தேவேந்திர பூபதி
தேவேந்திர பூபதி

நெகிழ்வூட்டும் நினைவுகள்

எங்கள் துறையில் சட்டம் சார்ந்த பணிகளைக் கவனித்துக்கொள்ளும் பொறுப்பிற்காக சென்னைக்கு மாறுதலாகி 

எங்கள் துறையில் சட்டம் சார்ந்த பணிகளைக் கவனித்துக்கொள்ளும் பொறுப்பிற்காக சென்னைக்கு மாறுதலாகி 

இது தொடர்பான ஒரு வழக்கில் அடிக்கடி நீதிமன்றம் செல்லவேண்டிய நிர்ப்பந்தம்.  அப்போது அரசுக்கெதிரான வழக்குகளில் பல்வேறு மூத்த வழக்கறிஞர்கள் ஆஜராவார்கள். எங்களுக்காக வாதாடும் வழக்கறிஞர்களும் பல்வேறு தங்களுக்கு வேண்டிய தகவல்களை என்னிடம் வந்து பெற்றுச் செல்வார்கள்.  அப்போது எங்களுக்கு எதிராக வாதாடிய மூத்த வழக்கறிஞர் ஒருவர், தான் முன்பு இதே துறைசார்பாக அரசு வழக்கறிஞராக வாதாடியதாக என்னுடன் அறிமுகம் ஆனார்.  அவருடன் முக்கிய சட்டப் பிரச்னைகள் பற்றி விவாதங்களைப் பரிமாறும் நட்பு உருவானது. ஒருமுறை தனக்கு தேவேந்திரபூபதி என்ற பெயரில் இன்னொருவர் பரிச்சயம்  என்றார். என்னைப் போலொரு விசித்திரமான பெயரில் இன்னொருவரா என ஆச்சரியம் மேலிட யார் எனக்கேட்டேன். அவர் ஒரு கவிஞர் என்றார் அவர். அவர் எழுதிய எதாவது கவிதைத் தொகுப்பு வாசித்திருக்கிறீர்களா என்றேன். ‘அந்தரமீன்' என்ற என்னுடைய கவிதைத் தொகுப்பின் பெயரையே கூற எனக்கு பெரும் ஆச்சரியமும் மகிழ்ச்சியும் ஏற்பட்டது! பெருமையாகவும் இருந்தது என்று சொல்வதே உண்மை!  அவர் தன்  வாதத்திறமைக்காகவும் நேர்மைக்காகவும் பாராட்டப்பட்டவர். உயர்நீதிமன்ற நீதிபதியாக அவர் பரிந்துரைக்கப்பட்டிருந்த நேரமும் கூட அது. அவர் வேறு யாருமல்ல; எழுத்தாளர் மா.அரங்கநாதன் அவர்களின் மகனான இப்போதைய நீதியரசர் மகாதேவன் அவர்கள்தான்! 

நெல்லையில் பணியாற்றியபோது எழுத்தாளர் சுரேஷ்குமார் இந்திரஜித் மூலமாக பேராசிரியர் சிவராமன் என்பவர் கடந்த ஆண்டு என்னைத் தொடர்புகொண்டார். என் ‘நடுக்கடல் மௌனம்‘ தொகுப்பு குறித்து நெடுநேரம் பேசியவர், என்னைச் சந்திக்க நெல்லைக்கே வருவதாகச் சொன்னார். எவ்வளவு கேட்டுக்கொண்டும் தன் சொந்தச் செலவிலேயே அறை போட்டு தங்கிக்கொண்டார். என் ஐந்து கவிதைத் தொகுதிகளையும் வாசித்து சந்திப்புக்கு தயார் நிலையில் வந்திருப்பதாக செய்தி அனுப்பினார். போய்ப் பார்த்தபோதுதான் அவர் மிகவும் மூத்தவர் என்பதும் கிரியாவின் நிறுவனர்களில் ஒருவர் என்பதும் தெரியவந்தது. வெகுநேரம் பேசிக்கொண்டிருந்தோம். என் கவிதைகளை அவ்வளவு ஆழமாக வாசித்து ஆறேழு பக்கங்களில் குறிப்புகளை எடுத்து வந்திருந்தார். அந்தக் குறிப்புகள் இப்போது என் பெருமைக்குரிய சேகரத்தில் இடம்பெற்றுவிட்டன! 

சென்னையில் கவிஞர் தமிழ்மணவாளனின் கவிதை நூல் வெளியீடு. விழாவில் நானும் உரையாற்ற வேண்டும். கவிஞர் ஞானக்கூத்தனும் அந்நிகழ்வில் பேசினார். அவருடன் எனக்கு அறிமுகம் இல்லை. என் கவிதைகளை அவரெல்லாம் எங்கே படித்திருக்கப் போகிறார் என்று நினைத்துக் கொண்டு அமர்ந்திருந்தேன். அவர் பேசும்போது, ‘‘ பாரதிக்குப் பின்  நானெல்லாம் சிறந்த கவிதைகள் எழுதி இருப்பதாக நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால் அந்த எண்ணத்தை  தேவேந்திரபூபதி போன்றவர்கள் உடைத்திருக்கிறார்கள்,'' என்று சொன்னபோது அதிர்ச்சி அடைந்தேன். அத்துடன் அந்தரமீன் தொகுப்பில் இருந்த நேஷனல் சர்க்கஸ் என்ற கவிதையைக் குறிப்பிட்டுப் பேசினார். அதுமட்டுமல்லாமல், கல்கியில் அவர் எழுதிய கனவு பல காட்டல் கட்டுரைத் தொடரில் நான்காவது வாரத்திலேயே என் கவிதைகள் பற்றி அவர் பாராட்டி எழுதியதும் பெரும் நெகிழ்வைத் தந்தது. அதன் பின்னர் ‘இடிபாடுகளுக்கிடையில் என் கவிதை' என்ற தலைப்பில் செய்தித்தாள் ஒன்றில் வெளியான அவரது பேட்டியில் எதிர்காலத்துக்கான கவிதையின் முன்னோடியான கவிதைகளை எழுதுகிறவர்கள் என்ற வரிசையில் என் பெயரையும் குறிப்பிட்டிருந்ததை மறக்க முடியாது.

ஜனவரி, 2018.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com