பிஸினஸ் மூளை என்ன விலை?

பிஸினஸ் மூளை என்ன விலை?

பி ஸினஸ் என்பதை ஏதோ ஏலியன்களின் தனி உலகம் போல பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதற்கென ‘தனி செட் ஆஃப் ரூல்ஸ்' இருப்பதாக எக்கச்செக்க பில்ட் அப்கள்.

தடுக்கி குட்டைக்குள் விழுந்தவன்  ஜட்டிக்குள் விரால் மீனோடு வெளிவந்தது போல குருட்டாம்போக்கு குருட்டு அதிர்ஷ்டத்தால் பிஸினஸில் வெற்றி பெற்றவர்கள் ஏராளம். இந்த குருட்டதிர்ஷ்டக்காரர்கள் வெற்றி கொடுத்த அங்கீகாரத்தால் ஏகத்துக்கும் பிஸினஸ் தத்துவங்களை உளறிச் சென்றிருக்கிறார்கள். அதையெல்லாம் கடைபிடித்தால் பிஸினஸில், வெற்றி தோல்வியை விடுங்கள், மெண்டலாகிப் போவீர்கள். பிஸினஸ் என்பது தனி உலகம் கிடையாது.அதுவும் நம் வாழ்வின் ஒரு அங்கம் தான். இந்த உலகில் உழன்றுகொண்டு இருப்பவர்களை வைத்து, அவர்களை நம்பித்தான் பிஸினஸ் செய்ய வேண்டும். அது ஏதோ மாய உலகம் போல சித்தரித்து பீலா  விட்டுக்கொண்டிருப்பவர்களிடம் நாம் கண்களை அகல விரிப்பதை முதலில் நிறுத்த வேண்டும்.

பலர், ஐயய்யோ பிஸினஸெல்லாம் நமக்கு சரிப்பட்டு வராதுங்க என்று சொல்லக் கேட்டிருப்போம்.நாம் பொருட்களையோ, சேவைகளையோ வாங்கும் கன்ஸ்யூமராக இருந்தாலும், நாமும் பிஸினஸ் தான் செய்து கொண்டிருக்கிறோம் என்று உணர வேண்டும்.

மித் & ஃபேக்ட்ஸ் என்று நேரடியாக கட்டுரைக்குள் போய் இருக்கலாம். இருந்தாலும் முன்னுரை போல ஒரு பத்தி எழுதி விட்டு பாயின்டுக்கு செல்ல வேண்டியிருக்கிறது. இதுவும் ஒரு பிஸினஸ் உத்திதான்.

மித் 1 : பிஸினஸ்  செய்ய புத்திசாலியாக இருக்க வேண்டும். அதற்குத் தனி மூளை வேண்டும்.

ஃபேக்ட் : முட்டாளாக இருப்பது பிஸினஸில் வெற்றி பெற சாதகமான விஷயம். முட்டாள் என்று சிம்பிளாகச் சொல்வதை விட கொஞ்சம் விரித்துச் சொல்லலாம். சென்ஸிபிலிட்டி இல்லாமல், காமன் சென்ஸ் இல்லாமல், ரசனை இல்லாமல், உணர்ச்சி இல்லாமல், எதிக்ஸ், வேல்யூ என அதுவும் இல்லாமல் மோடு முட்டி போல இருந்தால் சுலபமாக ஜெயிக்கலாம். பல வெற்றிகரமான முதலாளிகள் அடி முட்டாள்களாக இருப்பதைக் காணலாம். பணத்தைத் தவிர வேறெதுவும் அவர்களுக்குத் தெரியாது.

மித் 2 : தெரியாத பிஸினஸில் இறங்கக் கூடாது.

