பதிப்பாளர்களின் அநீதி!

பதிப்பாளர்களின் அநீதி!

வரலாறு புதிதாகப் படைப்பதற்கு வரலாறு தெரிந்திருக்கவேண்டிய அவசியமில்லை என்று சிலர் சொல்வதுண்டு. ஆனால் அரசியலுக்கு அது பொருந்தாது. வரலாறு பற்றிய அறிவு மிகக்கண்டிப்பாகத் தேவை.

எந்த ஒரு நாடும் தன்னுடைய வரலாற்றை மறந்தால் தன் வேர்களை இழந்துவிடும். அதன் எதிர்கால வளர்ச்சிக்கு அதன் பழங்காலத்தை நினைவுகூர்வது மிக அவசியம். நான் சங்கி என்று வைத்துக்கொண்டால்- சங்கி என்பது நல்ல வார்த்தை. ஹனுமன்சாலிஸா மந்தபுத்திபோய் நல்ல புத்தி உள்ள மக்களிடம் சங்கமிப்பவன் சங்கி என்று சொல்கிறது- நான் இங்கே வலிந்து ஒரு விஷயத்தைச் சொல்லவேண்டி இருக்கிறது. 1925 ஆம் ஆண்டு ஆர்.எஸ்.எஸ் இயக்கம் தொடங்கப்பட்டது. அதையொட்டிதான் கம்யூனிச இயக்கமும் திராவிட இயக்கமும் தொடங்கப்பட்டன என வைத்துக்கொண்டால், திராவிட இயக்கம் ஒரே மாநிலத்தில் சுருங்க, கம்யூனிச இயக்கம் இன்று ஒரு சில இடங்களுடன் நீர்த்துப் போய் இருக்கிறது. ஆர்.எஸ்.எஸின் நூற்றாண்டு இன்னும் நான்கு ஆண்டுகளில் வர இருக்கிற நிலையில் அதன் அமைப்பு வெற்றிகரமாக வளர்ந்து உள்ளது. ஆர்.எஸ்.எஸ் இயக்கத்திடமிருந்து அரசியல் பணிக்கு அமைக்கப்பட்ட கட்சி 303 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியில் இருக்கிறது. இன்று இந்தியா முழுமைக்கும் வெற்றிகரமாக இருக்கும் இந்த இயக்கம் பற்றிப் படிக்கவோ தெரிந்துகொள்ளவோ தமிழில் சரியான அளவில் நூல்கள் இல்லை என்பது தமிழ்நாட்டு பதிப்பகங்கள் இழைத்திருக்கும் அநீதி. ஆர்.எஸ்.எஸ் இயக்க வெளியீடுகள்தான் இருக்கின்றன. ஆயினும் ஆர்.எஸ்.எஸ்சை குறைபசொல்வதற்குப் பஞ்சம் இல்லை. சமீபத்தில் தமிழ்நாடு வந்திருந்த ராகுல்காந்தி ‘ நாக்பூர் நிக்கர்வாலா‘ என்று சொல்ல அதை பீட்டர் அல்போன்ஸ் நாக்பூர் லிக்கர்வாலா எனப் புரிந்துகொண்டு நாக்பூர் சாராயவியாபாரிகள் என தவறாக மொழிபெயர்த்ததை நீங்கள் அறிந்திருக்கலாம். இந்துத்துவ, இந்து ராஷ்ட்ர கண்ணோட்டத்துடன் தொடங்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ். பற்றிய நூல்களை அரசியல்வாதிகள் படிக்கவேண்டும் என்பதற்காக அது பற்றிய நூல்களை இங்கே சொல்ல நான் இந்த வாய்ப்பைப் பயன்படுத்த விரும்புகிறேன்.

1) குருஜிகோல்வால்கரின் சிந்தனைகள் பேச்சுகளின் தொகுப்பு Bunch Of thoughts என்ற பெயரில் ஆங்கிலத்தில் உள்ளது. அதை ஆர்.எஸ்.எஸ் பொதுச்செயலாளராக இருந்த ஹெச்.வி.சேஷாத்ரி எழுதினார். ஞானகங்கை என்ற பெயரில் அதை தமிழில் ராமகோபாலன் மொழிபெயர்த்துள்ளார். இதன் சமீபத்திய பதிப்பு விஜயபாரதத்தால் வெளியிடப்பட்டுள்ளது. இந்நூலில் ஆர்.எஸ்.எஸின் அடிப்படை சிந்தனைகள், ஹிந்து ராஷ்டிரம் என்பது ஒருபிரிவினரை ஒதுக்கி வைப்பது அல்ல; இணைத்துச் செல்வது என்பதே என்பதைப் படித்துப் புரிந்துகொள்ளமுடியும்.

