நாற்காலிகள் காலியாக இருக்கிறது!

நாற்காலிகள் காலியாக இருக்கிறது!

தமிழ்நாட்டில் எண்ணற்ற ஆன்மீக/ சமயச்சொற்பொழிவாளர்கள் இருந்தார்கள்; இருக்கிறார்கள். பல்வேறு தரங்களில், அறியப் பட்டவர்கள், அறியப்படாதவர்கள்...

பழைய நாளில் வாரியார், கீரன், தேமொழியார் போன்றவர்கள் இருந்தார்கள். இந்நாளில் சுகி.

சிவம், வேளுக்குடி கிருஷ்ணன், நாகை முகுந்தன், கிருஷ்ணப் பிரேமி போன்றவர்கள். இவர்களெல்லாம் முற்றாகவே ஆன்மீகமும் சமயமும் பேசுகிறவர்கள். இவர்களை அல்லாமல் இலக்கியமும் ஆன்மீகமும் பேசும் வல்லமை உள்ளவர்கள் அறிவொளி, நெல்லை கண்ணன், இலங்கை ஜெயராஜ் போன்றவர்கள்.

இவர்கள் அத்தனைபேருமே வெற்றிகரமான பேச்சாளர்கள்தாம் என்றாலும் வாரியார் பெற்ற மாபெரும் சனரஞ்சக வெற்றியை வேறு எவரும் பெறவில்லை. வாரியாரின் நாற்காலி காலியாகவே கிடக்கிறது. அதை நிரப்பவேண்டும் என்று எத்தனையோபேர் ஆசைப்படுகிறார்கள். ஆனால் அது யாராலாவது நிரப்பப்படுமா என்பது கேள்விக்குறிதான். அது ஒருபுறமிருக்கட்டும். கவனிக்க வேண்டியது இன்னொன்றிருக்கிறது.

ஆன்மீகத்தைப் பேசுவது என்பது ஒன்று; சமயத்தைப் பேசுவது என்பது மற்றொன்று. இரண்டு பேச்சுகளுக்கும் நோக்கம் வேறு வேறு. ஆன்மீகப் பேச்சு என்பது உண்மையை அறிவிக்கப் பேசுவது; சமயப் பேச்சு என்பது சடங்கு நெறிக்குள் அகப்படுத்தப் பேசுவது.

பேசுகிறவர்களுக்கு எதைக் குறித்துப் பேசவேண்டும் என்பதைப்பற்றிய தெளிவு பழைய நாளில் இருந்தது. புத்தர் ஆன்மீகம் பேசினார்; கிறிஸ்து ஆன்மீகம் பேசினார்; சித்தர்கள் ஆன்மீகம் பேசினர்; வள்ளலார் முதலில் சமயம் பேசிப் பின் நிலை மாறி ஆன்மீகம் பேசினார். அப்பர் சமயம் பேசினார்; சம்பந்தர் சமயம் பேசினார்; ராமானுசர் சமயம் பேசினார்; ஆறுமுக நாவலர் சமயம் பேசினார்.

சமயப் பேச்சு விசாரணை யில்லாத பேச்சு. அது மக்கள் கைமீறிவிடாதபடியும் கேள்விகள் கேட்டுவிடாதபடியும் கோடு தாண்டிவிடாதபடியும் கட்டி வைத்துக் கொள்கிற பேச்சு. பேசுகிறவனின் விருப்பப்படி மக்களைச் சமைக்கிற பேச்சு. உண்மையை நான் அறிந்திருக்கிறேன்; இதோ உனக்கு அறிவிக்கிறேன்; அறியாமையில் ஆழ்ந்திருக்கிறவனே! அறிந்துகொள்! வழிமுறை இது! என்று வரந் தருகிற பேச்சு.

