நீ ஒரு எம்.ஜி.ஆர் ரசிகன்!

நீ ஒரு எம்.ஜி.ஆர் ரசிகன்!

1935 ஆம் ஆண்டில் எஸ்ரா பவுண்ட் விடுத்த  ‘புதிதாகப் படை' (Make in new)  என்னும் அறைகூவல் உலக இலக்கியங்களில் நவீன இலக்கியம் தோன்றுவதற்கான உந்துதலாக இருந்தது. தமிழ் இலக்கிய கர்த்தாக்களும் இதற்கு விதிவிலக்கல்ல.

1960களில் சி.சு.செல்லப்பா வின் எழுத்து இதழ், தமிழில் சிறு பத்திரிகையாக தோற்றம் கொண்டது. புத்திலக்கிய படைப்புகளான புதுக்கவிதை, சிறுகதை, விமர்சனம் எனும் அளவில் கட்டுரைகள், எழுத்துகள் வருவதற்கு வழிகாட்டியாக இருந்த காரணத்தினால் எழுத்து மூலம் தமிழ் எழுத்துலகில் காலடி எடுத்து வைத்துள்ள சி. மணி, ந.முத்துசாமி, தருமு சிவராமு முதலானவர்கள் நடை என்னும்

சிறுபத்திரிகை தோன்றுவதற்கான காரணகர்த்தாக்களாக இருந்தனர்.  1968ஆம் ஆண்டு ‘நடை' இதழில் முத்துசாமியின் ‘காலம் காலமாக'  நாடகம் வெளிவந்தது. இதனைத் தொடர்ந்து  ‘கசட தபற' சிற்றிதழ் வெளிவந்தது. அதில் இந்திரா பார்த்த சாரதியின் ‘மழை' நாடகம் வெளியானது. என்னளவில் இவ்விரண்டு நாடகங்களுமே தமிழ் நவீன நாடக அரங்கின் முன்னோடி படைப்புகள்.

இது பற்றிய கட்டுரையை  நான் பணியாற்றி வந்த தில்லி பல்கலைக் கழகத்தின் தற்கால இந்திய மொழிகள் மற்றும் இலக்கிய ஆய்வுகள் துறையில்  வாரந்தோறும் நடைபெறும் வியாழக்கிழமை கருத்தரங்கில் N.Muthusamy and Indra Parthasarathy: Two Major Voices in Modern Tamil Theatre' என்னும் கட்டுரையைப் படித்தேன். இக்கட்டுரையின் தமிழாக்கத்தை தமிழிலும் வெளியிட்டேன்.  இதற்கு பலத்த எதிர்ப்புகள்.  'படிகள்' அல்லது 'மேலும்' இதழில் என நினைக்கிறேன் அதில் நீ ஒரு பிராமண தாசன் என்று வசை பாடினார் தமிழவன்.  ‘நீ ஒரு எம்ஜிஆர் ரசிகன் . மதுரை தங்கம் தியேட்டரில் எம்ஜிஆர் படம் நடக்கும்போது, இடைவேளையின் போது சிவாஜி கணேசன் படம் தாங்கிய விளம்பரத்தை வெண்திரையில் காண்பிக்கும் சமயத்தில், கட்டியிருந்த வேட்டியை அவிழ்த்து சிலைடு திரையில் விழாதவாறு மறைக்கும் எம்ஜிஆர் ரசிகர்களில் ஒருவன்' என்று எழுதினார் மு.ராமசாமி.

ந.முத்துசாமியின் கூத்துப்பட்டறை 1977ஆம் ஆண்டு மார்ச் மாதம் தொடங்கப்பட்டது அன்று இப்பெயரை முன்மொழிந்தவர் நண்பர் வீராசாமி. அப்பொழுது இதனை ஓவியர் கிருஷ்ணமூர்த்தி, க்ரியா ராமகிருஷ்ணன், ஜெயா, சி. மணி, பாரவி முதலான  ‘பிரக்ஞை' நண்பர்கள் முழுமனதாக ஏற்றுக்கொண்டனர்.  கூத்துப்பட்டறை என்னும் பெயர் இதன் செயல்களுக்கு கட்டியம் கூறுவதாக இருந்தது. கூத்து என்னும் சொல் தமிழ் அரங்கில் நிகழ்த்து கலை மரபின் அடையாளச் சொல்.

