசுரமானப்ப எல்லாரும் புகழ்ந்தாங்க, அந்த பத்திரிகைய எடுத்துட்டு எங்க ஊர்ல ஒரு ஆள் விடாம காட்டினேன். மக்கள்லாம் பாராட்டினது எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது, அப்ப எனக்கு இருபது இருபத்தி ரெண்டு வயசுதான். அதுக்கு பிறகு நிறைய பத்திரிகைகளுக்கு ஜோக் எழுத தொடங்கினேன். எழுதிட்டே இருப்பேன். தினமும் நூறு ஜோக்லாம் எழுதிருக்கேன். ஒரே வாரத்துல குமுதம் விகடன் கல்கி குங்குமம்னு எல்லா பத்திரிகைலயும் என் ஜோக் வந்திருக்கு. ஜோக் எழுத்தாளர்கள் எல்லாருமா சேர்ந்து அடிக்கடி சந்திச்சிக்குவோம் எங்களுக்குள்ள போட்டி இருக்கும். அதுக்காகவே எழுதுவேன் விதவிதமா எழுதுவேன். அந்த வாரம் என்ன டாபிக்கோ அதை புடிச்சு எழுதினா நிச்சயம் பிரசுரம் ஆகிடும், அதான் டெக்னிக். ஜோக் எழுதி வந்த சன்மானத்த வச்சு வீட்டுக்கு வேண்டியதெல்லாம் வாங்கிப்போட்டு பொண்டாட்டிய சந்தோஷப்படுத்துவேன். டிவி கூட வாங்கினேன். அவ்ளோ வரும். ஜோக்ஸ் போட்டின்னா ஒரு பாட்டில் இங்க் தீந்துடும். ஒருமுறை ஐம்பதாயிரம் ரூபா கூட ஜெயிச்சிருக்கேன். இப்பல்லாம் போட்டியும் வைக்குறதில்ல, அம்பது நூறுனுதான் தராங்க... என்ன பண்ண... யாரும் ஜோக்கு படிக்கறதும் இல்லைல' என்று அவருடைய கதையை சொல்லிக்கொண்டே போனார். அவர் ஒரு மிகச்சிறிய வேலையில் இருந்தவர். பெரிய வருமானம் இல்லை. ஆனாலும் விடாப்பிடியாக ஜோக் எழுதிக்கொண்டே இருந்திருக்கிறார்.

‘இப்ப டிவில மேடைல பேசறவங்க ஸ்டான்ட்அப் காமெடி பண்றவங்க பேசற ஜோக்குகள்ல முக்காவாசி நான் எழுதினதாதான் இருக்கும். அதுக்கெல்லாம் யாரும் எந்த அங்கிகாரமும் ராயல்டியும் தரமாட்டாங்க, அட இன்னாரோடதுனு கூட சொல்லமாட்டாங்க, இப்ப ரிட்டையர் ஆகிட்டேன். எனக்கு உடம்புக்கு முடியல எதுனாலும் பையன் கைய எதிர்பார்க்க வேண்டியிருக்கு. இப்ப முன்ன மாதிரி ஜோக்கும் எழுதமுடியல. ரிஜக்ட் ஆகிடுது, அதுக்காக விடமுடியுமா. வீட்ல பையனோட சண்டை போனை உடைச்சிட்டேன். புது போன் கேட்டேன் வாங்கித்தரல. எதுக்குமே காசு தரமாட்டேங்குறான். அதான் அவன்ட்ட பேசறதில்ல. கைலயும் காசில்ல அதான் அப்படி லெட்டர் போட்டேன். எனக்கே காமெடியாத்தான் இருந்துது,' என்றுவிட்டு சிரித்தார்.

‘சார் நீங்க தப்பா எடுத்துக்காதீங்க நானும் உங்க மகனாட்டம்தான். நானும் நிறைய ஜோக் எழுதுறவன்தான். உங்க கஷ்டம் புரியுது. நான் வேணா பணம் எதுவும் அனுப்பட்டா...' என்று தயங்கினேன்.

‘சார் நான் ஜோக் ரைட்டர்தான். பிச்சைக்காரன் இல்ல. நீங்க ஜோக் நல்லாருந்தா போடுங்க, காசெல்லாம் வேண்டாம். உங்ககிட்ட லெட்டர்ல பொலம்பினத இங்கே ரோட்ல பொலம்பினாலே நிறைய தேறும். நான் பாக்க பரிதாபமா என்னத்த கன்னையா மாதிரிதான் இருப்பேன்,' என்றுவிட்டு சிரித்தார்.