ஆன்மீகப் பேச்சு மக்களைக் கிளர்த்துகிற பேச்சு. கேள்வி கேட்கத் தூண்டுகிற பேச்சு. பேசுகிறவனின் பேச்சையும் கேள்வி கேட்கும் உரிமையைச் சுட்டிக் காட்டுகிற பேச்சு. நான் உண்மையை அறிக்கையிடுகிறவன் மட்டுமே;

நீ அறி; நான் அறிந்திருப்பது எனக்கான உண்மை; நீ அறியவிருப்பதே உனக்கான உண்மை! தேடு! வழிமுறை உனது! என்று திசை காட்டுகிற பேச்சு. ஆகவே சமயவாதிகளால் எப்போதும் எதிர்க்கப்படுகிற பேச்சு. ஆன்மீகம் என்கிற அறிவு நிலையைப் பேசிய புத்தர் எதிர்க்கப்பட்டார்; கிறிஸ்து எதிர்க்கப்பட்டார்; சித்தர்கள் எதிர்க்கப்பட்டார்கள்; வள்ளலார் எதிர்க்கப்பட்டார் (எரிக்கப்பட்டார் என்று சொல்வாரும் உண்டு). இவர்கள் நாற்காலிகள் எதையும் விட்டுச் செல்லாதவர்கள்; தான் அமர்ந்த நாற்காலியைப் பீடம் என்று கருதாதவர்கள்; அதற்கு வாரிசு நியமிக்காதவர்கள். இவர்கள் இப்போது இல்லை.

இவர்கள் எத்தன்மையவர்கள் என்பதற்கு வள்ளலார் பேசியது  சான்று:

“சைவம் வைணவம் முதலிய சமயங்களிலும், வேதாந்தம் சித்தாந்தம் முதலிய மதங்களிலும் லக்ஷியம் வைக்க வேண்டாம். ஏனெனில், அவைகளிலும் அவ்வச்சமய மதங்களிலும் - அற்பப் பிரயோஜனம் பெற்றுக் கொள்ளக்கூடுமேயல்லது, ஒப்பற்ற பெரிய வாழ்வாகிய இயற்கையுண்மை என்னும் ஆன்மானுபவத்தைப் பெற்றுக் கொள்கின்றதற்கு முடியாது. ஏனெனில் நமக்குக் காலமில்லை. மேலும், இவைகளுக்கெல்லாம் சாக்ஷி நானே யிருக்கின்றேன். அப்படி லக்ஷியம் வைத்ததற்குச் சாட்சி வேறே வேண்டியதில்லை. நான் சொல்லியிருக்கிற - திருவருட்பாவில் அடங்கியிருக்கிற - ஸ்தோத்திரங்களே போதும். அந்த ஸ்தோத்திரங்களையும் மற்றவர்களுடைய ஸ்தோத்திரங்க ளையும் சபைக்குக் கொண்டு வந்தால், அவைகளே சாக்ஷி சொல்லி விடும். ஏன் அவ்வளவு மிகுந்த அழுத்தம் எனக்கு அப்போதிருந்ததென்றால், அப்போது எனக்கு அவ்வளவு கொஞ்சம் அற்ப அறிவாக இருந்தது.“

இவ்வளவு அழுத்தமாகத் துணிந்து பேசுகிற ஆன்மீகப் பேச்சாளர்கள் யார் இருக்கிறார்கள் என்பது அவரவர்களே பார்த்துக் கொள்ளத்தக்கது.

சமயப் பேச்சாளர்கள் இப்போது ஏராளமாக இருக்கிறார்கள். நாளிதழ்களின் இன்றைய நிகழ்ச்சிகள் என்னும் நிரலைப் பார்த்தால் தெரியும் - ஐம்பதுபேர் கூடி அமர இடம் இருக்கும் கோவில்கள் எல்லாவற்றிலும் யாராவது ஒருவர் ஏதாவது ஒரு பொருள்பற்றிச் சமயச் சொற்பொழிவு ஆற்றிக்கொண்டிருப்பார்.

சமயப் பேச்சாளர்களில் பலர் வெற்றிகரமானவர்களாகவும் அறியப்பட்டவர்களாகவும் இருக்கிறார்கள். மொழியழகாலும் பேச்சழகாலும் எந்தக் குற்றமும் இல்லாத பேச்சாளர்கள் இவர்கள். ஆனால் அவர்கள் அடைய எண்ணுகிற இலக்குகள் தனிப்பட்டவையாகவே இருக்கின்றன.