ஃபேக்ட் : தெரியாத பிஸினஸ் என்று ஏதுமில்லை. பிஸினஸில் தோல்வியடைந்த பெரும்பாலானவர்களைப் பார்த்தால் நீண்ட காலமாக தெரிந்த பிஸினஸை செய்து கொண்டு இருந்தவர்களாகத்தான் இருப்பார்கள். கால

மாற்றத்துக்கு ஏற்ப மாறாதவர்கள் தான் பிஸினஸில் இருந்து விலக்கப்படுவார்கள். உதாரணமாக  நீண்ட காலம் தெரிந்த தியேட்டர் பிஸினஸ் நடத்தி வந்தவர்கள், அதை மூடி விட்டு, தெரியாத கல்யாண மண்டப பிஸினஸில் பாதுகாப்பாக இருப்பதைப் பார்க்க முடியும்.

தெரியாத பிஸினஸில் இறங்கினால், சவால்கள் இருக்கும். சுவாரசியம் கூடும். அதனால் எனர்ஜி கிடைக்கும். நிறைய கற்றுக்கொள்ளலாம்.

மித் 3: கடைமட்ட தொழிலாளி வரை பழக வேண்டும்.

ஃபேக்ட் : முக்கியமான அதிகாரிகளுடன் மட்டும் தொடர்பில் இருந்தால் போதும். வாங்க பழகலாம் என்று அனைத்து தொழிலாளர்களுடனும் பழகுவது, எம்ஜியார் போல இமேஜ் ஏத்துவதற்கு வேண்டுமானால் உதவலாம். பிஸினஸில் இதனால் பெரிய பலன் ஏதும் கிடையாது. ஒரு சில பெரிய கம்பனி முதலாளிகள், கடைநிலை ஊழியரை வேலைக்கு எடுக்கும் போது கூட, எம் டி ரவுண்ட் என்று பில்ட் அப் கொடுத்து கடைசி ரவுண்டில் தொழிலாளரை சந்திப்பார்கள். இதைப்போல மடத்தனமும் நேர விரயமும் வேறேதும் கிடையாது. இப்படி ஒரு எம்டி செயல்பட்டால், அந்த கம்பனியில் எம்டிக்கான வேலை ஏதும் இல்லை என்று அர்த்தம்.

மித் 4: சினிமா , பிக்னிக் , அவுட்டிங்க் என்று தொழிலாளர்களை மகிழ்ச்சியாக வைத்துக்-கொண்டால், உற்பத்தி அதிகரிக்கும். நீண்ட நாட்கள் நிறுவனத்தில் நீடிப்பார்கள்.

ஃபேக்ட் : 20 சதவீதம் அதிக சம்பளம் கிடைத்தால் பெரும்பாலான ஊழியர்கள் நிறுவனங்கள் மாறி விடுவார்கள். அவுட்டிங்க் எல்லாம் வைத்தால் திங்கட்கிழமை உற்பத்தி பாதிக்கும், அவ்வளவுதான். ஊழியர்கள் எந்த ஜாலியாக இருந்தாலும் தாங்களே சொந்தமாகக் கொண்டாடத்தான் விரும்புவார்கள். நண்பர்களுடனோ உறவினர்களுடனோ கொண்டாடத்தான் விரும்புவார்கள். நிறுவனம் ஏற்பாடு செய்யும் இதைப்போன்ற நிகழ்ச்சிகளை கிண்டல் கேலிதான் செய்வார்கள். ஒரு சில நேரங்களில் இதைப்போன்ற செயல்பாடுகள் நிறுவனங்களுக்கே தெரியாமல்  சிக்கல்களில் போய் முடியும்.

மித் 5: அதிக வருமான வரி கட்டினால், அதிக பிஸினஸ் லோன் கிடைக்கும்.

