பியரும் தொப்பையும்

பியரும் தொப்பையும்

பியர் குடித்தால் உடம்பு போடும் என்பது டீன் ஏஜ் பையன்களிடையே பிரசித்திமான டயலாக். சில வருடங்களுக்கு முன் டீன் ஏஜ் பையன்கள் நரம்பு போல வெட வெடவென இருப்பார்கள்.

அம்பு போல பாய்வார்கள். எலும்புக்கும் சதைக்கும் நடுவே கறியே இருக்காது. சைக்கிள் செயினுக்கு உறை போட்டது போல இருப்பார்கள். அவர்களுக்கு எப்போதுடா நமக்கு உடம்பு ஏறும் என்று ஏக்கமாக இருக்கும். அந்த வயதில் அவர்களைப் பார்த்தால் கவர்ச்சிகரமாக இருக்க மாட்டார்கள். வயிறு தாமரை இதழ் உள்பக்கமாக மடங்கி இருப்பது போல இருக்கும்.அவர்கள் அவ்வப்போது பியர் அடித்து உடம்பு ஏறுகிறதா என பார்ப்பார்கள். ஒன்றும் ஏறாது. இப்போதைய டீன் ஏஜ் பையன்களில் இதைப்போன்ற நரம்பு பையன்களை பார்ப்பது அரிதாகவே இருக்கிறது. பல பையன்களும் தல அஜீத் போலவே தளுக்கி தளுக்கி நடந்து பள்ளிக்குச் செல்கிறார்கள். ஏதோ ஒன்று தளும்பி விழுந்து விடுமோ என்று பயமாக இருக்கிறது அவர்களைப்பார்க்கையில். இந்த கால டீன் ஏஜ் பையன்கள் ஏன் இப்படித் தொப்பையும் தொந்தியுமாக இருக்கிறார்கள். இப்போது எல்லா டீன் பையன்களும் பியர் குடிக்கிறார்களா என்ன ?

சரி ஆண்களை விடுங்கள், தமிழக பெண்களை எடுத்துக்கொள்வோம். இவர்கள் வயிறு எல்லாம் என்ன வாழை இலை போன்ற வயிறுகளா ? ஒவ்வொன்றும் வித விதமான குன்றுகள், மலைகள், மணல் மேடுகள் என அதனளவில் தனித்தன்மையானவை அல்லவா ? அதனுள் தனியான வேறு ஏதோ உலகம் இயங்குவதாக அல்லவா தோன்றும் வண்ணம் உள்ளன. இந்தப் பெண்கள் எல்லாம் என்ன பியர் குடித்துக்கொண்டா இருக்கிறார்கள்?

தேவைக்கதிகமான கலோரி கொண்ட உணவையோ பானத்தையோ எடுத்துக்கொண்டால், அது கொழுப்பாக மாறுகிறது என்கிறது விஞ்ஞானம். அந்த தேவைக்கதிகமான கொழுப்பு, வயிற்றில் நிரந்தர அறை எடுத்துக்கொண்டு செட்டில் ஆவதால் தொப்பை விழுகிறது என்கிறார்கள். வயிற்றில் மட்டுமே இந்த தேவைக்கதிகமான கொழுப்பு சேருவதில்லை. இப்போது சில ஆண்களைப் பார்த்திருப்பீர்கள். பெண்களுக்கே சவால் விடும் அளவுக்கு மார்பு பெருத்துக் காணப்படுவர். சிலருக்கு கொழுப்பு புறமுதுகிட்டு ஓடி புட்டத்தில் ஒளிந்துகொள்வதைப் பார்த்திருக்கலாம்.

விஞ்ஞானம் ஓரளவுக்கு அடிப்படையான விஷயங்களைத்தான் உயிரியலில் சொல்கிறது. அதிலும் மனித உடல் , மனம் சார்ந்து அறுதியிட்டு சொல்வதில்லை , சொல்ல முடியாது.