இந்திரா பார்த்தசாரதியின் ‘மழை'  நாடகம் முதன் முதலாக தில்லியில் உள்ள தக்ஷிண பாரத் நாடக சபை தயாரிப்பாக எஸ் ராமநாதன் என்பவரின் இயக்கத்தில் மேடையேறியது. இதில் பாரதி மணி மற்றும் அவரது துணைவியார் ஜமுனா முதன்மை பாத்திரங்களாக நடித்திருந்தனர். அன்று லோடி கார்டனில் உள்ள கஸ்தூரிரங்கன் தங்கியிருந்த வீட்டின் ஞாயிற்றுக்கிழமைகள் தோறும் நடைபெறும் வாராந்திர கூட்டங்களில் அப்போது தி ஸ்டேட்ஸ்மேனில் ஆசிரியராக இருந்த என்.எஸ். ஜெகநாதன், இந்திரா பார்த்தசாரதி, ஆனந்தம் கிருஷ்ணமூர்த்தி முதலானவர்கள் பங்குபெறுவது வழக்கம்.

இச்சமயம்தான் இந்திரா பார்த்தசாரதியின் நாடகங்கள் மழை, நந்தன் கதை முதலானவை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு பின்னால் இந்தி மொழியில் மொழியாக்கம் செய்யப்பட்டு பிவி காரந்த், எம்கே ரெய்னா முதலானவர்கள் மூலமாக இந்தியில் மேடையாக்கங்கள் கண்டன.

அவுரங்கசீப் நாடகம் இந்தியில் தல்வார் என்னும் பெயரில் எம் கே ரெய்னாவின் இயக்கத்தில் மேடையேற்றம் கண்டது. தேசிய அளவிலான இத்தகைய தாக்கங்கள் ந.முத்துசாமியின் நாடகங்களுக்கு அன்று இருந்தது இல்லை; இன்றும் இருந்தது இல்லை என்றே சொல்ல வேண்டும்.

1976இல் காந்திகிராமத்தில் தேசிய நாடகப் பள்ளியின்

சார்பில் ஒன்று தமிழ், மற்றொன்று மலையாளத்துக்கு என இரண்டு நாடகப் பயிற்சிப் பட்டறைகள் எழுபது நாட்களுக்கு நடைபெற்றன. பேராசிரியர் ஜி.சங்கரப்பிள்ளையின் கிராதம் நாடகம் மலையாள மொழியில் மேடையேற்றம் கண்டது.  பிணம் தின்னும் சாத்திரங்கள் என்னும் பெயரில் பாரதியின் பாஞ்சாலி சபதம் நாடகமாக உருவானது.

இந்நாடக மேடையாக்கத்தில் பங்கு பெற்ற மு. ராமசாமி அன்று மதுரையில் நிஜ நாடக இயக்கத்தை தொடங்கினார்.  சென்னையில் ஞாநி,  பரீக்‌ஷா நாடகக் குழுவை தொடங்கினார். இதில் பங்குபெற்ற கே ஏ குணசேகரன், நவநீதகிருஷ்ணன்,  விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன், அஸ்வகோஷ் முதலானவர்கள் தங்கள் குழுக்கள் மூலம் நாடகமேடை ஆக்கங்களில் ஈடுபட்டனர். இவ்வாறு தேசிய நாடகப் பள்ளியின் நாடகப் பயிற்சிப் பட்டறைகள் ஒவ்வொரு மாநிலத்தின் மொழிகளிலும் நடைபெற்றன இப்பயிற்சியின் மூலம் பங்குபெற்ற புதிய இளம் தலைமுறை நாடகாசிரியர்கள், தங்கள் மொழிகளில் அரங்கச் செயல்பாடுகளில் தங்கள் மொழிக்கு என ஓர் அடையாளத்தோடு இயங்கத் தொடங்கினர்.