ஃபேக்ட் : உண்மையான வளர்ச்சியைக் காட்டி, சரியான வரி கட்டிய நிறுவனங்கள் மட்டுமே வளர்ந்திருக்கின்றன. அளவுக்கு அதிகமான வரி கட்டுவதும் குறைந்த அளவு வரி கட்டி, வரி ஏய்ப்பு செய்வது போன்ற ஒரு பித்தலாட்டம் தான். பெரிய பலன் ஏதும் இருக்காது. நிறுவனம்  லேசான நட்டத்தைச் சந்திக்கும் போது வரியை குறைத்து கட்டினால், இன்கம் டேக்ஸ்லில் இருந்து நோட்டீஸ் வந்து நோகடிக்கும்.

மித்  6 : பிஸினஸ் வேற , பர்ஸனல் வேற என்பார்கள்.

ஃபேக்ட் : பிஸினஸை பிஸினஸா பாக்கணும், மாங்காயை மாங்காயாப் பாக்கணும் என்பது போல அரை குறை பஞ்ச் டயலாக் தான் இது. பல பிஸினஸ் டீலிங்குகள் பர்ஸனல் பழக்கத்தாலும், தனிப்பட்ட அணுகுமுறையாலும் முடியும். மனித மன உணர்வுகள் கலக்காத தனியான பிஸினஸ் என்று ஏதும் இல்லை. எவ்வளவு பெரிய பிஸினஸாக இருந்தாலும், பர்ஸனல் டச் முக்கியம்.

மித் 7 : கடுமையான விதிகளை, ஒழுக்கக் கட்டுப்பாடுகளை கடைபிடித்தால்தான் பிஸினஸில் ஜெயிக்க முடியும்  ஃபேக்ட் : என்ன கருமாந்திரமான விதிகளாக இருந்தாலும், அதை முதலாளி கடை பிடித்துச்சாகலாம். அந்த முட்டாள்தனமான விதிகளை ஊழியர்கள் மீதும், வாடிக்கையாளர்கள் மீதும் போட்டு, கடைப்பிடிக்கச் சொல்லி டார்ச்சர் செய்யக் கூடாது. உதாரணமாக செருப்பைக் கழட்டி வெளியே விட்டு விட்டுத்தான் வர வேண்டும் என்று சொல்வது, செவ்வாய்க் கிழமைகளில் பணம் கொடுக்க மாட்டேன் என்று சொல்வது, சாப்பிட்ட இலையை சாப்பிட்டவரையே எடுத்துப் போடச் சொல்வது போன்ற கோமாளித்தனங்கள் பிஸினஸை பாதிக்கும்.

மித் 8 : வாடிக்கையாளர்தான் ராஜா !

ஃபேக்ட்: வாடிக்கையாளருக்கு அடிப்படையாகக் கொடுக்க வேண்டிய மரியாதையைக் கொடுத்து, அவருக்கான சேவையை தரமாக வழங்கினால் போதும். இந்த வாடிக்கையாளர்தான் ராஜா என்பதைத் தவறாகப் புரிந்து கொண்டு, கூழைக் கும்பிடு போட்டு, டீ, காஃபி கொடுத்து, ஓவர் மரியாதை கொடுத்து, சேவையில் பல்லிளித்தால் எந்த புண்ணியமும் இல்லை. அதே நேரத்தில் வாடிக்கையாளர் ராஜா எல்லாம் இல்லை. அவர் நமக்கு வியாபாரம் தருகிறார், நாம் அவருக்கு சேவை தருகிறோம். சில பைத்தியக்கார, சைக்கோ வாடிக்கையாளர்களும் இருப்பார்கள். வாடிக்கையாளரை ராஜா போல உணரச் செய்தால் போதும். அதே நேரத்தில் பிஸினஸ் செய்பவர்கள் மகாராஜாவாக உள்ளுக்குள் உணர்ந்து கொண்டிருக்க வேண்டும், சேவகர்களாக அல்ல.

மித் 9 : லாபம் இரண்டாம் பட்சம், வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையும் நம்பிக்கையும் தான் முக்கியம்.

