நூல்களைப் படிப்போம், சாதனைகளைப் படைப்போம்!

நூல்களைப் படிப்போம், சாதனைகளைப் படைப்போம்!

புத்தக வாசிப்பு என்பது அவரவர்களது இருப்பையும் இடத்தையும் தக்க வைப்பதும், தகவமைப்பதுமே ஆகும். சிந்தனைகளை மேம்படுத்தவும், தெளிவான பாதைகளைச் செப்பனிடவும், ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கிய பயணத்திற்கும் நூல்களே பெரிதும் பேருதவியானதாக இருக்கின்றன.

நூல்கள் வாசிப்பு என்பது வாழ்வின் பொக்கிஷத்தைப் போன்று தேடலுக்குரிய அரும்பணியாகும். புதிய வரலாறு படைக்கிறவர்கள், ஏற்கெனவே வரலாற்றைப் படைத்தவர்கள் என இவர்களின் வாழ்க்கை வரலாற்றைப் பின்னோக்கியும், முன்னோக்கியும் ஆய்ந்து பார்த்தால் அவர்களது வாழ்க்கையை செம்மைப்படுத்தியதும், செழுமைப்படுத்தியதும் நூல்களே என்கிற பேருண்மை தௌ;ளத் தெளிவாக அறிய வரும்.

அறிவார்ந்த ஆயுதங்களே நூல்கள் வாசிப்பதுதான். இதுவே, காலத்தை வெல்லும் பல நிலைகளை வகுத்திட இன்றியமையாததும் ஆகும். மனச்சோர்வையும், இறுக்கத்தையும் போக்குவதோடு மாத்திரமல்லாமல், வாழ்வின் சிந்தனைகளையும், தெளிவையும், அமைதியையும் ஏற்படுத்துகின்ற அறிவார்ந்த களத்தில் இயங்குவதற்கு நூல்கள்தான் பக்கபலமாக இருக்கின்றன. நமது வீட்டின் தேவைக்கும், நிறைவிற்கும் வேண்டிய பொருட்களை நாம் தவறாமல் வாங்குகிறோம். அதைப் போலவே, நமது அறிவை மேம்படுத்திக் கொள்ள, வளர்த்துக் கொள்ள, வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய, வாழ்க்கையில் பேருதவியாக இருப்பவை நூல்கள்தான். ஆகவே, நூல்களை வாங்கவும், வாசிக்கவும், பொதுத்தளத்தில் இயங்குகிறவர்கள், பொதுவாழ்வுக்கு தன்னை ஒப்புக்கொடுத்தவர்களின் தலையாய கடமையாக இருக்க வேண்டும். அவைதான் மக்களுக்கு நாம் செய்கிற அரும்பெரும் காரியங்களாகும். அவையே மக்களின் மூலதனமாகவும் அமையும். அறிவையும், அனுபவத்தையும் நமக்குத் தரும் நூல்கள்தான் சாகாவரம் பெற்று சரித்திரத்தில் இடம்பெற வைக்கிறது. நம்மிடம் எதையும் எதிர்பார்க்காமல் தன்னையே முழுமையாக நமக்குத் தருகிற சிறந்த நண்பன்தான் புத்தகங்கள் என்கிறார் அமெரிக்க கவிஞர் லாங்ஃபெலோ.

ஆயிரம் ஆயிரம் மலர்களின் மகரந்தச் சேகரமே தேன்கூடாகிறது. ஆயிரம் ஆயிரம் கருத்துகளின் சேகரமே அறிவைச் செழுமைப்படுத்தும் புத்தகங்களாக அமைகிறது. இவை வெறும் காகிதங்களின் கற்றை அல்ல. அவை உண்மைகளின் ஊற்றுக்கண். புத்துலகை நோக்கி மனிதனை வழிநடத்திச் செல்கின்ற புத்தாக்கத்தின் புகலிடம், ஆகவேதான், புத்தகங்களைத் திறப்பவர், அறிவுச்சுரங்கத்தின் வாயிலைத் திறக்கிறார் என்று சொல்வார்கள்.

நேரு தான் மறைந்த பின் தமது சடலத்தின் மீது மலர் மாலைகள் வைக்கக்கூடாது புத்தகங்கள்தான் வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டாராம். பேரறிஞர் அண்ணா புற்று நோயால் உயிரோடு போராடிக் கொண்டிருந்தார். மருத்துவமனையில்

சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த சமயத்தில் ஒரு நாள் மருத்துவர்கள் இன்று உங்களுக்கு அறுவைச்சிகிச்சை என்றபோது, தாம் வாசித்துக் கொண்டிருந்த புத்தகத்தின் சில பக்கங்கள் பாக்கி இருப்பதால் அதை முடிக்கும் வரை உயிர் காக்கும் அறுவைச் சிகிச்சையைத் தள்ளி வைக்கச் சொன்னாராம்.

