எம்.பி.ஷெட்டி
எம்.பி.ஷெட்டி

நிழல் அல்ல நிஜம்!

டூப் கலைஞர்களின் அசல் கதைகள்

கர்நாடக மாநிலம் உடுப்பியில் பிறந்த முத்து பாபு ஷெட்டிக்கு படிப்பில் நாட்டம் இல்லை. கவலையுடன் பெற்றோர் மும்பைக்கு அனுப்பி வைக்க, அங்கு சிரமத்திற்கு பின் டாடா ஆயில் மில்லர்ஸ் கேண்டினில் பாத்திரம் கழுவும் வேலை. பின் வெயிட்டராக பதவி உயர்வு. பின் மும்பையிலுள்ள ஜிம்மில் பாடி பில்டிங், பாக்ஸிங் கற்றுக் கொள்கிறார். பாக்ஸிங் போட்டிகளில் பங்குபெறும் அளவிற்கு உயர்ந்து பின் போட்டிகளில் தொடர்ந்து வெல்பவராக மாறுகிறார் முத்து பாபு ஷெட்டி(எம்.பி. ஷெட்டி).


இந்தியாவின் ஆரம்பகால ஸ்டண்ட் மாஸ்டர் பாபுராவ் பஹெல்வான், நடிகரான பகவான் தாதாவுடன் ஒரு பாக்ஸிங் மேட்ச் பார்க்க செல்லும் போது எம்.பி.ஷெட்டியின் சண்டையில் கவரப்பட்டு அவருக்கு ஒரு திரைப்பட சண்டைக் காட்சியில் பங்கேற்க அழைப்பு விடுத்தனர்.


சண்டைக் காட்சியில் பங்குபெற்ற எம்.பி.ஷெட்டிக்கு 200 ரூபாயில் சம்பளம் கிடைக்க, எல்லா வேலைகளையும் விட்டுவிட்டு சினிமா ஸ்டண்ட் மாஸ்டராகிறார். வாழ்க்கை அமோகமாக போய்க்கொண்டிருக்கும் போது பாம்பே 405 மைல்ஸ் (1980) என்ற படத்தின் படப்பிடிப்பு. வினோத் கன்னா, சத்ருகன் சின்ஹா முக்கிய வேடத்தில். டைரக்டர் பிரிஜ் சாதனா. ஒரு ஆக்‌ஷன் காட்சியில் பெட்ரோல் குண்டு ஒன்று சத்ருகன் சின்ஹா அருகில் விழுந்து வெடிக்க வேண்டும். சத்ருகன் சின்ஹாவிற்கு டூப் மன்சூர் என்கிற இளைஞர். பறந்து வந்து மன்சூருக்கு அருகில் வெடிக்க வேண்டிய அந்த குண்டு,  மன்சூர்  உடல் மேல் பட்டு வெடிக்க, சம்பவ இடத்திலே அவர் இறந்து போனார்.
இந்த மரணத்திற்கு தான் காரணமாகிவிட்டதாக எம்.பி. ஷெட்டிக்கு குற்ற உணர்வு. தொடர்ந்து வேலையில் கவனம் செலுத்துவதை விட்டு, குடித்தே நேரத்தை கழித்தார். மன்சூர் இறந்து இரண்டு வருடத்தில் இறந்து போனார் எம்.பி ஷெட்டி தனது 52வது வயதில்.


எம்.பி.ஷெட்டியின் மகன் தான் இயக்குநர் ரோகித் ஷெட்டி. தனது படங்களின் சண்டை காட்சிகளில் பாதுகாப்புக்கு அதிகம் கவனம் செலுத்துகிறார். 

