பாட்டாளிகளின் அரசியல் அதிகாரம்

பாட்டாளிகளின் அரசியல் அதிகாரம்

பா.ம.க

வன்னி' என்றால் நெருப்பு, அக்னி. நெருப்பிலிருந்து தோன்றி வந்தவர்கள்' - இப்படித்தான் சொல்கிறார்கள் வன்னியர் என்ற சொல்லின் அர்த்தத்தை. சமத்துவத்தை நாடித்தான் வன்னியர்கள் சங்கமாக ஒன்று திரண்டார்கள்.

பத்தொன்பதாவது நாற்றாண்டு.

கோவில் திருவிழாக்களில் வன்னிய சமூகத்தினர் பாகுபாடான பார்வையுடன் நடத்தப்பட்டார்கள். 1819 ல் புவனகிரி அருகில் உள்ள ஒரு கிராமத்துக் கோவில் திருவிழாவில் கொடி பிடித்துச் சென்றவர்கள் மீது வழக்கு. விசாரித்த பிரிட்டிஷ் நீதிபதி வன்னியர்களுக்குக் கொடி பிடித்துச் செல்ல உரிமை உண்டு என்று தீர்ப்பளித்தார்.

1860 ல் செங்கல்பட்டில் உயர்சாதியினர் வசிக்கும் தெருவழியாக வன்னியர்கள் சென்றது பிரச்சினை ஆனபோது, சென்னை உயர்நீதிமன்றம் வன்னியர்களுக்கான சமத்துவ உரிமையை நிலைநாட்டியது.

உரிமை கேட்டபோது வன்னியர்களை ஒற்றுமைப்படுத்தி அதற்கென  சென்னை ராயபுரத்தில் ‘வன்னிய குல அபிமான சங்கம்' துவக்கப்பட்ட ஆண்டு 1885. பிறகு ‘சென்னை வன்னியகுல ஷத்திரிய மகா சங்கம்' துவக்கப்பட்டது. வன்னியர்கள் தலைமையில் காமன்வீல் கட்சி, உழைப்பாளர் கட்சி என்று இரண்டு கட்சிகள் தொடங்கப்பட்டன.

1952இல் நடந்த பொதுத்தேர்தலில் தேர்ந்தெடுக்கப் பட்ட 26 எம். எல். ஏ.க்கள் வன்னிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள். ராஜாஜி அமைத்த அமைச்சரவையில் ராமசாமி படையாட்சி அமைச்சர்.

அதன் பிறகு 1980 இல் 27 வன்னியர் சங்கங்களை ஒருங்கிணைத்து திண்டிவனத்தில் புதிய வன்னியர் சங்கத்தைத் துவக்கினார் மருத்துவர் ராமதாஸ். அப்போது அவர் திண்டிவனத்தில் வசித்தபோது, குறைந்த கட்டணத்தில் அந்தப் பகுதி மக்களுக்கு மருத்துவம் பார்த்துப் பிரபலம் அடைந்திருந்தார். அப்போது அவருடைய மருத்துவமனையில் வெள்ளை கோட்டு சகிதமாக அவரைப் பார்க்க முடியும். முதலில் அவர் பணிபுரிந்தது திண்டிவனத்தில் உள்ள அரசு மருத்துவமனையில்.

அனலடிக்கிற பேச்சுக்குச் சொந்தக் கார‍ராக இருந்த மருத்துவர் ராமதாஸ் 1986 ஆம் ஆண்டில் உடம்பில் பட்டை நாமத்தைப் போட்டபடி இட ஒதுக்கீட்டைக் கோரிப் போராட்டம் நடத்தினார். கறுப்புக் கொடி காட்டினார்.

படங்கள் உதவி : பசுமைத்தாயகம் கண்ணன்

1987 ஆம் ஆண்டில் வன்னியர் சங்கத்தினர் தங்களுக்கான இட ஒதுக்கீட்டிற்காக நடத்திய சாலை மறியல் போராட்டம் தமிழ்நாட்டையே திரும்பிப் பார்க்க வைத்தது. ஒருவாரம் நடந்த மறியலின் போது ஏறத்தாழ 17 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டார்கள். பதினெட்டுப் பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அப்போது பெரும் அதிர்வை ஏற்படுத்தியது.

நெய்வேலி நிலக்கரிச் சுரங்கத்திற்காகத் தங்கள் நிலத்தைக் கொடுத்த வன்னியர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கவில்லை என்று வன்னியர் சங்கம் நடத்திய போராட்டத்தின் விளைவு &432 வன்னியர்களுக்கு உடனடியாக வேலை வாய்ப்பு கிடைத்தது. இருந்தும் இட ஒதுக்கீடு கிடைக்கவில்லை.

1989 இல் இட ஒதுக்கீட்டிற்கு ஆதரவு அளிக்காத கட்சிகளைப் புறக்கணித்துப் போராட்டம் நடந்தது. வன்னியர் சமூகத்தினர் வசிக்கும் பகுதிகளில் ‘ஓட்டுப் பொறுக்கிகளே... உள்ளே நுழையாதீர்கள்' என்ற வாசகங்களைச் சுவர்களில் பார்க்க முடிந்தது. மற்ற அரசியல் கட்சிகளின் கொடிகள் வீழ்த்தப்பட்டன.