2) ஆர்.எஸ்.எஸ் நிறுவனரான ஹெட்கேவாரின் நூற்றாண்டு 1989-ல் கொண்டாடப்பட்டபோது அதையொட்டி ஹெச்.வி.சேஷாத்ரி, RSS Vision in Action  என்ற நூலை எழுதினார். ஆர்.எஸ்.எஸ் ஆற்றும் அரும்பணிகள் என்று அந்த நூலும் தமிழில் வந்துள்ளது. இந்த இயக்கம் சொல்வதை செய்துகாட்டுகிறது என்பதை விளக்கும் நூல். இதன் கண்ணோட்ட்ம, லட்சியம், சமூக நல்லிணக்க திட்டங்கள் ஆகியவற்றைப் புரிந்துகொள்வதற்கும் தன்னுடைய 40க்கும் மேற்பட்ட அமைப்புகள் மூலம் அது மேற்கொள்ளும் செயல்திட்டங்கள் பற்றி அறிவதற்கும் உதவும் நூல்.

3) ஆர்.எஸ்.எஸ் ஆரம்பிக்கப்பட்டது இஸ்லாமியருக்கான எதிர்வினையாக என்று சொல்வார்கள். உலகில் எந்த அமைப்புமே எதிர்வினைகளாக உருவாக்கப்பட்ட்வைதான் காங்கிரஸ் உட்பட. அன்றைய காலகட்ட அரசியலைப் புரிந்துகொண்டால் இதை விளங்கலாம். ஹெச்.வி.சேஷாத்ரி அவர்கள்  The Tragic story of partition  என்ற நூலை 1947-இல் நிலவிய அரசியல் பின்னணியைக் குறித்து எழுதி உள்ளார். தேசப்பிரிவினையின் சோகவரலாறு என்ற பெயரில் தமிழில் இருக்கிறது. இது தேச விடுதலைக்கு முந்தைய அரசியலை,ஆர்.எஸ்.எஸ் செயல்பாடுகளை அறிந்துகொள்ள உதவும்.

4) நாட்டின் முதல் பொதுத்தேர்தலில் இருந்து 2014 வரையிலான தேர்தல் வரை ஒன்றுவிடாமல் அரசியல் களத்தில் இருந்தவர் எல்.கே.அத்வானி. அவரது  My Life My Nation, என்ற நூல் அவருடைய வாழ்க்கையோடு சேர்ந்து ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜகவின் வரலாற்றை விவரிக்கக்கூடியது. இது தமிழில் என் தேசம் என்வாழ்க்கை என்ற பெயரில் உள்ளது.ச

5) Story of Vivekananda memorial என்ற நூல். இது விவேகானந்த கேந்திரத்தை உருவாக்கிய ஏக்நாத் ரானடே எழுதியது. இன்றைக்கு காட்சியாக பதிவு செய்யப்பட்டதையே இல்லை, போலியானது என்று மறுத்துவிடுகிறார்கள். அன்றைக்கு ரானடே கன்னியாகுமரியில் விவேகானந்தர் மண்டபம் அமைக்கும் முயற்சியில் பக்தவத்சம், அண்ணா போன்ற தலைவர்களைச் சந்தித்தார். சந்தித்து முடிந்ததும் இன்னாருடன் இன்ன பேசினேன். இவ்வளவு நேரம் என்றெல்லாம் எழுதி, சம்பந்தப்பட்டவர்களிடம் ஒப்புதல் கையொப்பம் பெற்று வைக்கும் பழக்கம் உடையவராக அவர் இருந்திருக்கிறார். நாடுமுழுக்க தலா ஒரு ரூபாய் வீதம் நன்கொடை பெற்று உருவாக்கப்பட்டதுதான் கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் மண்டபம். இதன் வரலாற்றை இந்த நூல் சொல்கிறது.

நம்பி நாராயணன்,

ஆசிரியர் ஒரே நாடு

(தமிழக  பாஜகவின் மாதம் இருமுறை இதழ்)

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com