பலர் இங்கு தங்கி பெரிய ஆளாக வந்திருக்கிறார்கள்!

பலர் இங்கு தங்கி பெரிய ஆளாக வந்திருக்கிறார்கள்!

சென்னை திருவல்லிக்கேணியில் ஈஸ்வரா தெருவில் உள்ள ஸ்ரீராம் மேன்ஷன், நல்லதம்பி தெருவில் உள்ள கோகுலம் மேன்ஷன் ஆகிய இரண்டையும் கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக வெற்றிகரமாக நிர்வகித்து வருகிறார் முகமது யூசுப். இவரை நேரில் சந்தித்துப் பேசினோம், ‘‘கோவில்பட்டி அருகே இருக்கும் தொட்டிவேலன் பட்டியிலிருந்து நாற்பது வருடங்களுக்கு முன்பாக வைரவ சாமி ஐயா சென்னை வந்தார். ரொம்ப கஷ்டப்பட்டு 1996&இல் முப்பத்தைந்து ரூம்களை கொண்ட கோகுலம் மேன்ஷனைத் தொடங்கினார். அதில் நல்ல லாபம் வந்ததால் 2000&த்தில் ஸ்ரீராம் மேன்ஷனை கட்டினார். ஆனால் ரவுடிகளின் பிரச்னையால் மூன்று வருடம் திறக்க முடியாமல் இருந்தது. 2003இல் தான் ஸ்ரீராம் மேன்ஷன் செயல்பட ஆரம்பித்தது. இதில் உள்ள 35 ரூம்களிலும் இரட்டை படுக்கை வசதிகள் உள்ளது.

அரசு ஊழியர்கள், ஐ.டி ஊழியர்கள், அலுவலகத்தில் வேலை செய்பவர்கள், மாணவர்கள் என்றால் ஸ்ரீராமில் ரூம் தருவோம். அவர்கள் அறைகளை சுத்தம் பத்தமாக வைத்துக் கொள்வார்கள். வாடகை சரியான தேதியில் கொடுப்பார்கள். ஸ்ரீராமில் மாதவாடகை இப்போது 3500 ரூபாய். அதே நேரத்தில் குறைந்த வாடகை வேண்டும் என்றால், கோகுலத்தில் ரூம் கொடுப்போம். இங்கு மாதவாடகை 2500 ரூபாய்.

குறிப்பாக திருவல்லிக்கேணி, எழும்பூர், மைலாப்பூர் போன்ற சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து வருபவர்களுக்கு ரூம் கொடுக்க மாட்டோம். அவர்கள் இந்தப் பகுதி ஆட்கள் என்பதால் வாடகை தருவதில் எதாவது பிரச்சனை செய்வார்கள்.

அதேபோல், ஐம்பது அறுபது வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு ரூம் கொடுப்பதற்குக் கொஞ்சம் தயங்குவோம். உடல் நலன் சம்பந்தமான பிரச்னைகள் இருந்தால் அவர்களை கவனித்துக் கொள்ள வேண்டியிருக்கும். இது நமக்குக் கூடுதல் சுமை. அவர்களுக்கு எப்போது என்ன நடக்கும் என்றே தெரியாது.

ஏனெனில், ஒரு முறை கோகுலம் மேன்ஷனில், கழிவறைக்கு சென்ற முதியவர் ஒருவர், நீண்ட நேரம் ஆகியும் வெளியே வரவில்லை. கதவை உடைத்துப் பார்த்தால் ‘ஹார்ட் அட்டாக்' வந்து மூச்சு பேச்சு இல்லாமல் கீழே விழுந்து கிடந்தார். இன்னும் கொஞ்சம் நேரம் பார்க்காமலிருந்திருந்தால், அவரை காப்பாற்றியிருக்கவே முடியாது.

முன்பெல்லாம் யாராவது வாடகை தரவில்லை என்றால், அவர்களை பீச்சில் கொண்டு போய் விட்டுவிட்டு வந்துவிடுவார் ஐயா (வைரவசாமி). பிறகு மனசு தாங்காமல் அவர்களை மீண்டும் அழைத்து வந்துவிடுவார். அப்படி வாடகை தராமல் இருந்த ஒருவர் இன்றைக்குப் பெரிய அரசியல்வாதி. இங்குத் தங்கியிருந்த நிறையப் பேர் சினிமாவில், தொலைக்காட்சியில், அரசியலில் பெரிய ஆட்களாக உள்ளனர்.

இங்கு தங்கியிருந்தவர்களிலேயே மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் தான் மூன்று வருடமாக வாடகை தரவில்லை. மொத்தம் ஒன்றரை லட்சம் ரூபாய் அவர் தரவேண்டும். இதுவரை தந்தபாடில்லை.

