நெடுந்தொடர்களின் உலகில் இருந்து...

நெடுந்தொடர்களின் உலகில் இருந்து...

வில்லியம் ஷேக்ஸ்பியர் நம்ம சின்னத்திரை சீரியல்கள் பற்றி கவிதை பாடியிருக்கார் தெரியுமா? என்று ஒரு இலக்கியவாதி ராத்திரி நேர ஜமாவின் போது கேட்க சுற்றியிருந்த ரசிகர்கள் யோசிக்க..

ஒரு இடைவெளி விட்டு இலக்கியவாதி ஷேக்ஸ்பியரின் இந்தக் கவிதையை பாடினாராம்..

All the world's a stage

And all the man and women merely players;

They have their exits and their entrances,

And one man in his time plays many parts

சின்னத்திரை சீரியல்களை கிண்டலடிப்பது பலருக்கு பொழுது போக்கும் அல்லது வம்பளக்கும் விஷயங்களில் ஒன்று.

தமிழகத்தில் பல கோடி பெண்களுக்கு சின்னத்திரை சீரியல்கள் வாழ்க்கையின் ஓர் அங்கமாகிவிட்டது. முன்பு பத்திரிகையின் தொடர்-கதைகள் பிடித்திருந்த இடத்தை சின்னத்திரை சீரியல்கள்  பிடித்து வெகுநாளாகிவிட்டது.

பொதுவாக பெண்களைக் குறிவைத்துத்தான் இந்த நெடுந்தொடர்கள் ஒளிபரப்பாகின்றன என்று சொல்லப்படுவதால் சாம்பிளுக்காக சிலரிடம் இந்த தொடர்கள் பற்றி நமது நிருபர்கள் கேட்டதிலிருந்து சில கருத்துகளைத் தருகிறேன்.

சென்னை அசோக்நகரைச் சேர்ந்த குடும்பத்தலைவி மா.வாசுகி. இருபது வருடமாக சீரியல் பார்த்துக் கொண்டிருக்கிறார். சன் டிவில் ஒளிபரப்பான சித்தி தான் முதன் முதலாகப் பார்த்த நாடகம். “அன்னன்னைக்கு எந்த சீரியல் நல்லா இருக்கிறதோ அந்த சீரியலைப் பார்ப்பேன். டைம் பாஸுக்கு சீரியல்களைப் பார்த்தாலும்கூட அவை குடும்பத்துடன் அமர்ந்து பார்க்கும் வகையில் இருக்க வேண்டும் என்று நினைப்பேன்' என்கிற இவர், “மாமியார்-மருமகள் பிரச்னைகளை இன்னும் சீரியல்கள் பேசிக் கொண்டிருப்பது வெறுப்பாக இருக்கிறது. இன்னைக்கு மாமியார் - மருமகளே தனித்தனியாகத்தான் இருக்கின்றனர். இதெல்லாம் பழைய காலத்துக் கதை. இதே கதைகளையே சீரியல்கள் பேசிக் கொண்டிருந்தால் டிவியை போட்டு உடைக்க வேண்டியது தான் வரும்,' என்று ஆவேசப் படவும் செய்கிறார்.

 ‘நான் ஒரு சீரியலை முழுசா பார்த்தேன் என்றால், அது விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் தான். பொதுவாக சீரியல்களில் எனக்கு பிடித்த, பிடிக்காத விஷயங்கள் என்று எதுவும் கிடையாது. சீரியல்களில் நடிக்கக் கூடிய நடிகர்கள் பெரும்பாலும் நல்லா நடிக்கிறார்கள். குறிப்பாக நாம் இருவர் நமக்கு இருவர் நாடகத்தில் வரும் மாயனின் நடிப்பு பிடிக்கும்,' என்கிறார்.

அபி, புதுக்கோட்டையைச் சேர்ந்த குடும்பத்தலைவி. அவர் சீரியல் எப்பொழுது போட ஆரம்பித்தார்களோ அதிலிருந்து பார்த்துக் கொண்டிருப்பதாகச் சொல்கிறார்.

“ சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் சீரியல்களை பார்ப்பேன். கோலங்கள், அத்திப்பூக்கள், ஆனந்தம், செம்பருத்தி, பாண்டியன் ஸ்டோர்ஸ், தேன்மொழி பி.ஏ, மௌன ராகம், பாக்கிய லட்சுமி போன்ற சீரியல்கள் பிடிக்கும். நல்ல விஷயங்களை சொல்லும் நாடகங்களை குடும்பத்துடன் பார்ப்போம்,' என்கிறார்.

கோவையைச் சேர்ந்தவர் சத்யா மருதாணி. நகை மதிப்பீட்டாளராக இருக்கிறார். இவருக்கு சீரியல்கள் மீது கடும் விமர்சனம் இருக்கிறது. “சாதாரண ஒரு குடும்பத்தில் நடக்கிற ஒரு சின்ன விஷயத்தை கூட பெண்களால் கையாளத் தெரியாமல் இருக்கிற மாதிரி தான் எல்லா சீரியலும் போய்க்கொண்டு இருக்கிறது. சீரியல்ல பாராட்டத்தக்க விஷயம்னு சொல்லணும்னா பெண்களை மையமா வைத்து, அவர்களை முதன்மைப்படுத்துவதுதான். இது ஒன்று மட்டும் தான் பாராட்டக்கூடியதா இருக்குதே ஒழிய, பெண்களை மட்டுப்படுத்தி, இரண்டு மனைவிகள், சூழ்ச்சிகள் செய்வது, விஷம் வைத்துக் கொல்வது, கருவைக் கலைப்பது போன்ற குப்பைகள் தான் கொட்டிக் கிடக்கிறது. எந்தக் குடும்பத்திலும் இதுபோன்று நடப்பதாகத் தெரியவில்லை,' என சொல்கிறார்.