இக்காலகட்டத்தில்தான் இந்திய அரங்கு என்பது ஹிந்தி தியேட்டர் என்பதே என்னும் கருத்துப்பட அன்று இந்திய அரசியல்வாதிகள் புதியதொரு கருதுகோளை முன்வைத்தனர். இந்தி என்பது இந்தியாவின் ஒரு மொழி என்பது அரசியல் சாசனத்தில் வகுக்கப்பட்ட ஒன்று. அதுவே எவ்வாறு இந்தியன் தியேட்டருக்கான பொதுமொழியாக இருக்க முடியும் என்பது அன்று பெரும் கேள்வியாக உருவாகியது.

இன்றைய தமிழ் நாடகங்களும் பழந்தமிழ் கூத்துக்கலை மரபின் தொடர்ச்சியாக இருக்க வேண்டும்.   ‘நாடகம் கதை தழுவி வருவதான ஒன்று' என்பது தொல்காப்பியம். இதனை மீறி இன்று ஒரு சில ‘வடநூல் வழி தமிழாசிரியர்கள்' சமஸ்கிருத நாடகமே இந்திய நாடகங்களில் தோற்றுவாயாக உள்ளது என்பர்.தசரூபகம் என அழைக்கப்படும் பத்து வகைகளில் முதன்மையானது நாடகம் என்னும் நிகழ்த்து கலை வடிவமாகும். இந்த சமஸ்கிருத நாடகமே ஒரு வகையில் திராவிட நாடக மரபின் நீட்சியே என்று சொல்லவேண்டும்.

இன்று சமஸ்கிருத நாடக மரபில் காளிதாசன், பவபூதி முதலான நாடக ஆசிரியர்களுள் முதன்மையானவராக பாஸன் என்னும் நாடகாசிரியரைச் சொல்லவேண்டும்.  திருவனந்தபுரத்தில் உள்ள ஸ்ரீ கணபதி சாஸ்திரி வீட்டிலிருந்த ட்ரங்க் பெட்டியில்  பாஸனின் 13 நாடகங்கள் கொண்ட ஓலைச் சுவடிகள் கண்டெடுக்கப்பட்டன.   என்னளவில் பாஸன் ஒரு திராவிட நாடகாசிரியர் என்றே சொல்லவேண்டும்.

சமஸ்கிருத நாடகங்களில்  ‘உத்தம புத்திரர்களே' தலைமைப் பாத்திரங்களாக இடம்பெறுவர். ஆனால் பாஸனின்  ‘உருபங்கம்' நாடகத்தில் துரியோதனன்  தலைவன். அதேபோல பொதுவாக  தூது செல்பவர்கள் கிருஷ்ணன், விதுரர் என உயர்தட்டு மனிதர்களாகவே இருப்பர். ஆனால் பாஸனின் ‘ தூத கடோத்கஜம்' நாடகத்தில் பீமனுக்கும் இடும்பிக்கும் பிறந்த கடோத்கஜன் ஒரு பழங்குடியினன். இவனே தூதுவனாக  செல்கிறான்.  பாஸனின் இந்நாடகம் ந.முத்துசாமி யால் தமிழ் ஆக்கப்பட்டு கூத்துப்பட்டறையில் மேடை ஏற்றப்பட்டுள்ளது.

ஆட்சி அதிகார இயந்திரத்தின் மேலாண்மையை ஒட்டி இயங்கும் இந்திய அரசின் கலாச்சார சர்வாதிகாரப் போக்கு,  பன்னாட்டு நிறுவனங்களின் வழியாக உருவான சந்தை கலாச்சாரத்துக்கு துணைபோகும் ஒன்றாக உருமாற்றம் பெற்றுள்ளது. இதனை எதிர்க்கும் கலை வடிவங்களில் முக்கியமான ஒன்று நாடக நிகழ்கலை ஆகும்.  உலகெங்கும் பலர் அதிகாரத்திற்கு எதிரான எதிர்ப்புகளை தங்கள் மேடை இயக்கத்தின் மூலம் நிகழ்த்திக் காட்டி குரலெழுப்பி வருகின்றனர். தற்கால தமிழ் நாடக அரங்கம் அவர்கள் செயல்பாடுகளின் ஒரு தொடர்ச்சியே. ஒரு எதிர்ப்புக்குரலே என மேடை ஆக்கங்களின் வழி உறுதிப்படுத்தவேண்டும் அதுவே நம் வாழ்தலில் அடையாளமும் கூட.

அக்டோபர், 2021

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com