நம் முன்னோர் அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தை உடல் வாகு. இந்த உடல் வாகுதான் மெயின் மேட்டர். இந்த உடல் வாகை கொஞ்சம் நவீனமாக ஜெனிடிக்ஸ் அல்லது ஹெரிடிடி என சொல்லலாம். சிலருக்கு என்னதான் கொழுப்பு நிறைந்த உணவை எடுத்துக்கொண்டாலும் தொப்பை விழாது, உடம்பும் ஏறாது. சோ , ஓமக்குச்சி நரசிம்மன், மனோபாலா போல. சிலருக்கு அளவாக உட்கொண்டாலே உசில மணி போல உடல் பெருத்து விடும். இதை எல்லாம் இயல்பாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

இன்னொன்று பியர் என்று இல்லை , எந்த வகை ஆல்கஹால் கலந்த பானம் அருந்தினாலும்  லேசாக பசியைத் தூண்டும். நம் ஆட்கள்தான் பசி தூண்டப்படாமலேயே வெளுத்து வாங்கும் இயல்பினர். பசியும் தூண்டி விட்டால்?

சோமாலியா சிட்டிசன் பார்பே கே நேஷனலில் புகுந்தது போல விளையாடி விடுகிறார்கள். இங்கே இருக்கும் முக்கியப் பிரச்சனை “சைட் டிஷ் “. இப்படி ஒரு வார்த்தை பிரயோகமே இந்தியாவில் மட்டுமே இருக்கிறது என நினைக்கிறேன். இந்த சைட் டிஷ்ஷை வெளுத்து வாங்கி விட்டு கடைசியாக “மெயின் டிஷ்'க்கு வேறு வருவார்கள். இந்த சைட் டிஷ்ஷே மூன்று ஆள் சாப்பிடும் மெயின் டிஷ்ஷை தாண்டும். அதிலும் எல்லா டிஷ்ஷும் சிவப்பு வண்ணம் கலந்து பாமாயில் குட்டையில் வறுத்து எடுக்கப்பட்டு இருக்க வேண்டும். இந்த அசைவங்கள் அல்லாமல் சிப்ஸ், மிக்சர், காரா பூந்தி, நாடா பகோடா, பஜ்ஜி, வடை என ஒரு ஸ்வீட் ஸ்டாலே வயிற்றுக்குள் இடம் பெயரும். இதை எல்லாம் செய்து விட்டு பியரால் தொப்பை விழுகிறது என்றால் என்ன சொல்வது ?

ஒரு டீட்டோட்டலர், சாப்பிடும் போது தண்ணீர் குடிப்பார். அவருக்கு தொப்பை விழுகிறது என வைத்துக்கொள்வோம். தண்ணீர் குடித்தால் தொப்பை விழும் என்று சொல்வோமா?

எதுவாக இருந்தாலும் அளவாக உட்கொள்ள வேண்டும். அதுபோல பியரையும் அளவாகக் குடித்து , நல்ல ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொண்டு , மிதமான உடற்பயிற்சியும் செய்து வந்தால் வாழ்வில் மிக மகிழ்ச்சிகரமான மனிதராக இருக்க முடியும். தாம்பத்திய வாழ்வும் மேம்படும்.

இல்லையென்றால் “தொப்பையும் தொப்பையும் மோதிக்கிச்சாம்' என படுக்கையறையில் பாட்டுப்பாடிக்கொண்டு பியர் மேல் பழி போட்டு விட்டு போகவேண்டியதுதான். பியர் மேல் ஒரு அவதூறு என்றால் கேட்க யார் இருக்கிறார்கள் ?

டிட் பிட் : கிரிக்கெட்டர் டேவிட் பூன் ஒரு  சாதனை வைத்திருக்கிறார். விமானத்தில் பயணம் செய்கையில் அதிக பியர் குடித்த கிரிக்கெட் வீரர் உலக அளவில் இவர்தான். இன்னும் இந்த சாதனை முறியடிக்கப்படவில்லை. இந்த சாதனையை ஐசிசி இணைய தளத்தில் தேடினால் கிடைக்காது.

ஜூன், 2022

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com