அதுபோலவே, முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் இராதாகிருஷ்ணன் அவர்கள் சோவியத் இரஷ்யாவில் இந்தியத் தூதுவராகப் பணியாற்றிய போது ஒரு நாளில் பன்னிரண்டு மணி நேரம் படிப்பதிலும், படித்ததைச் சிந்திப்பதிலும் செலவிட்டாராம். இந்தச் செயலே அப்போதைய இரஷ்யாவின் அதிபராக மட்டுமல்ல சர்வாதிகாரியாகவும் இருந்த ஸ்டாலின் அவர்களின் நன்மதிப்பைப் பெறக் காரணமாயிருந்தது. இரஷ்ய நாடு இந்தியாவைச் சிறிதும் மதிக்காத காலம் அது. இரும்பு மனிதர் என்றழைக்கப்பட்ட ஸ்டாலின் இதயத்தையும் கவர்ந்த ஒரு பேரறிஞராக, தத்துவஞானியாக டாக்டர் இராதாகிருஷ்ணன் விளங்கக் காரணம் அவர் ‘கற்றனைத்தூறும் அறிவு' என்ற வள்ளுவன் குறளுக்கேற்ப அமைந்த அவருடைய நூல் படிக்கும் பழக்கமே ஆகும்.

ஆகவே, நூல்களைப் படிக்கின்ற, தொடர்ந்து வாசிக்கின்ற பழக்கங்களை நாம் கற்றுக் கொள்ள வேண்டும். அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும் என்று நம்முடைய இலக்கியங்கள் பறைசாற்றுகின்றன. அறத்தை நாம் முதன்மைப்படுத்த வேண்டும் என்று சொன்னால், அறிவார்ந்த நூல்களை வாசிப்பதின் மூலமாகத்தான் புதிய புதிய சிந்தனைகள் தோன்றும். புதிய புதிய சிந்தனைகள் தோன்றுகிற போதுதான் வரலாறு நம்மை வாசிக்கத் தொடங்கும். உலக வரலாற்றின் மீக நீளமான இரவைச் சந்தித்த இனம் தமிழினம்.

களப்பிரர்கள் காலம் என்பது முந்நூறு ஆண்டுகள், அதாவது மூன்று நூற்றாண்டுகள். அப்போது மொழி நசுக்கப்பட்டதும், தமிழுக்கு நேர்ந்த போதிலும், நாலடியாரும், ஏலாதியும், சிறுபஞ்சம் மூலமாக அவை வளர்ந்து நின்றது. தெற்கே பாண்டியர்களும், வடக்கே பல்லவர்களும் வாளெடுத்து முந்நூறு ஆண்டு கால இருட்டை விரட்டியடித்து புதிய அரசை நிர்மாணித்தார்கள். அப்போதும் அந்த வரலாற்றுப் பிழை பல சந்தர்ப்பங்களில் நிகழ்ந்த போதிலும் வர;ணாசிரமம் உருவாகிய போதிலும், உழைக்கும் மக்களை சூத்திரர்கள் என்று அழைத்த போதிலும், மாயச் சேற்றுக்குள் புதைந்த போதிலும் எவ்வாறு மனித உரிமை மீட்கப்பட்டது என்பதையும் அத்தகைய நெருக்கடிகளிலும் தமிழ் மொழி தன்னை நிறுத்திக் கொண்டது என்பதையுமான, கடந்த கால வரலாறைப் படிக்காமல், நிகழ்காலத்தை யாரும் படைக்க முடியாது.

சமணத்திற்கும், பௌத்ததத்துக்கும் எதிராகப் போராடிய சைவத்தை தமிழ் தன் வாளாகக் கையில் எடுத்துக் கொள்கிறது. ‘நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்' என்ற அப்பரின் குரலில் ஓங்கி உலகளந்து, ‘நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழியோடிப் புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம்' என்று  சைவத்தையும், வைணவத்தையும் மீட்டெடுத்த நாயன்மார்களும், ஆழ்வார்களும் புரிந்த போர் என்பது ஒரு வரலாற்றுத் தடயமாகவே கிடைத்திருக்கிறது. 7ஆம் நூற்றாண்டின் மனிதநேயத்தின் தொடர்ச்சியாக வடமொழிக்குப் பல்லக்குச் சுமந்த பல்லவர் காலத்திலும் தமிழ் மொழி சாகவில்லை. 8ஆம் நூற்றாண்டில் பாண்டியர்கள், பல்லவர்கள் தமக்கு ஊக்கம் கொடுத்த நூறாண்டுகளின் சைவத்தின் போர்களிலும், வைணவத்தின் போர்களிலும் தமிழ் பவனி வரத் தொடங்கியது. ‘ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும்சோதியை யாம்பாடக் கேட்டேயும்' என்று திருவெம்பாவையும், ‘இம்மைக்கும் ஏழேழ் பிறவிக்கும் பற்றாவான் நம்மை உடையவன் நாராயணன் நம்பி' என்று ஆண்டாளும் சைவத்திலும், வைணவத்திலும் சாறெடுத்து 8ம் நூற்றாண்டில் தமிழ் எவரும் எட்ட முடியாத இடத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறது. காவிரியின் செழுமையும், சோழப் பேரரசின் போர் வீரமும், தமிழ் இனத்தின் பண்பாட்டு எச்சங்களாக மாறிவிட்ட நிலையில், தமிழ் அங்கும் பயணிக்கிறது. 10 முதல் 12ம் நூற்றாண்டுகளில் கலிங்கத்துப் பரணியும், நளவெண்பாவும், மூவருலாவும், தொன்னூல் இலக்கணம் புதுப்பித்த நன்னூலும், தமிழ் மொழியின் அகத்தையும், புறத்தையும் காட்டிச் செல்கின்றன.

