பயணங்களின் தூரத்தைக் குறைக்கும் நண்பன்!

பயணங்களின் தூரத்தைக் குறைக்கும் நண்பன்!

ஒரே காலகட்டத்தில் நான் பற்பல நூல்களையும்,  ஆங்கிலம் - தமிழ் என மாற்றி மாற்றிப் படிப்பேன்.

எனது வாசிப்புப்  பழக்கம் என்பது தெவிட்டாமல் இருக்கும் அந்த முறை மூலம்!

பள்ளி வகுப்புகளில் ஒரு நாளில் பல பாட வகுப்புகளை 40 நிமிடம் என்று பகுத்திருப்பதைப்போல், நானே சில புத்தகங்களை எடுத்து வைத்துப் படிப்பேன் - அதில் சலிப்பு ஏற்படும் முன்பே வேறு ஒரு புத்தகத்திற்கு மாறிவிடுவேன் - சில நூல்களைத் தொடர்ந்து படித்து முடிப்பேன்.

முக்கிய பகுதிகளை சிவப்பு அல்லது பச்சை இங்க் மூலம் அடிக்கோடிட்டுப் படிப்பேன்.

அதிலும் முக்கிய சில பகுதிகளைத் தனியே ஒரு நோட்டில் கையெழுத்தால் எழுதி வைத்துக் கொள்வேன். அது வெறும் நோட் புத்தகத்தில் எழுதுவது மட்டுமல்ல - மனதிலும் நன்கு பதிய வைத்துக் கொள்ளும் ஒரு சரியான வழியாகும்.

புத்தகங்களை வைக்க வீட்டில் போதிய இடமும், எல்லா புத்தகங்களையும் படிக்கப் போதிய நேரமும் கிட்டாதவையே! என்னைப் பொறுத்தவரை ‘போதாத காலம்‘ என்பது புத்தகம் படித்து முடிப்பதற்கு நேரம் மேலும் கிட்டவில்லையே, என்பதுதான். பெரும்பாலும் பயணங்களின் தூரத்தைக் குறைக்கும் நண்பன் புத்தகம் தானே!

எனினும், கடந்த ஆண்டில், கரோனா - முடங்கல் ஆகியவற்றால் சுற்றுப்பயணம் இல்லாததும் நிறைய புத்தகங்கள் படிக்க பெரிதும் துணை புரிந்தது!

இயல்பாக எனது முக்கியச் செலவே புத்தகங்களை வாங்கிப் படித்துச் சேகரிப்பதே! உடைக்கோ, உணவுக்கோ அல்ல!!

திட்டமிட்டு செயலாற்றும்போதும், தெவிட்டாத உணவு போல படிக்கும்போதும், நேரம் ஒரு பொருட்டாகவே அமையாது.

இரவு படுக்கைக்குப் போகுமுன் குறைந்தது 15 மணித் துளிகள் முதல் 30 மணித்துளிகள் படித்த பின்பே உறக்கம் என்ற, பழக்கத்தை வழக்கமாக்கிக் கொண்டால், 'சிறுதுளி' யாகும். அதுவே 'பெருவெள்ளமாகி' பயன் தருவது உறுதி!

அண்மைக்காலத்தில் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பேரால் பிரமாணம் எடுத்துக்கொண்டே அதன் அடிப்படை - முகவுரையில் கூறப்பட்ட - சமதர்மம், மதச்சார்பின்மை, ஜனநாயகம், குடியரசு என்ற கோட்பாடுகளை நாளும் புறக்கணிக்கும்

சட்டங்களையும், திட்டங்களையும் ‘தோலிருக்க சுளை முழுங்குவதுபோல்' செய்து கொண்டுள்ள ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ‘ஆக்டோபஸ்' கரங்கள் எப்படி சமூகநீதி, மாநிலங்களின் உரிமை, கல்வி, வேளாண்மை உள்பட பறிக்கும் பா.ஜ.க. அரசாகவும், அதன் அணுகுமுறைகள் எவ்வாறு  அமைந்துள்ளன என்பதையும் புரிந்துகொள்ள  ஓர் அருமையான நூல் - The R.S.S. and the making of the Deep என்ற ஆங்கில நூலாகும்.

382 பக்கங்கள் கொண்ட இந்த நூல், ‘ஸ்கேன்' செய்து காட்டுவதுபோல், 9 அத்தியாயங்களில்  மிக அருமையாக பல அரிய தகவல்களையும், வரலாற்று நிகழ்வுகளையும் விளக்கி படிப்போருக்கு நன்றாகப் புரிய வைப்பதாக அமைந்துள்ளது.