மத்திய அரசின் ராணுவம் வன்னியர்கள் அதிகமுள்ள கிராமங்களில் புகுந்து வேட்டையாடியது. ‘ மஞ்சள் பூ ஆபரேஷன்' என்று பெயரிடப்பட்ட அந்தத் தேடுதல் வேட்டையின் போது ஆயிரக்கணக்கான வன்னியர்கள் பாதிக்கப்பட்டார்கள். பலர் கைதானார்கள். வன்னியர் சங்கத்தின் முக்கியப் பிரமுகர்கள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்கள்.

தங்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைக்கு எதிராகத் தங்களை அரசியல்ரீதியாக ஒற்றுமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற உணர்வில் உருவானது தான் ‘பாட்டாளி மக்கள் கட்சி'.

1989 ஜூலை 16 ஆம் தேதி.

சென்னை மெரினா கடற்கரையில் அப்போதிருந்த சீரணி அரங்கிற்கு முன்னால் திரண்டிருந்த கூட்டத்தில் தொடங்கப்பட்ட பா.ம.க.! நீலம், மஞ்சள், சிவப்பு நிறங்கள் அடங்கிய கொடி-கள் பறந்தன.

தாழ்த்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்-பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், மதவாரிச் சிறுபான்மையினர் உள்ளடக்கிய அனைத்துத் தரப்பினருக்கான பேரியக்கம் என்று தன்னை அடையாளப்-படுத்திக் கொண்ட பா.ம.க.-வின் நிறுவன-ரானார் மருத்துவர் ச.ராமதாஸ்.

பா.ம.க.வைத் தொடக்கிய சமயத்தில் அவர் முன் வைத்த முழக்கம்:

‘எனது உடலில் உயிர் இருக்கிற வரையில் பாராளு-மன்றத்தையோ, சட்டமன்றத்தையோ என் கால்கள் மிதிக்காது'.

வன்னியர் - தாழ்த்தப்பட்டோர் ஒற்றுமை மாநாடுகள் தர்மபுரி, ஈரோடு,மதுரையில் நடத்தினார் மருத்துவர் ராமதாஸ். கும்பகோணம் அருகே உள்ள குடிதாங்கி கிராம‍ம்.இங்குள்ள குறிப்பிட்ட சாதியினர் தலித் சமூகத்தைச் சேர்ந்தவரின் சடலத்தைத் தங்கள் பகுதியில் தூக்கிச் செல்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்ததும் அங்கே போன மருத்துவர் தோளில் சுமந்து எடுத்துச் சென்றார். அதற்காக  அவருக்கு ‘தமிழ்க்குடிதாங்கி' என்ற பட்டம் வழங்கப்பட்டது விடுதலைச் சிறுத்தைகள் தலைவரான தொல். திருமாவளவனால்.

இட ஒதுக்கீட்டிற்கான போராட்டம் தொடர்ந்து வேகத்துடன் நடந்ததால் பிற்படுத்தப்பட்ட 107 சாதிகளுடன் வன்னியர்களையும் இணைத்து இருபது சதவிகித இட ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டு நடைமுறைக்கு வந்தது.

பா.ம.க.வை ஆரம்பித்த புதிதில் தேர்தல் அரசியலையே புறக்கணித்த பா.ம.க 1991 சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டபோது ஒரே ஒரு தொகுதியில் வெற்றி பெற்று சட்டமன்றத்திற்கு பா.ம.க பிரதிநிதியாகச் சென்றவர் பண்டிருட்டி ராமச்சந்திரன். அப்போது பா.ம.க பெற்ற வாக்குகள் ஐந்து சதவிகித்திற்கு மேல். அதற்கு முதலில் கிடைத்தது யானைச் சின்னம். பின்னர் மாம்பழச் சின்னம்.

அப்போது பா.ம.க.வின் தலைவராக இருந்தவர் பேராசிரியர் தீரன். பொதுச்செயலாளராக இருந்தவர் தலித் எழில்மலை. பொருளாளராக இருந்தவர் குணங்குடி ஹனீபா.

அதன் பிறகு பல படிநிலைகளை பா.ம.க எட்டினாலும், தொடக்கத்தில் இருந்து பா.ம.க வலியுறுத்தி வருகிற ஒரு விஷயம் - சாதி வாரிக் கணக்கெடுப்பு. 1931 ஆம் ஆண்டுக்குப் பிறகு சாதி வாரிக்கணக்கெடுப்பு நடக்கவில்லை என்பதைச் சுட்டிக்காட்டி அதை நடத்தக்கோரி மாநாட்டையும் நடத்தியிருக்கிறது. இன்று வரை காத்திருப்பில் இருக்கிறது சாதிவாரிக் கணக்கெடுப்புக் கோரிக்கை.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com