பழி தூற்றும் கோலேன் ஆகுக!

பழி தூற்றும் கோலேன் ஆகுக!

தலையாலங்கானத்துப்போர்

சங்ககாலப் பாண்டிய மன்னர்களின் பட்டியலில் நிலந்தரு திருவின் நெடியோன் முதல் நல்வழுதி வரை 17 மன்னர்களை வரிசைப்படுத்துவர் வரலாற்றாசிரியர்கள். அவர்களில் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன், ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் என்னும் இருவர் குறிப்பிடத்தக்கவர்கள்.இவ்விருவர் தவிர மாங்குளம் தமிழ் பிராமி கல்வெட்டில் சுட்டப்படும் நெடுஞ்செழியன் என்பவனும் கி.மு. 4 அல்லது ஐந்தாம் நூற்றாண்டின் பாண்டிய மன்னனாக அறியப்படத்தக்கவன் என்பது கல் வெட்டறிஞர்களின் துணிபு. இக் கல்வெட்டில் இடம்பெறும் நெடுஞ்செழியன் பாண்டிய மன்னன் என்பது தவறு. அவன் ஒரு வணிகனே என்பது அண்மைக்கால ஆய்வாளர் ஒருவரின் முடிவு( முனைவர்.துளசி.ராமசாமி. தமிழக வரலாற்றில் ஒளிர்வது களப்பிரர் காலம்.விழிகள் வெளியீடு.

சென்னை. டிசம்பர் 2014.)

இவர்களில் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் சிலப்பதிகாரக் காதையில் இடம்பெறும் மன்னன் என்பர். அவ்வாறெனில் சேரன் செங்குட்டுவன், இலங்கை வேந்தன் கயவாகுவின் சமகாலத்தவனாகக் கி.பி இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவன் எனக் கருதப்படுகிறான். இவன் வென்ற ஆரிய மன்னர்கள் யார் என்பதற்கு விடையில்லை,  சங்கப்பாடல்களில் எங்கும் பாண்டிய மன்னர்களின் பெயர் நேரடியாக சுட்டப்படவில்லை. பின்னர் பாடல்களை தொகுத்தவர்கள் இவனை இவர் பாடியது என்று கொளுவிலே சேர்த்துள்ளனர் என்பதும் ஏற்கத் தக்க வாதமே .

தலையாலங்கானத்து செருவென்ற பாண்டிய நெடுஞ்செழியனையே பாட்டுடைத்தலைவனாக்கி மாங்குடி மருதனார் மதுரைக் காஞ்சி என்னும் இலக்கியம் படைத்துள்ளனர். அது போல் நக்கீரர் இதே மன்னனை சுட்டி பெயர் குறிப்பிடாமல் நெடுநல்வாடை பாடியுள்ளார். இவைதவிர பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனே வஞ்சினம் உரைத்துப் பாடியதாக ஒரு பாடல் புறநானூற்றில் இடம்பெற்றுள்ளது. பின் வந்த முற்பாண்டியர் காலத்து செப்பேடுகளிலும் இம்மன்னன் ஈடுபட்ட ஆலங்கானத்து போர்ச்செய்தி கூறப்படுகிறது.

கி.பி 10 ம் நூற்றாண்டில் பராந்தக வீர நாராயணனால் வெளியிடப்பட்ட தளவாய்புரம் செப்பேடு,

“ ஆலங்கானத்தமர் வென்று ஞாலங்காவல் நன்கெய்தி” என்று குறிப்பிடுகிறது. இதே காலத்தில் இரண்டாம் ராஜசிம்மனால் வெளியிடப்பட்ட சின்னமனூர் பெரிய செப்பேட்டிலும்,

“தலையாலங்கானத்திற்றன்னொக்கும் இரு வேந்தரைக் கொலைவாளிற் றலைத்து மித்துக் குறைத்தலையின் கூத்தொழித்து” என்றும் ஆலங்கானத்து போர் கூறப்பட்டுள்ளது. இப்போர் நிகழ்ந்த தலையாலங்கானம் என்னும் ஊர் இன்றைய தஞ்சை மாவட்டத்தில் உள்ளது என்பர்     ( கே.வி.ராமன். பாண்டியர் வரலாறு, பக் : 46). இவன் போரிட்டு வென்ற இவனொத்த இருவேந்தர் சேரனும், சோழனுமாகவே இருத்தல் வேண்டும்.