‘வித்தைகள்', வியூகங்கள், முந்தைய நிலைப்பாடுகளை மெல்ல நகர்த்தி, எப்படி தங்கள் லட்சியங்களை ஊடுருவல்களாலும், உருமாற்றங்களாலும் பதியச் செய்து தேர்தல் வெற்றியைப் பெறுவதும், அரசியலைத் தம் வயப்படுத்துவதுமான நிலைப்பாடுகளை பல்வேறு தரவுகளுடன் விளக்குகிறார் இந்த நூலாசிரியரான ‘எகனாமிக் டைம்ஸ்' பத்திரிகையின் செய்திக் கட்டுரையாளர் தினேஷ் நாராயணன்.

அதைப் படித்து பல குறிப்புகளை நான் பதிவு செய்துகொண்டதோடு, பல சொற்பொழிவுகளிலும் பயன்படுத்தி வருகிறேன். 2020 இல் வெளிவந்துள்ளது இந்தப் புத்தகம்.

தற்போது உலகப் புத்தக அரங்கில் பிரபலமாகி வருபவரும், வரலாற்றுப் பின்னணியுடன் எழுதக் கூடியவர் என்ற புகழ் பெற்றவரும், யூத வரலாற்றுப் பேராசிரியருமான யுவல் நோவா அராரி (Yual Noah Harari) 2018இல் எழுதி வெளிவந்த

'21 Lessons for the 21st Century என்ற நூல் அருமையான கருத்துச் செறிவும், புது சிந்தனைக் கண்ணோட்டமும் நிறைந்ததொரு நூலாகும்!

ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் பிஎச்.டி.,  ஆய்வுப் பட்டம் பெற்று, ஜெருசலம் யூதப் பல்கலைக் கழகத்தில் இவர் பணியாற்றி வருகின்றார். மனிதர்களின் வரலாற்றைப் புதிய கோணத்தில் ஆய்ந்து பல நூல்களை எழுதி, பிரபலமாகியுள்ள இந்த நூலாசிரியர் 2018 இல் எழுதிய அந்த நூல்,

பகுதி 1 தொழில்நுட்ப அறைகூவல்கள்,

பகுதி2அரசியல் அறைகூவல்கள்

பகுதி3 நம்பிக்கையின்மையும், நம்பிக்கையும்

பகுதி 4 உண்மை

பகுதி 5 சித்தம், என்ற அய்ந்து தலைப்புகளில் 20 ஆம் நூற்றாண்டில் - இந்த நூற்றாண்டைப்பற்றி மிக அரிய புதிய கோணங்களில் பல்வேறு பிரச்சினைகளை ஆராய்ந்தும், அவற்றுக்கான பதிலையும் விளக்கமாக பல்வேறு 21 தலைப்புகளில் தருகிறார். இந்நூலைப் படித்து முடித்தால், பல வகுப்பறைகளிலும், ஒரு பெரிய நூலகத்திலும், பல்வேறு பகுதிகளுக்கும் சென்று படித்தும், அறிந்ததுமான தொழில்நுட்ப வளர்ச்சியின் எதிர்காலத்தை நாம் எப்படி எதிர்கொண்டு வெற்றி அடைவது என்ற வழிமுறை பயனுறு வகையில் நமது இளைய தலைமுறையினருக்குக் கிடைக்கும்.

திருமதி  நாகலட்சுமி சண்முகம் அவர்களால் தமிழிலும் இந்நூல் மொழி பெயர்க்கப்பட்டு, மஞ்சுள் பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்ட இந்த மொழிபெயர்ப்பு நூல் ஆங்கிலம் தெரியாதவர்களுக்கும் படிப்பதற்கு எளிதானது.

நான் மீள்வாசிப்பாக (முன்பு இரண்டு, மூன்று முறை படித்திருந்தாலும்கூட) படித்துப் பயன்படுத்தும் ஓர் அறிவாயுத நூல் அறிஞர் அண்ணாவின் மாநிலங்களவை உரைகள் - ‘‘Anna Speaks என்ற தலைப்பில் முன்பு வெளியானவை (விரைவில் புதிய பதிப்பும் வரவிருக்கின்றது).

ஹிந்தி மொழித் திணிப்பு, மாநில உரிமைகள் பறிப்பு - திராவிடத்தின் தனித்தன்மை & சிறப்புகள், பொருளாதாரம், இறையாண்மை இப்படி அய்ந்து தலைப்பில் உரைகள் தொகுக்கப் பட்டு இந்நூல் வெளிவந்துள்ளது.

