நான்கு நாளில் வேலை தேடிக் கொண்டேன்!

நான்கு நாளில் வேலை தேடிக் கொண்டேன்!

சிறு வயதிலிருந்தே அண்ணன்கள், தம்பி புடை சூழ வீட்டின் ஒரே ராணியாக வலம் வந்தவள் நான். கல்லூரி கூட தினமும் போய் வரும் தூரத்தில் இருக்க வேண்டுமென்று பார்த்து பார்த்து அருகிலிருக்கும் கல்லூரியாக சேர்த்திருந்தார்கள்.

வேலை காரணமாக நான் சென்னை போக வேண்டுமென்ற போது, வீட்டில் கடுமையான எதிர்ப்பு நிலவியது. ஆனாலும் ஒரு வழியாக அவர்களை சமாதானப்படுத்தி, வாழ்வின் உச்சத்திற்குப் போகும் பெரும் கனவுகளோடு சென்னை நோக்கி பயணித்தேன். தன்னிடம் வருபவர்கள் அனைவருக்கும் பாரபட்சமின்றி புகலிடம் அளிக்கும் சென்னை என்னையும் வாரியணைத்துக் கொண்டது.

நான் வந்த காலகட்டத்தில் வொர்க்கிங் விமென்ஸ் ஹாஸ்டலில் தங்க நாம் வேலை பார்க்கும் கம்பெனியின் ஆஃபர் லெட்டர் காண்பித்தால் தான் உறுதி செய்யப்பட்ட இடம் கிடைக்கும். தெரிந்த நண்பரின் அலுவலகத்தில் சேர வந்தவளுக்கு முதல் அதிர்ச்சி. அவர் எதிர்பாராத பிரச்னையால் வெளியூர் சென்றிருப்பதும், வர பத்து நாட்கள் ஆகுமென்றும் தெரிய வந்தது.

என்ன செய்வதென்றறியாத திகைப்பில் இருந்தவளிடம், அறைத்தோழியாக ஆன ஒரு பெண், கவலைப்படாதே, என் கம்பெனி லெட்டர்ஹெட்டை உருவி வருகிறேன்.. நாமே ஒரு ஆஃபர் லெட்டர் ரெடி செய்து தற்போதைக்குக் கொடுத்து சமாளித்து விடுவோம் என்று கூறி உதவ முன் வந்தாள். ஆனால், நகரத்தின் தகிடுதத்தங்களுக்குப் பழகிடாத, என் நேர்மையான மனது, வார்டனிடம், நான்கு நாட்கள் மேனேஜர் லீவு, வந்தவுடன் தந்து விடுகிறேன் என்று கூறியதுடன் நில்லாமல் FreeAds பேப்பரில் பழியாகக் கிடந்து, பல இண்டர்வியூக்கள் சென்று, நான்காம் நாளின் இறுதியில் ஒரு பெரிய கம்ப்யூட்டர் கம்பெனியின் மார்க்கெட்டிங் கோஆர்டினேட்டராக வேலை தேடிக்கொண்டேன். அந்த கடிதத்தைக் கொடுத்து, இடத்தைத் தக்க வைத்துக் கொண்டேன். சென்னை வந்த நான்கு நாட்களில், நானாகவே வேலை தேடி கிடைத்த அனுபவம், மிகப் பெரிய தன்னம்பிக்கையையும், தைரியத்தையும் அளித்தது.

நான் வீட்டில் இருந்த வரை, சாதி, மதம் பற்றிய பேச்சுகள் எழுந்ததில்லை. என் வீடு அனைவரையுமே தன் குடும்பத்தினராகக் கருதியதால், எதுவுமே தெரியாமல் வளர்ந்தோம். ஆனால், ஹாஸ்டலில் சிலர் சிலரை ஏளனமாகப் பார்ப்பதும், மோசமாகக் கமெண்ட் செய்யும் போது தான் ஏனென்று புரிய ஆரம்பித்தது.