இவன் இளமையிலேயே அரசாட்சிக்கு வந்தமையால் இளையோன் எனக்கருதிய சேரன் மாந்தரஞ்சேரல்  இரும்பொறையும், சோழன் பெருநற்கிள்ளியும் இணைந்து திதியன், எழினி, எருமையூரன், இருங்கோவேள்மான், பொருநன் என வேளிர் ஐவருடன் மதுரையை முற்றுகையிட்டனர். அவர்களை ‘அருஞ்சமம் சிதையத் தாக்கிமுரசமொடு ஒருங்கு அகப்படேன் ஆயின் பொருந்திய எந்நிழல் வாழ்நர் செந்நிழல் காணாது, கொடியின் எம் இறை எனக்கண்ணீர் பரப்பி குடி பழி தூற்றும் கோலேன் ஆகுக’

என சூளுரைத்துப் போர்முகங் கண்டு வாகை சூடினான். இவன் அவைக் களத்தில் ‘ ஓங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்வி மாங்குடி மருதன்’ என்பார் தலைமைப் புலவராக வீற்றிருந்தார் என்பதை புறநானூறு (76 ) பாடல் சுட்டுகிறது.இவ்வாறு இரு பெரு வேந்தரும், ஐம்பெரு வேளிரும் எதிர் நிற்க தனி ஒருவனாய் போரிட்டு வென்ற இடமே தலையாலங்கானம் ஆகும். இப்போரில் சேரன் இரும்பொறை பாண்டியனால் சிறைப்பட்டான்.

பாண்டியன் பெற்ற இப்பெரு வெற்றியை ‘ஆலங்கானத்து அமர்கடந்து அட்ட காலமுன்ப’ எனக் கல்லாடனார் என்னும் சங்கப்புலவர் புறப்பாடல் (23ல்) ஒன்றில் பதிவு செய்துள்ளார் . இதே போரை குடபுலவியனார் எனும் புலவர், ‘ தமிழ் தலை மயங்கிய தலையாலங்கானத்து

மன் உயிர் பன்மையும், கூற்றத்து ஒருமையும்

நின்னொடு தூக்கிய வென்வேற்செழிய (புறம் 19)’

என்று குறித்துள்ளார்.

சோழ மன்னனை உறையூர் வரையும், சேரனை வஞ்சி நகர் வரையும் துரத்திச் சென்றான் (புறம் 78, 79). இப்போரிலேயே மிழலைக்கூற்றம், முத்தூற்றுக்கூற்றம்

என்றும் இன்றைய அறந்தாங்கி, திருவாடனைப் பகுதிகளையும் வென்று பாண்டிய நாட்டோடு இணைத்துக் கொண்டான்  (புறம் 24) நெடுஞ்செழியன்.

இவன் காலத்து புலவர்களாக மாங்குடி மருதன், மாங்குடி கிழார் , நக்கீரர், பரணர், குடபுலவியனார், இடைக்குன்றூர் கிழார் ஆகியோர் அறியப்படுகின்றனர்.

மாங்குடி மருதனார் வாழ்ந்த மாங்குடி என்னும் சிற்றூர் இன்றைய நெல்லை மாவட்டம் சங்கரன் கோவிலுக்கு அருகில் அமைந்துள்ளது. இங்கு மேற்கொள்ளப்பட்ட அகழாய்வில் ‘குறுமாங்கள ஆதன் யி யானை போ’ எனும் எழுத்து பொறித்த சங்ககால பானை  ஓடு, ( தமிழ் பிராமி) கிடைத்துள்ளது. இதன் அருகிலேயே உள்ள சிங்கந்திரடு எனும் இடத்தில் ‘அகஸ்டஸ் சீசரின்’ பெயர் பொறித்த ரோமானிய வெள்ளி நாணயம் ஒன்றும் கிடைத்துள்ளது.

(கட்டுரையாளர் மதுரையில் உள்ள பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையத்தின் செயலாளர்)

மே, 2015.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com