பின்னர் கம்பன் ராமகாதையைப் பாடி போர்க்களத்தில் ஓயாத ஓலம், உலைக்களத்தில் அணையாத நெருப்பு போல் சுடர்விட்டு எரிகின்றன. பிற்காலப் பாண்டிய அரசர்கள் வடக்கில் போரிட்டு வெற்றியும் கண்டார்கள். வாழ்வும், பண்பாடும், பொருளாதாரமும் சிதைந்து விடாமல் காப்பாற்றியது நம்முடைய தாய்மொழி. இப்படியே காலந்தோறும் வளர்ந்து நின்ற நம்முடைய இலக்கியம்,  20 நூற்றாண்டுகளை தொட்டு நிற்கிறது என்கிற வரலாற்றை பொதுவாழ்வில் இருக்கிறவர்கள் வாசிக்கத் தவறாமல் விட்டு விடக்கூடாதல்லவா!

அரசியல்வாதிகள் படிக்க வேண்டிய புத்தகங்கள்:

1. ‘‘தீண்டாத வசந்தம்''

எழுத்தாளர்: ஜி.கல்யாணராவ்

போராட்டம் என்பது லட்சியமல்ல, தேவை என்பதுதான் இந்த நூல் முன்வைக்கும் அரசியல். தலித் மக்களின் வரலாற்றுப் பூர்வமான போராட்டப் பயணத்தைப் பற்றிக் கூறும் நூல் இதுவாகும்.

2. ‘‘ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்'' 

எழுத்தாளர்: ஜான்பெர்கின்ஸ் (தமிழில் இரா.முருகவேள்)

இந்த நூல் ‘விலை போகாது மனிதம்…அவ்வாறு விலை போனால் அதன் பெயர் மனிதம் அல்ல' என்னும் ஏகாதிபத்திய அரசியலுக்காகப் பொருளாதார அடியாளாகச் செய்ய நேர்ந்த வேலைகளைச் சொல்லும் நூலாகத் திகழ்கிறது.

3. ‘‘இந்திய வரலாற்றில் பகவத்கீதை''

எழுத்தாளர்: பிரேம்நாத் பசாஸ்

இந்தியாவின் சிந்தனை வரலாறு, சிந்தனைப் பள்ளிகள், பகவத்கீதை என இந்தியாவின் அடையாளங்களைப் புரிந்துகொள்ள வைக்கும் நூல் இதுவாகும்.

4. ‘‘பெரியோர்களே! தாய்மார்களே!''

எழுத்தாளர்: ப.திருமாவேலன்

தமிழகத்தில் வாழ்ந்து மறைந்த அரசியல்வாதிகள், சமகால அரசியல் தலைவர்கள் பற்றிய சுவையான சம்பவங்களுடன் கூடிய வரலாற்றுத் தொகுப்பு நூல் இது

5. தமிழ் இலக்கியங்கள்

6. அழகிய மரம்

& 18ஆம் நூற்றாண்டில் பாரம்பரியக் கல்வி

எழுத்தாளர்: தரம்பால்

மொழிபெயர்ப்பு: பி.ஆர்.மகாதேவன்

7. ஹோமோ டியஸ்

யுவால் நோவா ஹராரி

தமிழ்: நாகலட்சுமி சண்முகம்

8. இலக்கியத்தின் மேலாண்மை

எழுத்தாளர்: வெ. இறையன்பு

இதுபோன்ற எண்ணற்ற நூல்களை வாசிக்கிற போது, வாழ்க்கை விரிவடைகிறது, சிந்தனை தெளிவாகிறது. பொதுவாழ்க்கை அர்த்தமுள்ளதாகிறது.

பிப்ரவரி, 2021

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com