என் அறைத் தோழியான மஞ்சு, பேசும் போது தான் ஊட்டி படுகாஸ் இனத்தைச் சேர்ந்தவள் என்றாள். நடிகர் கார்த்திக்கின் திருமணத்தால் அந்த இனத்தைப் பற்றி கேள்விப்பட்டிருந்தேன். மிகக் கடுமையான சட்டதிட்டங்கள், குலவழக்கம், திருமண முறைகளைக் கொண்டிருந்த, வெளியில் பெண்களை அனுப்பாத சமூகத்திலிருந்து போராடி வந்து கல்லூரியில் ஆர்க்கிடெக்சர் படிப்பு படித்துக் கொண்டிருந்தாள்.. ஒரு பெண்ணிற்கான கல்வியென்பது ஒரு குடும்பத்தையே, இனத்தையே மாற்றும் வல்லமை நிறைந்தது என்று எழுதிய பாரதிதாசன் வரிகளில் நான் அவளையே பார்த்தேன்.

அவளும், நானுமாக ரங்கநாதன் தெரு, பாண்டிபஜார் என்று சென்னை தெருக்களின் நீள, அகலம் அறிந்தோம். சென்னையின் ஒரு ஜூஸ் கடை தான், சாத்துக்குடி ஜூஸ்க்கு, மொசாம்பி ஜூஸென்று மற்றொரு பெயர் இருந்ததை கற்றுக் கொடுத்தது.. அதை விடவும் தமிழ், ஆங்கிலம் தவிர வேறெதுவும் அறியாத நான் ஹிந்தி சினிமாக்கள் பார்க்கத் துவங்கினேன். ஹிந்தி பாடல்கள் கேட்கத் துவங்கினேன்.

அம்பத்தூரில் ஒரு கம்பெனியில் பணிபுரிந்து கொண்டிருந்த மற்றொரு அறைத்தோழிக்கு, வேறு ஒரு கம்பெனியில் அதிக சம்பளத்துடன் கூடிய வேலைக்கு இண்டர்வியூ வர, அதற்கு சென்றிருந்த அவள் மாலை அழுத கண்களோடு, கைகளில், கால்முட்டியில் காயத்தோடு வந்தவளைப் பார்த்து மொத்த ஹாஸ்டலும் அதிர்ந்து போனது. அவளை ஆசுவாசப்படுத்தி விசாரிக்க, அதுவரை நகரின் சந்தோஷ முகத்தை மட்டுமே பார்த்திருந்த எங்களுக்கு சென்னையின் மற்றொரு அகோர முகம் தெரிய ஆரம்பித்தது.

அன்று பஸ் வருவதற்கு மிகவும் தாமதம். ஆட்டோவில் போக பணமில்லை. இன்டர்வியூ நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. லிப்ட் கொடுக்கிறேனென்று வந்த ஒருவனிடம், வேறு வழியின்றி அவள் ஏறிக் கொண்டிருக்கிறாள். தன்னுடைய இடம் வந்ததும், அவனை நிறுத்த சொல்ல, அவன் நிறுத்தாமல் இன்னும் வேகத்தை அதிகரித்தவுடன் தான், சூழ்நிலையின் விபரீதம் புத்தியில் உறைக்க, வேகமாக சென்ற வண்டியிலிருந்து அப்படியே குதித்து கீழே விழுந்ததில் அவ்வளவு அடி. பக்கத்திலிருப்பவர்கள் முதலுதவி செய்து அனுப்பியிருந்தார்கள். எங்கும் எவரிடமும் மிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டுமென்பதை அனைவர்க்கும் உணர்த்தியது இச்சம்பவம்.

மாலை நேரங்களில் அனைவர்க்கும் பொதுவாக ஹாலில் இருக்கும் டிவி, சீரியல்களின் வசனங்களில் அலறும். விஜய், அஜீத் படங்களென்றால், பாட்டும் டான்ஸுமாக அமர்க்களப்படும். சானல் மாற்றும் சண்டைகளும் அவ்வப்போது நடக்கும்.