‘சார் நான் வேற எதாவது பண்ணட்டுமா' என்று கேட்டேன். ‘நீங்க இப்படி போன் பண்ணுவீங்கனு நினைக்கவே இல்ல. எனக்கு ஒரே வருத்தம்தான் இதுவரைக்கும் எத்தனையோ சூப்பரான ஜோக்கெல்லாம் எழுதிருக்கேன். பத்திரிகைலருந்து அதை படிச்சிட்டு ஒருத்தரும் போன் பண்ணி பேசினதில்ல. இதுக்கு போயி கால் பண்ணிட்டீங்களேனுதான் வருத்தம்' என்றார்.

நிறைய பேசினார். தன்னுடைய பிரபலமான நகைச்சுவைகளை, அந்த பாணியை உருவாக்கியதை எல்லாம் சொல்லிக்கொண்டிருந்தார். ‘ஜெயகாந்தன் தொடர்ல, பாலகுமாரன் தொடர்ல, வாலி தொடர்ல, பெரிய பெரிய எழுத்தாளர்கள்ல தொடர்ல ஓரத்துல என் ஜோக்கும் வந்திருக்கு. அவ்ளோ சந்தோஷமா இருக்கும்' என்றார்.

‘ஊர்ல ஜோக் எழுதுறதாலயே கோமாளியாதான் பாக்குறாங்க. என் வீட்லயே என்னை என் சொந்தக்காரன் பொண்டாட்டி புள்ள மொதக்கொண்டு அப்படிதான் பாக்குறான். வேலை செய்ற எடத்துலயே கூட அப்படித்தான். ஆனா என் ஜோக் ரைட்டர்ஸ் உலகத்துல நான் ஜெயகாந்தன்னு நினைச்சுக்குவேன். ஜோக் எழுதுற ஜெயகாந்தன். நான் காசுக்காக எழுதினதில்லப்பா, ஏதோ போராத காலம் அப்படி லெட்டர் போட்டுட்டேன். விடு... ஜோக் எழுதறது ஒண்ணும் சுலபமில்லப்பா, நீங்க ரிஜெக்ட் பண்றத பண்ணுங்க. நான் எழுதிட்டே இருப்பேன். எத்தனை ஆயிரம் ஜோக்கு ரிஜெக்ட் ஆயிருக்கு.. இப்படி புலம்பிட்டேனு ஆறுதலுக்காக எதையாவது போடாதீங்க ஏன்னா என் ரசிகர்கள் என்னை பத்தி குறைச்சலா நினைச்சிடக்கூடாது. சிரிக்காதீங்க எனக்கும் ரசிகர்கள் உண்டு!' போனை அவசரமாக கட் பண்ணிவிட்டார்.

அவர் சொன்னதில் ஒன்று மட்டும்தான் எப்போதும் மனதில் நிலைக்குத்தி நிற்கும். ‘ஒரு கலைஞன் என்னவும் பண்ணலாம் சார். ஒரு பெரிய கச்சேரில அவன் வாசிக் கிற வாத்தியம் எவ்வளவு சின்னதாவும் இருக்கலாம். ஆனா அதுவும் அந்த கச்சேரிக்கு ரொம்ப முக்கியம். என்னை போல சின்ன காரியம் செய்றவனுக்கு பெரிய சன்மானம்ன்றது காசில்ல. வாழ்க்கைல எத்தனையோ துன்பத்துல துவண்டுபோன ஆட்கள் என் ஜோக் படிச்சு ஒரு செகண்ட் அதை மறந்து சிரிச்சிருப்பான்ல.. ஒவ்வொரு வாட்டி ஜோக் எழுதறப்பவும் நான் அவனுக்காகதான் எழுதுவேன். அவன் எப்பவும் என் ஜோக்குக்காக காத்திருப்பான்.‘‘

அவருடைய ஜோக்குகள் அதற்குபிறகும் வந்துகொண்டே இருந்தன. அதில் சிலது பிரசுரமாகும். ரிஜக்ட் பண்ணும்போது அவரை நினைத்துக் கொள்வேன். கடிதம் வழி என்னோடு பேசிக் கொண்டே இருந்தார். நூல்கள் அனுப்பினார். பிறகு கடிதம் வருவது நின்றுவிட்டது.

பிப்ரவரி, 2023.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com