ஃபேக்ட் : லாயல் கஸ்டமர்ஸ் மிகக் கம்மி இப்போது. 3 ரூபாய் 95 காசு குறைவாகக் கிடைக்கிறது என்று நிறுவனம் மாற்றும் வாடிக்கையாளர்கள் பெருகி விட்டார்கள். நீங்கள் உருவாக்கிய வாடிக்கையாளர்கள் எப்போது வேண்டுமானாலும் காணாமல் போகலாம். குறைந்த பட்ச லாபம் கூட இல்லாமல் செய்யும் வியாபாரம் ஊத்திக்கொண்டு போகும். வென்ச்சர் கேப்பிடலிஸ்ட், நிறுவனத்தை வளர்த்து விற்று விடுவது எல்லாம் வேறு வகை விளாயாட்டு. அதைப் பார்த்து சின்ன அளவில் சூடு போட்டுக்கொள்ளல் கூடாது. அந்த மாதிரி விஷயத்திற்கெல்லாம் இன்னொவேடிவான கான்செப்டும், நீண்ட கால திட்டமிடலும், நிதி மேலாண்மையும் அவசியம்.

மித் 10 : பேமெண்டை எவ்வளவு முடியுமோ அவ்வளவு இழுத்துக் கொடுக்க வேண்டும்.

ஃபேக்ட் : பே மாஸ்டராக இருந்து உடனுக்குடன் பணத்தை செட்டில் செய்தால்,  அதனால் கிடைக்கக் கூடிய அனுகூலங்களும், லாபங்களும் ஏராளம்.

மித் 11 : பிஸினஸ் சிந்தனை 24 மணி நேரமும் இருந்தால்தான் முன்னேற முடியும்.

ஃபேக்ட் : பொண்டாட்டி ஓடிப்போய்விடுவாள். பிள்ளைகள் மெண்டல் ஆகும் அல்லது டிரக் அடிக்ட் ஆகி கமிஷனர் அலுவலகத்தில் இருந்து போன் வரும்.

மித் 12 : வாடிக்கையாளர்களுக்கு என்ன தேவையோ, அதைக் கொடுக்க வேண்டும்.

ஃபேக்ட் : அவர்களுக்கு என்ன தேவை என்று அவர்களுக்கே தெரியாது. ஒரு புத்திசாலி பிஸினஸ் மேனால் புது வகை பொருளையோ, சேவையையோ அவர்களுக்குப் பழக்கப்படுத்த முடியும்.

மித் 13 : பிஸினஸ் கொஞ்சம் வளர்ந்தவுடன் ஏதேனும் கிளப்பில் சேர வேண்டும். அப்போதுதான் காண்டாக்ட்ஸ் கிடைக்கும்.

ஃபேக்ட் : தரகு, கமிஷன், புரோக்கர் வேலை செய்பவர்களுக்கு வேண்டுமானால் இது பயன்படலாம். சிறந்த தொழில் முனைவோருக்கு இதெல்லாம் தேவைப்படாது, இது ஒரு ஸ்டேட்டஸ் சிம்பலும் அல்ல.

மித் 14 : பிஸினஸில் டிரான்ஸ்பரன்சி வேண்டும்.

ஃபேக்ட் : டிரான்ஸ்பரன்டாக இருப்பது போல காட்டிக்கொள்ள வேண்டும்.

மித் 15 : நிறுவனத்தைக் கூட்டிப் பெருக்குவதில் இருந்து பர்ச்சேஸ் வரை இன்வால்வ்மெண்ட் இருக்க வேண்டும்.

ஃபேக்ட் : சிஸ்டம், நிர்வாகம் சரியில்லை என்று அர்த்தம். மனித வளத்துறை மொக்கையாக இருக்கிறது என்று அர்த்தம். இல்லையென்றால்

நீங்கள் மனநலம் பாதிக்கப்பட்ட சுய விளம்பரப் பிரியர் என்று அர்த்தம்.

ஜூலை, 2020.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com