ப்பா ஸ்டண்ட் மேன். அடிபட்டு வேலைக்கு செல்ல முடியாமல் வீட்டில். பாட்டிக்கு பக்கவாதம், இரண்டு சகோதரிகள். எல்லோரும் எழும்பூரில் உள்ள பியூட்டி பார்லரில் வேலை செய்து அம்மா சம்பாதிக்கும் முந்நூறு ரூபாய் சம்பளத்தில் மாதத்தை ஓட்ட வேண்டும். கோடம்பாக்கத்தில் உள்ள லயோலா மெட்ரிகுலேசன் பள்ளியில் படிப்பை சீக்கிரமாக துறக்கவேண்டியதாயிற்று. ராயப்பேட்டை ஆஸ்பத்திரியில் வார்ட் பாய், ஹோட்டல் ஒன்றில் வெயிட்டர். மயிலாப்பூரில் மெக்கானிக் ஷாப்பில் வேலை என்று சில்லறை வேலைகளுடன் அப்பாவின் தற்காப்பு கலை பயிற்சி. கலையை கற்றபின் அப்பா இல்லாத போது மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுப்பது என்று பீட்டர் ஹெயின் காலம் கழிந்தது.


1992இல் ஸ்டண்ட் சங்கத்தில் உறுப்பினராகி அஜித்தின் அறிமுகப்படமான அமராவதியில் மாஸ்டர் ஜூடோ ராமுவிடம் உதவியாளர். ஜாக்குவார் தங்கம் மாஸ்டரிடம் வேலைபார்த்துவிட்டு கனல் கண்ணனிடம் சேருகிறார். அவ்வைசண்முகி, சிரஞ்சீவியின் ஹிட்லர் மற்றும் முத்து படத்தில் பங்காற்றி கவனம் பெறுகிறார். 2001இல் ஸ்டண்ட் மாஸ்டர் ஆகும் பீட்டர் ஹெயின் கௌதம் மேனனின் மின்னலே, கிருஷ்ணா வம்சியின் முராரி மற்றும் சிரஞ்சீவியின் அஞ்ஜி படங்களில் பங்காற்றி கவனம் ஈர்க்கிறார். லிங்குசாமியின் 'ரன்' படம் புகழ் வெளிச்சத்தை பாய்ச்சுகிறது. சரசரவென உயரத்திற்கு வருகிறார். ராவணன் படத்தில் நீர் வீழ்ச்சி அருகே எடுக்கப்பட்ட ரிஸ்க்கான காட்சிகள், பாகுபலியின் இரண்டாவது பாகத்தில் பல்லாளதேவா மற்றும் பாகுபாலிக்கும் இடையே நடக்கும் சண்டை காட்சிகள், எந்திரனில் ரஜினிக்கும் சிட்டி ரஜினிக்கும் இடையே நடக்கும் சண்டை என்று சிலாகித்துப் பேசப்படும் பீட்டர் ஹெயினுக்கு மோகன்லால் நடித்த புலி முருகன் படத்திற்காக சிறந்த சண்டை இயக்குநருக்கான தேசிய விருது கிடைத்தது.


முதல்வன் படத்தில் டூப் போடும் போது தீயை தடுக்கும் திரவம் (Fire Retardant Gel) இல்லை. அதனால் நிர்வாணமாக குதிக்கும் போது முதுகிற்கு அருகில் பெட்ரோல் ஸ்ப்ரே அடித்து பற்ற வைக்க வேண்டும். டைமிங் பிசகி முதுகு தீப்பிடித்து கருகிவிட்டது. இது பற்றி பேசும் போது நல்ல வேளை உயிருடன் இருக்கிறேன் என்பாராம் பீட்டர்.


மகதீரா படத்தின் போது ஏற்பட்ட விபத்தில் பீட்டர் ஹெயின் கைகள், தோள்பட்டை மற்றும் நெஞ்சு எலும்பு என்று 19 எலும்புகள் உடைந்தது. இது நடந்த எட்டாவது நாள் வேலைக்கு திரும்பினாராம் பீட்டர் ஹெயின், கட்டுகளுடன்.


முகங்காட்டாமல் சாகசங்களை நிகழ்த்தி சினிமா பார்வையாளர்களை சந்தோஷப்படுத்தும் இந்த சூரர்களை கௌரவப்படுத்துகிறது இந்த மாத அந்திமழை.


இந்தப் படத்தில் விலங்குகள் சித்திரவதை செய்யப்படவில்லை என்று டைட்டில் கார்டு போடும் டைரக்டர்களால், மனிதர்கள் சித்திரவதை செய்யப்படவில்லை என்று போடமுடியுமா?

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com