மீண்டும் காலியாகக் கிடக்கிற வாரியாரின் நாற்காலிக்கு வருவோம். யார் நிரப்பக்கூடும் அதை? நாற்காலிகளை நிரப்புவதற்கு அந்த நாற்காலிகளுக்குப் பொருந்துகிற உடல்வாகுமட்டும் போதுமானதில்லை. சுவைபடக் கதை சொல்வதும், நகைக்கச் செய்வதும்கூட - இவையெல்லாம் வெற்றிகரமான பேச்சின் ஊடிழைகள் என்றாலும்கூட - போதுமானவையில்லை.

நாற்காலிக்கான ஆட்களை பேச்சின் சுவையோடு, அதன் காலப் பொருத்தமும் சேர்ந்தே தீர்மானிக்கிறது.

வாரியார், கீரன் ஆகியோரின் வெற்றி அவர்களுடைய பேச்சுகளையும் அவற்றின் சுவையையும் மட்டும் பொறுத்ததல்ல. அவர்கள் பேசிய காலத்தையும் அவர்கள் தேர்ந்துகொண்ட களத்தையும் பொறுத்தது. களம் தெரிந்து கத்தி வீசியவர்கள் அவர்கள்.

வீதிக்கு வீதி பகுத்தறிவு முழங்கப்பட்டு வந்த காலம். சமய நம்பிக்கைகள் மூடத்தனம் என்று சாடப்பட்டு வந்த காலம். சமயங்களையும் அவை வழங்கிய நம்பிக்கைகளையும் பற்றி நின்றவர்களுக்கு தங்களுடைய நிலைபாட்டின் நியாயங்களைப் பேசும் பிரதிநிதிகள் வேண்டியிருந்தார்கள். வாரியாரும் கீரனும் வந்தார்கள்.

பகுத்தறிவோடு தமிழும் முழங்கிய காலம் அது. ஆரியம்போல் அழிந்து, உலக வழக்கொழிந்து சிதையாத தமிழ்மொழியின் சீரிளமைத் திறம் வியக்கப்பட்ட காலம். சமயம் பேச வந்த வாரியாரும் கீரனும் தமிழ்மொழியில் செய்யப்பட்ட புராணங்களை மட்டுமே - முற்றிலும் அல்லது பெரிதும் - பேசினார்கள். பாரதத்தைப்பற்றிப் பேச நேர்ந்தால் வியாசரின் மகாபாரதத்தை அல்லாமல், வில்லிபுத்தூராழ்வாரின் வில்லி பாரதத்தையே பேசினார்கள். இராமாயணம் பேச நேர்ந்தால் வால்மீகியின் இராமாயணத்தை அல்லாமல், கம்பனின் இராமாயணத்தையே பேசினார்கள். கந்தபுராணம் பேசினார்கள்; திருவிளையாடற்புராணம் பேசினார்கள்; பெரிய புராணம் பேசினார்கள்; திருப்புகழ் பேசினார்கள்; தேவாரம் பேசினார்கள்; திருவாசகம் வீசினார்கள். தமிழே பேசினார்கள். சமயத்துக்கு விரோதமானவர்களுங்கூட, அவர்கள் சமயம் பேசினார்கள் என்று நினையாமல் தமிழ் பேசினார்கள் என்று நினைக்கும்படிப் பேசினார்கள். தமிழல்லாத ஒன்றை, சமயத்தின் நியாயப்பாட்டுக்காகவும் அவர்கள் பேசியதில்லை.

தற்போது அப்படியில்லை. பேசுவதுதான் முதன்மையானதாக இருக்கிறதே ஒழிய, எதைப் பேசுவது என்பதன்று. ஒரு முனையில் வீசப்படுவது வாள் என்று தெரிகிறபோதுதான் எதிர்முனை அதைச் சந்திப்பதற்கு வாளையோ அல்லது கேடயத்தையோ தூக்குகிறது. ஒரு முனை வாள் இற்று வீழும்போது மறுமுனை வாளும் இற்று வீழும்.

ஆகஸ்ட், 2013.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com