அப்போது அதிகளவு சம்பளம் வாங்குபவர்களாக ஐடி துறைகளில் பணிபுரிந்த பெண்கள் இருந்தனர். அவர்கள் சற்றே அலட்டலாக, மற்றவர்களை ஏளனமாக பார்த்தார்கள். மற்றவர்களுக்கு மாலை 8 மணிக்குள் ஹாஸ்டலுக்குள் வந்து விட வேண்டுமென்கிற கட்டுப்பாட்டில் கறாராக இருக்கும் வார்டன், அவர்களிடம் மட்டும் சற்றே கனிவாக நடந்து கொண்டார்.

ஹாஸ்டலில் ஒரு பெண்ணிடம் மட்டும் எவரும் அதிகமாகப் பேச மாட்டார்கள். என்னையும் பேச விட மாட்டார்கள். கல்லூரியில் படிக்கும் ஏழைக்குடும்பத்தைச் சேர்ந்த அப்பெண்ணிற்கு சில ஆண் நண்பர்கள் இருந்தனர் என்பதே பெரிய குற்றச்சாட்டாக இருந்தது. பாலகுமாரனுடைய கதை மாந்தர்களோடு வளர்ந்த நான் அப்பெண்ணிடம் இதை அறிந்த தினம் முதல் பேசத் துவங்கினேன்.

ஒரு முறை வெயில் காலத்தில் அதிகளவில் தண்ணீர் பிரச்னை இருந்ததால், தண்ணீர் உபயோகத்திற்கான நேரங்களைக் குறைத்து பல கெடுபிடிகளை உருவாக்கினார் வார்டன். ஆனால், அனைவரும் பொங்கியெழுந்து வாசலில் நின்று போராட்டம் நடத்தியவுடன், ஹாஸ்டல் நிர்வாகி வந்து பேச்சுவார்த்தை நடத்தி, காசு கொடுத்து தண்ணீர் வாங்கி விட ஏற்பாடு செய்தார்.

ஒவ்வொரு வாரமும் ஞாயிறன்று தான் துணி துவைப்போம்.. அத்தனை துணிகளையும் மாடியில் காயப்போட்ட பின்பு, தள்ளியிருந்து பார்த்தால் , வண்ணமயமான வானவில்லாக ஈரச்சாரலுடன் காற்றில் சற்றே படபடக்கும் துணிகள், பி.சி.ஸ்ரீராமின் கேமரா கண்கள் வழியே தெரியும் அழகிய வானம் போல காட்சியளிக்கும்..

வார இறுதியில் வேறெங்காவது தங்கப் போகிறோமென்றால், லோக்கல் கார்டியனின் டெலிபோன் நம்பர் கொடுக்க வேண்டும்.. அப்படியெல்லாம் எவருமில்லாத நாங்கள், தெரிந்த தோழியின் நம்பரைக் கொடுத்து விட்டு ஒரு முறை கொடைக்கானல் சென்று வந்தது சாகசம்!

என் தோழியின் மகன் ஹாஸ்டல் பற்றி கூறிய கருத்துடன் இக்கட்டுரையை முடிக்கிறேன். அவன் வெளிநாட்டில் கல்லூரி விடுதியில் தங்கி படிக்கிறான். கல்லூரிக்கு வெளியே இருக்கும் விடுதியாக இருந்திருந்தால் செலவு சற்று குறைவாக இருக்குமே என்று கேட்டேன்.. அவன், வெளியே என்றால் நமக்கு ஏற்ற மாதிரியே இந்திய நாட்டு மாணவர்களோடு சேர்வோம்.. கல்லூரி விடுதிக்குள் என்றால் செக்யூரிட்டி, சேஃப்ட்டியுடன், நமக்கு தெரியாத வேறு நாடுகளிலிருந்து வருபவர்களோடு சேர்ந்து நமக்கான அறை ஒதுக்குவார்கள். எனக்கும் பல்வேறு நாடுகளிலிருந்து புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். எல்லா வித மனிதர்கள் பற்றியும் அறிந்து கொள்ள சிறந்த அனுபவமாக அது அமையும் என்று கூறினான். எவ்வளவு பெரிய உண்மை!

செப்டம்பர், 2021

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com