இன்றைக்கு இந்நூல் கருத்துப் போர் ஆயுதமாகப் பயன்படக் கூடிய ஒன்று. அருமையான ஆங்கில நடைக்காகவும், நாடாளுமன்றத்தில் எப்படி வாதங்கள் மறுக்கப்பட முடியாத வகையில் அரசியல் - நனிநாகரிகம் அமையவேண்டும் என்பதற்கு இலக்கணமான நூலும்கூட! நவில்தொறும் இந்நூலின் நயம் நம்மில் பலருக்கும் பல்வேறு அரசியல், பண்பாடு, கல்விபற்றி தெரிந்துகொள்ள உதவும்.

தொல்பொருள் ஆய்வுகள், வரலாற்றுப் பதிவுகள் எல்லாவற்றையும் தாண்டி, அறிவியல் ரீதியாக நாம் அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய ஒரு சமூகவியல் பாடமாக அமைந்த ஒன்று Early Indians  என்ற ‘டோனி ஜோசப்' (Tony Josep) மரபணு ஆராய்ச்சியை அடிப்படையாகக் கொண்டு எழுதியுள்ள ஒரு சிறந்த ஆய்வு நூல். நம்முடைய முன்னோர்கள் கதையை நாம் தெரிந்துகொள்ள பத்திரிகையாளர் டோனி ஜோசப் 65,000 ஆண்டுகள் பின்னோக்கி அழைத்துச் செல்கிறார்! சிந்துவெளி நாகரிகம், ஆரியம் & மரபியல் ரீதியான எந்தக் காலத்தவை என்பனபற்றி மிகச் சிறந்த ஆய்வுகளுடன் விளக்கமாகத் தரும் நூலாகும். இதுவும் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு வந்துள்ளது;

ஆங்கிலத்தில்தானே இருக்கிறது என்று பெருமூச்சு விட வேண்டிய தேவை இனி கிடையாது! புதிய வெளிச்சம் & இந்நூல்மூலம் கிடைக்கிறது!

அமெரிக்காவின் புதிய குடியரசுத் தலைவராக ஜனநாயகக் கட்சியைச் சார்ந்த ஜோபைடன் அவர்கள் தேர்தலில் வெற்றி பெற்று பொறுப்பேற்றுள்ளார்.

அவரது வாழ்க்கையில் நடந்த பல்வேறு சோகமயமான கட்டங்களில் அவரது முதல் மனைவி, பிள்ளைகள் கிறிஸ்துமஸ் விழாவுக்கு முன் கோர விபத்தில் இறந்ததும்; எஞ்சிய பிள்ளைகள் இருவரோடு அவர் வாழ்க்கையை நடத்தியதும்; அதில் இளம் வயதில் செனட்டராக இருந்தும், அரசியல் கடமையுடன் குடும்பத்தை சிறப்பாக கவனித்து, பிள்ளைகளை வளர்க்க நேரத்தை செலவிட்டதும், மூத்த மகன் வளர்ந்து பெரும் பொறுப்புக்கு வந்த பின்பு, புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறந்ததும், அதனால் அவருக்கு ஏற்பட்ட மன அழுத்தத்தால் தற்கொலை செய்துகொள்ளலாம் என்றுகூட யோசித்து அந்த எல்லைக்கும் சென்றதும், அதற்கிடையில், குடியரசுத் துணைத் தலைவர் பொறுப்புக்கு அவர் பெயர் கூறப்பட, அதனை ஏற்க அவர் தயங்கியபோது, அவருடைய மூத்த மகன் இறப்பதற்குமுன்,

‘‘நீங்கள் உங்கள் கடமையைச் செய்யவேண்டும்‘' என்று உறுதிமொழி வாங்கியதையும், அது அளித்த உணர்வையும் & அந்த அனுபவங்கள் பற்றியெல்லாம், இன்றைய அமெரிக்க அதிபர் ஜோபைடன் அவர்கள் எழுதியுள்ள ‘Promise Me, Dad' என்ற நூல் பல அரிய வாழ்வியல் அனுபவங்களை முத்திரையிட்டுக் காட்டுகிறது. பண்பு நலன்களைப்பற்றி அறிய பலருக்கும் ஓர் சிறந்த பாடமாக இருக்கும்.

பிப்ரவரி, 2021

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com