‘தொடர்ந்து சீரியல் பார்க்க மாட்டேன். பிடித்திருக்கும் சீரியல் மட்டும் நேரம் கிடைக்கும் போது பார்ப்பேன். அதேபோல், எங்கள் வீட்டில் யாருக்கும் சீரியல் பார்க்கும் பழக்கம் கிடையாது. சீரியல் பார்த்தால் அம்மா திட்டுவாங்க. சீரியலில் வருவது போன்றே நாம் ஆகிவிடுவோம் என்று,' என்கிறார் ஈரோட்டைச் சேர்ந்த மென்பொருள் பணியாளர் காவியா.

‘டைம் பாஸுக்காகத்தான் சீரியல் பார்க்கிறேன். ஒரு எபிசோடை முழுமையாகப் பார்க்கமாட்டேன். அதனுடைய கதை என்னவென்று தெரிந்து கொள்வதற்காக, யூடியூபில் கதையை ஓட்டிப் பார்த்துவிடுவேன்,' என்கிறார் இவர்.

திருச்சியைச் சேர்ந்த ஐம்பது வயதாகும் குடும்பத்தலைவி உமா, பத்து வருடத்திற்கு முன்பாக சன் டிவியில் நாடகம் பார்க்கத் தொடங்கி இருக்கிறார். இடையில், பிள்ளைகளின் படிப்பு காரணமாக சீரியல்கள் பார்க்க முடியாமல் போய்விட்டது.

‘ரொம்ப வருஷங்களுக்குப் பிறகு கடந்த இரண்டு வருடமாகத்தான் டிவி சீரியல் பார்த்துக் கொண்டிருக்கின்றேன். அதற்குக் காரணம் கொரோனாவும், பிள்ளைகளுடைய படிப்பும் முடிந்திருப்பதும் தான். விஜய் டிவி-யில் ஒளிபரப்பப்படும் பாண்டியன் ஸ்டோர்ஸ், பாரதி கண்ணம்மா ஆகிய இரண்டு நாடகமும், ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் செம்பருத்தி நாடகமும் பிடிக்கும்,' என்கிறார்.

‘பாரதி கண்ணம்மா சீரியல் கறுப்பாக இருக்கிற பெண்ணைப் பற்றிப் பேசும் கதை. நிறம் முக்கியமில்லை குணம் தான் முக்கியம் என்பதை சொல்கிறது. இந்த சீரியலைப் பிடிக்க இன்னொரு காரணம் நானும் கறுப்புதான்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அண்ணன் தம்பி ஒற்றுமை, கூட்டுக் குடும்பம் போன்ற பல நல்ல விஷயங்களை சொல்கிறார்கள். இந்தக் காலத்தில் அப்படி இருக்க முடியுமா என்று தெரியவில்லை? நிஜத்தில் தான் நம்மால் அப்படி இருக்க முடியவில்லையே, சீரியலிலாவது அப்படி இருக்கிறதே என்று நினைத்து சந்தோஷப்பட்டுக் கொள்ள வேண்டி இருக்கிறது,' எனச் சொல்லி ஆச்சர்யப்படுத்துகிறார்.

அலக் பதம்ஸி எடுத்த லிரில் விளம்பரத்தில் அருவியில் கவர்ச்சிகரமான உடை அணிந்து குளிக்கும் பெண் மாடலும் லிரில் சோப்பும் இந்திய பெண்களிடம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது. பெரும்பாலான இந்திய பெண்களுக்கு சரியான குளியலறையோ, நிதானமாக குளிக்கும் வசதியோ இல்லாத போது லிரில் விளம்பரம் எப்படி ஹிட்டானது என்று அலக் பதம்ஸியிடம் கேட்ட போது நிஜத்தில் தான் நம்மால் அப்படி இருக்க முடியவில்லை, விளம்பரத்தில் வருவது போல் கற்பனை செய்ய லிரில் விளம்பரம் உதவுகிறது என்றார். இது போன்றதொரு பதிலைத் தான் குடும்பத்தலைவி உமா சீரியல்களைப் பற்றி கூறுகிறார்.

இந்த மாத சிறப்புப்பக்கங்களில் சின்னத்திரை சீரியல்களின் வெளியே தெரியாத, அதிகம் பதிவு செய்யப்படாத உலகத்தை அறிமுகப்படுத்துகிறோம்.

சின்னத்திரை சீரியல்களின் புறத்தை மட்டும் பார்க்கும் பார்வையாளர்களுக்கு அகத்தை காட்டும் முயற்சி இது.

என்றும் உங்கள்,

அந்திமழை இளங்கோவன்

ஆகஸ்ட், 2021

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com