இதையெல்லாம் தாண்டி மேன்ஷன் நடத்துவதில் சில சிக்கல்கள் உண்டு. சுதந்திர தினம், குடியரசு தினம் அல்லது உயர் அதிகாரிகள் யாராவது தங்குவதற்கு வந்தால், காவல்துறையிடம் மேன்ஷனில் யாரெல்லாம் தங்கியிருக்கிறார்களோ அவர்களுடைய ஆவணங்களை எல்லாம் சமர்ப்பிக்க வேண்டும்.

திருவல்லிக்கேணி பகுதியில் மட்டும் சுமார் 450 மேன்ஷன்கள் உள்ளன. வருடத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை மேன்ஷன் அசோசியேஷன் சார்பாக காவல் துறையினர் ஆலோசனைக் கூட்டம் நடத்துவார்கள்.

ஐயா வைரவசாமி என் தந்தை பக்கீர் மைதீனின் நண்பர். இப்போது என்னிடம் இந்த மேன்ஷன்களை நிர்வகிக்கும் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அவரது கனவை நினைவாக்கும் விதமாக இந்த தொழிலை நல்ல முறையில் நடத்திக் கொண்டிருக்கிறேன்'' என்றார்.

இன்னும் ஓராண்டுக்கு விலையை உயர்த்த மாட்டோம்!

தி ருவல்லிக்கேணியில் இருக்கும் ஸ்ரீ அம்மன் உணவகத்தின் உரிமையாளர் குணசேகரை சந்தித்தோம்.‘இரண்டாயிரத்தில் இந்த உணவகத்தை தொடங்கினேன். இதை தொழில் என்று சொல்லமாட்டேன்.  சேவை என்று தான் சொல்வேன். தோசை சுடுவதற்கு கேஸ் சிலிண்டரையும்  சாப்பாடு, குழம்பு போன்ற மற்ற உணவு வகைகளை சமைப்பதற்கு விறகு அடுப்பையும் பயன்படுத்துகிறோம். விறகால் சமைப்பதால் உணவின் சுவை வீட்டில் சமைத்தது போல் இருக்கும். புதூர் லக்கி மேன்ஷனில் ராமசாமி என்ற முதியவர் ஒருவர் தங்கியிருக்கிறார். அவர், மெஸ் ஆரம்பித்த நாட்களிலிருந்து இங்கு வந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்.

சாப்பிட்டு முடித்த கையோடு வந்து பணத்தைக் கொடுத்துவிடுவார். அவர் வர நேரம் ஆகிறது என்றால், அவருக்கென்று தனியாக எடுத்து வைத்துவிடுவோம். கடந்த ஒருவருட காலமாக அவரால் மெஸ்ஸுக்கு வரமுடியவில்லை என்பதால், நாங்களே அவருக்கு  சாப்பாட்டைக் கொண்டு போய் கொடுத்துவிடுகிறோம். கொரோனாவால் கடை எட்டு மாதங்கள் மூடி கிடந்தது. எலிகள் எல்லாவற்றையும் நாசம் செய்துவிட்டன. இருப்பினும் அடுத்த ஓர் ஆண்டுக்கு உணவின் விலையை உயர்த்தக் கூடாது என்று முடிவெடுத்துள்ளோம். இப்போது ஒரு சாப்பாட்டின் விலை எழுபது ரூபாய்.

பல அரசியல்தலைவர்கள் எங்கள் வாடிக்கையாளர்கள்.ஒரு முறை, சென்னைக்கு சுற்றுலா வந்த ஒரு குழுவினர், எங்கள் மெஸ்ஸுக்கு சாப்பிட வந்தனர். அவர்கள் வரும் போது மாலை மூன்று மணி. அப்போது கொஞ்சம் சாப்பாடும் ரசமும் மட்டும் தான் இருந்தது. தலைமைச்செயலகத்தில் பணியாற்றும் அவர்களுடைய நண்பர் ஒருவர் கடையின் முகவரியுடன் சொல்லி அனுப்பினாராம்.

வந்த இருபது பேருக்கும் சமைத்துக் கொடுத்தோம். காத்திருந்து சாப்பிட்டு முடித்தவர்கள் ‘இதுபோன்ற சாப்பாட்டைக் காத்திருந்து சாப்பிடுவதில் ஒன்றும் தவறில்லை' என்றார்கள். மகிழ்ச்சியாக இருந்தது.'' என்று உணர்வுபூர்வமாகச் சொன்னார்.

செப்டம்பர், 2021

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com